அத்தியாயம் – 16

நித்யா பாலசுப்ரமணியன் | 25 Dec 2025 | Share

மறுநாள்-

தாத்தா தந்த வீட்டை போய் பார்த்தான், நந்தன். 

வீட்டிற்கு என எந்த பொருளும் வாங்க வேண்டி இல்லாமல் அனைத்தும் இருந்தது. வீடும் அழகாய் இருந்தது அத்தோடு அவன் மனதிற்கு மிகவும் பிடித்தும் இருந்தது.

‘ அப்போ நாளைக்கே இங்க வந்துடலாம் ‘ என எண்ணியவன் வேதாவிடம் கூற அவளுக்கு ஏனோ மனது கஷ்டமாக இருந்தது.

‘ இத்தனை நாட்கள் எல்லோருடனும் இருந்து விட்டு இப்போது தனியாக செல்வதென்றால் எப்படி ‘ என எண்ணியவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சுபத்ராவிற்கும் மருமகளை விட்டு பிரிய மனமில்லை. ” அடிக்கடி வந்து போகணும் என்ன ” எனக் கூறி அனுப்பினார்.

வர்ஷாவும் ” நீங்க இல்லாட்டி எனக்கு ரொம்பவே போர் அடிக்கும். இனி சனி ஞாயிறு உங்க வீட்ல தான் இருப்பேன் ” எனக் கூற ” தினமும் கூட அங்க வந்து இரு. யார் வேண்டாம்னு சொன்னா ” எனக் கூறியவள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அங்கு இவர்கள் இருவர் மட்டுமே என்பதால் சமைப்பதற்கும் அவளுக்கு உதவியாக இருக்கவும் பத்மா பாட்டியையும், மற்ற உதவிக்காக தோட்டக்கார வேலுவையும் உடன் அனுப்பி வைத்தார், சுபத்ரா.

ரவிவர்மா நந்தனுக்கு ஒரு புதிய கார் வாங்கி தந்தார்.

அவர்கள் கிளம்பும் போது ஏனோ சுபத்ராவிற்கு அவர்களை தனியாக அனுப்ப மனசு கேட்கவில்லை.

ஆகையால் அனைவருமே வந்து புது வீட்டில் இவர்களை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு தான் சென்றனர்.

எல்லோரும் சென்ற பின் பத்மா பாட்டியிடம் இரவு இட்லி சாம்பார் செய்ய சொன்னவள் உடை மாற்ற மேலே சென்றாள்.

உடைகள் எல்லாம் பெட்டியில் இருக்க பின்பு எடுத்து வைத்துக் கொள்ளலாம் என எண்ணியவள் சுடிதார் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து வெளியே வர, நந்தன் தனது உடைகளை பீரோவில் அடுக்கிக் கொண்டு இருந்தான்.

அன்று போலவே இன்றும் துண்டு எடுத்துக் கொள்ளாமல் மறந்து சென்றவள் தலைமுடியில் ஈரம் சொட்ட சொட்ட வந்து நிற்க தற்செயலாக திரும்பிய நந்தன் அவளை பார்க்க, குளித்து முடித்து வந்தவளின் நறுமணம் அந்த அறை முழுவதும் பரவுவதாய் உணர்ந்தவனின் கண்கள் அவளிடம் இருந்து மீள முடியாமல் தவித்தது.

இது எதையும் கவனிக்காமல் ஈரம் சொட்டும் கூந்தலை கைகளில் பிடித்துக் கொண்டே தனது பெட்டியில் துண்டை தேடிக் கொண்டிருந்தாள், வேதா.

ரொம்பவும் தேட விடாமல் துண்டும் உடனே கிடைத்து விட தலையில் கட்டியவள் எழுந்து திரும்ப, அதே நேரம் துண்டு தேடுகிறாளே என அவனும் டிரஸ் அடுக்கி கொண்டிருந்ததை விட்டுவிட்டு அவளுக்காக துண்டு ஒன்றை எடுத்தவன் அவளிடம் கொடுக்கலாம் என அவள் அருகே செல்ல எதிர்பார்த்த விதமாக இருவரும் இடித்து கொள்ள அவள் ‘ சாரி ‘ என சொல்லி விலக நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் ஆங்காங்கே சிறு முத்துக்களாய் மின்னிய தண்ணீர் துளியில் ஏனோ இவன் மனம் சிதறுவதாய் உணர்ந்தான். அதுவும் கண்ணிமைக்கும் நொடி தான். பின் அங்கிருந்து நகர்ந்தான்.

அடுக்கிக் கொண்டிருந்ததை அப்படியே போட்டுவிட்டு கீழே சென்று விட்டான்.

‘ என்னாச்சு இவருக்கு ஏன் திடீர்னு கீழே போய்ட்டார். பெட்டு ஃபுல்லா அவரோட டிரஸ் வேற இருக்கு. என்னோட டிரஸ்சும் எங்க வைக்கிறதுன்னு சொல்லல ‘ என எண்ணியவள் ‘ சரி இப்போதைக்கு பெட்டியிலேயே இருக்கட்டும் ‘ என எண்ணியவள் முடியை ஈரம் இல்லாது துவட்டி விட்டு இரு பக்கமும் சின்னதாய் முடி எடுத்து பின்னியவள் காயட்டும் என தலை முடியை அப்படியே விரித்து விட்டவள் பசி எடுக்கவும் சாப்பிடலாம் என கீழே சென்றான்.

பத்மா பாட்டி டிபன் எடுத்து வைக்க நந்தன் எங்கே என பார்த்தவள் அவன் தோட்டத்தில் இருக்கவும் அங்கே சென்றாள்.

கீழே வந்தவனுக்கோ மிக அருகில் பார்த்த வேதாவின் முகமும் அவளது நறுமணம் நாசியை தீண்டியதும் மீண்டும் மீண்டும் நினைவு வர ‘ என்ன இது ஏன் என்னோட மனசு இப்படி ஆகிடுச்சு. இப்ப நான் எதுக்காக வேதாவ நெனச்சிட்டு இருக்கேன். ஒரு வருஷம் மட்டும் மனைவியா இருக்க சொல்லி கேட்டுட்டு ஒன்றை மாசம் தான் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள நிஜ மனைவியாவே நினைக்க ஆரம்பிச்சிட்டேனா. எப்படி என்னோட மனசு மாறலாம். நீலா இருந்த இடத்துல இன்னொரு பொண்ணு எப்படி வர முடியும். எதனால் என்னோட மனசு இப்படி என்னை பாடாப்படுத்துது ‘ என எண்ணியவன் ‘ இனி வேதா கிட்ட இருந்து கொஞ்சம் தூரமாவே இருக்கணும் ‘ எனவும் எண்ணிக் கொண்டவன் தோட்டத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.

இரவு ஆனதால் வேலு தோட்டத்தின் விளக்குகளை அணைத்து இருந்தார். கேட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.

நந்தன் எங்கே என பார்க்கலாம் என தோட்டத்தின் பக்கம் வந்தவள் இருட்டில் அவன் சற்று தள்ளி நடந்து கொண்டிருப்பது தெரியவும் அங்கே சென்றாள்.

சென்று விட்டாளே தவிர அவனை எப்படி அழைப்பது என தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்.

பின் மெதுவாக ” அபி ” என அழைக்க இருளின் நிசப்தத்தில் மெல்லியதாய் ஒலித்த அவளின் குரல் அவனை ஏதோ செய்தது.

அதுமட்டுமல்லாது இதுவரை யாரும் அவனை அபி என அழைத்தது இல்லை. எல்லோரும் நந்தன் நந்தா என்று அழைக்க நீலா நந்து என அழைப்பாள். முதன் முதலாக தன் பெயரை அபி என வேதா அழைத்ததை கேட்டதும் ஏனோ அவன் மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு தோன்றுவதை உணர்ந்தான்.

அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையே என எண்ணியவள் மறுபடியும் அழைத்தாள்.

” அபி சாப்பிட வரீங்களா ” என சற்று சத்தமாக கேட்க, ஏனோ அவனுக்கு இப்போதைக்கு அவளை பார்க்கும் மனநிலையோ பசியோ இல்லை ஆகையால் ” நீ போய் சாப்பிடு வேதா. நான் வரேன் ” என சொன்னவன் அங்கேயே இருக்க இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அருகில் போய் மறுபடியும் அழைக்கலாம் என மனசு சொல்வதை ஏனோ செய்ய முடியாமல் திரும்பி நடந்தாள்.

அவன் தான் இது போல் எதுவும் கேட்க வேண்டாம் என்று எண்ணுவானே… பின் என்ன செய்வாள்….

திரும்பிச் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அங்கேயே நின்றிருந்தான்.

என்ன முயன்றும் கண்கள் அவளிடமே செல்ல மனமோ இது தப்பு என உரைக்க ‘ இனி அவளிடம் இருந்து விலகியே இருக்கணும் ‘ என மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டவன் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து விட்டான்.

நடந்து கொண்டிருந்ததால் வந்த களைப்போ அவளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று எண்ணியதால் வந்த சோர்வோ அறியாது அங்கேயே அமர்ந்திருந்தான்.

உள்ளே சென்றவளோ பத்து நிமிடம் காத்திருந்து விட்டு அவன் வரவில்லை என்றதும் சாப்பிட்டு முடித்தாள்.

பத்மா பாட்டியிடமும் ” நீங்களும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ” என்று சொன்னவள் அவனுக்கு என இட்லி சாம்பார் ஐ ஹாட் பேக்கில் வைத்து எடுத்துக் கொண்டு ஒரு பாட்டிலில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அறைக்கு போனாள்.

அறையில் இருந்த டேபிளின் மேல் வைத்தவள் ‘ இத்தனை நாள் பாவம் அவர் கீழே படுத்திருந்தார். இனி மேல் ஆச்சும் மேல பெட்டுல படுத்துக் கட்டும். நாம கீழே படுத்துக்கலாம் ‘ என எண்ணியவள் பெட்டு மேல் இருந்த அவன் உடைகளை பீரோவில் நீட்டாக அடுக்கி விட்டு பெட்டையும் சரிசெய்து வைத்தாள் அவன் வந்து படுக்க எசவாக….

பின் போர்வை ஒன்றை எடுத்து கீழே விரித்தவள் தலையணை ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு படுத்தாள்.

    No comments yet.