கோவிலில் நந்தனை தவிர எல்லோரும் ஒருவித எதிர்பார்ப்புடன் கோயில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாலியை சாமி பாதத்தில் வைத்து பூஜை பண்ணிக் கொண்டிருக்க தேவதை போல் கோவிலுக்குள் நுழைந்தாள், வேதா.
வேதா வருவதை பார்த்ததும் சற்று முன்னே போய் அவளுடன் பேசிக்கொண்டே அவளுடன் இணைந்து நடந்தான், நந்தன்.
அப்பா அம்மா தாத்தாவை வேதாவுக்கு அறிமுகப்படுத்தியவன் வேதவள்ளி என இவளையும் அறிமுகப்படுத்தினான்.
அனைவருக்கும் வணக்கம் சொன்னவள் காதலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.
” நல்லாயிருமா ” என அனைவரும் வாழ்த்த சுபத்ரா தன் மருமகளை அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
வர்ஷாவை அறிமுகப்படுத்த அவளுக்கு வேதாவை பார்த்ததுமே மிகவும் பிடித்து விட்டது.
மங்கள இசை முழங்க அபிநந்தன் வேத வள்ளியின் திருமணம் இனிதே நடந்தது.
காலை உணவு கோவிலில் ஏற்பாடு செய்திருந்தான் ஒரு ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு. அதனால அங்கேயே காலை உணவை முடித்தனர்.
பின் வீட்டுக்கு சென்றதும் சுபத்ரா பூஜை அறையில் தீபம் ஏற்ற சொல்ல தீபம் ஏற்றியவள் இறைவனுக்கு நமஸ்காரம் செய்தாள்.
பின் பாலும் பழமும் தர இவளுக்கு மறுக்க முடியாமல் நந்தன் முகத்தை பார்க்க அவன் கண்ணிமைகளை முடித் திறக்க வேறு வழி இல்லாமல் சாப்பிட்டாள் அவன் உண்ட மிச்சத்தை….
சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, சமையல் வேலை செய்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் தோட்ட வேலை செய்பவர்கள் என எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.
‘ நம்ம நந்தன் தம்பிக்கு பொருத்தமா அழகான பொண்ணு. அமைதியாகவும் இருக்காங்க இல்ல. ஜோடி பொருத்தம் எவ்வளவு நல்லா இருக்கு ‘ என குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர்.
திருமணம் முடிந்த அன்று மாலையே ரிசப்ஷன் வைப்பதாக தாத்தா சொன்னதை அப்பாவிடம் பேசி மறுத்து விட்டான்.
” ஏன்டா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. எங்க வீட்டுக்கு மருமக வந்துட்டான்னு அப்புறம் எப்படி சொல்றது ” என ரவிவர்மன் கேட்க ” வேண்டாம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இதுதான் என்னோட பொண்டாட்டினு ஊருக்கே சொல்லனுமா என்னப்பா. வேண்டாம். அதுல எனக்கு துளியும் விருப்பமில்லை ” என மறுத்து விட்டான். ‘ சரி அவனுக்கும் பல கனவுகள் இருந்திருக்கும். நீலா உடனான வாழ்க்கையை வாழ முடியாது போனதை எண்ணி எவ்வளவோ வருந்தியவன் இவ்வளவு தூரம் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு ஒரு பெண்ணை மணந்ததே பெரிய விஷயம். அதனால் விட்டு விடலாம் ‘ என எண்ணியவர் அதற்கு மேல் அதைப் பற்றி பேசவில்லை.
ஆதித்யவர்மனுக்கு வருத்தம் தான். ‘ ஒரே ஒரு பேரன் அவன் திருமணத்தை விமர்சையாக நடத்த முடியவில்லை. அதுவும் இல்லாமல் குலம் கொத்திரம் எதுவும் தெரியாது. ஒரு அனாதை பெண்ணையும் மணக்கிறான். வேண்டாம் எனக் கூறினால் அப்போ எனக்கு திருமணமே வேண்டாம் என மல்லுக்கு நிப்பான். எல்லாம் வேதநாயகி கொடுக்கிற செல்லம். ரவிவர்மனும் சுபத்ராவும் ஒத்துக்கிட்டாங்க. பின்ன நம்ம என்ன செய்ய ‘ என எண்ணியவராய் பெண்ணை பற்றி எதுவும் விசாரிக்காமல் விட்டுவிட்டார்.
‘ அவனுக்கு பிடித்திருக்கிறது பின் என்ன செய்வது ‘ என எண்ணியவர் அவள் பெயரை கேட்டதும் ஏனோ அவளை பிடித்து விட்டது.
‘ நல்ல பெண்ணா தான் தெரிகிறாள் ‘ என அவள் சிரித்த முகத்தை பார்த்ததும் மனதிற்குள் எண்ணிக் கொண்டவர் ‘ தன் மனைவி இந்த நல்ல பொழுதில் கூட இல்லாமல் போய்விட்டாளே… பேரனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என எவ்வளவு ஆசையாக இருந்தாள். அவனை எண்ணி வருந்தியே உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறாள் ‘ என பெருமூச்சு விட்டவர் ” நேரமாச்சு கிளம்பலாமா ” என நந்தன் கேட்க ” போகலாம் ” என கூறினார்.
அனைவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல அங்கே நல்ல முறையில் திருமணப் பதிவும் செய்யப்பட்ட பின் வீடு திரும்பினர்.
அஜய் கிளம்பும் முன் அவளுக்கு ஒரு பரிசை தந்தான்.
” வள்ளிக்கான என்னுடைய பரிசு. அண்ணன் நான் கொடுக்கிறது சரியா. வேண்டாம்னு சொல்லாமல் வாங்கிக்கனும் ” என்று புன்னகையுடன் கூறி அவள் கையில் கொடுத்து விட்டு சென்றான்.
இவள் மறுத்து விடுவாள் வாங்க மாட்டாள் என்பதை அவன் அறிவான் தான். இந்த இரண்டு நாட்களில் அவளது குணத்தை ஓரளவு தெரிந்தும் கொண்டவன் அவனது உண்மையான பாசத்தை காட்ட அவளும் புன்னகையுடன் அவனது பரிசை ஏற்றாள்.
தனது பெட்டியை நந்தன் மேலே தூக்கிச் சென்று அறையில் வைத்து விட்டு வர சுபத்ரா தன் மருமகளிடம் ” நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுமா. சாப்பாடு ரெடி ஆனதும் சொல்றேன் ” என சொல்லி அனுப்ப நந்தன் அவளுக்கு ரூமை காண்பித்து விட்டு கீழே வர ” ஏண்டா நீயும் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே ” என சுபத்ரா கேட்க ” இல்லமா சாப்பிட்டு அப்புறம் ரெஸ்ட் எடுக்கிறேன் ” எனக் கூறியவன் தனது போனில் ஏதோ பார்த்துக் கொண்டு அமர, அவரவர் அவரது வேலையை பார்க்கப் போயினர்.
அறைக்குள் நுழைந்த வேதாவிற்கு ஏதோ புது உலகத்திற்குள் போவது போல் இருந்தது.
ரூமை காண்பித்தவன் அவள் உடைகளை வைத்துக் கொள்வதற்கு என பீரோவில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தையும் காண்பித்து விட்டு ” சுடி மாத்திட்டு ரூம்ல ரெஸ்ட் எடு. சாப்பாடு ஆனதும் கூப்பிடுறேன் ” எனக் கூறியவன் கீழே சென்றுவிட்டான்.
அறையில் இருந்தவளோ அவ்வறை முழுவதும் அவனது வாசம் நிறைந்திருப்பதாய் உணர்ந்தாள்.
உடை மாற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
கட்டிலில் அமர்ந்தவள் அஜய் கொடுத்த பரிசு பொருள் நினைவு வரவும் அதை பிரித்துப் பார்த்தாள்.
அதில் அழகான குட்டி ஜிமிக்கி, டாலருடன் கூடிய செயின், கேரளா மாடலில் இரண்டு கைகளுக்கும் இரண்டு வளையல்கள் என இருக்க மனதிற்குள் சிரித்துக் கொண்டவள் அஜய்க்கு போன் செய்தாள்.
” எனக்கு ஏன் அண்ணா இவ்ளோ பெரிய பரிசு ” என கேட்க ” என்னோட தங்கைக்கு நான் வாங்கி கொடுத்திருக்கேன். ஏதோ என்னால் முடிந்தது ” என்றதும் ” அண்ணா ” என்றவளின் குரல் கரகரக்க ” இங்க பாரு வள்ளி நந்தன் ரொம்பவே நல்லவன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவன் காதலிச்ச பொண்ணு இறந்துட்டானதும் தற்கொலைக்கு முயற்சி பண்ணினான். எப்படியோ காப்பாத்திட்டோம். அதுக்கப்புறம் அவன பழைய மாதிரி கொண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டோம். அவனை இப்படியே விட்டா எங்க அவன் கல்யாணமே பண்ணிக்காம போயிடுவானோன் தான் அவங்க வீட்டுல கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் உனக்கு பிடிச்ச மாதிரி தனியா வேலை செய்ய முடியும் சொன்னாங்க. அவன் சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு ஆசைப்படுறாங்க. ஆனா அவன் யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அதான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதா போச்சு. சாரிமா உன்னோட லைஃப் நீ சந்தோஷமா வாழாம வாழ விடாம இப்படி ஒரு சூழ்நிலையில மாட்டி விட்டுட்டோம். சாரி ” என மனதில் பாரமாக இருந்ததை பேசி முடித்தான்.
” அண்ணா நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க. என்னோட அம்மாவை காப்பாத்தி கொடுத்த அவருக்கு என்னால் ஆன சிறு உதவி செய்றேன் அவ்வளவு தான். நீங்க எதையாவது நினைச்சு கவலைப்படாதீங்க அண்ணா. இது நானா ஒத்துக்கிட்டது தானே ” என சொல்ல ” ம்… ” எனக் கூறியவன் ‘ காரணம் இல்லாம எதும் நடக்காது. இப்படி நடந்ததுலையும் கண்டிப்பா ஏதாச்சும் நல்லது இருக்கும் ‘ என எண்ணியவனாய் ” சரி வள்ளி அப்பப்ப எனக்கு போன் பண்ணு. அடிக்கடி வீட்டுக்கு வா. மத்தபடி எது வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு ” என சொல்ல ” சரிண்ணா ” என பேசி முடித்தவள் ஃபோனை வைத்தாள்.
No comments yet.