அத்தியாயம் – 10

நித்யா பாலசுப்ரமணியன் | 16 Dec 2025 | Share

எல்லா உடைகளையும் போட்டு காண்பித்தவள் உடைமாற்றும் அறையை விட்டு வெளியே வந்ததும் ஒரு சேரில் அமர, அவள் மிகவும் களைப்படைந்து இருப்பதை பார்த்தவன் தனது கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.

இரண்டரை மணிக்கு மேல் ஆகி இருப்பதை பார்த்தவன் ‘ இவ்வளவு நேரம் ஆகிடுச்சு இதையே கவனிக்காமல் போயிட்டேனே. இந்த பொண்ணுக்கு பசிச்சிருக்குமே ‘ என எண்ணியவனாய் தன்னைத் தானே நொந்து கொண்டவன் அவளை ஒன்பதாம் தளத்தில் உள்ள கேண்டினுக்கு அழைத்துச் சென்றான்.

நல்லவேளை சாம்பார் சாதம் தயிர் சாதம் இருக்க அதை வாங்கி கொடுத்தான்.

சாப்பிடும் போது ” சாரி வேதா. நான் டைம் பார்க்கல. இன்னைக்கு வாங்கிய வேண்டியது எல்லாம் வாங்கி முடிச்சிடனும்னு நினைச்சேன் அதான்… ” எனக் கூறியவன் ” நீயாவது எனக்கு பசிக்குதுன்னு சொல்லி இருக்கலாம் இல்ல. இனி இப்படி இருக்காத என்ன. நான் வேலையா இருந்தா எனக்கு பசி தூக்கம் தெரியாது. நான் மறந்துட்டாலும் நீ ஞாபகப்படுத்து என்ன…. ” என சொல்ல ” ம்… ” என தலையசைத்தவள் அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

சற்று இளைப்பாறட்டும் என எண்ணியவன் ஃபோனில் அஜய்யிடம் பேசினான்.

‘ கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாட்டு வேலைகள் எல்லாம் முடிந்ததா… அன்னதானம் செய்வதற்கு உண்டான வேலைகள் முடிந்ததா…. ரிஜிஸ்டர் ஆபீசில் பேசி விட்டானா ‘ என கேட்டுக் கொண்டவன் மற்ற விவரங்களை எல்லாம் பேசி முடித்துவிட்டு போனை வைத்தான்.

அடுத்து அவளை அழைத்துக் கொண்டு கீழ்த்தளத்தில் உள்ள நகை கடைக்கு அழைத்துச் சென்றான்.

எடுத்திருந்த புடவைகளுக்கு மேச்சாக இரண்டு செட் நகைகளை எடுத்தவன் சுடிதார் அணியும் போது போட்டுக் கொள்வதற்கு தினசரி அவள் அணிவதற்கும் ஆனா நகைகளை எடுத்தான்.

பின் தாலியும் தாலி செயினும் வாங்கினான்.

‘ மஞ்சள் கயிறு கட்டாமல் செயினில் தாலியை கோர்த்து அப்படியே போட்டுவிடலாம். அவளோ சின்னப் பெண் கல்யாண கனவுகள் என்று அவளுக்கும் எதுவும் இல்லாமல் இருக்குமா? ஒரு வருடம் முடிந்து அவள் போகும் போது எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் போக வேண்டும் ‘ என ஏதேதோ எண்ணங்கள் வர ‘ காலை முன் வைத்தாகி விட்டது இனி பின் வாங்க வேண்டாம். எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். நடக்க வேண்டியதை பார்க்கலாம் ‘ என மனம் எச்சரிக்க அடுத்து வாங்க வேண்டியதை வாங்க கிளம்பினான்.

கொலுசு மெட்டி எல்லாம் வாங்கி முடித்தவன் ” இனியும் வாங்க வேண்டியது எதுவும் இருக்கிறதா. உனக்கு எதுவும் வேறு வாங்க வேண்டுமா ” எனக் கேட்க அவள் ” இல்லை ” எனத் தலையசைத்தாள்.

அதன் பின் அவளுக்கு குடிக்க ஜூஸ் வாங்கி கொடுத்தவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

அஜய்யும் வேலை முடித்துவிட்டு வந்திருக்க மூவரும் சேர்ந்து உணவு இரவு உண்டனர்.

அஜய் ஷாப்பிங் போய் வந்ததை பற்றி கேட்க அவளும் நந்தன் தனக்காக வாங்கியதை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

அதன் பின் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி அஜய்யும் நந்தனும் பேசிக் கொண்டிருக்க, அதை கேட்டுக் கொண்டே உண்டு முடித்தாள்.

பின் அஜய் டிவி பார்க்க அமர நந்தன் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அறையில் கொண்டு வைக்க வேதாவுடன் மாடிக்குச் சென்றான்.

அவள் அறையில் எல்லாவற்றையும் வைத்து முடித்தவன் ” வேதா நீ நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடு. நாளை மறுநாள் 6 டு 7:30 முகூர்த்தம். நான் என்னோட வீட்டில் இருந்து ரெடியாகி அம்மா அப்பா வர்ஷா தாத்தாவோட கோயிலுக்கு 5.30 மணிக்கு எல்லாம் போயிடுவேன். பாட்டிக்கு உடம்பு இன்னும் சரியாகல ஆஸ்பத்திரில தான் இருக்காங்க. இப்போதைக்கு அவங்கள போயும் பார்க்க முடியாது. கொஞ்சம் உடம்பு சரியான பின்ன நாம ஒரு நாள் போகணும் சரியா… அப்புறம் நீ அஞ்சு முப்பது மணிக்கு எல்லாம் ரெடி ஆகிடு‌. அஜய் உன்ன கோயிலுக்கு கூட்டிட்டு வருவான் ” எனக் கூறினான்.

” அப்புறம் ” என யோசித்தவன் ” அந்த மயில் கலர் புடவை இருக்கில்ல அதை கட்டிக்கோ ” என சொன்னதோடு எடுத்த நகைகளில் அந்த புடவைக்கு மேட்ச் ஆக இருப்பதை எடுத்துக் கொடுத்து இந்த நகைகளை போட்டுக்கோ. அப்புறம் கொலுசும் போட்டுக்கோ ” என்ன சொன்னவன் தாலி மற்றும் மெட்டியை தனியாக எடுத்து வைத்துக் கொண்டான்.

பின்பு அஜய்யிடம் வாங்கி வைக்க சொல்லி இருந்த சூட்கேஸை அங்கிருந்த அலமாரியின் மேல் இருந்து அவளிடம் எடுத்துக் கொடுத்தவன் ” எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்து வைச்சுக்க ” எனக் கூறினான்.

அவன் கூறியதற்கெல்லாம் சரி சரி என தலையை அசைத்தவள் எல்லாம் பேசி முடித்துவிட்டு அவன் கிளம்ப, இவள் ஏதோ சொல்ல வருவதைப் போல் உணர்ந்தவன் ” என்ன வேதா எதுவும் சொல்லனுமா ” எனக் கேட்க ” அது வந்து ” என இழுத்தவள் ” சொல்லு ” என அவன் கேட்க ” எனக்கு சேலை கட்ட தெரியாது ” என சொன்னவள் முகத்தை கீழே குனிந்து கொள்ள, மென்மையாக சிரித்தவன் ” அவ்வளவு தானா… அதான் செல்வி அக்கா இருக்காங்களே. அவுங்க கட்டிவிடுவாங்க. காலையில உன் கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுவாங்க அதனால பயப்பட வேண்டாம் ” எனக் கூறியவன் ” சரி நான் கிளம்பிட்டா. நாளைக்கு எனக்கு ஃபுல்லா வேலை இருக்கு. என்னால வர முடியாது. நாளை மறுநாள் காலையில பார்க்கலாம் என்ன. உனக்கு எப்போ எதும் வேணும்னாலும் எனக்கு போன் பண்ணு ” எனக் கூறியவன் வீட்டுக்கு கிளம்பி விட இவளுக்கு ஏனோ வெறுமையாக இருந்தது.

சூட்கேசில் எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்து வைத்தவள், திருமணத்தன்று கட்ட வேண்டிய புடவையை மேலாக எடுத்து வைத்தாள்.

பெரிய சூட்கேஸ் ஆக இருந்ததால் சேலை சுடிதார் நகை என எல்லாமே அதற்குள் வைக்க முடிந்தது. அத்தோடு கையெழுத்துப் போட்டதும் தனக்கென ஒரு காப்பி கொடுத்து இருந்த அக்ரிமெண்டை ஒரு ஃபைலில் வைத்து தனது பையில் வைத்திருந்தவள் பையில் இருந்த தனது துணிமணிகளை வெளியே எடுத்து விட்டு அந்த பையிலே ஃபையிலையும் சுற்றி எல்லா துளிகளுக்கும் அடியில் வைத்தாள்.

அத்தோடு இங்கு இருக்கும் ஒரு வருடத்தில் படித்து இருக்கும் பனிரெண்டாம் வகுப்பிற்கு தகுந்த வேலை எதும் கிடைத்தாலும் சும்மா வீட்டில் இருக்காமல் போய் பார்க்கலாம் என எண்ணியவளாய் தனது சர்டிஃபிகேட்டையும் கொண்டு வந்திருந்தவள் அதையும் பத்திரமாக துணிகளுக்கு அடியில் வைத்தாள்.

அதன் பின் தனது துணிமணிகளையும் அதில் வைத்துக் கொண்டாள்.

அன்று முழுவதும் வெளியில் சுற்றியதில் தாயிடம் பேசாமல் விட்டுவிட்டாள்.

இப்பொழுது இரவும் ஆகிவிட்டதால் தொல்லை பண்ண வேண்டாம் என எண்ணியவள் ‘ காலை எழுந்ததும் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் ‘ என எண்ணிக் கொண்டே படுக்கச் சென்றாள்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக தாயிடம் பேசினாள்.

” வேலை கொஞ்சம் அதிகம் இருந்ததால பேச முடியலமா சாரி. நான் பேசலனதும் நீங்க எதும் வருத்தப் படாதீங்க. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பா பேசுறேன் ” எனக் கூறி வைத்தவள் பொன்னிப் பாட்டியிடமும் தாயின் உடல் நலனை விசாரித்தாள்.

நன்றாக இருக்கிறார்கள் என்று சொன்ன வார்த்தையில் அவள் மனம் நிம்மதியானது.

இங்கு நந்தன் காலை எழுந்ததில் இருந்தே பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் அறையில் தானே அவள் தங்குவாள். அதனால் டேபிள் சேர் மற்ற தேவையற்ற பொருட்களை எல்லாம் பக்கத்தில் இருந்த சிறிய அறைக்கு மாற்றி அதை ஆபீஸ் ரூம் போல் ரெடி செய்தான். 

வேலை செய்யும் பத்மா அம்மாவிடம் ரூமை கிளீன் செய்ய சொன்னவன் அவளுக்கென பீரோவில் துணி வைக்க இடமும் ஒதுக்கினான்.

  • Author
    Nithya Balasubramanian
    December 17, 2025

    The new episode is daily updated. Thank you for your comment 🙂

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *



  • Author
    சுபா Prakash பிரகாஷ்
    December 17, 2025

    super where is balance story

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *