இதயம் தடதடக்க…. இமை பலமுறை இமைக்க… நழுவும் தன் இதயம் போல் நழுவிய தன் ஃபோனை இறுக்கி பிடித்து இன்ப அவஸ்த்தையுடன் மூச்சை இழுத்து விட்டான் இளா. “என்னடி சொல்லுற?….என் செல்லக்குட்டி…. ” என தன் மனதினுள் தன் மனம் கவர்ந்த கன்னியை செல்லமாய் கடிந்து கொண்டு, “ஹலோ….நீங்க சொல்லுறது புரியல….கொஞ்சம் திரும்ப சொல்லுறீங்களா? “என்று இன்ப தடுமாற்றத்துடன் கூறினான் இளா.
அவனின் அந்த தடுமாற்றத்தை குரலின் இடைவெளி வழியே உணர்ந்து கொண்ட நிலா, “கிரிக்கெட்டர் சேரநிலா பேசுறேன்…. என் புருஷன் அங்க தான் ஏதாவது பைல் தொடைச்சுட்டு இருப்பாரு… கொஞ்சம் கூப்பிட முடியுமா? “என்று நக்கலுடன் கூறினாள்.
“எதேய்… நான் பைல் தொடைச்சுட்டு இருக்கேனா? வாய் கூடி போச்சு டி….நேர்ல இப்பிடி புருஷன் னு சொல்லி பாருடி… “என மனதிற்குள் தன்னவளை கொஞ்சி கொண்டு….”அவங்க பேரு சொல்ல முடியுமா? “என்று தன்னவளின் திருவாயின் வழியே அவளின் கணவன் என்ற அடையாளத்துடன் தன் பெயர் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து கேட்டான் இளா.
நிலா பதிலுரைக்க வாய் திறக்கையில் இடையில் புகுந்த சேது, “அந்த கேடு கெட்ட லூசு பய பேரு இளஞ்சேரனுங்கோ… நான் அவன் ப்ரண்ட் தான் ங்க ஸார்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னமோ அவனுக்கு மலைய நகத்துற வேலை இருக்கு… பேசுனா மண்டைய உடைச்சுருவேன் னு சொன்ன மானஸ்த்தன் ங்க… கொஞ்சம் அவன் தலையில நாலு போட்டு இந்த பக்கம் அனுப்ப முடியுமாங்க ஏசிபி ஸார்… “என படு நக்கலுடன் கூடிய வயித்தெறிச்சலுடன் கூறினான்.
அதை கேட்ட இசை, “ஏன்டா… பொறாமைபுடிச்சவனே… உனக்குத்தான் ரொமான்ஸ் பண்ண தெரியல… ரொமான்ஸ் பண்ணுறவங்கள ஏன்டா தொல்லை பண்ற? “என சேதுவின் முதுகிலே நாலு போட்டாள்.
ஆவலுடன் ஆசையுடன் இருந்த இளா, சேதுவின் இடையூறால் எரிச்சலாகி..,”யம்மாடி… தங்கச்சி… உனக்கு நான் மட்டன் பிரியாணி வாங்கி தாரேன்… அந்த கரடிக்கு இன்னும் நாலு அடி என் சார்பா சேத்து போடுடா பாப்பா… ” என்றான்.
“ஓ மை காட்… மட்டன் பிரியாணி… வாவ்… நான் அண்ணன் சொல்லை தட்டாத தங்கச்சி… ” என தாவணி முந்தானையை எடுத்து இடுப்பில் செருகி கொண்டு ஸ்லோமோஷனில் சேதுவை நோக்கி திரும்பினாள் இசை.
“ஆத்தி… ஒரு மட்டன் பிரியாணி க்காக கட்டிக்க போறவன அடிக்க வர்றியேடி… இதான் உன் பத்தினி தர்மமா? “என அலறிக்கொண்டு ஓட ஆரம்பித்தான் சேது.
அவர்களின் அந்த அலப்பறையை ஃபோனில் கேட்ட இளா, வாய் விட்டு நகைத்தான். அதில் சற்று எரிச்சலான நிலா, “வர முடியுமா? முடியாதா? “என கோபத்துடன் கேட்டாள் நிலா.
“ஹா ஹா ஹா… நாளைக்கி வாரேன் டி… என் பொண்டாட்டி கிட்ட போட்ட சவால்ல முழுசா ஜெயிச்சுட்டு… வர்றேன்… லேட் ஆகிருச்சு… வீட்டுக்கு கிளம்புங்க ரெண்டு பேரும்… அப்புறம் அதுக்கும் வேற உங்க வீட்டு ஆளுங்க திட்ட போறாங்க… “இளா.
“இன்னக்கி நானும் இசையும் அபிய அடிச்சுட்டோம்… “என அலுங்காமல் குலுங்காமல் இளாவின் தலையில் பெரிய கல்லாய் தூக்கி போட்டாள் நிலா.
“லூசுகளா… என்னடி பண்ணி தொலைச்சீங்க… இப்ப வேற என்னால அங்க வர முடியாதே… லூசு.. லூசு… இங்க பாரு நிலா….எதிர்த்த வீட்டுக்காரன் பிரச்சினை நீ நினைச்ச மாதிரி சாராயம் மட்டும் இல்ல…. அவனால நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க… அதுல நம்ம அபியும் ஒரு ஆளு னு நினைக்கிறேன்… அபிய கொஞ்சம் பாத்து ஹேண்டில் பண்ணு… நமக்கு முழுசா தெரியிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு… பொறுமை டி…. அடியேய்… நான் சொல்லுறது புரியுதா இல்லையாடி? “இளா.
“ம்… ரொம்ப பெருசா? ” என நிலா அமைதியாக கேட்டாள்.
“ஆமாடி… அபிய அடிச்சதுக்கு வீட்ல யாரு உன்னைய என்ன சொன்னாலும் இப்போதைக்கு அவன பத்துன உண்மைய வீட்ல சொல்லாத… நீ இப்ப நிலா இல்ல… சேரநிலா… இந்த சேரனோட நிலா…. சரியா? “இளா.
“ம்.. சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்… வீட்ல நான் பாத்துக்கிறேன்… நீங்க வேலைய பாருங்க… “என அபியின் நினைவில் இறுக்கத்துடன் ஃபோனை வைத்து விட்டு இசையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள் நிலா.
“என்னடி ஆச்சு? அண்ணா என்ன சொன்னாங்க? “என நிலா வின் சிந்தனை படர்ந்த முகத்தை பார்த்த இசை செல்லும் வழியில் நிலாவிடம் கேட்டாள்.
“ஒன்னுல்ல…. “என இளா கூறியதை இசையிடம் பகிர்ந்தாள் நிலா.
“சரி… விடுடி…பாத்துக்கலாம்….எவ்வளவோ பாத்துட்டோம்…இத சமாளிக்க மாட்டோமா? கெத்தா… சேரநிலாவா கர்வமா போடி… அபிய தப்பான பழக்கத்துல இருந்து கண்டிப்பா வெளி கொண்டு வந்துறலாம்… “என கூறி விட்டு தனது வீட்டிற்கு நிலாவை பிரிந்து சென்றாள் இசை.
சற்று முன் இருந்த புன்னகையும் மலர்ச்சியும் மறைய… எப்பொழுதும் போல் இறுக்கத்துடன் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள்ளே நுழைந்தாள் நிலா.
“வாடி… சிறுக்கி… சிங்காரி… இப்ப தான் ஊர் சுத்தி முடிச்சியாடி அல்லிராணி? “என்று நக்கலான குரலில் நிலாவை வரவேற்றார் அலமேலு.
குரல் வந்த திசையை நிமிர்ந்து பார்த்த நிலா, அலமேலுவின் பக்கத்தில் அடித்த அடியின் தாக்கத்தில் கன்னம் இரண்டும் சிவந்து கன்றி போய் வன்ம புன்னகையுடன் தன்னை பார்த்திருந்த அபியை கண்டாள்.
இசை அடித்த கன்னத்தை விட தான் அடித்த கன்னம் சற்று கூடுதல் வீக்கத்துடன் இருந்ததை கண்ட நிலாவின் இதழ்கடையோரத்தில் சின்ன வளைவு உண்டானது.
அதை கண்ட அபி, “பாட்டி… பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னைய பாத்து நக்கலா சிரிக்கிறா பாட்டி… “என வராத கண்ணீரை வலிய வரவழைத்துக்கொண்டான்.
தனது ஆண் சிங்க செல்ல பேரனின் விழிகள் கண்ணீர் எட்டிப்பார்க்கவும், “நீ அழாதடா ராசா… இந்த கழுதைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா… நான் கேக்குற எதுக்கும் பதில் சொல்லாம நிப்பா? “என எழுந்து வந்து நிலாவை முறைத்தார் அலமேலு.
“வெளில தான் கை நீட்டுற னா… இப்ப வீட்டுக்குள்ளயே கை ஓங்க ஆரம்பிச்சுட்ட… அது என்ன டி ஒரு ஆம்பள புள்ளைய கை ஓங்குற பழக்கம்? வர வர உனக்கு ரொம்ப திமிர் ஏறி போச்சு டி… “வள்ளி.
“எதுக்கு டி என் பேரன அடிச்ச? பாவம்… சின்ன புள்ள… இன்னும் பள்ளிக்கூடத்த கூட முடிக்கல… ஏழு கழுதை வயசாகுது… ஊரு சுத்தாம வீட்டுக்கு போ னு சொன்னதுக்கு அவன அடிச்சு இருக்க நீ… குடும்ப பொண்ணா டி நீ? “அலமேலு.
அலமேலு அம்மாள் கூறிய வார்த்தையை கேட்ட நிலா, நிமிர்வுடன் கூரிய விழிகளால் அபியை கூறு போட்டாள். அந்த நேர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தான் அபி.
“இங்க கேட்டுட்டு இருக்குறப்ப… அவன ஏன்டி முறைக்கிற? “என நிலாவை தன் ஊன்று கோலால் அடிக்க கை ஓங்கினார் அலமேலு.
அவரை தடுத்த கதிர்வேல், “விடும்மா… இன்னும் கொஞ்ச நாளு தான இவ இந்த வீட்ல இருக்க போறா… அவளால முடிஞ்ச வரைக்கும் ஆடிக்கட்டும்… போய் உங்க வேலைய பாருங்க… “என தன் மனைவிக்கும் தாயிற்கும் ஆணையிட்டார்.
“அய்யோ… அய்யோ… சும்மாவா சொன்னாங்க பெரியவங்க… ஆடி யில பொறந்த தலைச்சன் புள்ள குடும்பத்த ஆட்டி வைக்கும் னு… இந்த சனியன் பொறந்தப்பவே ஜோசியர் சொன்னாரு… இவளால ஊருல உள்ளவங்கலாம் நம்மள பேசுவாங்க… இவ யார் சொல்லுறதையும் கேக்க மாட்டா… வீட்டுக்கு அடங்க மாட்டா னு… அதே மாதிரி வீட்டுக்கு அடங்காம அவ இஷ்டத்துக்கு தான திரியுறா… நம்ம புள்ளைய அடிச்ச இந்த சனியன்… நாளைக்கி உங்களை கை நீட்ட மாட்டா னு என்ன நிச்சயம்? “என புலம்பி தள்ளினாள் வள்ளி.
“புலம்பாம.. நம்ம புள்ளைக்கு ஒத்தடம் குடு… பாவம்… புள்ளை வலில இருக்கு… தான் போய் நெஞ்செலும்பு கறி எடுத்துட்டு வர்றேன்… தங்கத்துக்கு ரசம் வச்சு குடு…. அம்மா… அவன பாத்துக்கம்மா… “என கூறி விட்டு கடைக்கு செல்ல சட்டையை மாட்டினார் கதிர்வேல்.
” தனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து தனக்கு இது போல் ஏதாவது செய்து இருக்கிறார்களா? ராசி.. நட்சத்திரம்… சடங்கு… சம்பிரதாயம்… எனக்கூறியே தன்னை ஒரு மனுஷ ஜீவனாக கூட மதிக்க வில்லையே இவர்கள்…அப்பிடி நான் என்ன தப்பு பண்ணேன்? ஆடி மாசத்துல பொறந்தது என் தப்பா? அது என் தப்பு இல்லையே… ” என உள்ளம் கனன்று கலங்க… “ஒரு நிமிஷம்… “என தன் கம்பீர குரலில் அனைவரையும் சற்று நிறுத்தினாள் நிலா.
அரிதாக கேட்கும் நிலாவின் குரலில் என்றும் இல்லாத அதிசயமாய் அளவுக்கு மீறி வெளிப்பட்ட கம்பீரத்தில் கட்டுண்ட நிலாவின் குடும்பத்தினர் நிலாவை ஏறிட்டனர்.
“நான் உங்களுக்கு தான பொறந்தேன்? இல்ல….. ” என முடிக்காமல் தன் தாயை ஒரு கூரிய பார்வையை கூர்வாளாய் வள்ளியின் நெஞ்சில் இறக்கி விட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் நிலா. கதவை மூடும் முன், அனைவரையும் நோக்கி, “உண்மை என்ன னு தெளிவா தெரியாம… விசாரிக்காம பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடியா ஒரு நாள் உண்மை எல்லாம் இடியா உங்க தலையில ஒன்னா இறங்கும்… அப்ப வருத்தப்பட்டாலும் கதறுனாலும் ஒரு பயனும் இல்லை… “என அபியை பார்த்தவாறே முதல் இடியாய் கதவை பலமாக அறைந்து தாளிட்டாள் நிலா.
நிலா வீசி சென்ற கேள்வியிலும் ஒற்றை பார்வையிலும் அதிர்ச்சியில் உறைந்து சிலையென நின்றாள் வள்ளி. அப்பார்வையின் அர்த்தம் வள்ளிக்கு பல அர்த்தங்களை கூறியது. “எந்த தாயும் தன் குழந்தையை எதற்காகவும் ஒதுக்கி வைக்க மாட்டா….இது வரை நிலாவிற்கு அவள் தலையில் எண்ணெய் இட்டு தலை சீவி ஜடை இட்டு இருக்கோமா ?இல்லையே….அடிக்க மட்டும் தானே அவள நாம தொட்டு இருக்கோம்….அவ வயசுக்கு வந்தப்ப கூட அவளா தான தலையில தண்ணிய தூக்கி ஊத்திட்டு வந்தா….ராசி.. அது இது னு நம்பி நம்ம இரத்தத்த நாம நம்பலயா? “என உள்ளிருந்த தாய்மை உடைய கண்ணீர் கொட்டியது வள்ளிக்கு.
கடைக்கு புறப்பட்ட கதிர்வேல், நிலா வீசி சென்ற ஒற்றை கேள்வியில் நெஞ்சம் சுக்கு நூறாய் சிதற….பொத்தென்று நாற்காலியில் அமர்ந்தார். “கொள்ளி வைக்க போற ஆம்பள புள்ளைய நினைச்சு…..அப்பா னு தலை சிறந்த பட்டத்த எனக்கு குடுத்த மூத்த புள்ளைய பொண்ணுங்கிறதுனால கை கழுவி விட்டுட்டேனோ? இது வரைக்கும் அவ சாப்பிடுறாளா இல்லையா னு கூட கவனிச்சது இல்லையே…நான் பாவம் பண்ணிட்டேனா? “என கண்களில் கண்ணீர் வழிய நிலாவின் அறையை ஏக்கமுடன் பார்த்தார் கதிர்வேல்.
இவை எதையும் கண்டுகொள்ளாமல் தன் பேரனை மடியில் இட்டு தாலாட்டு பாட ஆரம்பித்தார் அலமேலு.
” நேத்து என் கிட்ட நீ பேசவே இல்லை… ” என்று கோபத்துடன் தன் செங்கதிர்களை நிலா மீது பாய்ச்சினான் சூரியன்.
சூரியனின் கோபத்தை உணர்ந்து மெல்ல கண் விழித்து, தன் செல்ல டார்லிங்கை புன்னகையுடன் பார்த்தாள் நிலா. “என்ன ஆச்சு… என் செல்ல டார்லிங்க்கு?என் மேல கோபமா? ஈஈஈஈஈ…..கோச்சுக்காதீங்க….இன்னக்கி எக்ஸ்ட்ரா உம்மா தாரேன்….நான் இன்னக்கி என் சேரன் கிட்ட ஒரு பஞ்சாயத்து பண்ண போறேன்….ஸோ…. டாட்டா….”என புன்னைகையுடன் எழுந்தவள் நாலைந்து ப்ளையிங் கிஸ்ஸை சூரியனுக்கு குடுத்தவள், விரைவாக கிளம்பினாள் நிலா.
அவளின் டார்லிங் ஆன சூரியனும் அவள் தந்த முத்தத்தில் மயங்கி, “சரி….பொழச்சு போ…”என விட்டுவிட்டார்.
கதிர்வேல் மற்றும் வள்ளியின் மனமாற்றத்தை அறியாமல் எப்பொழுதும் கிளம்பி சைக்கிளை தள்ளினாள் நிலா. அப்பொழுது விரைவாக ஓடி வந்த வள்ளி, நிலாவின் சைக்கிள் கூடையில் இரு டிபன் பாக்ஸை வைத்து… “மிச்சம் வைக்காம எல்லாத்தையும் சாப்பிட்டுருடி….”என கூறி விட்டு திரும்பி கூட பார்க்காமல் உள்ளே வந்து விட்டாள் வள்ளி.
என்றைக்கும் இல்லாத அதிசயமாய் தன் தாய் செய்த செய்கையில் சற்று திகைத்து, பிறகு புன்னகையுடன்…..டிபன் பாக்ஸை எடுத்து திறந்து பார்த்து, சிறிது மோப்பம் பிடித்துவிட்டு…வாய் கொள்ளா புன்னகையுடன் வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சேரனை பார்க்க புறப்பட்டாள் நிலா.
நிலாவின் அனைத்து முகபாவனைகளையும் ஜன்னல் வழியாக கவனித்த கதிர்வேல், நிம்மதியுடன் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
தன்னவனை காண அந்த பழைய பேப்பருடன் சேதுவின் கடைக்கு வந்து கொண்டிருந்த நிலாவை வழியில் தனியாக வழி மறித்தான் இளா.
“ஓய்… பொண்டாட்டி… மாமன் இங்க வெயிட்டிங்… வா… வா… “என நிலாவின் சைக்கிளை வாங்கி நிறுத்திவிட்டு அவளை அருகில் இருந்த சுமைதாங்கி கல்லின் அருகே தள்ளிக்கொண்டு சென்றான் இளா.
அவனின் அந்த அதிரடியில் மிரண்ட நிலா, “என்ன… என்ன பண்றீங்க? “என இளாவின் கைகளில் இருந்து துள்ளினாள்.
“சரி… சரி.. கைய எடுத்துட்டேன்… இப்ப சொல்லு… என்ன என் கிட்ட கேக்கனும்? “இளா.
இளா கேட்டதும் தன் சைக்கிளில் இருந்த பேப்பரை எடுத்து வந்து, “இது என்ன ?”என இளாவை முறைத்தாள் நிலா.
“என்னடி இது கேள்வி? இது நியூஸ் பேப்பர் டி… “என நக்கலாக புன்னகைத்தான் நிலா.
“ப்ச்… விளையாடாதீங்க சேரா… இந்த நியூஸ பாத்துட்டு உங்கள லைப் ல ஒரு தடவை ஆச்சும் நேர்ல பாக்கனும் னு நானும் இசையும் எவ்ளோ ஆசை பட்டோம் தெரியுமா? எவ்ளோ பெரிய விசயம் செஞ்சு இருக்கீங்க… அதுவும் இந்த சின்ன வயசுல… ஆனா சத்தியமா நீங்க இப்படி… என்னைய…. எதிர்பாக்கவே இல்ல தெரியுமா? இதுனால தான் நீங்க முகத்தை மறைச்சு ஊருக்குள்ள வந்தீங்களா? தாடி மீசை லாம் நல்லா வளத்து அடையாளம் தெரியாம மறைச்சுட்டு இப்ப ப்ரீயா சுத்துறீங்களா? ஆமா… நீங்க ப்ளேயர் னு சொன்னீங்க….என்ன ப்ளேயர் நீங்க? “என மூச்சு விடாமல் படபடவென பட்டாசாக வெடித்தாள் நிலா.
“ஹே…மெதுவா… மெதுவா டி… அப்பிடி என்னடி நான் பெருசா செஞ்சுட்டேன்….எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் காதலுக்கு முன்னாடி சாதாரணமானவன்டி லூசு…” என கூறியபடி மெதுவாக நிலாவை நெருங்கினான் இளா.
“என்ன பெருசா செஞ்சுட்டீங்களா? குடியரசு தலைவர் கையால அவார்ட் வாங்குறதெல்லாம் சின்ன விசயமா? நான் உங்களோட எவ்ளோ பெரிய ஃபேன் தெரியுமா? ” என அளவுக்கு மீறிய சந்தோஷ பெருமையில் இளா தன் அருகில் வந்ததை கவனிக்காமல் பேசினாள் நிலா.
“அப்பிடியா? “என கிறக்கத்துடன் கூறிக்கொண்டு…. நிலாவின் மெல்லிடையை தன் ஒற்றை கையால் தூக்கி சுமைதாங்கி கல்லின் மேல் நிலாவை உட்கார வைத்து விட்டு… அவளின் மேல் சாய்ந்து நின்றவாறு அவளின் மூக்கோடு மூக்கை உரசி, “ஆனா… இந்த சேரன்… இந்த நிலாவோட அடிமை ஆச்சே… ” என காற்றுக்கும் கேட்காமல் நிலாவிடம் ரகசியம் பேசினான் இளா.
தன்னவனின் அந்த மோகக்குரலில் மயங்கிய நிலா, அவனின் சட்டையை பற்றுகோலாய் இறுக்க பற்றிக்கொண்டு விழி விரித்து தன்னவனை நோக்க… தன்னவளின் முதல் ஸ்பரிசமும்… அவள் பார்வையில் தெரிந்த வெட்க காதலில் மயங்கி கிறங்கிய இளா, அவளின் அதரத்தில் ஒத்தடம் கொடுக்க நெருங்கிய சமயத்தில், “ம்க்ஹூம்…. “என யாரோ செறுமும் சத்தம் கேட்க இருவரும் தங்கள் காதல் உலகத்தில் இருந்து கலைந்து வெளிவந்தனர்……
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.