அத்தியாயம் – 18

நித்யா பாலசுப்ரமணியன் | 30 Dec 2025 | Share

இங்கு – 

வேதாவிற்கும் மனசே சரியில்லாதது போல் இருக்க சாப்பிடவும் பிடிக்காமல் போக பத்மா பாட்டி சாப்பிட சொன்ன போது ” வேண்டாம்மா பசி இல்ல அப்புறமா சாப்பிட்டுக்கிறேன் ” எனக் கூறியவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அன்று தாயிடமும் சரியாக பேசவில்லை. அன்னை மனமோ பரிதவித்தது. ” என்னம்மா என்ன ஆச்சு உன்னோட குரலே சரி இல்லையே. உடம்பு எதும் சரியில்லையா ” எனக் கேட்க ” அதெல்லாம் ஒன்னும் இல்லமா. லேசா தலைவலி அவ்வளவுதான் ” எனக் கூறியவள் பேசி முடித்ததும் தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

‘ அவ்வளவு தூரத்தில் இருக்காங்க அவங்க மனச ஏன் சங்கடப்பட வைக்கணும். அவுங்க என்ன ஏதுனு யோசிச்சு உடம்பு எதும் முடியாம போச்சுன்னா என்ன பண்றது. இனி எப்பவும் இந்த மாதிரி நடந்துக்க கூடாது. நல்ல படியா பேசினா தான் அவுங்க அங்க நிம்மதியா இருப்பாங்க நமக்கும் ஒரு வருஷம் நல்லபடியா ஓடும் ” என எண்ணிக்கொண்டவள் அசதியாய் இருப்பது போல் இருக்க அப்படியே தூங்கிப் போனாள்.

இங்கு நந்தன் ஏனோ அலுவலகத்தில் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போக இரண்டு மணி போல் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவனின் பார்வை டேபிள் மேல் பட அங்கிருந்த பாத்திரங்கள் இன்னும் வேதா சாப்பிடவில்லை என்பதை சொல்ல பத்மா அம்மாவிடம் சாப்பிட சாப்பாடு எடுத்து வைக்கும் படி கூறியவன் அறைக்குச் சென்றான்.

அறையில் அவளோ நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘ எனக்கு இங்க ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது இவ என்னடான்னா நிம்மதியா தூங்கிட்டு இருக்கா ‘ என மனதிற்குள் புலம்பியவன் அவளை எழுப்ப ‘ அச்சோ நைட் அவர் வர்ற வரைக்குமா தூங்கிட்டோம் ‘ என எண்ணியவள் பதற்றத்துடன் எழுந்திருக்க ” இப்ப என்னாச்சு எதுக்கு இப்படி அவசரமா எந்திரிக்கிற ” என்றவன் ” வா சாப்பிடலாம் ” என கூறிவிட்டு கீழே சென்றான்.

எழுந்து மணி பார்த்தவள் ‘ என்னது இரண்டு மணி தான் ஆகுது. மதியம் சாப்பிட வீட்டுக்கு வர மாட்டாரே. அஜய் கூடவே சாப்பிட்டுக்கிறேன் இல்ல சொல்லி இருந்தார். அன்று அவர் சொன்னதிலிருந்தே வீட்டுக்கு வந்ததே இல்லை தான். காலைல போனா நைட்டு தான் வீட்டுக்கு வருவார். என்னாச்சு….. ‘ என யோசித்தவள் ‘ எதையும் மறந்து வச்சிட்டு போயிட்டாரோ. அதை எடுக்க வந்திருப்பாரோ ‘ என ஏதேதோ எண்ணிக்கொண்டே படிகளில் இறங்கியவள் அவன் சாப்பிடாமல் வெயிட் பண்ணுவதை பார்த்ததும் டக்கென்று கீழே இறங்கினாள்.

கீழே இறங்கி வந்தவள் அவனுக்கு உணவு பரிமாற போக ” நான் போட்டுக்கிறேன். நீ உக்காந்து சாப்பிடு ” எனக் கூறியவன் அவனுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு அவள் புறம் நகர்த்தினான்.

அவள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமே எடுத்து வைத்துக் கொள்ள ” ஏன் வேதா காலையிலேயும் எதுவும் சாப்பிடலன்னு பத்மா அம்மா சொன்னாங்க. இப்பவும் கொஞ்சம் தான் வச்சிக்கிற என்னாச்சு…. பசிக்கலையா ” என அவன் கேட்க ” ம்… ” என்று மட்டும் சொன்னவள் அமைதியாக சாப்பிட்டு முடிக்க ஏனோ அதன் பின் இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.

இருவரும் தாங்கள் தங்கள் எண்ணங்களில் உலன்று கொண்டிருக்க அன்றைய பொழுது விரைந்து ஓடியது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை –

காலை 10 மணி போல் சுபத்திராவும் வர்ஷாவும் வந்து விட உற்சாகத்தோடும் புன்னகையோடும் வலம் வந்தாள், வேதா.

அன்றலர்ந்த மலர் போல் பளிச்சிடும் அவள் மேல் நந்தனின் கண்கள் அவ்வப்போது பட்டு மீண்டது.

மதியம் சாப்பிடும் வேளை ஆதித்ய வர்மனும் ரவி வர்மனும் வந்துவிட அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

அதன் பின் வர்ஷா மட்டும் அங்கேயே இருக்க மற்ற அனைவரும் மாலை காபி குடித்து விட்டு கிளம்பினர்.

வர்ஷாவின் முகம் சரியில்லையே என உணர்ந்த வேதா தான் அவளை இரண்டு நாள் அங்கேயே இருக்கச் சொன்னாள்‌.

அனைவரும் கிளம்பிய பின் தோட்டத்தில் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என வர்ஷாவை அழைத்துச் சென்றவள் ” என்னாச்சு வர்ஷா. ஏன் ஒரு மாதிரி இருக்க ” என கேட்க ” அதெல்லாம் ஒன்னும் இல்லையே ” என அவள் சமாளிக்க ” பொய் சொல்லாத வர்ஷா. நீ எப்பவும் எப்படி இருப்பேன்னு எனக்கு தெரியாதா. இனிமே நாம பிரண்ட்ஸ் மாதிரினு சொன்ன. அப்போ அது பொய்யா. என்கிட்ட என்னன்னு ஷேர் பண்ண மாட்ட அப்படி தானே ” என கேட்க ” அது வந்து ” என இழுத்தவளை ” சொல்லு என்ன ஆச்சு…. ” என திரும்பவும் கேட்க ” அது ஒன்னும் இல்ல வேதா. மனசு ஏதோ சரியில்ல‌. எதுவும் பிடிக்க மாட்டேங்குது ” என அவள் சொல்ல ” எதுவுமே பிடிக்காம போற அளவுக்கு இப்ப என்ன ஆச்சு… ம்… சொல்லு ” என கேட்க ” அது ” என இழுத்தவள் ” நீங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்களே ” என கேட்க ” நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் சொல்லு ” என சொல்ல ” இல்ல நீங்க அண்ணன் கிட்ட சொல்லுவீங்க ” என அவள் சொல்ல ” நான் உன்னோட அண்ணன் கிட்டையும் சொல்ல மாட்டேன். நிஜமாவே ” என சொன்ன பின் மெதுவாக சொல்ல தொடங்கினாள்.

நந்தன் கல்லூரி படிக்கும் நாட்களில் அஜயை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவான்.

பள்ளி படிக்கும் போது இருந்தே இருவரும் நண்பர்கள் தான் என்றாலும் அவன் தங்கி படித்துக் கொண்டிருந்த ஆஸ்ரமத்தை விட்டு அவனால் வர இயலாது. பள்ளி முடிந்ததுமே ஆஸ்ரமம் போய் ஆக வேண்டும் என்பதாலேயே நந்தன் அவனை தொல்லை பண்ணாமல் விட்டு விடுவான். ஆனால் கல்லூரி சேர்ந்த பின் அஜய் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்து ஒரு சின்ன அறை எடுத்து தங்கி இருந்தான். கல்லூரிக்கு அருகிலேயே… அதனால் சில சமயம் நந்தன் அங்கு சென்று தங்கி விடுவான். பல சமயம் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவான்.

அவன் வந்த முதல் நாளில் இருந்தே ஏனோ வர்ஷாவுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவள் மனதில் கற்பனையையும் வளர்த்துக் கொண்டாள்.

அஜய் தனியாகவே இருப்பவன் யாருடனும் சட்டென்று ஒட்டி விட மாட்டான்.

நந்தனின் குணமும் அவனது குணமும் நிறைய ஒத்துப்போவதாலேயே இருவரும் நண்பர்கள் ஆயினர். ஆயினும் நந்தன் வீட்டிற்கு அழைக்கும் போதெல்லாம் அவன் தவிர்க்கவே முயற்சிப்பான்.

சுபத்ராவும் ரவிவர்மனும் அன்புடன் நோக்கினாலும் ஆதித்யவர்மன் மட்டும் தன்னை பார்க்கும் பார்வை ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை.

தன்னை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டவன் அதனால் நட்பு பாதிக்கப்படக் கூடாது என்றும் எண்ணினான்.

படிப்பிலும் விளையாட்டிலும் எப்பொழுதும் நம்பர் ஒன் ஆக இருக்கும் அஜயை பின் ஆதித்யவர்மனுக்கும் பிடிக்கத் தொடங்கியது. இது அஜய்க்கு தெரிந்தாலும் கூட சற்று விலகியே தான் இருந்தான்.

வர்ஷா குட்டி பெண். தங்கை மாதிரி என எண்ணிப் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் இருக்க, கல்லூரியில் வகுப்பில் கொடுத்திருந்த அசைன்மென்ட்டை செய்ய அஜயை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் நந்தன்.

மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருக்கும் போது நந்தன் ” நான் கீழே போய் சாப்பிட ஏதாவது எடுத்து வரேன் ” என சொல்லிவிட்டு கீழே போக, அவன் கீழே போன அடுத்த நொடி மேலே வந்தாள் வர்ஷா.

வந்தவள் அவனிடம் ஒரு கடிதத்தை நீட்ட ” என்ன வர்ஷா இது ” என கேட்டுக்கொண்டே பிரித்தவன் அதிர்ந்தான்.

    No comments yet.