மகனின் செயலை கவனித்துக் கொண்டிருந்த சுபத்ராவிற்கு மிக்க மகிழ்ச்சி தான் ஆயினும் ஒரே ஒரு மன வருத்தம் தன் மருமகளுக்கு தான் பார்த்து பார்த்து எதுவும் எடுக்க முடியாமல் அவனே எல்லாவற்றையும் வாங்கியது தான். அது மட்டும் அல்லாது தாலி கூட அவனை எடுத்துவிட்டான் என்பதும் அதிக வருத்தத்தை உண்டு பண்ணியது.
‘ இவன் கூப்பிட்டு போகலாட்டி போறான். என் மருமக வரட்டும் நான் அவளை கூப்பிட்டு போயிட்டு அவளுக்கு என்னென்ன வேணுமோ விதவிதமா வாங்கி தரேன் ‘ என மனதிற்குள் சொல்லிக் கொண்டார், சுபத்ரா.
பின் ” எந்த வேலையும் எங்களுக்கென இல்லையாடா. மருமகளையும் கண்ணுல காட்ட மாட்டேன்ற ” என கேட்க ” என்னோட மனசுக்கு பிடிச்ச பொண்ணு உங்களுக்கு பிடிக்கும் தானே. முதன் முதல அவள நீங்க பார்க்கிறது என்னோட மனைவியாவே இருக்கட்டுமே. முன்னாடியே பார்த்துட்டா அவளுக்கும் இங்க வரணும்னு ஆசை வந்துடாதா. நீங்க பார்த்ததும் உடனே வீட்டுக்கு கூப்பிட்டு வந்துடனும்னு சொல்லுவீங்க. திருமணத்துக்கு முன்னாடி எப்படி ஒரே வீட்டில் அதான்… ” என ஏதேதோ சொன்னவன் ” போட்டோ இருந்தா கூட காட்டுடா ” என கேட்டதற்கும் ” இல்லை ” என சொல்லி விட்டான்.
அடுத்து சுபத்ரா அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
ஆதித்ய வர்மனும் ரவிவர்மனும் நந்தனின் இந்த சுறுசுறுப்பும், எல்லாவற்றையும் முன் நின்று அவன் திருமணத்திற்கு தேவையானதை அவனே செய்வதும் மிகவும் பிடித்திருந்தது.
பணமும் அவன் சேமிப்பில் இருந்ததையும் பாட்டி தனக்கு வரப்போகும் மனைவிக்காக என கொடுத்து வைத்திருந்த பணத்தையும் செலவு செய்தவன் தாத்தாவிடமோ அப்பாவிடமோ எந்த ஒரு பைசாவையும் வாங்கவில்லை.
” என் மருமக கெட்டிக்காரி தான் போல ” என ரவிவர்மன் வரப்போகும் மருமகளை மனதிற்குள் மெச்சினார்.
அன்றைய நாள் அவனுக்கு ஏன் இப்படி விரைந்து ஓடுகிறது என்பது போல் இருந்தது.
ஒரு வழியாக எல்லாவற்றையும் வாங்கி முடித்தவன் இரவு தூங்க சொல்வதற்கும் முன் வேதாவிற்கு போன் செய்தான்.
” என்ன பண்ற. நல்லா ரெஸ்ட் எடுத்தியா. நாளைக்கு நான் சொன்ன மாதிரி சீக்கிரமே ரெடி ஆகிடு. டைம் ஆக்கிடாம நேரத்துக்கு வந்துடுங்க ” எனக் கூறியவன் இறுதியாக ” இப்பவும் கடைசியா ஒரு தடவை கேட்கிறேன் உனக்கு இதுல சம்மதம் தானே வேதா… ” என கேட்டதும் இவள் மனமோ ‘ இல்லைனு சொல்லிடு ” எனக் கூற இவளோ ” சம்மதம் தான் ” என்றாள்.
” நன்றி வேதா. உன்னோட உதவியை எப்பவும் மறக்க மாட்டேன் ” எனக் கூற ” நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். உங்களால தான் இப்ப என்னோட அம்மா நல்லபடியா இருக்காங்க. எனக்குன்னு இருக்கிற ஒரே ஒரு ஜீவன் அவுங்கதான். அவங்க நல்ல படியா இருக்க என் உயிரை கேட்டா கூட தருவேன் ” எனக் கூற நந்து உடனே ” பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு. சரி எதைப் பற்றியும் யோசிக்காம படு. காலைல நாலரை மணிக்கு போன் பண்றேன் ” எனக் கூறி வைத்தான்.
‘ அம்மா ஓட ஆப்ரேஷன் நல்ல படியா முடிஞ்சு இப்போ அவுங்க நல்லா இருக்காங்க. நந்தன் மட்டும் பணம் தரலைன்னா எப்படி நடந்து இருக்கும் இதெல்லாம். பயன அனுபவச்சிட்டு கைமாறு செய்யாம இருக்க முடியுமா. முதலிலேயே ஒத்துகிட்டு தானே பணத்தை வாங்கினேன். இப்போ முடியாதுனு எப்படி சொல்றது. அதனால எந்த சூழ்நிலையும் நந்தனோட பெயர் கெட்டுப்போகாமல் இந்த ஒரு வருஷத்தை நல்லபடியா ஓட்டிடனும் ‘ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் படுக்கச் சென்றாள்.
சொன்னது போலவே காலை நான்கு முப்பது மணிக்கு எழுப்பியவன் ” நான் ரெடியாகிறேன் நீ ரெடியானதும் எனக்கு ஒரு போன் பண்ணு ” எனக் கூறி வைத்தான்.
அஜய்யும் கரெக்டாக இவளை எழுப்ப வர இவள் எழுந்து விட்டதை பார்த்து புன்னகைத்தவன் செல்வி அக்காவிடம் காபி கொடுக்கச் சொன்னான்.
தான் குடிக்க எடுத்துக் கொண்டவன் வேதாவிற்கு காபி கொடுத்து விட்டு அவள் ரெடி ஆவதற்கு உதவி செய்யும் படி கூறினான்.
வேதாவிற்கு காபியை கொடுத்துவிட்டு கீழே வந்த செல்வி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மல்லி சரத்தை எடுத்துச் சென்றாள்.
திருமணம் என அஜய் சொல்லி இருந்ததால் முதல் நாள் மாலை நல்ல பூவா இருக்கிறதா என பார்த்து வாங்கி வைத்திருந்தாள்.
வேதா குளித்துவிட்டு வந்ததும் தலை துவட்டி விட்டு சேலை எப்படி கட்டிக் கொள்ள வேண்டும் என சொல்லி கொடுத்துக் கொண்டே கட்டி விட்டாள்.
அழகாய் தலைவாரி விட்டு பூவும் வைத்து விட்டாள். நந்தன் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து கொண்டவள் கண்ணாடியில் பார்க்க ‘ இது நான் தானா ‘ என மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.
செல்வியோ ” என் கண்ணே பட்டிடும் போல இருக்கு ” என கூறியதோடு ” கீழே வா நான் சுத்தி போடுறேன் ” என கூறிவிட்டுப் போனாள்.
இவள் ரெடி ஆனதும் நந்தனுக்கு போன் செய்தாள்.
” சரி நானும் கோயிலுக்கு கிளம்பிட்டேன். நீ அஜய் கூட வந்திடு. அப்புறம் பெட்டிய அஜய்யோட கார்ல எடுத்து வச்சுக்க. உன்னோட திங்ஸ் வேற எதுவும் மறந்து விட்டு இருந்தா கூட அப்புறம் எடுத்துக்கலாம் ” எனக் கூற ” இல்ல எல்லாம் எடுத்துகிட்டேன் ” என இவள் கூற ” சரி ” என சொன்னவன் ஃபோனை வைக்க, இவள் இரவு அணிந்திருந்த உடை மட்டுமே வெளியே இருக்க அதையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
பெட்டியில் எல்லாம் எடுத்து வைத்தவளுக்கு அதை தூக்கிக் கொண்டு கீழே இறங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.
இரண்டு படிகளில் இறங்கும் போதே அஜய் கீழே இருந்து ஓடி வந்தான்.
” என்னம்மா என்ன கூப்பிட்டா நான் எடுத்து வரமாட்டேனா ” எனக் கூறிக் கொண்டே பெட்டியை வாங்கியவன் ” ரொம்பவே அழகா இருக்க வள்ளி. செல்விய சுத்தி போட சொல்றேன். யார் கண்ணும் படக்கூடாது என்ன ” எனக் கூறி சிரித்தான்.
” போங்க அண்ணா ” எனக் கூறிய அவளுக்கு முதன் முதலாக வெட்கம் வந்தது.
” ஊரில் எல்லோரும் வள்ளிக்கண்ணு இல்ல வள்ளினு கூப்பிடுவாங்க ” என்று வேதா சொன்னதிலிருந்து அஜையும் அவளை வள்ளி என்று தான் அழைத்தான்.
அவள் கீழே வந்ததும் செல்வி கல்லுப்பை தனது இடது கையில் எடுத்து வந்து சுத்தி போட்டாள்.
பின் அங்கே இருந்த பூஜை அறையில் விளக்கை ஏற்றி சாமி கும்பிட சொன்னாள்.
சாமி கும்பிட்டவளிடம் செல்வி வாழ்த்தும் சில அறிவுரைகளும் கூறினாள். புன்னகையுடன் ‘ சரி சரி ‘ என கேட்டுக் கொண்டவள் ” நன்றி ” என கூறிவிட்டு அவள் காலில் விழப் போக ” ஐயோ வள்ளிம்மா வேண்டாம் வேண்டாம் ” என தடுத்து விட்டு ” நீங்க நல்லா இருப்பீங்க ” என கூறினாள்.
பின் அஜையிடம் ஆசிர்வாதம் செய்யும் படி சொன்னாள். அஜய் வேண்டாம் என தடுத்தும் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். ஏனோ அவன் கண்கள் கலங்கியது.
” நீ எப்பவும் நல்லா இருக்கணுமா எந்த கவலையும் இல்லாம ” என ஆசி வழங்கியவனை ஒரு நிமிடம் கட்டிக் கொண்டாள்.
அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த அவனுக்கோ உடம்பு புல்லரித்தது. அவள் தலையில் மெதுவாக தடவி கொடுத்தவன் ” போகலாமா ” எனக் கேட்க சரி என தலையசைத்தாள்.
‘ தப்பு பண்ணுரோமோ… ஒரு பொண்ணோட லைஃப நம்ம சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பயன்படுத்துறோமோ… நல்ல பொண்ணா இருக்கா நாளைக்கு எதுவும் மனசு வேதனைப்பட்டா அந்த பாவம் நம்மள சும்மா விடுமா ‘ என மனதில் தோன்ற ” உனக்கு எந்த நேரத்தில் எந்த உதவி வேணும்னாலும் இந்த அண்ணனை கேட்கலாம் ” எனக் கூறி அவளது போனில் அவன் நம்பரை அண்ணன் என டைப் பண்ணி ஷேவ் செய்து கொடுத்தான்.
” திருமணம் முடிந்ததும் அங்கேயே இருந்திடாத. இந்த அண்ணனையும் அப்பப்ப பார்க்க வரணும் என்ன ” எனவும் கூறினான்.
செல்வி வாசலில் நின்று கை அசைக்க கார் கோவில் நோக்கி புறப்பட்டது.
No comments yet.