அத்தியாயம் – 17

நித்யா பாலசுப்ரமணியன் | 26 Dec 2025 | Share

படுத்தவள் உறங்கியும் போனாள். ஆனாலும் அவன் வந்த பாடு இல்லை.

வேலை செய்வதற்கென படுக்கை அறைக்கு பக்கத்து அறையை ஏற்பாடு செய்து வைத்திருந்தவன் படுக்கை அறைக்கு போக மனமில்லாமல் ஏதேனும் வேலை செய்யலாம் என அந்த அறைக்குள் சென்றான்.

அறைக்குள் சென்றவனோ எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போக படுக்கலாம் என எண்ணியவன் நீண்ட நேரம் தூக்கம் வராமல் தவித்தான். பின் உறங்கி போனான்.

காலை 5 மணிக்கு எழுந்தவள் அவன் அறைக்கு வராததை பார்த்து ஏனோ திடுக்கிட்டாள்.

‘ அறைக்கு வரவும் இல்லை சாப்பிடவும் இல்லை போலையே… எங்க போனார் ‘ என எண்ணியவள் எழுந்து வெளியே வர பக்கத்து அறையில் விளக்கு எரிவதை பார்த்ததும் ‘ அங்க என்ன பண்றார் ‘ என யோசித்துக் கொண்டே சென்றவள் அறை கதவைத் தட்ட அவன் திறக்கவில்லை.

கதவு திறக்கப்படவும் இல்லை அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றதும் கதவை திறந்து உள்ளே போனாள்.

அங்கே அவன் வெறும் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். ‘ ஏன் இப்படி வெறும் தரையில் படுத்து இருக்கிறார் ‘ என நினைத்தவள் அவன் தலைக்கு கையை வைத்து படுத்து இருப்பதை பார்த்ததும் : கை வலிக்க போவது ‘ என எண்ணியவள் அறைக்கு சென்று தலையணையும் போர்வையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

போர்வையை அவனுக்கு போர்த்து விட்டு தலையணையை  வைக்கலாம் என அவன் தலையை மெல்ல தூக்க முயல தூக்கத்தில் அவள் கையை பற்றியவன் கையைப் பிடித்துக் கொண்டே உறங்கினான்.

கையை எப்படி எடுப்பது என தெரியாது எடுக்க முயற்சித்தும் எடுபடாது போக அங்கேயே அவன் அருகிலேயே அவளும் அமர்ந்தாள்.

அமர்ந்தவளுக்கு சற்று நேரத்தில் கண்கள் சொருக கையை எடுக்க முடியாததால் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் அவனை எழுப்பி தொல்லை பண்ண வேண்டாம் என எண்ணியவள் அவன் அருகிலேயே படுத்தாள்.

ஆறு முப்பது மணி போல் அவனுக்கு முழிப்பு வர கண்களைத் திறந்தவன் அருகில் வேதா படுத்து இருப்பதை பார்த்ததும் திகைத்தான்.

‘ இன்னும் தூக்கத்தில் தான் இருக்கோமா… கனவா இது… இவ எப்படி நம்ம பக்கத்துல…. ‘ என யோசனையோடு சிறு குழந்தை போல் தூங்கும் அவளின் கன்னத்தை தொட முயல, மூடிய இமைக்குள் அவள் விழிகள் மெல்ல நகர கையை பின்னுக்கு எடுத்தவன் மற்றொரு கையில் அவள் கையை தான் இறுக்கி பிடித்து இருப்பதை பார்த்தான்.

பஞ்சு போன்ற அவள் கைகள் அவன் பிடித்து இருந்ததில் சிவந்து  இருந்தது. அவள் கைகளை மெல்ல விட்டவன் எழுந்து அமர்ந்தான்.

தன் மேல் போர்வை போர்த்திருப்பதையும் தன் தலையின் அருகே தலையணை இருப்பதையும் பார்த்தவன் அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தான். அடுத்த நொடி தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்தவன் தங்கள் அறைக்குச் சென்றான்.

சிறிது நேரத்தில் இவளுக்கும் விழிப்பு வர கை மரத்துப் போய் இருப்பதை உணர்ந்தவள் அவன் அருகே இல்லை என்றதும் டக்கென்று எழுந்தாள்.

அறைக்குச் சென்று பார்த்தவள்  அவன் பாத்ரூமில் இருப்பது தெரியவும் கீழே சென்றாள்.

வாஷ்பேஷனில் முகம் அலம்பி விட்டு காஃபி போடலாம் என சமையலறை செல்ல பத்மா பாட்டி காஃபி கலந்து கொண்டிருந்தார். அவரை பார்த்து புன்னகைத்தவள் காஃபியை வாங்கிக் கொண்டு படுக்கையறை விரைந்தாள்.

அவனும் குளித்து முடித்து வெளியே வந்திருந்தான்.

அவனுக்கு காஃபி கொடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் வந்தவள் அறை கதவை தட்டாமலேயே திறந்து விட்டாள்.

இடுப்பில் துண்டுடன் நின்றிருந்தவன் மற்றொரு துண்டால் தலையை துவட்டிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தவளோ அவன் வெற்று உடம்புடன் இருப்பதை பார்த்ததும் ‘ சாரி ‘ எனக் கூறியவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள சட்டென்று பீரோவில் இருந்து சட்டை ஒன்றை எடுத்து அணிந்தவன் ‘ பரவாயில்ல ‘ எனக் கூறிக் கொண்டே அவள் முன்னால் சென்று காஃபி டம்ளரை எடுத்துக் கொள்ள மறுநிமிடம் அவள் கீழே ஓடினாள்.

” நீ குடிக்கலையா ” என அவன் கேட்டது காற்றின் செவிகளுக்கு மட்டுமே கேட்டது.

கீழே ஓடியவள் மனது ஏனோ படபடக்க காஃபியை எடுத்துக் கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றாள்.

சூரிய கதிர் பட்டு மெல்ல மலர்ந்து கொண்டிருந்த மலர்களை ரசித்தவள் புல்லின் நுனியில் மின்னிய பனித்துளிகளில் விரல் வைத்து விளையாடினான்.

ஏனோ இப்பொழுது தான் மனதின் படபடப்பு சற்று அடங்கியதாய் உணர்ந்தாள்.

இத்தனை நாட்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்ததில் இதுவரை எந்த எண்ணமும் மனதில் தோன்றியதில்லை தான்.

தனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிய அவனை அவளுக்கு பிடிக்கும் தான்.

ஆனால் இன்று அவன் தனது கையை பற்றியதும் ஏதோ மின்சாரம் தாக்குவதாய் உணர்ந்தாள். கையை டக்கென்று பின்னுக்கு இழுக்க மூளை எச்சரித்தாலும் மனமோ ‘ பாவம் ஏதோ கனவு கண்டு இருப்பார் போல… ‘ என எண்ணியவளாய் தனது கையை பிடித்து தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனோ மனம் அவனை திரும்பத் திரும்ப பார்க்க தூண்ட கடிவாளம்  இட முயற்சித்தும் அடங்காத மனம் அவனிடமே செல்வதை உணர்ந்தவள் ‘ எட்டா கனி தான் இருந்தாலும் தூரத்தில் இருந்தேனும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடச்சிருக்கே. ஒரு வருடம் முடிஞ்ச பின்னே எப்படி வாழ்க்கை போகுமோ. ஆனா இந்த ஒரு வருஷம் நான் அவரோட முகத்தை பார்த்துட்டு இருந்தாலே போதும் ‘ என எண்ணினாள்.

எல்லோருக்கும் உதவும் அவன் நல்ல குணம், இரக்கம் காட்டும் மனம், அன்பு பொழியும் அவன் விழிகள், எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போலவே இருக்கும் உதடுகள், கூர்மையான அழகான மூக்கு, கோதுமை போல் நிறம், கருகருவென சுருட்டையான தலை முடி அவன் அழகை இன்னும் அழகு ஊட்டுவதாய் உணர்ந்தான்.

அத்தோடு ‘ ஏனோ அவ்வப்போது மீசையை எடுத்து விடுகிறான் ஹிந்தி பட நடிகர் போல… ‘ என மனதிற்கு சொல்லிக் கொண்டவள் ஏனோ அவன் மீசை முடி குத்தாதா எனவும் ஏங்கினாள்.

அவனைப் பார்த்துக் கொண்டே ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட கற்பனையில் மிதந்தவள் தூங்கிக் கொண்டிருந்த அவனை பார்த்துக் கொண்டே தூங்கி போனாள்.

எழுந்தவள் அவனை அருகில் காணும் என்றதும் சற்று ஆஷ்வாசம் ஆனாள் தான்.

பின் மனதிற்குள் ‘ இனி தூரத்தில் இருந்து ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும். அருகில் செல்லக் கூடாது ‘ என எண்ணியவள் அறையில் அவனை கண்டதும் ஏனோ இதயம் வேகமாக துடிப்பது போல் உணர்ந்தாள்.

எங்கே தனது மனம் படபடப்பை வெளியே காட்டி விடுமோ என்ற அச்சம் அத்தோடு முதன் முதலாக ஓர் ஆணை அதுவும் மனதிற்கு பிடித்தவனை மேல் சட்டை இல்லாமல் பார்த்ததும் நாணமும் வரவே அதை மறைக்க கீழே ஓடியவள் தோட்டத்திலும் அவன் நினைவுகளுடனேயே உலாவிக் கொண்டிருந்தாள்.

மலர்ந்திருந்த மலர்களை கண்டவள் அதன் வாசத்தை நுகர்ந்து பார்த்துக் கொண்டிருக்க அலுவலகத்திற்கு தயாரானவன் கீழே சாப்பிட வர அங்கே அவள் இல்லை என்றதும் தோட்டத்தில் பார்க்க பூவின் வாசம் பிடித்துக் கொண்டிருக்கும் அவளை தொல்லை பண்ண மனம் இல்லாமல் சாப்பிட அமர்ந்தவன் பத்மா பாட்டி சூடாக தோசை ஊற்றி தர சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிட்டு முடித்தவன் அலுவலகம் கிளம்ப, கார் சத்தம் கேட்டது போல் இருக்கவும் காரின் பக்கம் ஓடியவள் ஜன்னலை தட்ட ஜன்னலின் கண்ணாடியை கீழே இறக்கியவன் ‘ என்ன ‘ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க ” அதுக்குள்ள கிளம்பீட்டீங்களே சாப்டீங்களா ” என அவள் கேட்க ” பூவின் வாசம் பிடிச்சிட்டு இருந்தா நான் சாப்பிட்டது எப்படி தெரியும் ” என சொன்னவன் காரை ஸ்பீடாக ஓட்டிக் கொண்டு போக ‘ என்னாச்சு இவருக்கு ‘ என எண்ணியவள் போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனோ அவனுக்கு கோபமாக இருந்தது. ‘ ஏன் ஏன் ‘ என எத்தனை முறை கேள்வி கேட்டும் பதில் கிடைக்காது போக இன்னும் கோபம் அதிகமானது.

ஏனோ வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போனது.

    No comments yet.