‘ திரும்பத் திரும்ப இந்த விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டாம் ஒரு வருடம் சீக்கிரமாக ஓடிவிடும் ‘ என எண்ணியவள் ‘ நந்தனுக்கு தன்னால் எந்த தொந்தரவும் வந்து விடக் கூடாது ‘ எனவும் மனதில் நினைத்துக் கொண்டாள்.
பின் அன்னைக்கு கால் செய்து பேசியவள் சும்மாவே அமர்ந்திருக்க போரடிப்பது போல் இருக்க எழுந்து கீழே வந்தாள்.
கீழே சென்றால் ஹாலில் யாரும் இல்லை. ஆனால் டிவி ஓடிக் கொண்டிருந்தது. ரிமோட் எங்கே என தேடி டிவியை அணைத்தவள் நந்தன் வெளியே தோட்டத்தில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
சமையலறையில் பேச்சு சத்தம் கேட்டவள் அங்கே செல்ல, வேதாவை பார்த்த சுபத்ரா ” என்னம்மா பசிக்குதா ” என கேட்க ‘ இல்லை ‘ என்பது போல் தலையசைத்தாள்.
” ஏம்மா வாயை திறந்து பேச மாட்டியா…. ” என பத்மா பாட்டி கிண்டல் செய்ய ” அப்படி இல்ல அம்மா ” என சொன்னவள் ” நான் எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா ” என கேட்க, புன்னகையுடன் மருமகளை ஏறிட்ட சுபத்ரா ” அதெல்லாம் நீ ஒன்னும் செய்ய வேண்டாம் ” எனக் கூறி வெளியே அனுப்பி விட, தனது அறையில் இருந்து வந்த வர்ஷா வேதாவை பிடித்துக் கொண்டாள்.
” அண்ணி ” என கத்திக் கொண்டே வந்து கட்டிக் கொண்டவளை பார்த்து சிரித்தவள் தானும் அவளை கட்டிக் கொண்டாள்.
பின் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றவள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் சுவாரசியமாய் பேசிக் கொண்டிருப்பதை இடையில் எதையும் சொல்லி கலைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள், வேதா.
இறுதியாக ” அண்ணின்னு கூப்பிட வேண்டாமே. நாம ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு தான் இருக்கும். பெயர் சொல்லி கூப்பிடேன் வர்ஷா ” எனக் கூற ” சரிங்க வள்ளிக்கண்ணு ” என அவள் கூற ” ஏய் ” என பொய்யாக அடிக்கப் போனவளை பார்த்து கண்ணடித்து சிரித்தவள் ” வள்ளி ” என கூப்பிட்டாள் சிரித்துக் கொண்டே…..
அதே சமயம் கதவை திறந்து உள்ளே வந்த சுபத்ரா ” என்னடி இது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பெயர் சொல்லி கூப்பிடுற. வயசுல சின்னவளா இருந்தா கூட உன்னோட அண்ணனுக்கு மனைவின்னு வந்துட்டா நீ அண்ணின்னு தான் கூப்பிடனும் ” எனக் கூற ” இல்ல மாட்டேன். அவங்களே பெயர் சொல்லி கூப்பிடுனு சொல்லிட்டாங்க. பின்ன என்ன ” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நந்தனுக்கும் அதுவே சரியென பட்டது. ‘ அண்ணி அண்ணின்னு பேசிட்டு நாளைக்கு வருந்த வேண்டாம் ‘ என எண்ணியவனாய் ” ஆமாம்மா பெயர் சொல்லி கூப்பிடட்டுமே இப்ப என்ன ” என சொன்னவன் அங்கிருந்து நகர ” சரி உங்க இஷ்டம் போல செய்யுங்க ” என சொன்னவர் சாப்பிட அழைக்க, நந்தன் தனது அப்பாவையும் தாத்தாவையும் சாப்பிட அழைக்க, அனைவரும் சேர்த்து சாப்பிட்டனர்.
பின் பெரியவர்கள் ஓய்வெடுக்க போக வர்ஷாவும் கொஞ்ச நேரம் பேசி இருந்து விட்டு தனது நண்பர்களை பார்க்க கிளம்பினாள். அவர்களுக்கு ட்ரீட் கொடுக்க…. நந்தன் தனது அலுவலக அறைக்குள் வேலை இருப்பதாக சொல்லி நுழைந்து விட தங்கள் அறைக்குள் முடங்கியவள் என்ன செய்வது எனத் தெரியாது முழித்தாள்.
பின் ‘ அஜய்யிடம் ஏதேனும் கதை புத்தகம் இருக்குதானு கேட்கலாம் ‘ என எண்ணியவள் அறை கதவை தட்ட மறுபுறம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவும் மறுபடியும் தட்டினாள்.
இப்பொழுதும் எந்த பதிலும் இல்லை என்றதும் கதவை திறந்து பார்த்தாள்.
டேபிள் மேல் வைத்து ஏதோ எழுதி கொண்டு இருந்தவன் அதன் மேல் அப்படியே சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
சிறு குழந்தை போல் தூங்கும் அவனை தொந்தரவு செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. ‘ அறைக்கு சென்று படுக்க சொல்லலாம் தான் ஆனால் எழுப்பியதும் தூக்கம் கலைந்து விட்டாள் என்ன செய்வது ‘ என எண்ணியவள் அவன் அப்படியே தூங்கட்டும் என விட்டுவிட்டு வந்த அரவம் தெரியாமல் அறைக்கு திரும்பினாள்.
மாலை 5 மணி போல் தோட்டத்திற்கு சென்றவள், அழகாய் மலர்ந்திருந்த மலர்களையும் என்னென்ன செடிகள் இருக்கின்றது என்பதையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அழகாய் மலர்ந்திருந்த அடுக்கு செம்பருத்தியை ஆசைத் தீரப் பாத்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த பூ அது.
” பறிச்சு தரவா மா ” என தோட்டக்காரர் கேட்க ” வேண்டாம் ” எனக் கூறியவள் செடிகளை பற்றி அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
ஊரில் வளர்ந்தவள் இல்லையா… வயல் வரப்பிலும் தோட்டத்திலும் சுற்றி திரிந்தவளுக்கு மரம் செடி கொடி பற்றியும் உரங்கள் பற்றியும் தெரிந்திருப்பதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.
அவள் செடிகள் பற்றியும் உரங்கள் பற்றியும் பேச தோட்டக்காரர் மிகவும் ஆர்வமாக பேசத் தொடங்கினார்.
இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டே வந்த சுபத்ரா வேதாவிற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
பின் உள்ளே அழைத்து வந்து காபி கலந்து கொடுத்தவர் நந்துவுக்கும் கொடுத்து அனுப்பினார்.
காபியை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் அறை கதவை தட்டும் முன் கதவை திறந்தான் நந்தன்.
கையில் காப்பியுடன் அவள் இருப்பதை பார்த்ததும் ” இதெல்லாம் நீயே ஏன் செய்ற. பத்மா பாட்டி கிட்ட கொடுத்து அனுப்ப வேண்டியது தானே… ” எனக் கேட்க ” அத்தை தான் உங்ககிட்ட தரச் சொல்லி என்கிட்ட கொடுத்து அனுப்பினாங்க ” என அவள் மெதுவாக சொல்ல ” சரி விடு ” எனக் கூறியவன் காஃபியை எடுத்துக் கொண்டு மறுபடியும் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான்.
இரவு உணவிற்கு கீழே வந்தவன் அப்பா தாத்தா மட்டும் சாப்பிட்டு கொண்டிருக்க ‘ எங்க அம்மா வர்ஷா வேதா யாரையும் காணோம் ‘ என பார்வையால் ஆராய ” வர்ஷா ஃபிரண்ட்ஸோட வெளியே போய் இருக்கா. நைட் டின்னர் முடிச்சிட்டு வந்திடுவா. அம்மா வள்ளியோட அவ ரூம்ல இருக்கா ” என ரவிவர்மன் கூற ” ம் ” எனக் கூறி தலையசைத்தவன் சாப்பிட அமர்ந்தான்.
வேதவள்ளியின் பெயரில் அம்மாவின் பெயரை பார்த்த ரவிவர்மன் ‘ வள்ளி ‘ என்று அழைத்தார். சுபத்ராவும் மாமியார் பெயர் வருவதால் அவரும் ‘ வள்ளி ‘ என்றே அழைத்தார்.
ஆதித்யவர்மன் தனது மனைவியை ‘ வேதா வேதா ‘ என்று அழைத்தே பழக்கப்பட்டிருந்ததாலும் அவரது குணத்தோடும் ஒத்துப்போவதால் அன்பாய் பழகும் வேதவள்ளியை வேதா என்றே அழைத்தார்.
நந்தன் சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் அறையை விட்டு வந்த பாடில்லை.
சாப்பிட்டு முடித்தவன் அப்பாவும் தாத்தாவும் படுக்க தாங்கள் தங்கள் அறைக்கு சென்றவுடன் தானும் தங்களது அறைக்கு திரும்பினான்.
பத்து நிமிடம் கழித்து வேதா அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
ஆகாய நீல நிற புடவை கட்டி, பாட்டி பரம்பரை பரம்பரையாக வீட்டிற்கு வரும் மருமகளுக்கு என கொடுத்த நகைகளில் சிலதை அணிந்து, தலை நிறைய மல்லி சூடி, கையில் பால் டம்ளர் உடன் உள்ளே நுழைந்தவள் எதுவும் பேசாமல் பார்வையை கீழே தாழ்த்தி நிற்க, அவளையை பார்த்தவன் ” இந்த அம்மா இருக்காங்களே…. ” என மனதிற்குள் எண்ணியவனாய் அவள் அருகே வந்தவன் டம்ளரை வாங்கி அருகே இருந்த மேசையின் மேல் வைத்து விட்டு கதவை தாழிட்டான்.
” சாரி அத்தை தான்…. ” என இவள் ஏதோ சொல்ல வர ” ம்… ” என தலையை அசைத்தவன் ” நீ கட்டில்ல படுத்துக்கோ ” எனக் கூறிவிட்டு அலமாரியில் வைத்திருந்த விரிப்புகளில் ஒன்றை எடுத்து கீழே விரித்தவன் கட்டிலில் இருந்து ஒரு தலையணையை எடுத்து போட்டுக் கொண்டு படுக்க, இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
‘ வேண்டாம் வேண்டாம் ‘ என்று கூறியும் நகைகளை அணிவித்து அழகு பார்த்த சுபத்ராவோ சில அறிவுரைகளையும் கூறி அனுப்பினார்.
தாயில்லா பெண்ணிற்கு தாயாக இருக்க எண்ணினார்.
அவரது கனவும் ஆசையும் நிறைவேறுமா என்ன… காலம் தான் பதில் சொல்லனும்.
No comments yet.