அத்தியாயம் – 14

நித்யா பாலசுப்ரமணியன் | 22 Dec 2025 | Share

கட்டிலில் அமர்ந்திருந்தவள் போட்டிருந்த நகைகளை எல்லாம் பத்திரமாக கழற்றி அருகில் இருந்த மேஜையின் ட்ராயரை திறந்து உள்ளே வைத்தாள். தலையில் கனத்து கொண்டிருந்த மல்லி சரத்தையும் எடுத்து மேஜையின் மேல் வைத்தவள் படுத்துக் கொள்ள தூக்கமும் உடனே வந்தது.

மதியம் தூங்கியதாலோ என்னவோ நந்தனுக்கு தூக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தவனை மல்லிப் பூவின் வாசமும் தொல்லை செய்தது.

நீலாவிற்கு சிவப்பு ரோஜா மட்டும் தான் பிடிக்கும். அவள் ” மல்லிப்பூ ரொம்பவே வாசனையா இருக்கு மத்தவுங்களை ஈர்ப்பது போல ” என சொல்லி இவன் வாங்கித் தந்த முதல் நாளிலேயே மறுத்துவிட்டாள்.

ஏனோ அந்த நினைவு கண் முன் வர எழுந்து அமர்ந்தவன் வேதா நிம்மதியாக தூங்குவதை பார்த்தான்.

மல்லிப்பூ மேஜையின் மேல் கிடப்பதை பார்த்தவன் ‘ இவளுக்கும் மல்லி பிடிக்காது போல ‘ என எண்ணி கொண்டவன் தூங்க முற்பட்டான்.

காலை ஐந்து மணிக்கே முழிப்பு தட்டி விட எழுந்த வேதா, நந்தனை பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனது தூக்கம் கலைந்து விடாமல் மெதுவாக எழுந்தவள் சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.

குளித்து முடித்து வெளியே வரவும் கதவு தட்டும் சத்தம் கேட்டவள் ‘ அவன் தூக்கம் கலைய போகிறதே ‘ என்று பார்த்தவள் ‘ அய்யோ அவுங்க கீழ இல்ல படுத்து இருக்காங்க ‘ எனவும் எண்ணியவள் கதவு திறக்கலாமா வேணாமா என யோசனையோடு நின்றிருக்க நந்தனும் கதவு தட்டும் சத்தம் கேட்டு ஏழ கதவின் அருகே செல்ல போனவளிடம் ஒரு நிமிடம் என கையில் சைகை காட்டியவன் தலையணை பெட்ஷீட்டை கட்டிலின் மேல் எடுத்துப் போட்டு விட்டு கட்டிலின் மேல் படுத்துக் கொள்ள அவள் கதவை திறந்தாள்.

கதவை கொஞ்சமாக திறந்து பார்க்க பத்மா பாட்டி கையில் காபியுடன் நின்று இருந்தார்.

இவளோ குளித்து முடித்து சுடிதார் மாற்றியவள் துண்டு அங்கு இல்லாததால் தலையில் ஈரம் சொட்ட நிற்க ” ஏமா துண்டு கட்ட வேண்டியது தானே ” எனக் கேட்க ” இதோ மா. கதவு தட்டுற சத்தம் கேட்டதால அப்படியே வந்துட்டேன் ” என சிரித்துக் கொண்டே சொல்ல ” போய் முதல்ல தலையை துவட்டுமா சளி பிடிக்க போகுது ” எனக் கூறியவர் கீழே சென்று விட கதவைத் தாழிட்டு விட்டு திரும்ப நந்துவும் எழுந்து அமர அவனிடம் காபியை நீட்டினாள்.

காபியை எடுத்தவன் எழுந்து அலமாரியில் இருந்து துண்டு ஒன்றை எடுத்து நீட்ட ” தேங்க்ஸ் ” என சொல்லி வாங்கிக் கொண்டவள் தலையில் கட்டிக் கொண்டு காபியை குடிக்க தொடங்கினாள்.

அன்றைய பொழுது இனிதே ஓடியது.

மறுநாளில் இருந்து நந்தன் தன் வேளையில் பிசியானதும் வேதாவிற்கு அவனை பார்க்கும் நேரம் குறைந்தது.

வீட்டில் எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருப்பதால் இவளுக்கு என எந்த வேலையும் இல்லை.

சாப்பிடுவதும் தூங்குவதுமாய் இருக்க இவளுக்கு நேரமே போகவில்லை.

‘ ஏதாவது புத்தகம் இருந்தாலும் பரவாயில்லை படித்துக் கொண்டு பொழுதை போக்கலாம் ‘ என எண்ணியவள் அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் அஜய்யின் வீட்டுக்கு போயிட்டு வருவதாக சுபத்ராவிடம் கூறினாள்.

ஆனால் அவரோ ” நந்துவும் அங்க தான் போறான் அதனால இரண்டு பேரும் காலை டிபன் முடிச்சிட்டு சேர்ந்தே போங்க. நீ எப்படி தனியா போவ ” என சொல்ல நந்துவும் ” சரிம்மா நான் போகும் போது கூப்பிட்டு போறேன் ” என சொல்ல அன்று முழுவதும் அஜய்யின் வீட்டில் கழிந்தது.

வீட்டிற்கு கிளம்பு முன் அஜய்யிடம் ” அண்ணா புத்தகம் ஏதாவது வைச்சு இருந்தா தரீங்களா ” என கேட்க தன் அறையில் இருந்த அலமாரி ஒன்றை காண்பித்து ” என்ன புத்தகம் வேணுமோ எடுத்துக்க ” என அவன் சொல்ல அங்கே என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றது என ஆராய்ந்தவள் ராஜேஷ்குமார் நாவல்களையும் ரமணிச்சந்திரன் நாவல்களையும் எடுத்துக் கொண்டு ” படிச்சிட்டு தரேன் ” எனக் கூற ” நீயே வச்சுக்கோமா ” என புன்னகையுடன் அஜய் கூற, போனில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த நந்தன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

காரில் வீடு திரும்பும் போது அவன் அமைதியாகவே கார் ஓட்ட இவளும் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர வீடு வரையிலும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இரவு உணவு அஜய் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதால் நேராக தங்கள் அறைக்கு படுக்க சென்றனர்.

அறைக்குள் வேதா நுழையும் போது ” ஒரு நிமிடம் ” எனக் கூறியவன் ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல அந்த அறை முழுவதும் புத்தகங்கள் தான் இருந்தன.

புத்தகங்களை பார்த்ததும் அவளது கண்கள் அழகாய் விரிந்தது.

விரிந்த அவளது கண்கள் ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது.

” இது பாட்டியோட லைப்ரரி. உனக்கு என்ன புக் வேணுமோ எடுத்து படி. ஆனால் எடுத்த இடத்தில் மட்டும் வச்சிடு ” எனக் கூறியவன் அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு இருந்த இடத்தையும் காண்பித்தான். ” சரி ” என தலையைசைத்தவள் புத்தகங்களை ஆராய அவன் அலுவலக அறைக்குள் சென்று முடங்கினான்.

எவ்வளவு நேரம் அந்த புத்தகத்தோடு இருந்தாளோ அவனுக்கு தெரியாது. அலுவலக அறையிலேயே அவன் தூங்கி விட்டான்.

மறுநாள் –

பக்கத்தில் எங்காவது போய் வரலாம் என எண்ணியவள் ” பக்கத்தில் ஏதாவது கோவில் இருக்கா அத்தை ” என கேட்க ” பக்கத்துல ஒரு பழமையான சிவன் கோவில் ஒன்னு இருக்கு சாயந்திரம் போகலாம் ” என சுபத்ரா கூற மகிழ்ந்தவள் மாலை எப்போது வரும் என காத்திருந்தாள்‌.

மாலை ஆனதும் குளித்து சேலை அணிந்து கொண்டு கீழே வர, அன்று வெளியே சென்றிருந்த நந்தன் சீக்கிரமே வீடு வந்து விட ” நந்தன் தான் வந்துட்டானே நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வாங்களேன் ” என அவர்கள் இரண்டு பேரையும் ஒன்றாய் வெளியே அனுப்பலாம் என எண்ணி சொல்லி விட வேதாவோ ” பரவாயில்ல அத்தை அவருக்கு வேலை இருக்கும் ” என அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் ” நான் ரெடி ஆயிட்டு வரேன் போகலாம் ” என சொல்லி விட்டு மேலே செல்ல அவன் போகும் வேகத்தை பார்த்து சுபத்ரா சிரித்துக் கொள்ள இவளும் புன்னகைத்தாள்.

‘ அம்மா முன்னாடி நல்ல கணவன் மனைவியா தெரியனும் இல்லையா… அதுக்குத் தான் ‘ என எண்ணியவளின் மனம் ஏனோ ஏதையோ எதிர்பார்ப்பதை உணர்ந்தாள்.

இருவரும் கோவிலுக்குள் நுழைய போக அங்கிருக்கும் பூக்கார அம்மா ” என்னம்மா கோயிலுக்கு போறீயே தலையில பூ வச்சுட்டு போக கூடாதா. முழம் இருபது ரூபா தான் வாங்கிகம்மா ” எனக் கூற அவன் ” வேண்டாம் ” என சொல்ல வாய் திறக்கும் முன் ” மல்லி பூ தாங்கம்மா ரெண்டு முழம் ” என அவள் வாங்க ” என்னது இது அவளுக்கு மல்லி பிடிக்குமா ” என பார்த்தவன் வாங்கிய அவள் தலையில் சூடிக் கொள்ள முதன் முதலாக அவளை முழுதாய் நிமிர்ந்து பார்த்தான்.

கருமையான நீண்ட கூந்தல் அழகாய் பின்னி இருந்தாள். அதில் அவள் சூட்டிக் கொண்ட மல்லி இன்னும் அவள் கூந்தலை அழகு படுத்தியது. இளம் மஞ்சள் நிறத்தில் கட்டியிருந்த புடவை கழுத்தில் தாலிக்கொடி அத்துடன் டாலர் வைத்திருந்த ஒரு செயின் காதில் ஜிமிக்கி அணிந்திருந்தாள். கைகளிலும் ஒரே ஒரு வளையல் தான் போட்டு இருந்தாள். எளிமையாக மிகவும் அழகாக நேர்த்தியாக இருந்தாள்.

மாநிறம் தான். ஆனால் அம்மா உடல் நலம் தேறியதால் கவலை ஏதும் அற்றவளாய் இருந்ததாலோ என்னவோ அவள் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது.

திருமணம் ஆனவள் என்பதற்கு அடையாளமாய் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இருந்தாள். இதெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவள் அப்படி இருந்தது ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது.

சிரிக்கும் போது கன்னத்தில் அழகாய் ஒரு குழி விழுந்தது அவளை இன்னும் அழகாய் காண்பித்தது.

இத்தனை மாதங்கள் அவளோடு பேசிக் கொண்டிருந்தாலும் இன்று தான் முதன் முதலாக அவளை நன்றாக பார்க்கிறான்.

    No comments yet.