தன் குடிகார நண்பர்கள் சூழ வெறியுடன் வயல் காட்டில் அமர்ந்து இருந்தான் அபி.
“என்னடா இது….அவர இப்பிடி போலீஸ் புடிச்சுட்டு போயிருச்சு….இப்ப சரக்கு இல்லாம கை காலுலாம் ஒரு மாதிரி இருக்கு டா… அவரு எப்பிடியும் வெளில வந்துருவேன் னு தான சொல்லிட்டு போனாரு…மூணு நாள் ஆச்சு….இன்னும் வரலயே டா… அவர போலீஸ் ல புடிச்சு குடுத்த பய மட்டும் என் கிட்ட சிக்கட்டும்…..அவன சதக் சதக் னு என் கையாலயே குத்தி கொன்னுருவேன்… “என அபியின் நண்பன் ஒருவன் போதை கிடைக்காத விரக்தியில் கத்திக்கொண்டு இருந்தான்.
ஏற்கனவே தன்னை அடித்ததில் நிலா மீது வன்மம் கொண்டிருந்த அபி, தன் நண்பன் கூறிய கடைசி வரியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். நிலா மீது மிகுந்த வன்மத்தை வளர்த்து கொண்டு விரைவாக அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினான் அபி.
வீட்டில் யாரும் இல்லாததை கண்ட அபி, இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணிக்கொண்டு மெல்லிய கூரிய ப்ளேடை எடுத்து வைத்துக்கொண்டு நிலாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
வழக்கம் போல் நிலா, தனது கல்லூரி வகுப்பை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். எப்பொழுதும் தன்னை வசவுகளால் வரவேற்பவர்கள் யாரும் இன்றி தன் தம்பி அபிஷேக் மட்டும் அமைதியாக அமர்ந்து இருப்பதை கவனித்த நிலா, ஏதோ தவறாக நடக்க போவதாக உணர்ந்தாள்.
தன்னவன் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வர….தன்னறைக்குள் நுழைய முயன்ற நிலாவை, “அக்கா….”என்ற அபியின் வார்த்தை தடுத்து நிறுத்தியது.
பிறப்பில் இருந்து முதன் முறையாக தன் சகோதரனின் வாயில் இருந்து வெளிவந்த , “அக்கா…” என்ற வார்த்தையில் சற்று தடுமாறினாள் நிலா. இருந்தும் அமைதியாக அபியை திரும்பி பார்த்தாள் நிலா.
“அக்கா….என்னைய மன்னிச்சுரு க்கா….இனிமே நான் குடிக்க மாட்டேன் க்கா… நல்லா படிக்கிறேன் க்கா…நீ சொன்னதெல்லாம் எனக்கு இப்பதான்க்கா புரியுது…..நாளைக்கி எங்க ஸ்கூலுக்கு போலீஸ் வர்றாங்களாம்… என்னைய புடிச்சுட்டு போயிருவாங்களா க்கா? எனக்கு பயமா இருக்கு க்கா …”என கண்கலங்கி கூறிக்கொண்டே நிலாவின் கையை பிடித்தான் அபி.
உண்மையாக திருந்தி விட்டானோ என எண்ணி, “அதெல்லாம் ஒன்னும் இல்லை… அவங்க உன்னைய எதுவும் பண்ண மாட்டாங்க….நீ அழாத…”என அபியின் கையை பற்றி இறுக்கமான அமைதியுடன் ஆறுதல் கூறினாள் நிலா.
தன் கையை பற்றிய நிலாவின் கையை இறுக்க பற்றி மறுகையில் வைத்திருந்த ப்ளேடால் அவளின் கையில் நாடி நரம்பில் கிழிக்க முயல… சற்று சுதாரித்த நிலா, கரத்தை வேகமாக இழுக்க முயலுகையில் அவளின் உள்ளங்கையில் பதம் பார்த்தது அபி வைத்திருந்த ப்ளேடு.
நிலாவின் உள்ளங்கையில் இருந்து இரத்தம் வடிய… அலமேலுவும் நிலாவின் பெற்றோரும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
நிலாவின் கரத்தில் இருந்து இரத்தம் வடிவதை கண்ட வள்ளி, “என்ன ஆச்சு டி? இப்பத்தான் கல்லியாணம் நல்லபடியா முடியனும் னு சாமிய கும்பிட்டுட்டு வர்றோம்… அதுக்குள்ளயும் இங்க நீ இரத்தம் சிந்திட்டு இருக்க… “என பதறியபடி நிலாவின் காயத்திற்கு மஞ்சள் பத்து இட… அனைவரும் நிலாவை கவனிக்கும் சந்தர்பத்தில் மெதுவாக அபி ப்ளேடை மறைத்துவிட்டான்.
அவன் மறைப்பதை கண்ட நிலா, எதையும் காட்டிக்கொள்ளாமல் ,”தெரியாம எங்கயாச்சும் கீறிகிட்டு இருப்பேன்… விடுங்க… “என முதன் முறையாக கிடைத்த தாய் பாசத்தை கெடுத்துக்கொள்ள முயலாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“ம்க்ஹூம்… கல்லியாண விசயமா சாமி கும்பிட்டு வர்றப்ப இப்பிடி இரத்தம் வடிய நிக்கிறாளே இவ… இதெல்லாம் நல்ல சகுனம் இல்ல… சொல்லிட்டேன்.. இவளே ஒரு தரித்திரம்… இவள விட்டுட்டு தரித்திரம் எங்க போக போகுது… “என அலமேலு புலம்பி கொண்டே தன் பேரனை காண சென்றார்.
அபி இவ்வாறு செய்த அதிர்ச்சியில் நிலாவும் அமைதியாக அறைக்குள் நுழைந்தாள். அதன் பிறகு அபி நிலாவின் கண்களிலேயே தட்டுப்படவில்லை.
ஒருவழியாக அபி பயிலும் பள்ளியிலும் சுற்றியுள்ள மற்ற பள்ளிகளிலும் ப்ளட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. நாட்கள் அதோ இதோ என உருண்டு சேரநிலாவின் நிச்சயதார்த்த நாளும் வந்தது.
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க… வரிசை கட்டி குயில்கள் பாட… ஏழ்பரியோன் அவன் எழுந்து நின்று ஆட்டம் ஆட…பூஞ்சோலை கிராமத்தின் பூமகள் புயலான இன்பநிலாவின் வாழ்வில், தன் எண்ணத்தை கொள்ளை கொண்ட மன்னவனின் திண்ணிய விரலில் கணையாழி இடும் நன்னாள் …நிமிர்வுடனே புலர்ந்தது….
அதிகாலையில் சாணம் தெளித்து கோலமிட்டு… மாவிலை தோரணம் கட்டி….நிலாவின் இல்லம் புத்துணர்வுடன் மிளிர்ந்து நின்றது.வாசலில் வாழை மரங்கள் வருவோரை வரவேற்று நிற்க… ஒரு வித சுகந்த வாசம் வீட்டையே நிறைத்து மணத்தது….
நிறைந்த சுகந்த வாசம், துயில் நீங்காமல் இருந்த நிலாவை சுகமாய் துயில் நீக்கம் செய்ய வைக்க… மொட்டவிழும் முல்லையாய் மெதுவாய் துயில் கலைந்தாள் நிலா.
வழக்கம் போல் தன் செல்ல டார்லிங்க்கு ஒரு வெட்க புன்னகையை பரிசளித்து விட்டு… எழுந்து வெளியே வந்தாள் நிலா.
வெளியே எழுந்து வந்த நிலாவை உறவினர்கள் குளிக்க உள்ளே அனுப்ப… மஞ்சள் நீராடி… தன்னவனின் நினைவில் முகத்தில் நிறைவான மகிழ்ச்சி தெரிய… நீல வண்ண பட்டு உடுத்தி ஆகாய தேவதையாய் ஜொலித்தாள்.
நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்க… கூரிய விழிகளில் காதல் மின்ன… முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு, ஆண்மையின் முழு பேரழகோடு…. வேட்டி சட்டையில் கண கம்பீரமாய் தன் உறவினர் புடைசூழ நிலாவின் வீட்டில் வந்து இறங்கினான் இளஞ்சேரன். தாய் தந்தை இல்லாததால் இளஞ்சேரனின் அக்காவும் மாமாவும் முன்னின்று அனைத்து சடங்குகளையும் செய்ய…. இளஞ்சேரன் ஒருவித மனநிறைவுடன் அனைத்தையும் பார்த்திருந்தான்.
இசை, வெளியில் வருவதும் நிலாவின் அறைக்குள் நுழைவதுமாய் சிரிப்புடன் துள்ளி திரிந்தாள். சேது, தனது தங்கையின் விழா என அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.
கதிர்வேலும் வள்ளியும் சிரித்த முகத்துடன் சடங்குகளை செய்து கொண்டிருக்க… அலமேலு இழுத்து பிடித்த சிரிப்புடன் அமர்ந்து இருந்தார். அபி திருட்டு முழி முழித்துக்கொண்டு பயத்துடன் நடமாடிக்கொண்டிருந்தான்.
மூகூர்த்த வேளை நெருங்க…..கடலரசன் அள்ளித்தெளித்த நீல பட்டுத்துணியை ஆகாயவாணி பேரன்புடன் கவனமாக நெய்த நீல வண்ண பட்டு உடுத்தி…. நேர்மையான நெற்றியில் நிமிர்வான கூரிய புருவத்தின் மத்தியில் ஒற்றை பொட்டிட்டு….காதில் ஊஞ்சலாடும் கம்மல் பூட்டி…..கருப்புக்கயிறு வாசம் செய்த கழுத்தில் ஒற்றை மாலை பெருமையுடன் இடம் பிடித்து உறவாட….கிரிக்கெட் மட்டையால் பந்தை சுழற்றி அடித்த உறுதியான…. இதுநாளும் வளையல் அணிந்திடாத கரங்கள், வளையலுடன் துள்ளி சிணுங்கி சிரிக்க….குட்டச்சி என தன்னை எள்ளி நகையாடியவர்களின் நெஞ்சில் தீரம் கொண்ட உறுதியுடன் அடி வைத்து நடந்த கம்பீர பாதங்கள், வெள்ளி சலங்கை கட்டி கிலுகிலுக்க……சேரனின் நிலவிற்கு முக ஒப்பனை ஏதும் தேவை இல்லை… என் புன்னகையே போதும் என, குணத்தங்க தேரென மெல்லிடை குலுங்க சபைக்கு நடை பயின்று வந்தாள் நிலா.
தன் மன வானின் ஏக நிலவான தன் நிலாவினை கண்ட சேரன், கீழுதடு விரிய… இமைகள் பாய்மரம் விரிக்க… கண்ணிலே தன்னவளுக்கு மட்டுமே உரிய காதல் கப்பலை மிதக்க விட்டு …திண்ணிய நெஞ்சனாய்… தன் மனம் கவர்ந்த கன்னியை, காதலுக்கு சிறந்த தூதுவையான கண்களால் கண்ணிய புன்னகையுடன் களவாடிக்கொண்டிருந்தான்.
வயதில் மூத்த பெரியோர்களின் முன்னிலையில் முகூர்த்த பத்திரிகை வாசிக்க… அனைவரின் ஆசியுடன் வானத்து நிலவும் நிலவின் மன்னவனும் மோதிரம் மாற்றி தங்கள் உறவின் உரிமையை அனைவருக்கும் பறைசாற்றினர்.
விழா முடிந்ததும் உணவே உயிரென இசை பந்திக்கு முந்தி சென்றுவிட்டாள். சேதுவும் தலையில் அடித்துக் கொண்டு அவளுக்கு பரிமாற பின்னே சென்றான்.
ஒருவழியாக நிலாவிற்கும் இளாவிற்கும் தனிமை கிட்ட, “உனக்கு இந்த கல்லியாணம் ஓகே தான? “என மெதுவாக நிலாவிடம் வினவினான் இளா.
“அடேங்கப்பா…இவ்ளோ சீக்கிரமா கேட்டுட்டீங்க…..கல்லியாணம் ஆகி நாலு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் கேக்க வேண்டியது தான? “நிலா.
“ஹி ஹி ஹி….அப்பிடி இல்லடி…..உனக்கு இப்பவே கல்லியாணம் ஓகே தான னு கேட்டேன்….”இளா.
“ஆமா….சீக்கிரமா இந்த வீட்ட விட்டு கிளம்பனும்… நான் இந்த வீட்ட விட்டு போனா தான் இந்த வீட்ட புடிச்ச பீடை ஒழியுமாம்…..”என கசந்த முறுவலுடன் கூறினாள் நிலா.
“அப்பிடியா? “என தன் தாடையை தடவி கொண்டு தீவிரமாக யோசித்த இளா, “அது கிடக்கட்டும்….உனக்கு என்னைய ஏன் பிடிச்சது? “கண்ணடித்து குறும்பு மின்ன கேட்டான் இளா.
“இதோ…இந்த கண்ணு தான்….அன்னக்கி கர்ச்சீப்ப கட்டிக்கிட்டு முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி க்ரவுண்ட்ல வந்து நின்னுட்டு என் கண்ணோட கருமணிய பாத்து பேசுன உங்க கண்ணோட நேர்மையில கவுந்துட்டேன்…..”நிலா.
“என்னது? கவுந்துட்டியா? ஹா ஹா ஹா…..”என அடங்கமாட்டாமல் சிரித்தான் இளா.
சிரித்த இளாவின் நெஞ்சில் செல்லமாய் ஒரு குத்து விட்டு விட்டு, “அன்னைக்கி நைட்டே கனவுல வந்து புலம்ப விட்டுட்டீங்க…..சிரிப்பையே மறந்து போயிருந்த உதடு உங்கள நினைச்சா தன்னாலே சிரிக்குது….யார் வந்தா என்ன போனா என்ன னு யாரையும் எதிர்பாக்காத என் கண்ணு உங்கள எதிர்பார்க்க ஆரம்பிச்சுருச்சு…..நான் உணருறதுக்கு முன்னாடியே என் உள்ளுணர்வு உங்கள உணர ஆரம்பிச்சுருச்சு…..அதுக்கு அப்புறம் நான் பண்றது? என் கட்டுப்பாட்டுல இருந்த எல்லாம் கட்டுப்பாட்ட மீறி உங்கள சுத்தி வர ஆரம்பிச்சுருச்சு….”என இளாவின் கண்களை பார்த்து தன் விழியில் காதல் மின்ன கூறினாள் நிலா.
காதல் மொழி பேசிய தன்னவளின் மொழியில் கரைந்த இளா, “இவ்ளோ அழகா காதல யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க…..யப்பா….கொன்னுட்டடி…..”என தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு உல்லாசமுடன் சிரித்தான் இளா.
சிரித்த இளாவை கண்டு பொய்யாக முறைத்துக்கொண்டு, “உங்கள…..”என இளாவை அடிக்க கை ஓங்கினாள் நிலா.
அவளிடம் இருந்து தப்பிக்க துள்ளி ஓடினான் இளா. அந்த நேரம் இளாவின் ஃபோன் ஒலிக்க, எடுத்து பேசியவன்…”ஓஓஓ….அப்படியா? சரி சரி வர்றேன்… உடனே வர்றேன்…”என அவசரமாக கூறி விட்டு, தன்னவளிடமும் அனைவரிடமும் “ஒரு அவசர வேலை வந்துருச்சு…நான் கிளம்புறேன்…”என கூறி விட்டு விரைவாக அங்கிருந்து புறப்பட்டு சென்றான் இளா.
“என்ன ஆச்சு னு தெரியலயே….”அனைவரும் ஒரு பதட்டத்துடன் இருந்த சில மணி நேரத்தில் நிலாவின் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.
போலீஸ் ஜீப் என்றதும் அனைவரும் பரபரப்புடன் எழுந்து நின்று பார்க்க, போலீஸ் உடையில் கம்பீரமாய் உள்ளே நுழைந்தான் இளா.
உள்ளே வந்த இளா நேராக கதிர்வேலிடம் சென்று, ” ஸ்கூல்ல போதை மருந்து சப்ளை பண்ணுன குற்றத்துக்காக உங்க மகன் அபிஷேக்க கைது பண்றோம்… “என்று கூறியபடி கையில் விலங்குடன் நடுக்கூடத்தில் நின்றிருந்தான் இளஞ்சேரன் IPS.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.