அத்தியாயம் -17

Chellammal Bharathi | 26 Nov 2025 | Share

      கிரிக்கெட் எனும் விளையாட்டு மிகப் பெரிய ரசிகப் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் அது பெண்கள் கிரிக்கெட் எனவும் மிகக் குறைவான ரசிகர்களே அம்மைதானத்தில் குழுமி இருந்தனர். அவர்களில் பாதி பேர் நிலாவின் இன்றைய ஆட்டத்தில் அவளின் தீவிர ரசிகர்களாகி விட்டனர்.

       தங்களின் சிறப்பான ஆட்டத்தால் எதிரணியை வென்றனர் நிலா அணியினர் . தங்களது அணியினருடன் எதிரணிக்கு கை குலுக்கி விட்டு வீராங்கனைளின் ஓய்வறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் நிலா.

       “அத்தம்மா.. ” என்ற மழலையின் குரல் கேட்டு புன்னகையுடன் அவனை நோக்கி சென்றாள் நிலா. தனது அத்தம்மாவை முதல் ஆளாய் பார்க்க சேதுவிடம் இருந்து பாய்ந்து ஓடி வந்திருந்தான் அவன் பெற்ற அறுந்தவாலு கவின். கவின் எப்பொழுதும் நிலாவிற்கு பப்லு தான். தோற்றத்திலும் குணத்திலும் இசையை நகல் எடுத்து பிறந்திருந்தான் நிலாவின் பப்லு.

      மூச்சு வாங்க தன் முன்னே ஓடி வந்து நின்ற கவினை செல்லமாக முறைத்தாள் நிலா. கவினும் நிலாவை போலவே செய்து காட்ட சட்டென சிரித்து விட்டாள் நிலா.

       “ஏன் பப்லு இப்பிடி ஓடி வந்த? “என அவனை தூக்கி ஒரு சுற்று சுற்றி தன் தோள் மீது அமர்த்திக் கொண்டாள் நிலா.

        “ஹான்.. என் அத்தம்மாவ நாந்தான் பஸ்த்து கிஸ் பண்ணனும்… “எனக் கூறியபடி நிலாவின் தோளில் இருபுறமும் கால் போட்டு அவளது கன்னத்தில் மாறி மாறி எஞ்சில் வைத்தான் கவின்.

      அவனது அன்பு மழையில் திக்குமுக்காடிப் போன நிலா, “பப்லு… போதும்… அத்தம்மா பாவம்.. “என சிரிப்புடன் கூறினாள்.

      அவன் பின்னே அடித்து பிடித்து ஓடி வந்த சேது, “டேய்… என் தங்கச்சிய விடுடா..” என நிலாவிடம் இருந்து தன் மகனை பிரித்தெடுக்க போராடினான்.

      நிலாவின் தோளில் இருந்தபடி சேதுவிடம் இருந்து திமிறுவது போல் தன் காலால் சேதுவின் வாயில் ஓங்கி ஒரு உதை விட்டான் கவின்.

       “அய்யையோ… கொன்னாட்டானே.. “எனக் கத்தியபடி வாங்கிய உதையின் வீரியத்தில் ரெண்டு அடி பின்னால் நகர்ந்தான் சேது.

      “ஆத்தாளுக்கு புள்ள தப்பாம பொறந்து இருக்கு.. ” எனத் தன் வாயை தேய்த்தபடி கவினை முறைத்தான் சேது.

       “க்ரேட் ஷாட் டா  மவனே.. “என கைகளை தட்டியபடி அபியின் கை பிடித்து தனது மேடிட்ட வயிற்றை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு நடந்து வந்தாள் இசை.

      அதைக் கேட்ட சேது, “நல்ல அம்மா… நல்ல புள்ள.. ” என கோரமாக முகத்தை சுழித்தபடி கூறினான்.

       அதுவரை நிலாவின் கழுத்தில் இருந்த கவின், மரத்தில் இருந்து இறங்குவது போல் நிலாவின் மீதிருந்து சரசரவென இறங்கி சேதுவின் கழுத்தில் பாம்பாக சுற்றிக் கொண்டான்.

        “டேய்.. இறங்குடா உங்கம்மா மவனே…”சேது.

        “மாத்தேன் போ… ” என மலைப்பாம்பாக சேதுவின் கழுத்தில் சுற்றிக் கொண்டான் கவின்.

      “புள்ளைய பெத்து தர சொன்னா குரங்கு குட்டிய பெத்து குடுத்து இருக்கா.. ” என்றபடி இசையை முறைத்தான் சேது.

       அதைக் கேட்ட கவின் சேதுவின் தலைமுடியை பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.

        “அப்பிடித்தான்டா… விடாத… என் புளிப்பு முட்டாய புடுங்கி தின்னுட்டான்டா உன் அப்பன்… ” என அபியும் தன் பங்கிற்கு கூறினான்.

        “அய்யோ… வலிக்குதுடா… விடுடா மவனே… இவன ஆட்ட விட்டுட்டு உன் அம்மா என்னடா பண்றா? ” எனக் கத்தியபடி கவினின் பிடியில் இருந்து திமிறியபடி இசையைப் பார்த்தான் சேது. இசை செய்து கொண்டிருந்த காரியத்தைப் பார்த்த சேது வலப்பக்க நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

        “தெரியாம வந்து உங்க குடும்பத்துல வாக்கப்பட்டுடேன் டா… அய்யோ லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கே… ” என்றவாறு வலப் பக்க நெஞ்சை இறுக்கப் பற்றிக் கொண்டான் சேது.

         எதற்கும் அசராமல் மகன், கணவனை படுத்தும் இம்சையை தனது அலைபேசியில் மும்முரமாக பதிவு செய்து கொண்டிருந்தாள் இசை. இடை இடையே, “அய்யோ… என் எம்புட்டு அழகு.. என்னைய மாதிரியே இருக்கானே… ” என கவினை திருஷ்டி கழிக்கவும் தவறவில்லை. அதில் தான் சேது நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

         “டேய் முட்டா அண்ணா… ஓவரா நடிக்காதடா…ஹார்ட் அந்த பக்கம் இல்ல டா… ” என தலையில் அடித்தபடி கூறினான் அபி.

         “நடிக்கட்டும் விடு அபி… இத வீடியோ எடுத்து இன்ஸ்ட்டா ல ரீல்ஸ் போட்டா லைக் எகிறும்… ” இசை.

        “அடி பாதகத்தி… குடும்ப இஸ்திரியா டி நீ? ” என்ற சேதுவிற்கு உண்மையாகவே நெஞ்சு வலி வருவது போல் இருந்தது இசையின் கூற்றில்.

        இவர்கள் ஆட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் நிலாவின் விழி இரண்டும் தன்னவனையே தேடி சோர்ந்தது. அதை சரியாக கவனித்த சேது, “இளா அப்பவே போய்ட்டான் மா.. ” என்றான்.

         “ஏதாவது முக்கியமான வேலை வந்து இருக்கும்… ” என லேசாக இதழை வளைத்தாள் நிலா.

         வருடங்கள் கடந்து சுற்றி உள்ளவர்கள்  நிலாவை புரிந்து கொண்டாலும் அனைவரிடமும் தனது எல்லையிலேயே நின்றாள் நிலா. அதே இறுக்கமான முகம்.. அரிதாக தோன்றும் அதே மில்லி மீட்டர் அளவு புன்னகை… எவரையும் தூரத்திலேயே நிறுத்தும் பார்வை… என  காலங்கள் மாறினாலும் நிலாவிடம் எம் மாற்றமும் இல்லை.

      “ஏதோ வேலை விசயமா கிளம்பிட்டான் மா… ” என கனிவாக கூறினான் சேது.

      “இருக்கட்டும்… வந்துருவாரு… ” என அதே மில்லி மீட்டர் அளவு புன்னகையே பரிசளித்தாள் நிலா.

     எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் தன்னை அண்ணா என்றழைக்காதது சேதுவிற்கு பெரும் குறையாகவே இருந்தது.

     சேதுவின் சோக முகத்தை கவனித்த இசை, “நிலா… இன்னக்கி பிரிச்சு மேஞ்சுட்ட போ… ” என பெருமை பொங்க அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தாள்.

     அதைக் கேட்டதும் உற்சாகம் கொண்ட சேது, “ஆமா நிலா… இன்னக்கி உன் ஆட்டம் வெறித்தனம் வெறித்தனம்… ” என தன் பங்கிற்கு நிலாவினை அணைத்து உச்சி முகர்ந்தான்.

       ” ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா… ” என தமக்கையை மெல்ல அணைத்தான் அபி.

      அனைவரின் அணைப்பிற்கும் உட்பட்டு நின்றாளே தவிர எவ்வித பிரதி அணைப்பும் இல்லாமல் நின்றிருந்தாள் நிலா.

     “அத்தம்மா… நாந்தான பஸ்த் கிஸ் பண்ணேன்… ” என சேதுவின் கழுத்தில் இருந்து இறங்கி நிலாவின் முன் குதியாட்டம் போட்டான் கவின்.

       “ஆமான்டா பப்லு… எப்போதும் என் பப்லு தான் பர்ஸ்ட்… “என கவினின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் நிலா.

       “நாங்களும் இங்க தான் இருக்கோம்… ” என கையை கட்டிக்கொண்டு வானத்தைப் பார்த்தவாறு கூறினான் சேது.

       “பொறுக்காதே… உன் புள்ளைய தான டா கொஞ்சுறா? ” என சேதுவை முறைத்தாள் இசை.

        “பொறுக்காது பொறுக்காது… ” என மீண்டும் எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான் சேது.

        “சரி… நீங்க பேசிட்டு இருங்க.. நான் என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்… ” என மெல்ல நகர்ந்தாள் நிலா.

       அதை பார்த்த சேது, “யார் யாரோ தங்கை என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று… “என சோகமாக நிலாவை பார்த்து பாட… அதில் லேசாக சிரித்துவிட்டு சென்றாள் நிலா.

      “அடியேய் அரசி.. சிரிச்சா டி.. என் தங்கச்சி என்னையப் பாத்து சிரிச்சா டி.. ஐயோ.. என்னால தாங்க முடியலயே… நீ பாத்தியா டி? ” என சந்தோஷ மிகுதியில் துள்ளிக் குதித்தான் சேது.

       “அய்ய… அக்கா சிரிக்கிறதுல என்ன அதிசயம்? ” அபி.

       “போடாங்க்.. நிலா சிரிச்சா அது அதிசயம் தான்டா… ” என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் சேது.

      “நிலா இவ்வாறு இறுகி போனதற்கு நான் தான் காரணமோ… ” என மனதில் நினைத்து பழைய நினைவுகளில் வருந்தினான் அபி.

       “போடா குரங்கு புருஷா… நீ ஆடு.. நான் அப்பிடி போய் உக்கார்றேன்.. நீ வா அபி… இந்த மனுஷன இன்னக்கி கைல புடிக்க முடியாது… ” என அபியின் கையை ஆதரவாக பிடித்தபடி மைதானத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் இசை.

        சேதுவுடன் சேர்ந்து கவினும் துள்ளிக் குதிக்க…. அபியின் வருத்தம் புரிந்து அவனின் கரத்தை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் இசை.

      ஓய்வறைக்கு சென்ற நிலாவை ஒருத்தன் வழி மறித்து நின்றான். அதில் சிறிதும் பயம் கொள்ளாமல் இரு கைகளையும் இறுக்க கட்டிக்கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள் நிலா.

        “நீ தான் அவன் பொண்டாட்டியா? “என திமிராக கேட்டான் அவன்.

        அதற்கு எந்த பதிலும் கூறாமல் அவனையே உறுத்து விழித்தபடி நின்றிருந்தாள் நிலா.

        “ஆளு தான் குட்டை னு பாத்தா ஊமையா நீ? காதாச்சும் கேக்குமா ? இல்ல அதுவும் கேக்காதா? ” என சத்தமிட்டு சிரித்தான் அவன்.

         அதைக் கேட்ட நிலா, கீழ் உதடு வளைய அவனைப் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

         “ஏய்… “எனக் கத்தியபடி திரும்பவும் அவளை வழி மறித்தான். “நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கும் போற… நீ தான அந்த போலீஸ்காரன் பொண்டாட்டி? இப்ப தான புதுசா கல்லியாணம் ஆகி இருக்கு? அதுக்குள்ளயும் உன் புருஷன இழந்துறாத… அவன ஒழுங்கா கேஸ தோண்டாம இருக்க சொல்லு… இல்ல… உன் புருஷன கண்ட துண்டமா வெட்டி போட்டுருவோம்… ” என கர்ண கொடூரமாக மிரட்டினான் அவன்.

       அதைக் கேட்டு சற்றும் அசராமல் மெல்ல தன் வலக் காதை ஆட்காட்டி விரலை விட்டு ஆட்டியபடி, “பெஸ்ட் ஆப் லக்.. ” எனக் கூறியபடி நிற்காமல் நடந்தாள் நிலா.

      “இவள… ” என பல்லைக் கடித்தபடி நிலாவின் தலை முடியை தாவி கொத்தாக பற்றினான். அப்பொழுதும் முகம் மாறாமல் திரும்பி நின்று அவனையே அசராமல் பார்த்தாள் நிலா.

      “என்னடி பாக்குற? ” என அதற்கு மேல் அவன் பேசுவதற்குள் தனது வலக்கையை மடக்கி அவனது கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினாள் நிலா.

      நிலா அடித்த அடியில் அங்கேயே மயங்கி சரிந்தான் அவன். “வெட்டியா பேசிட்டு இருக்குறது எனக்கு சுத்தமா புடிக்காது… “என அவன் முழு மயக்கத்திற்கு செல்வதற்கு முன் அவன் காதில் கூறி விட்டு அங்கிருந்து சென்றாள் நிலா.

       ஓய்வறைக்கு சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வருகையில் அவன் காணாமல் போயிருந்தான். அதை சற்றும் பொருட்படுத்தாமல் வெளியே வந்தாள் நிலா. அவள் கொண்டு வந்த பையை அபி வாங்கிக் கொள்ள… அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். அப்பொழுது சரியாக நிலாவின் அலைபேசி மணி ஒலித்தது.

        ஆவலாக அதை எடுத்து காதில் வைத்து, “சொல்லுங்க.. “என்றாள் நிலா.

      “அதான் மேட்ச் முடிஞ்சுச்சு ல அப்புறம் எதுக்கு தேவை இல்லாம அங்க ஆக்சன் சீன் லாம் பண்ணிட்டு இருக்க? ” என இளா ஃபோனில் கத்துவது வெளியே அனைவருக்கும் தெளிவாக கேட்டது.

       “ஆக்சன் ஸீனா? எங்க? நாங்க பாக்கவே இல்ல.. ” என பாவமாக கூறினான் சேது.

        “த்தூ… மூடிட்டு இருடா… “என இசை அதட்டிய அதட்டலில் கப்பென்று வாயை மூடிக் கொண்டான் சேது.

        “நானா ஏதுவும் பண்ணல.. “நிலா.

        “அப்புறம் எப்படி டி அவன் மயங்கி விழுந்தான்? எந்த வம்பு சண்டைக்கும் போக கூடாது னு சொல்லி இருக்கேனா இல்லையா? ” எனக் காட்டு கத்தலாக கத்தினான் இளா.

         “அவன் தான் என் முடிய புடிச்சு இழுத்தான்…. ” என இறுக்கமாக பதில் கூறினாள் நிலா.

        “அவன் உன் முடியப் புடிச்சு இழுத்தா? நீயும் அவன் முடிய புடிச்சு இழுக்க வேண்டியது தான டி? அத விட்டுட்டு புரூஸ்லி மாதிரி சண்டை போட்டு இருக்க? ” இளா.

         அது தெளிவாக வெளியே கேட்க… “பைத்தியமா இவன்? வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை… னு சொல்லுவான் னு பாத்தா மென்டல் மாதிரி பேசுறான்… ஒருத்தன் என் தங்கச்சிக் கிட்ட வம்பு பண்ணி இருக்கான்…எனக்கு தெரியாம போச்சே.. ” என கடுகடுத்தான் சேது.

       இளா பேசுவது இசைக்கும் அபிக்குமே பிடிக்காமல் போக அமைதி காத்தனர்.

         “இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்? ” நிலா.

         “ஒழுங்கா அவன் கிட்ட போய் மன்னிப்பு கேளு.. ” என ஆணையிட்டான் இளா.

          “முடியாது.. ” என பட்டென்று ஆணித்தரமாக கூறினாள் நிலா.

          “கட்டுன புருஷன் சொல்றத கேக்க முடியுமா முடியாதா டி? ” என பல்லைக் கடித்தான் இளா.

           “முடியாது… ” என மறுபடியும் ஆணித்தரமாக மறுத்தாள் நிலா.

          “என் பேச்ச கேக்காத பொண்டாட்டி எனக்கு வேண்டாம்… வீட்டுக்கு வந்துறாத… அப்பிடியே உன் அம்மா வீட்டுக்கு போயிரு… ” எனக் கட்டளையிட்டான் இளா.

      “சரி..” என சற்றும் தயங்காமல் பதிலளித்து விட்டு அலைபேசியை அணைத்தாள் நிலா.

      “என்ன இவன் இப்பிடி பேசுறான்? இவனலாம் தூக்கி போட்டு மிதிச்சா தான் சரி வரும்.. வா நிலா போய் அவன் சட்டைய புடிச்சு கேப்போம்… ” என ஆவேசமாக கிளம்பினான் சேது.

        “வேண்டாம்…நாம ஊருக்கு கிளம்பலாம்… “என முன்னே நடந்தாள் நிலா.

       அபியும் நிலா பின்னாடி செல்ல… “என்ன பண்றது இசை? ” என தவிப்பாக மனைவியைப் பார்த்து கேட்க… “போகலாங்க…” என முன்னே நடந்தாள் இசை.

      வேறு வழி இல்லாமல் கவினை தூக்கிக் கொண்டு இசையை மெதுவாக அழைத்துச் சென்றான் சேது.

       திருமணமான மூன்றாவது நாளே மீண்டும் தன் பிறந்த வீட்டிற்கு கணவனால் அனுப்பி வைக்கப்பட்டாள் நிலா.

                               (நிலா வருவாள்…)

                           -செல்லம்மாள்பாரதி
   

    No comments yet.