மெல்லிய இருள் படர்ந்த இருள் மாலை வேளையில் அந்த கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. முகத்தில் இறுக்கத்துடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான் சேது. அவன் பக்கத்து இருக்கையில் குழப்பத்துடன் கையை பிசைந்தபடி முள் இருக்கையில் அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தாள் இசை.
பின் இருக்கையில் இது எதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தெளிந்த நீரோடையாய் முகத்தை வைத்துக் கொண்டு பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் நிலா. அவள் மடியில் படுத்து நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான் நிலாவின் பப்லு. அவன் அருகில் எவ்வித கவலையும் இன்றி உறங்கி கொண்டிருந்தான் அபி.
“என்ன தான் அவன் நினைச்சுட்டு இருக்கான்? என் தங்கச்சிய ஒருத்தன் அடிக்க வந்து இருக்கான். அவன புடிச்சு போட்டு மிதிக்காம தேவை இல்லை னு ஊருக்கு அனுப்புறான். கமிஷனர் ஆனதுல இருந்து இவனுக்கு திமிர் கூடிப் போச்சு… அவன் சொன்னா நீ ஏன் நிலாமா கிளம்பி வர்ற? ” என இளாவின் மீதுள்ள கோவத்தை மொத்தமாக கொட்டியவன் நிலாவின் மீதும் லேசாக காண்பித்தான் சேது.
“ப்ச்… விடுங்க.. நிலா நம்ம கூட இருக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. நீ வா நிலா நாம நம்ம ஊருல என்ஜாய் பண்ணலாம். இளா அண்ணா கண்டிப்பா உன்னைய தேடி வருவாரு.. ” இசை.
“வரட்டும்… என் தங்கச்சிய தேடி வரட்டும்.. அவன ஊருக்குள்ளயே விட மாட்டேன்.. ” எனக் கோவமாக வார்த்தையை கடித்து துப்பினான் சேது.
“ஹைய்யோ… சரியான ட்யூப் லைட்..” என தலையில் அடித்துக் கொண்டாள் இசை.
“இப்ப என்ன டி உன் பிரச்சனை? ” சேது.
“ஒன்னுல்லயே… நீ ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு. பயமா இருக்கு…” என தன் வயிற்றின் மீது கை வைத்து கூறினாள் இசை.
“உனக்கு… பயம்? இத நான் நம்பனும்? போடி..? ” சேது.
“ஆமா… எத்துன நாள் நம்ம கல்லியாண போட்டோ ல உன்னைய பாத்து பயந்து இருக்கேன் தெரியுமா? ” என முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கூறினாள் இசை.
“உன்னயலாம்… உன் வாய் மட்டும் இல்லனா உன்னயலாம் நாய் தூக்கிட்டு போய் இருக்கும் டி… இல்ல நாய் கூட தூக்கிட்டு போகாது… ” சேது.
“ஓஓஓ… அதான் நீ என்னைய தூக்கிட்டு போய் கல்லியாணம் பண்ணிக்கிட்டியாடா? ” இசை.
“என் வாழ்க்கையில நான் செஞ்ச மிகப் பெரிய தப்பு அது ஒன்னு தான்டி…” என முகத்தை திருப்பிக் கொண்டான் சேது.
“சரி தான் போடா… ” என முகத்தை திருப்பிக் கொண்டாள் இசை.
இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டாலும் இருவரது கரமும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தது. அதை சரியாக கவனித்த நிலா, “இவங்களுக்கு வேற வேலையே இல்லை.. ” என இதழுக்குள் சிரித்துக் கொண்டாள்.
இருவரும் பேசியது அனைத்தையும் காதில் வாங்கினாலும் சிந்தையில் ஏற்றிக் கொள்ளாது தன் மனம் போன போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தாள் நிலா.
கார் சட்டென்று நிற்கவும் தனது சுய சிந்தனையில் இருந்து வெளி வந்தாள் நிலா. மெல்ல சுற்றுப்புறத்தை பார்த்தவள், தனது வீட்டின் முன்னே கார் நிற்பதை உணர்ந்து அபியை எழுப்பினாள் நிலா. அதற்குள் நிலா வீட்டில் உள்ள அனைவருக்கும் நிலா வந்திருப்பதை கூறி வெளியே அழைத்து வந்தான் சேது.
பப்லுவை நன்றாக பின் இருக்கையில் படுக்க வைத்து விட்டு தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் காரை விட்டு கீழிறங்கினாள் நிலா. நிலா வந்திருப்பதை கூறிய சேது, நிலா மட்டும் வந்திருப்பதை கூறவில்லை. இளஞ்சேரன் இல்லாமல் இருட்டிய வேளையில் நிலா மட்டும் வந்திருப்பதை கண்ட வள்ளியின் நெஞ்சம் பகீரென்றது.
“என்ன நிலா நீ மட்டும் வந்து இருக்க? மாப்ள வர்ல? ” என பயத்துடன் கேட்டாள் வள்ளி.
“இப்ப நான் வந்தது உங்களுக்கு பிரச்சனையா? இல்ல நான் மட்டும் வந்தது உங்களுக்கு பிரச்சனையா? ” என நிதானமாக கேட்டாள் நிலா.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல.. நீ உள்ள மா… நின்னுட்டு தூங்கி வழியாம உள்ள வந்து தூங்கு அபி.. ” என வள்ளியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறினார் கதிர்வேல்.
“சரி.. லேட் ஆகிருச்சு நாங்க கிளம்புறோம்… காலையில வர்றேன்… ” என உள்ளே செல்லும் நிலாவை பார்வையால் வருடியபடி அனைவரிடமும் விடைபெற்று சென்றான் சேது.
“சரிப்பா.. “என சேதுவிற்கு தலையசைத்து விடை கொடுத்தார் கதிர்வேல்.
உள்ளே சென்ற நிலா, யாரிடமும் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த வள்ளி, “என்னங்க இது? ” என பயத்துடன் கதிர்வேலை பார்த்தார்.
“விடு.. காலையில பேசிக்கலாம்.. போய் தூங்கு… ” கதிர்வேல் .
“என்னவோ போங்க.. எனக்கு எதுவும் சரியாப் படல.. ” என புலம்பியபடி உள்ளே சென்றாள் வள்ளி.
இதை எதையும் கவனிக்காமல் தன் பேரனை கைத் தாங்கலாக அழைத்து சென்று உள்ளே தூங்க வைத்தார் அலமேலு.
அறைக்குள் நுழைந்த நிலா, உடையை மாற்றிக் கொண்டு அப்படியே படுக்கையில் விழுந்து கண் மூடினாள். கண் முன்னே அன்று நடந்த அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி வர… இறுதியில் இமையோரம் ஒரு துளி நீர் எட்டிப் பார்த்தது.
விளையாடியது உடம்பு அசதியாக வர… அசதியில் அப்பிடியே கண் உறங்கினாள் நிலா. இரவு நேர மெல்லிய காற்று ஜன்னல் வழியே நிலாவை எட்டிப் பார்க்க… நிலா உறங்கும் அழகில் மெய் மறந்து மொத்த மெல்லிய காற்றும் ஜன்னலின் உள்ளே வந்து ஆசை தீர நிலாவை தழுவிச் சென்றது.
மெல்லிய காற்று நிலாவை தீண்டிச் செல்வதை கண்டு பொறாமை கொண்ட அவளின் நெற்றி முடி கற்றைகள் கோவம் கொண்டு குதிக்க ஆரம்பித்தன. காற்றும் கார்குழலும் போட்டி போட்டுக் கொண்டு நிலாவை தீண்டிச் செல்ல… அவை இரண்டுக்கும் தடை விதித்தவாறு ஒருவன் அறையினுள் நுழைந்தான்.
அறையினுள் வந்து நிலாவைக் கண்டவன், மென்மையான காதல் புன்னகையுடன் வீசும் காற்றுக்கு நிலாவைத் தீண்டுவதற்கு தடை விதித்து அவளை இறுக்க அணைத்துக்கொண்டு அவளின் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டான் நிலாவின் சேரன்.
“எனக்குத் தெரியும் சேரா… நீ வருவ னு… ” என உறக்கத்திலும் தன்னவனின் அருகாமையை உணர்ந்து, தாரமாக அவனை நெஞ்சில் தாங்கி தாயாக அவனின் தலை கோதினாள் சேரநிலா.
“லவ் யூ… ” எனக் காதலுடன் நிலாவின் தாடையில் இதழ் பதித்து பின் மீண்டும் தன்னவளின் நெஞ்சத்தில் முகம் புதைத்து கண் மூடினான் இளஞ்சேரன்.
“என்னாச்சு? ” என கண் விழிக்காமலேயே தன்னவனின் தலை கோதியபடி கேட்டாள் நிலா.
“செத்துட்டான்… ” என இருக்கும் இடத்தில் இருந்து சற்றும் அசையாமல் பதில் கூறினான் இளா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.