அத்தியாயம் -15

Chellammal Bharathi | 25 Nov 2025 | Share

           சற்று முன் கொண்டாட்டமாக இருந்த வீட்டில் பேரமைதி நிலவியது. இளஞ்சேரன் கூறிய வார்த்தைகளின் உண்மையை ஜீரணித்துக்கொள்ள அங்குள்ள அனைவருக்கும் நேரம் தேவைப்பட்டது.

        அபி சுதாரித்து மெதுவாக நழுவ முயல, இளஞ்சேரனுடன் வந்த மற்ற போலீஸார் அவனை நகர விடாமல் பிடித்தனர். அபி ஓட பார்த்ததை கண்ட மற்றவர்கள் அவன் மீதான குற்றத்தை உறுதிபடுத்திக்கொண்டனர்.

         “உங்க எதிர்வீட்ல உள்ளவனோட சேர்ந்து போதைக்கு அடிமையாகி உங்க மகன் அபியும் இன்னும் சில பேரும் ஸ்கூல்ல சப்ளை பண்ணி இருக்காங்க… போன வாரம் நடந்த ப்ளட் டெஸ்ட் ல உங்க மகனோட சேத்து இன்னும் நாலு பேருக்கு உடம்புல அளவுக்கு அதிகமான போதை மருந்து கலந்து இருக்கு… விசாரணையில உங்க மகனும் முக்கியமான சப்ளையர் னு தெரிய வந்து இருக்கு…ஸோ… உங்க மகன அரெஸ்ட் பண்றோம்….”என கூறி விட்டு, “பாய்ஸ்….அரெஸ்ட் ஹிம்… “என தன் சகாக்களுக்கு ஆணையிட்டான் இளா.

         கதிர்வேலும் வள்ளியும் அதிர்ச்சியில் கண்ணீர் மல்க பேச நா எழாமல் உறைந்து நின்றிருந்தனர்.

           “என் புள்ளைய நான் தான் கண்டிச்சு வளக்காம விட்டுட்டேன்….எல்லாம் என் தப்புத்தான்…..”என தலையில் அடித்துக் கொண்டு அழுதார் வள்ளி.

           “தப்பு பண்ணுன எவனுக்கும் என் வீட்ல இடம் இல்ல….கூட்டிட்டு போங்க அவன….”என கண்ணீர் வழிய கோபத்துடன் கத்தினார் கதிர்வேல்.

          இளஞ்சேரன் தனது கடமையை செய்ய, அபியை கைது செய்து அழைத்து சென்றான். உறவினர்கள் ஆறுதல் கூறியும் பழி சொல் கூறி கொண்டும் அனைவரும் மெது மெதுவாக கலைந்து சென்றனர்.

           பித்து பிடித்தது போல் அமர்ந்து இருந்த அலமேலு, நிலாவை பார்த்து விட்டு… “எல்லாம் இவளால தான்… இவ கிரகம் தான் என் பேரன புடிச்சு இப்பிடி ஆட்டி வைக்குது….சனியபுடிச்ச மூதேவி… “என கண்ணீருடன் நிலாவை திட்டினார்.

          நடந்த பேரதிர்ச்சியில் இருந்து வெளிவந்திராத நிலா, அலமேலுவின் அகங்கார குரல் கேட்டு சுய நினைவு வந்து தன் பாட்டியை நிமிர்ந்து நோக்கினாள்.

           அலமேலுவின் வார்த்தைகளை கேட்ட கதிர்வேல், “உன் பேரன் பண்ணுன தப்புக்கு இவ என்ன பண்ணுவா? போதும்… கிரகம்.. ராசி.. அது இது னு சொல்லி சொல்லி தான் ஒரு புள்ளை இப்பிடி சாராயம் விக்கிற அளவுக்கு போயிருக்கு… கொஞ்சம் வாய மூடிட்டு போறியா நீ? “என்றார்.

           என்றுமில்லாமல் தன் மகன் தன் மீது கோப படவும் வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டு உள்ளே சென்றார் அலமேலு.

          “இந்த பழிச்சொல் எப்ப தான் என்னைய விட்டு போகும்? “என மனதினுள் புழுங்கி கொண்டு அறைக்குள் சென்று மெத்தையில் தொப்பென விழுந்த நிலா, கண்ணீரில் கரைந்தவாறே உறங்கி விட்டாள்.

           மறுநாள் சோம்பலுடன் கூடிய சோகமுடனே விடிந்தது நிலாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு .தனது கிட் பேக்கை தூக்கி கொண்டு வீட்டை விட்டு புறப்பட்ட நிலாவை கண்ட கதிர்வேல், “எங்கமா இவ்ளோ காலையில? “என வினவினார்.

             “இன்னக்கி டிஸ்ட்டிக் செலக்சன்….அதான்…. “நிலா.

            “ஓஓஓ.. சரி…ஜாக்கிரதை….”என நிலாவை வழி அனுப்பி வைத்தார் கதிர்வேல்.

           எதுவும் கூறாமல் அமைதியாக தன்னை செல்ல அனுமதிக்கும் தன் தந்தையை வியப்புடன் நோக்கிய நிலா, வழக்கமான தனது அமைதியை தத்தெடுத்து கொண்டு புறப்பட்டாள் நிலா.

          நிலா செல்வதை கண்ட அலமேலு, “அங்க என் பேரன் ஜெயில்ல கிடக்குறான்… உங்களுக்கு இங்க கொண்டாட்டம் கேக்குதா? “என்றார்.

            “உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும்….தப்பு பண்ணுனவன் தண்டனை அனுபவிச்சு தான் ஆகனும்….உன் வேலை என்னமோ அத மட்டும் பாரு….”என கதிர்வேல் தன் தாயை அதட்ட… அலமேலு மிரண்டு அமைதியானார்.

                  💞💞💞💞💞💞

           வுமன் கிரிக்கெட் டிஸ்ட்டிக் செலக்சன் நடக்கும் க்ரவுண்டிற்கு வந்த நிலாவின் விழிகள் தன்னவனை வலை வீசி தேடியது.

           சேர நிலவின் எண்ணத்தின் நாயகனான இளஞ்சேரன், தன்னவளின் தேடலை உணர்ந்து புன்னகையுடன் அவள் முன்னே பிரசன்னமானான்.

              “வா வா… முதல்ல ரிஜிஸ்ட்ரேஷன முடிச்சுறலாம்… “என நிலாவின் கைபிடித்து அவளுக்கு துணையாக நின்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்தான் இளா.

            “ஓகே……இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு செலக்சனுக்கு… க்ரவுண்ட்ல போய் வார்ம் அப் பண்றதுனா பண்ணு… “என நிறைந்த புன்னகையுடன் கூறினான் இளா.

           “இல்ல வேண்டாம்… “என சலனமில்லா முகத்துடன் கூறினாள் நிலா.

           “இப்ப என்ன ஆச்சு உனக்கு? இது டிஸ்ட்டிக் செலக்சன் டி… இது உன்னோட கனவு… அதுக்கான பரபரப்பு உன் கிட்ட கொஞ்சம் ஆச்சும் இருக்கா? “இளா.

            “இல்ல… நேத்து… தம்பி… எப்பிடி…. எப்பிடி இருக்கான்? “என தயங்கி தயங்கி இளாவிடம் கேட்டாள் நிலா.

             “அவனுக்கு என்ன? நல்லா தான் இருக்கான்… ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு… அவன பத்தி நீ ஏன் கவலபடுற? அவன் என் மச்சான்…. அவன் என் பொறுப்பு னு சொல்லிட்டேன்… அவன பத்தி கவலபடாம,நீ… உன் ட்ரீமோட ஸ்டார்ட்டிங் பாயிண்ட் ல நிக்கிறத மனசுல ஏத்து…. “இளா.

             “இல்ல…. எல்லாரும் சொல்லுற மாதிரி என்னால தான் இப்பிடி ஆகி இருக்குமோ? என்னோட ராசியினால தான் என் தம்பி இப்பிடி தப்பா போயிட்டானோ?என் வீட்ல சொல்லுற மாதிரி நான் தரித்திரம் பிடிச்சவ தான் போல…. நான் உங்களுக்கு வேண்டாம்…. அப்புறம் என்னைய புடிச்ச பீடை உங்களையும் புடிச்சுற போகுது…. “நிலா.

            நிலா கூறியதை கேட்ட இளா, கண்கள் சிவக்க… காட்டாறாய் சினம் கொப்பளிக்க… வேங்கையின் பாய்ச்சலுடன் தன்னவளை இழுத்து அறைந்தான் இளா.

        அறை வாங்கிய நிலா, உடல் பதற….உள்ளமும் தடுமாறி… கண்கள் கலங்க தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.

            “யாருடி நீ? நீ என் நிலா இல்ல…..நீ யாரோ…. என் கண்ணு முன்னாடி நிக்காத….போ….போயிரு…. Get out of my life…. “என நிலம் அதிர கத்தினான் இளா.

            விழி கலங்க தன்னவனை சிமிட்டாமல் அதிர்ச்சியுடன் பார்த்தாள் நிலா.

          “என்னடி பாக்குற? நீ என் நிலா இல்ல…. அவ இப்பிடி உன்னைய மாதிரி பைத்தியக்காரத்தனமா பேச மாட்டா… ஏன் யோசிக்க கூட மாட்டா…. என்ன சொன்ன? மத்தவங்க பேசுறதெல்லாம் உண்மையா? ஆங்? அடுத்தவங்க தன்னை கேலி பேசுறதெல்லாம் தூசி மாதிரி ஊதி தள்ளுவாடி என் நிலா… அவ தான்டி என் நிலா… அவ தான் …நிலா…. நீ இல்ல… நீ… இந்த சமுதாயம் என்ன சொல்லுது னு அந்த வீணா போன வேலை வெட்டி இல்லாதவனுகளோட பத்து பைசாக்கு தேறாத வார்த்தைய மண்டையில ஏத்தி அத நம்பி மூலையில முடங்கி கிடக்குற, சாதாரண… சாதாரண மனுஷ பிறவி டி நீ… ஆனா என் நிலா, அந்த மகா உத்தம மனுஷங்களலாம் ஓரம் கட்டி அவனுக வாயாலயே பொண்ணுனா இவ பொண்ணுடா… இப்பிடி ஒரு பொண்ணு நமக்கு பொறக்கலயே னு பெருமை பேச வைக்கிறவடி…. இடியே விழுந்தாலும் நாம செய்யிற செயல் தான் நம்மளோட நல்லது கெட்டத தீர்மானிக்குது னு நம்புறவடி என் நிலா…. நீ என் நிலா இல்ல டி… போ… போயி… மூலையில உக்காந்துக்க…. ஏன்னா உன்னோட ராசியால இந்த உலகத்துல உள்ளவங்களுக்கு ஏதாவது ஆகிற போகுது…. அதோ… அந்த பொண்ணோட கையில காயம் பட்டதுக்கு நீ இங்க வந்த  உன்னோட ராசியால தான்…. போ… போ…போய் உங்க வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்க…. ” என ஆழ்கடல் அளவு வேதனையுடன் கண் கலங்க எரிமலை கோபத்துடன் வெடித்தான் இளா.

          தன்னவனின் ஒவ்வொரு வார்த்தையும் மின்னல் ஒளி வாளாய் நெஞ்சில் இறங்க… துளிர்த்த கண்ணீரை துடைக்காமல் தனது கிட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு க்ரவுண்டை நோக்கி திரும்பினாள் நிலா.

           அதை கண்ட இளா, “ஏய் ….வெளியே இப்பிடி போகனும்….நீ ஏன் உள்ள போற? உன்னோட பீடையால க்ரவுண்ட்ல உள்ளவங்களுக்கு ஏதாவது ஆகிற போகுது….”என ஏளனத்துடன் கூறி நிலாவை கை நீட்டி தடுத்தான்.

           தன் முன் தடுக்க நீட்டிய இளாவின் கையை ஒரு கையால் ஒதுக்கி விட்டு… தன்னவனை தன் ஒரு பார்வையால் ஒதுக்கி விட்டு க்ரவுண்டிற்குள் உறுதியான காலடித்தடத்துடன் நுழைந்தாள் நிலா.

        இதுவரை ஆடவர்களின் பந்தை சூறாவளியாய் சுழற்றி அடித்த நிலா, இங்கு செலக்ஷனில் தனக்கு போடப்பட்ட பத்து பந்தில் ஏழு பந்தை வெளியே அடித்து தொலைத்து விட்டாள். நிலாவின் அபார திறமையை கண்ட செலக்ஷன் டீம் மெம்பர்கள் முதல் ஆளாய் நிலாவை தேர்வு செய்தனர்.

          செலக்சனை வெற்றிகரமாக முடித்து வந்த நிலாவை கர்வ புன்னகையுடன் எதிர்கொண்டான் இளா. தன்னவனின் அந்த புன்னகையை கண்டவள், தன் கூரிய கண்களால் கூறு போட்டுக்கொண்டே…. “நான் மூலையில முடங்கி கிடக்குறவ இல்ல…. அந்த மூலைய முட்டி மோதி உடைச்சு முளைவிட்டு வெளில வர்றவ…. Are you understand AC sir? “என இளாவின் சட்டை காலரை இழுத்து அவனின் கண்ணோடு கண் நோக்கி காதல் கர்வத்துடன் மொழிந்தாள் சேரநிலா.

         நிலாவின் மறுமொழியில் சிரித்த இளா, “அதான் க்ரவுண்ட்லயே சொல்லிட்டியேடி…. அடிச்சது வலிக்குதோ? “என்றவாறு நிலாவின் கன்னத்தை தன் கரங்களால் வருடினான்.

          “அதெல்லாம் வலிக்கல… நல்லாதான் இருந்துச்சு…. “என கண்ணடித்து சிரிப்புடன் உரைத்தாள் நிலா.

          “பைத்தியக்காரி…. சரி நீ சைக்கிள எடுத்துட்டு முன்னாடி போ… உன் பின்னாடி வர்றேன்…. “என சிரித்தவாறு கூறி விட்டு நிலாவை பின்தொடர்ந்தான் இளா.

             குறுஞ்சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்த நிலாவை வீட்டின் பேரமைதியே வரவேற்றது. நிலா உள்ளே நுழைந்ததும், “வாடியம்மா… இன்னும் எத்தனை பேர தூக்கி முழுங்க இருக்க? கூட பொறந்த பொறப்பு அங்க ஜெயில்ல கிடக்கு… அவன பத்தி கவலை இருக்கா? மினுக்கி கிட்டு போய் ஆடிட்டு வர்ற… “என்ற வார்த்தைகளால் நிலாவின் நேச ஆலகால விசத்தை பாய்ச்சினார் அலமேலு.

          தன் தாயின் அதட்ட வாய் திறந்த கதிர்வேல், நிலாவின் பின்னாடியே இளாவும் வருவதை கண்டவர் என்ன கூறுவது என்று திகைத்து நின்றார்.

           தன் பாட்டி தன்னை நோக்கி வீசிய வார்த்தைகளை கேட்ட நிலாவின் நினைவில் தன்னவன் இன்று கூறிய வார்த்தைகள் முன்னே வர… “இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த பேச்ச கேக்கனும்? ” என்ற சுயபச்சாதாபம் தோன்ற…. “நானும் உனக்கு பேத்தி தான பாட்டி? “என அலமேலுவை நோக்கி கேட்டாள் நிலா.

             அன்று போல் இளஞ்சேரனின் முன் ஏதாவது கேட்டு விடுவாளோ என்ற பயத்தில், கதிர்வேலுவும் வள்ளியும்.. “நிலா… உள்ள போ… “என்றனர்.

          “என்னடா புதுசா இந்த தரித்திரம் புடிச்சவள அடக்குறீங்க? நீ எனக்கு பேத்தியா? என் மகனுக்கு பொறந்ததால மட்டும் நீ என் பேத்தி ஆகிற முடியாது…. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்…. குடும்பத்த ஆட்டி படைக்க ஆடி மாசத்துல வந்து பொறந்த மூதேவி டி நீ…. “அலமேலு.

         அலமேலு பேச பேச… இளாவின் உடல் இறுகியது…. இருந்தாலும் இது தன்னவள் பதிலடி குடுத்து நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் என்றெண்ணி தன்னை கட்டுப்படுத்தி தன்னவளை பார்த்து நின்றான் இளா.

            “குடுப்பினை… ம்ம்…?? “என ஒரு கசந்த முறுவலை சிந்தி விட்டு… “அம்மா வயித்துக்குள்ள இருக்குறப்ப எனக்கு எப்படி பாட்டி தெரியும்? இது ஆடி மாசம்… இப்ப நான் பொறந்தா என் குடும்பம் கஷ்ட்டபடும் னு…. அப்பிடி ஒரு ஞானசக்தி எனக்கு இல்லையே…. உனக்கு எப்பிடியோ எனக்கு தெரியாது பாட்டி…. ஆனா சின்ன வயசுல இருந்து உன் மடியில படுத்து உன் கிட்ட கதை கேட்க மனசு ஏங்கும்…. ஆனா நீ என்னைய உன் கண்ணுலயே பட விட மாட்டியே…. நான் பொறந்த இத்தனை வருஷத்துல நான் ஏதாவது தப்பு பண்ணி இருக்கேனா? நான் செய்யாத எல்லா அசம்பாவிதத்துக்கும் என்னைய காரணம் காட்டி என்னைய ஒதுக்குறப்ப நெஞ்சுக்குள்ள என்னமோ பண்ணும் பாட்டி…. உனக்கு இப்ப என்ன வேணும் பாட்டி? என்னால தான் உன் பேரன் ஜெயிலுக்கு போய் இருக்கான்? என்னோட கெட்ட ராசியினால தான? நான் போயிட்டா என்னைய புடிச்ச எல்லாம் உன் பேரன ஒன்னும் பண்ணாதுல பாட்டி? நான் போயிறேன்…. மொத்தமா…. நானும் மனிஷி தான் பாட்டி…. என் கண்ணுலயும் கண்ணீர் வரும்… அடிச்சா, எனக்கும் வலிக்கும்…. நான் ஒன்னும் கல்லு இல்ல…. எனக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்கு…. அத ஏன் யாரும் புரிஞ்சுக்கல…. “என கண்களில் கண்ணீர் வழிய முழங்காலிட்டு கதறினாள் நிலா.

          நிலா கூறியதை கேட்ட இளா, “நிலா…. “என கர்ஜித்தான். வள்ளியும் கதிர்வேலுவும், கண்ணீருடன் குற்ற உணர்வுடன் நிலாவை பார்த்திருந்தனர் .

         “நிலா…. “என உறுமினான் இளா. அதை கேட்ட அனைவருக்கும் உள்ளம் ஜில்லிட்டு போக…. கண்ணீருடன் தன்னவனை ஏறிட்டாள் நிலா.

         “அன்னக்கி, உன் கிட்ட ஒன்னு கேப்பேன்… நான் சொல்லுறத செய்யனும் னு சொன்னேன் ல…. இப்ப நான் சொல்லுறேன்…. நீ செய்வியா? ” என சீற்றம் கொண்ட சிறுத்தை என உறுமினான் இளா.

          “ம்ம்… “என தலையை ஆட்டினாள் நிலா.

          “அப்ப சரி….. “என இளா, தனக்கு வேண்டியதை கூற…. அதை கேட்ட நிலாவின் இதழ்கள் கர்வமுடன் வளைந்தன… விழிகள் கூர் ஈட்டியின் கூர்மையுடன் நிமிர்ந்து நோக்கியது…….

                            (சேரநிலா மிளிர்வாள்….)

                         -செல்லம்மாள்பாரதி

           

    No comments yet.