ஆள் அரவமற்ற அந்த காட்டுப்பாதையில் நிலாவும் இசையும் சைக்கிளில் வந்த கொண்டிருக்கையில் அவர்களை குரோத விழிகளுடன் வழி மறித்த அபி, “ஏய்… ஏன்டி இப்பிடி பண்ணுன? “என ஆக்ரோஷமாக வினவினான்.
“நான் என்ன பண்ணேன் அபி? “நிலா.
“ச்சீ… என் பேர சொல்லாத சனியனே… என்னைய பழி வாங்கனும் னு தான இப்பிடி பண்ணுன? உன் ஆசை நிறைவேறிடுச்சா? இப்ப உனக்கு குளுகுளு னு இருக்குமே… ” அபி.
அதுவரை தன் தம்பி தன்னிடம் பேச வந்துள்ளான் என்ற பாசத்தில் இருந்த நிலா, அவன் தன்னை சனியன் எனக்கூறி அவன் பெயரை கூட தான் உச்சரிக்க கூடாது என கூறியதும் உள்ளம் இறுகி… நிலாவாக மிளிர்ந்து நிமிர்ந்து நின்றாள் நிலா.
“அச்சோ…. ஸார்….உங்கள வேற எப்பிடிங்க ஸார் கூப்பிடுறது? “இசை.
“நீ குறுக்க பேசாதடி… நீ இந்த தரித்திரம் புடிச்சவளுக்கு ஜிங் ஜாங் தான…நீ வாய தொறக்காத…”அபி.
“என்னது டி யா? இந்நேரம் இந்த சேது பய இங்க இருந்து இருந்தா உன் வாய் மேலயே நாலு போட்டு இருப்பான்… என்ன பண்றது… நான் தான் அவன் வாய் மேல பத்து போட்டுட்டு வந்து இருக்கேனே….”என நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு, “சரிங்க ஆஃபீஸர்…..நீங்க உங்க கொக்கா கிட்டயே பேசிக்கங்க… நான் அப்பிடிக்கா ஒரு ஓரமா இருந்துக்கிறேன்….அதுக்கு மட்டும் ஆஃபீஸர் ஸார் பர்மிஷன் குடுத்தா நல்லா இருக்கும்… ” என்றாள் இசை.
“என்னடி? நக்கலா? ” அபி.
“மறுபடியும் டி யா? மவனே உனக்கு என் நிலா குடுப்பாடா….வாங்கிக்க… “என்றெண்ணிக்கொண்டு, “அப்பிடிலாம் ஒன்னும் இல்ல ங்க ஆஃபீஸர் ஸார்… “என அபியை கிண்டலடித்துக்கொண்டு உள்ளம் எரிமலையாய் இருக்க… வெளியே அமைதியாக ஒதுங்கி நின்றாள் இசை.
“உனக்கு என்னைய பேச மட்டும் தான் உரிமை இருக்கு…அதுவும் ஒரு லிமிட் தான்….என் ப்ரண்ட்ட பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை… இன்னொரு தடவ அவள டி சொன்ன….மொத்த பல்லையும் உடைச்சு கையில குடுத்துருவேன்…. ஜாக்கிரதை….உனக்கு இப்ப என்ன வேணும்? எதுக்கு இப்ப எங்கள தேவை இல்லாம வழிமறிச்சு வம்பு பண்ணிட்டு இருக்க? “என சீற்றம் கொண்டாள் நிலா.
என்ன பேசினாலும் அமைதியாக ஒதுங்கி போகும் நிலா, தன் கோப முகத்தை காட்டவும்….அவள் க்ரவுண்டில் அடித்த ஒவ்வொரு அடியும் நினைவிற்கு வர… சற்று பம்மினான் அபி.
அபி சற்று பயந்ததை கண்டு கொண்ட இசை, “ஒத்த வார்த்தைக்கே இப்பிடியா? இவ்ளோதான் உன் வீரமா டா டபாரா தலையா? “என மனதினுள் நினைத்து தன் உதடுகளை கடித்து சிரிப்பை விழுங்கி கொண்டாள்.
“என்ன சத்தத்தையே காணோம்? என்ன விசயம் னு சொல்லு… இல்லனா வழிய விடு… “என தன் கம்பீர குரலில் ஆணையிட்டாள் நிலா.
“ஏய்… என்ன ஓவரா மிரட்டுற? எல்லாத்தையும் பண்ணிட்டு குட்டக்கழுதை… ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத… “அபி.
“இங்க பாரு… எனக்கு என்ன விஷயம் னு தெரியல…. ஒழுங்கா என்ன னு தெளிவா சொல்லு… அத விட்டுட்டு தேவை இல்லாம பேசிட்டு இருக்காத… “நிலா.
“எதுக்குடி நம்ம எதிர்த்த வீட்டுக்காரர போலீஸ் ல புடிச்சு குடுத்த? அவரு எவ்ளோ நல்லவரு தெரியுமா? நான் எப்ப போய் கேட்டாலும் ப்ரீயா குடுப்பாரு தெரியுமா? அவர போய் என்னைய பழிவாங்கனும் னு போலீஸ் ல புடிச்சு குடுத்துட்டியே… “அபி.
“ப்ரீயா குடுப்பானா? எத? அந்த தேவாமிர்தத்தையா? “நிலா.
“ஆமாடி குட்டச்சி… அது எனக்கு தேவாமிர்தம் தான்…. இந்த காலத்துல எவன்டி ப்ரீயா குடுப்பான்? அவரு குடுத்தாரு எனக்கு… அவர போய் என்னைய பழிவாங்கனும் னு போலீஸ் ல புடிச்சு குடுத்துட்டியே…. “அபி.
“இங்க பாரு அபி…. குடிக்கிறது ரொம்ப தப்பு…. நீ இன்னும் ஸ்கூல் கூட முடிக்கல… ரொம்ப சின்ன பையன் டா நீ… இந்த வயசுல குடிக்கிறதுலாம் கெத்தா தான் உனக்கு தோனும்… ஆனா இதுனால நீ ரொம்ப பாதிக்கப்படுவ… கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff’s Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ,வாய் தொண்டை கல்லீரல் ல லாம் கேன்சர்…..உடம்புக்கும் மட்டும் இல்லாம உன் மனசும் கெட்டு போகும் டா… இப்பிடி இருக்குற வியாதி லாம் வந்துரும் டா… ஒரு முழுமையான மனுஷனா நீ இருக்க மாட்ட டா… ஸ்கூல்ல இத பத்திலாம் உனக்கு சொல்லி குடுக்குறாங்க தான… கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு அபி… “நிலா.
“ஏய்… எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாருடி? நான் முழுசா மனுஷனா இருக்கேன்… இல்ல குறையுள்ளவனா இருந்துட்டு போறேன்… அத கேக்க நீ யாருடி? உன் உடம்புல உள்ள குறைய முதல்ல பாரு… அதுக்கு அப்புறம் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்… இத்துனுகாண்டு வளந்து இருந்துட்டு, நான் குறை உள்ள மனுஷனா? அங்க பாரு டி… உன் கூட சுத்துற புள்ள எவ்ளோ உயரம் இருக்கு… நீ எவ்ளோ உயரம் இருக்க? முதல்ல இந்த சைக்கிள்ள உனக்கு பெடல் எட்டுதாடி? எத்தன தடவ கல்லடி வாங்குனாலும் புத்தி வராதா உனக்கு? இதோ… இந்த மரக்கிளைய தொடு பாப்போம்…. முடியாது…. தொட முடியாது…. ஏன்னா குட்டை… குட்டைச்சி நீ…. குட்டைடி நீ…. நீயே குறையா இருக்க… இதுல நான் முழுசா மனுஷனா இருக்க மாட்டேன் னு சொல்லுறியா? உன் அளவுக்கு ஏத்தது போல வாய அடக்கிட்டு கம்முனு இருக்கனும்… இப்பிடி ஓவரா துள்ளி ஆடிட்டு இருந்தா தலையில தட்டி மூலையில உக்கார வச்சுருவேன்…. “என்று அபி கூறி முடிக்கவும் ஒரு கை ஓங்கி அவனை அறையவும் சரியாக இருந்தது.
கன்னத்தில் கை தாங்கி, அடித்த அடியில் கண் கலங்கி நிற்கும் அபியின் எதிரே புயலாய் நின்றிருந்தாள் இசை.
“இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு… நாக்க அறுத்து கையில குடுத்துருவேன்…..இவள குட்டை னு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு?அவளுக்கு இருக்குற திறமையில கொஞ்சூண்டு உன் கிட்ட இருக்கா? சரி அத விடு…..உன் கிட்ட என்ன திறமை இருக்கு? ஏதுவும் இல்லாத வீணா போன குப்பை நீ….நீ….நிலா வ குறை சொல்லுறியா? அப்பிடியே அவ வளர்ச்சி கம்மியா இருந்தா உனக்கு என்ன பிரச்னை? அவ இப்பிடி இருக்குறதுனால உனக்கு எங்க வலிக்குது? உன்னைய அப்பிடியே….”என கூறி கொண்டு அபியை அடிக்க இசை மீண்டும் கை ஓங்கினாள்.
“கொஞ்சம் அமைதியா இரு இசை…..ஸார் சொல்லுறது உண்மைதான்.நான் குட்டை தான? இதோ இந்த மரக்கிளைய கூட என்னால தொட முடியாது… நான் குட்டச்சி தான்…” நிலா.
“அவன அடிச்சு இருக்க கூடாது டி….உன்னைய வெளுத்து இருக்கனும்….ச்சே… ” இசை.
நிலா கூறுவதை கேட்ட அபி, இகழ்ச்சியாக நிலாவை பார்த்து புன்னகை புரிந்தான்.
சிரிக்கும் அபியை பார்த்த நிலா, “இரு தம்பி… நான் இன்னும் பேசி முடிக்கல… நான் குட்டை தான்…. அது வெறும் உடலளவுல மட்டும் தான்… ஆனா என் ஒழுக்கத்துலயும் என் நேர்மையிலயும் பெரியவடா நான்…. என்னால உயரத்துல உள்ள எந்த பொருளையும் எடுக்க முடியாது… தொட முடியாது தான்…. எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல…. நான் ஸ்டூல் போட்டு கூட பொருள எடுத்துப்பேன்… உன்னைய மாதிரி படிக்கிற வயசுலயே குடிச்சுட்டு கூட படிக்கிற பொண்ணுங்களுக்கு தெரியாம குடுத்து அவங்கள குடிக்கு அடிமையாக்குற ஈனமான வேலை செஞ்சு என் ஒழுக்கத்துல குறை வைக்கலடா நான்….”என்றாள்.
அதை கேட்ட அபி, “உனக்கு…. உனக்கு எப்படித் தெரியும்? “என வேர்க்க விறுவிறுக்க கேட்டான்.
“எனக்கு எல்லாம் தெரியும்… நான் கெத்தா வெளில சொல்லுவேன்… நான் ஒரு கிரிக்கெட்டர் னு…. எங்க…வெளில… வேண்டாம் வேண்டாம்… உன்னைய பெத்த அம்மாக்கிட்ட போய் சொல்லு பாப்போம்… நான் ஒரு குடிகாரன் னு…. விளக்கமாறு தாறுமாறா பிஞ்சுரும்… தெரியும்தான? பெருசா பேச வந்துட்டான்…..இங்க பாரு அந்த எதிர்த்த வீட்டுக்காரன போலீஸ்ல புடிச்சு குடுத்த மாதிரி உன்னைய பத்தியும் எல்லார்கிட்டையும் சொல்லிருவேன்… ஒழுங்கா திருந்தி இருந்துக்க….இல்ல…..”நிலா.
“என்னடி மிரட்டுறியா? உன்னைய கட்டிக்க போற அந்த இளிச்சவாயன் போலீஸ்னா நான் பயந்துருவேனா? “என்று அபி கூறிய அடுத்த நொடி தன் கரத்தை அவன் கன்னத்தில் இடியென இறக்கினாள் நிலா.
“இன்னொரு தடவை என் சேரன அவன் இவன் னு பேசுன…..இந்த இன்பநிலாவ சேரநிலாவா பாப்ப…..ஒழுங்கா போயிரு… என் கண்ணு முன்னாடி நிக்காத… போ…..”என அந்த இடம் அதிர கர்ஜித்தாள் நிலா.
“ஏய்… என் அண்ணன மரியாதை இல்லாம பேசுன….கொத்தமல்லிய கிள்ளி போடுற மாதிரி உன் தலைய கிள்ளி போட்டுருவேன்….ஓடுடா….”என உறுமினாள் இசை.
“ஒரு சின்ன பையன ரெண்டு பேரும் சேந்துட்டு அடிச்சு மிரட்டுறீங்களா? ஏய் நிலா… உன்னைய எங்க கவனிக்கனுமோ அங்க கவனிச்சுக்கிறேன்… “என வன்மத்துடன் கூறி கொண்டே ஓடி விட்டான் அபி.
அபி ஓடி மறைந்ததும் ஒரு நெடிய மூச்சை விட்டுக்கொண்டு…..”சேரநிலா…..அது எப்படி ங்க…உங்க சேரனா? என் அண்ணன் டி…. உனக்குலாம் குடுக்க மாட்டேன்….உனக்குனு இல்ல….என் அண்ணன சைட் அடிக்கிற….அடிச்சுட்டு இருக்குற எவளுக்கும் குடுக்க மாட்டேன்…..”என்றாள் இசை.
“ஹைய்யோடா….இப்ப அபிக்கு போட்ட அடிய உனக்கும் போடனுமா? “எனக் கேட்டுக்கொண்டே மெதுவாக சைக்கிளை தள்ள ஆரம்பித்தாள் நிலா.
அவளுடன் சேர்ந்து தனது சைக்கிளை தள்ளி கொண்டு, “எனக்கும் கை இருக்கு… எங்களுக்கும் அடிக்க தெரியும்… வேணுனா என் ப்ரண்ட் ங்கிறதுனால உனக்கு மட்டும் விதிவிலக்கு… எனக்கு நீ ஒரு பேமிலி பேக் ஐஸ் கிரீம் வாங்கி குடு… நான் உனக்கு என் அண்ணன செட் பண்ணி விடுறேன்… “என இசை கூறியவாறு நிலாவை பார்த்து கண்ணடித்தாள்.
“அடியேய்…. உனக்கு ஐஸ் கிரீம் வேணுனா நேரா கேளுடி… அதுக்காக ஏன்டி அவங்கள வச்சு விளையாடுற? “நிலா.
“எவங்கள ங்க? “இசை.
“உன்னைய…..”என நிலா விளையாட்டாக இசையை அடித்தவளின் முகத்தில் மென்மையாக வெட்க சிவப்பு பரவியது.
“ஹே….நிலா வெக்கப்படுறாடோய்… “என இசை துள்ளிக்குதித்தாள்.
இருவரும் பேசி சிரித்து விளையாடிக் கொண்டே இருவரும் தங்களது கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மீண்டும் சேதுவின் கடைக்கு சென்றனர்.
“யோவ் சேதுபதி… வாய்யா வெளில… “என உள் நோக்கி குரல் கொடுத்தாள் இசை.
“ஆகா… குட்டி பிசாசுக ரெண்டும் திரும்ப வந்துருச்சு டா… “என நினைத்துக்கொண்டு, “அரசி… என் அரசியம்மா… என்ன இவ்ளோ கோபம்? அதான் காலையிலே வந்து மொத்த கோபத்தையும் இறக்கிட்டீங்களே… இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா? “என பம்மியபடி கேட்டான் சேது.
“ஓவரா நடிக்காதடா… எங்க உன் ப்ரண்ட்? இன்னக்கி வரலயா? “இசை.
“ஹேய்… அவன் ஏசி டி… அவனுக்கும் ஆயிரம் வேலை இருக்கும் ல… “சேது.
“ஏசியாவது…. இன்வெட்டராவது… முதல்ல ஃபோன போடு அவனுக்கு.. “என சேதுவிற்கு ஆணையிட்டவாறு அங்கு உள்ள நாற்காலியில் அமர்ந்து நிலாவை யும் உட்கார வைத்தாள் இசை.
“அய்யோ… இதுக போகாது போலயே… “என மனதினுள் புலம்பிக்கொண்டே இளாவிற்கு ஃபோன் பண்ணினான் சேது.
“என்னடா மச்சான்? “இளா.
“மாப்ள… அது… அது வந்து டா… “சேது.
“என்னடா வந்து… போயி… சீக்கிரம் சொல்லு என்னன்னு…”என எரிச்சலாக மொழிந்தான் இளா.
“அரசியும் நிலாவும் உன்னைய பாக்கனும்னு உன்னைய வர சொல்லுறாங்க டா…. இங்க… என் கடையில தான் உக்காந்து இருக்காங்க… கொஞ்சம் வர்றியா டா மாப்ள….”என தயங்கி தயங்கி இளாவிடம் கூறினான் சேது.
“என்ன விளையாடுறியா? அறிவில்ல… இங்க எனக்கு ஆயிரம் வேலை இருக்கு…. ஒழுங்கா ஃபோன வச்சுரு… இல்ல… உன் மண்டை உடைஞ்சுரும்…. “என சிடுசிடுத்தான் இளா.
அதை கேட்ட சேது, இசை நிலாவிடம் திரும்பி மௌனமாக உதட்டை பிதுக்கினான் .
அதை பார்த்த நிலா, எழுந்து வந்து சேதுவிடம் இருந்து ஃபோனை வாங்கி….”ஹலோ…..”என்றாள்.
“ஹலோ…”என கறறாக கூறினான் இளா.
“ஹலோ… “என மீண்டும் தயக்கத்துடன் கூறினாள் நிலா.
“ஹலோ…..தி இஸ் இளஞ்சேரன் IPS… நீங்க யாரு? ” என யாரென தெரிந்தும் விளையாடினான் இளா.
அவன் விளையாடுவது புரிந்து, “நிலா… சேரநிலா… கிரிக்கெட்டர் சேரநிலா பேசுறேன்… “என நிமிர்வுடன் பதிலளித்தாள் நிலா.
அதை கேட்ட இளா தடுமாறி தான் போனான். தன்னவளின் குரலில் இருந்து வெளிவந்த கம்பீரத்தில், இளா வின் இதயம் தடம் மாறி தாறுமாறாக துடிக்க ஆரம்பித்ததில் அவனது கையில் இருந்து ஃபோன் நழுவ ஆரம்பித்தது……
இங்கு, இசை, “நிலா எப்பவும் கெத்துடி… “எனக்கூற….. சேதுவின் வாய்க்குள் நாலு ஈ உள்ளே சென்று காது வழியாக வெளிவந்தது…….
(சேரநிலா மிளிர்வாள்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.