அத்தியாயம் – 1

நித்யா பாலசுப்ரமணியன் | 10 Dec 2025 | Share

சூரியன் தன் கதிர் கரங்களை மெல்ல மடக்கி உறங்கச் செல்ல ஆயத்தமாக, இளம் சூடாக வீசிய காற்று மெல்ல மெல்ல சூடு தணிந்து குளிர்ச்சியாய் வரத் தொடங்க, இளஞ்சிவப்பும் மஞ்சளுமாய் வானம் ஜொலிக்க, மெல்ல அதனோடு நீலமும் வெண்மையும் கலந்து மாலை பொழுது மெல்ல தொடங்க, வானில் கொஞ்சம் கொஞ்சமாக சிறு கருமை படர, தென்றல் காற்றும் இதமாய் வீச, நிலவும் தன் வெண்முகத்தை மேகங்களுக்கிடையே ஒளித்து மறைந்து விளையாட, ஆங்காங்கே நட்சத்திரங்களும் எட்டிப் பார்க்க இருளும் பரவ இரவு பொழுதும் தொடங்க, வாகனங்களின் சத்தமும் மெல்ல குறைய ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலும் ஆரவாரம் ஏதுமின்றி மென்மையான அலைகளாய் சிறு ஓசையோடு கரையை தொட்டுத் தொட்டு காதல் நாடகம் ஆட, தூரத்தில் சிறு சிறு புள்ளியாய் தெரிந்த படகும் கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை தொடர்ந்து கரையை நோக்கி வரத் தொடங்க, கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டும் இருந்த கூட்டம் எல்லாம் கலைந்து போக, ஆங்காங்கே படகுக்கு பின் காதலர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, குழந்தைகளை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் ஆங்காங்கே விற்றுக் கொண்டிருந்த சூடான சோளத்தையும் மீன் வறுவலையும் இறால் 65 யும் பஜ்ஜியையும் வாங்கி ஊட்டி கொண்டிருக்க, வயதான தம்பதியரோ தாங்கள் தங்கள் கடந்து வந்த பாதைகளை எண்ணிப் பேசிக் கொண்டிருக்க, இது எதுவும் கண்ணில் படாது மனதைக் கவராது ஏதோ சிந்தனையில் கடற்கரையில் ஒரு ஓரமாய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிநந்தன்.

மணி பத்து.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்க ஆங்காங்கே ஒரு சிலரே அமர்ந்திருக்க, வீட்டிற்கு போக மனம் இல்லாவிட்டாலும் போய் தானே ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டே எழுந்தவன் தன் பேண்டில் ஒட்டி இருந்த மணலை தட்டி விட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

அப்பொழுது கரையில் நின்றிருந்த ஒரு படகை கடந்து செல்ல, மறுபக்கம் இருந்து ஏதோ சத்தம் வருவது போல் இருக்கவும் என்ன சத்தம் என உற்று கவனிக்க அது யாரோ அழுவது போல் இருக்கவும் யார் என மறுபக்கம் சென்று பார்த்தான்.

இருளில் சரியாக தெரியவில்லை இருப்பினும் ஒரு பெண் தன் முழங்காலை கைகளால் கட்டிக்கொண்டு முகத்தை காலின் மேல் சாய்த்து அழுது கொண்டிருப்பது போல் தெரிய மெதுவாக சற்று அருகில் சென்றான்.

அழுது கொண்டிருந்தவளுக்கோ தன்னை நோக்கி யாரோ வருவது தெரியவில்லை.

அருகில் சென்ற அவன் மெல்ல குரல் கொடுக்க எந்தவித அசைவும் இன்றி அப்பெண் அமர்ந்திருக்கவும் மெதுவாக தோளை தட்டி அழைத்தான்.

யாரோ தன்னை தொடுவதை உணர்ந்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அங்கே ஒருவன் இருப்பதை பார்த்ததும் அவளை அறியாமலேயே சற்று பின்னால் நகர்ந்தாள்.

இருளிலும் வெளிறிய அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் பயந்து விட்டாள் என்பதை உணர்ந்து, அவளிடம் பேசுவதற்கு எசவாக தன் முழங்காலை ஊன்றி அமர்ந்து ” பயப்படாதே. யார் நீ ? ஏன் இந்த நேரத்துல இங்க உக்காந்து அழுதுட்டு இருக்க? வீட்டுக்கு போகலையா ? ” என கேட்க அவள் ‘ இல்லை ‘ என்பது போல் தலையசைத்தாள்.

” மணி பத்துக்கு மேல ஆச்சு. இதுக்கு மேல இங்க இருக்கக்கூடாது. அது அவ்வளவு பாதுகாப்பும் இல்லை. இங்க போலீஸ் ரவுண்ட்ஸ் வருவாங்க ஏன் இங்க இருக்கனு கேட்பாங்க ” என்றவன் ” உன் கூட யாரும் வரலையா. வீடு எங்கே இருக்கு பக்கத்திலையா ? உனக்கு வீட்டுக்கு போக தெரியும் தானே ? ” என அவன் கேட்டுக் கொண்டே போக அவள் பாவம் போல் விழித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

‘ இருக்கிற பிரச்சினையில் இது வேறயா. நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தானே. யாரோ அழறாங்க தனியாக இருக்காங்க உனக்கு என்ன வந்தது ‘ என மூளை கடிந்து கொள்ள மனமோ ‘ பாவம் பார்த்தால் சின்ன பெண்ணா இருக்கா. இந்நேரத்தில் இங்கே தனியா எப்படி விட்டுட்டு போறது. எதுக்கு அழறானும் தெரியல ‘ என யோசிக்க ” இங்க பாருமா உங்க வீடு எங்கன்னு சொல்லு நான் வேணா வீட்டுல விட்டுட்டு போறேன் ” எனக் கூற அதற்கும் அப்பெண் அமைதியாகவே இருக்க, சற்றே கோபம் கொண்டவன் ” சரிமா நீ இங்கேயே இரு. நான் போலீஸ் கூப்பிட்டு வரேன் ” என்றதும் பயந்தவள் ” இல்ல வேண்டாம் ” எனக் கூற ” சரி அப்போ நீ வீட்டுக்கு கிளம்புறியா ” எனக் கேட்க அவள் ‘ இல்லை ‘ என்பது போல் தலையசைத்தாள்.

” ஏன் ” எனக் கேட்டவன் அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும் ‘ இது சரிப்பட்டு வராது ‘ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு ” இங்க பாருமா இதுக்கு மேல இங்க உட்கார்ந்து இருந்தா உன்னோட சேர்த்து என்னையும் போலீஸ் கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்பாங்க அதனால நான் கிளம்புறேன். போலீஸ் வந்ததும் நீ பேசிக்க என்ன ” எனக் கூறிவிட்டு எழுந்து நடக்க முயல ” ஒரு நிமிடம் ” என அவளும் எழுந்திருக்க, அப்போது தான் அப்பெண்ணை முழுதாய் பார்க்கிறான்.

இருளிலும் மங்கியதாய் தெரிந்த பிரவுன் கலர் தாவணி அதற்கு சம்பந்தமே இல்லாதது போல் இளம் பச்சை நிறத்தில் ஜாக்கெட்டும் பாவாடையும் அணிந்திருந்த அவளின் காதில் பிளாஸ்டிக் தோடு கையில் கண்ணாடி வளையல்.

நில ஒளியில் தெரிந்த அவள் முகத்திலோ சொல்ல முடியாத சோகம். கண்களோ அழுது சிவந்து இருக்க முகமும் சற்று வீங்கி இருந்தது. சற்றே மெலிந்த உடல் வாகுடன் இருந்த அவளின் குரல் மென்மையாக இருந்தது.

‘ என்ன ‘ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்து நிற்க ” என்னை எங்க ஊருக்கு போற பஸ் ஸ்டாப்ல மட்டும் கொஞ்சம் கொண்டு விடுறீங்களா அண்ணா ப்ளீஸ்… ” என்ன சின்ன குழந்தை போல் கேட்டு நிற்கும் அவளை பார்க்க ஏனோ மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்க ” நீ அப்போ இந்த ஊர் இல்லையா. எந்த ஊர்ல இருந்து வந்திருக்க ” எனக் கேட்க ” நான் தேனி பக்கத்துல வீரபாண்டி ல இருந்து இங்க என்னோட தோழியை பார்க்க வந்தேன் ” எனக் கூறிய அவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ” உன்னோட தோழியை பார்த்திட்டியா இல்லையா. அட்ரஸ் மிஸ் பண்ணிட்டியா ” என கேட்க ” இல்ல அட்ரஸ் இங்கதான் பீச் பக்கத்துல தான். காலையில போய் பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. அவ நம்பருக்கு போன் பண்ணாலும் யாரும் எடுக்கல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. இப்ப சாயந்திரம் போய் பார்த்தேன் வீடு பூட்டி தான் இருக்கு. பக்கத்துல இருக்கவுங்களுக்கும் எதும் தெரியல ” என கூறிக்கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள். ” சரி நம்பர் சொல்லு ” என சொன்னவன் அவள் தன் சிறிய மணி பர்சில் இருந்து ஒரு சிறிய பேப்பர் ஒன்றை எடுப்பதை பார்த்தான்.

அவள் நீட்டி அந்த காகிதத்தை பார்த்தவன் மாலதி என பெயர் போட்டு கீழே எழுதி இருந்த நம்பருக்கு அழைத்தான். ரிங் போய் கொண்டே இருந்ததே தவிர யாரும் எடுக்கல.

” வீடு பூட்டி இருக்குனு தானே சொன்ன அவங்க இன்னும் வரல போல அதான் யாரும் போன் எடுக்கல‌. இது லேண்ட் லைன் நம்பர் உன்கிட்ட செல் நம்பர் எதுவும் இல்லையா? ” என வினவினான்.

” இல்லை. இந்த நம்பர் மட்டும் தான் அவ சென்னை வந்ததும் போன் பண்ணி சொன்னா. இப்ப ரெண்டு நாளைக்கு முன்ன தான் பேசினேன் நான் ஊருக்கு வரதா… அப்போ அவ தான் இந்த அட்ரஸ் கொடுத்து வர சொன்னா. ஆனா வந்து பார்த்தா வீடு பூட்டி இருக்கு ” என பாவம் போல் சொன்ன அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடக்க தொடங்கியவனின் பின்னால் அவளும் நடக்கத் தொடங்கினாள்.

தன் பின்னால் வந்தவளிடம் ” உனக்கு இங்க வேற யாரையும் தெரியுமா ” என கேட்டான்.

‘ தெரியாது ‘ என்பது போல் தலையசைத்தாள். ” ம்….. ” என்றவன் தனது காரின் அருகே வந்ததும் முன் பக்க கதவை திறந்து அவளை அமரச் சொன்னவன் காரை எடுத்தான்.

ஏறி அமர்ந்தவளுக்கோ அடுத்து என்ன செய்வது என புரியாமல் இருந்தது.

    No comments yet.