குயில்கள் கூவும் பூஞ்சோலை கிராமத்தில் அக்குயில்களின் குரல்களுக்கு போட்டியாக அக்கிராமத்தின் பொட்டல் காட்டின் நடுவே அமைந்துள்ள குளத்தங்கரையில், “குட்டச்சி…. குட்டச்சி …குட்டச்சி… குட்டச்சி… ” என்ற உற்சாக குரல்கள் வானை முட்டி தள்ளியது.
வானில், கதிரோன் அவன் மெது மெதுவாக தன் கதிர்களை வீசி சிறிது சிறிதாக உக்கிரமடைந்து கொண்டிருந்தான். அவனிற்கு போட்டியாக மண்ணில் பூஞ்சோலை கிராம கிரிக்கெட் க்ரவுண்டான குளத்தில் ,விநாயகம்பட்டி கிரிக்கெட் பவுலர்கள் வீசிய பந்தை சுழற்றி அடித்து மெது மெதுவாக தன் ஆட்டத்தை உக்கிரமாக்கி கொண்டிருந்தாள் நிலா.
விநாயகம்பட்டி பவுலர்கள் நிலாவிற்கு பந்து வீச அஞ்சி நிற்க… முகத்தில் மருந்திற்கு கூட புன்னகை இன்றி… தன்னை நோக்கி வீசப்பட்ட ஏளான வார்த்தைகள் நெஞ்சில் தணலேற…. முகம் இறுக… உடல் இறுக… ஜூவாலாமுகி யாய் பேட்டை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நிலா.
இத்தனை வருட அத்தனை ஏளான பேச்சுக்களும்… வசவு சொற்களும்… தன்னை நோக்கி பந்தாக வீசப்படுகிறது என்றெண்ணி தனது மொத்த பதலடியையும் க்ரவுண்டில் கொடுத்துக்கொண்டிருந்தாள் நிலா. ஒரு பெண்ணின் சக்தி அளப்பரியது என்பதை அங்கு உள்ள அத்தனை பேருக்கும் நிரூபித்துக்கொண்டிருந்தாள் நிலா.
நிலாவின் இவ் அவதாரத்தைக்கண்டு இளா திகைத்தாலும்… அவள், என்னவள் என்ற இறுமாப்புடன் கம்பீரமாக அமர்ந்து நிலாவை ரசித்துக்கொண்டிருந்தான்.
கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த அபிஷேக்கின் நண்பர்கள் அபியிடம், “என்னடா… உன் அக்கா இப்பிடி அடிக்கிறாங்க…. செமயா விளையாடுறாங்கல்ல…. உன் அக்காக்கு செம டேலண்ட் இருக்குடா…. “என கூற… நிலாவின் ஆட்டத்தை கண்டு மலைத்து நின்ற அபிக்கு அவ்வார்த்தைகள் வேப்பங்காயாய் கசந்தது.
இரு ஊரார் கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து நிற்க, திமிராக சதத்தை பூர்த்தி செய்து விட்டு வியர்வையில் குளித்த சூரியனாக ஜொலித்து நின்றாள் நிலா. அவளின் அக்கோலத்தை கண்ட இளஞ்சேரன், ” நீர் சிந்தும் சூரியனை முதன் முதலாக பார்க்கிறேன்….” என மனதிற்குள் வியந்து கொண்டான்.
நிலா தனது சதத்தை பூர்த்தி செய்ததும், “குட்டச்சி… “என்ற ரசிகர்களின் முழக்கம் விண்ணில் இடியாய் இறங்கியது. பூஞ்சோலை கிராம மக்கள், “இந்த குட்டை பொண்ணுக்குள்ள இவ்ளோ திறமையா? ” என வியந்து நின்றனர்.
தனது சதத்தை பூர்த்தி செய்து விட்டு ஓரக்கண்ணால் கூட இளஞ்சேரனை நோக்காமல், எப்பொழுதும் போல் தனது பேட்டில் முத்தமிட்டு விட்டு, வானை நோக்கி உயர்த்தி கதிரோனிடம் கண்சிமிட்டினாள். அவளின் அச்செய்கையில் புன்னகை புரிந்தான் இளஞ்சேரன். இருபது ஓவர் முடிவில் 128 ரன்கள் சேர்த்திருந்தாள் நிலா. மொத்தமாக பூஞ்சோலை கிராமம் 188 ரன்கள் சேர்த்து இருந்தது. விநாயகம்பட்டி 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றானது.
நிலாவின் ஆட்டத்தில் ஏற்பட்ட பயத்திலும்… பதட்டத்திலும் ….பூஞ்சோலை கிராம பவுலர்களின் திறமையினாலும், எதிரணி அடிக்க முடியாமல் திணற …விநாயகம்பட்டி டீமால் இருபது ஓவருக்கு 123 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. பூஞ்சோலை கிராமம் மாபெரும் வெற்றியை ஈட்டியது.
சிறந்த விளையாட்டு வீரராக நிலாவை தேர்வு செய்து இளஞ்சேரனின் கையால் 5000 பரிசு வழங்கப்பட்டது.
விழா முடிந்து ஒரு வித நிம்மதி உள்ளே பரவ… இசையை கூட பார்க்காமல் தனது கிட் பேக்கை தூக்கி கொண்டு சைக்கிளில் புறப்பட்டாள் நிலா. புறப்பட்ட சிறிது நேரத்தில், “அடியே… நிலா புள்ள…. சத்த நில்லுடி… ” என கிண்டலுடன் கூடிய உற்சாக குரல் கொடுத்துக்கொண்டு இசை தன் சைக்கிளில் நிலாவை வழிமறித்தாள்.
“ஒரே மேட்ச் ல மேடம் பெரிய ஆள் ஆகிட்டீங்க…. ” என நிலாவை கிண்டலடித்துக்கொண்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் இசை.
நிலாவும் தனது சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக்கொண்டே, “போடி… மனசு ஒரு மாதிரி இருந்துச்சு… அதான் நான் அமைதியா கிளம்பிட்டேன்… ” என்றாள்.
“என்னாச்சு பக்கி? இன்னக்கி ஆட்டம்… வெறித்தனம்… வெறித்தனம்… சும்மா… வேற லெவல் டி செல்லக்குட்டி… ” என நிலாவின் வெற்றியை தன் வெற்றியாக எண்ணி துள்ளிக்குதித்தாள் இசை.
அதற்கு நிலா, மௌனமாக வர… அவளின் மனநிலையை ஒருவாறு புரிந்து கொண்டாள். நிலா, தன் வீட்டாரை எண்ணி இறுகி நிற்கிறாள் என புரிந்து கொண்டு, அவளை மாற்றும் விதமாக… “ஹே… உனக்கு தெரியுமா? இன்னக்கி வுவமன் கிரிக்கெட் செலக்சன் கமிட்டில இருந்து ரெண்டு பேர் வந்து இருந்தாங்க…. இளா அண்ணா தான் கூட்டிட்டு வந்து இருந்தாங்க…. உன் ஆட்டத்த பாத்துட்டு பாராட்டி தள்ளிட்டாங்களாம்…. உனக்கு டிஸ்ட்டிக் டீம் ல ப்ளேஸ் கன்பார்ம் டி நிலா… ” என உற்சாகமாய் கூறினாள் இசை.
” ஓஓ… அப்பிடியா? “என்றதோடு நிலா தன் பேச்சை நிறுத்தி கொண்டாள்.
அதை பார்த்த இசை, “இவள என்னதான் பண்றது? “என நினைத்துக்கொண்டு இல்லாத தனது மூளையை கசக்கி பிழிந்து யோசித்துக்கொண்டிருக்கையில் சேதுவின் கடையில் வேலை பார்க்கும் கடைக்காரப்பையன், “நிலாக்கா…. ” என்றவாறு அவர்களிடம் ஓடி வந்தான்.
“அக்கா…. இன்னக்கி செமயா விளையாண்டீங்க… எனக்கும் எப்பிடி விளையாடுறது னு சொல்லி தர்றீங்களா? ” கடைக்காரப்பையன்.
“கண்டிப்பா ஒரு நாள் சொல்லித்தாரேன்… “என பாசமாக கூறி கொண்டு அவனின் தலையை தடவினாள் நிலா.
அப்பொழுது பைக் ஹாரன் சத்தம் கேட்டு மூவரும் ஒதுங்கி நிற்க… அந்த பைக் அவர்களிடத்தில் வந்து நின்றது.
பைக்கில் இருந்து இறங்கியவர்களை கண்டதும் கடைக்காரப்பையன் நிலாவின் பின்னே ஒளிந்து கொள்ள… “டேய்… ஒழுங்கா முன்னாடி வாடா… ” என அதட்டியவாறு பைக்கில் இருந்து சேது இறங்கினான்.
“இப்ப ஏன்டா அவன மிரட்டுற? ” எனக்கேட்டவாறு பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் இளா.
இருவரையும் அருகில் கண்டதும் மீண்டும் நன்றாக நிலாவின் பின்னே ஒளிந்து கொண்டான் கடைக்காரப்பையன்.
நிலாவிற்கும் இசைக்கும் அந்த பையனின் நடத்தை வித்தியாசமாக தெரிய… “டேய்… சேது… இவன் உன் கடையில தான வேலை பாக்குறான்? இவன் ஏன்டா உன்னைய கண்டதும் ஒளியுறான்? சின்ன புள்ளய என்னடா பயமுறுத்தி வச்சு இருக்க? அவன் திங்கிற மிட்டாய புடுங்கி தின்னுட்டியாடா? “என இசை, சேதுவை அதட்டினாள்.
“போடிங்க்….. இருந்தாலும் என் மானத்த இப்பிடி நடுரோட்டுல வச்சு ஏலம் விட கூடாது…. அவன் ஏன் ஓடி ஒளியுறான்னு எனக்கே தெரியாது… ரெண்டு நாளா எங்க ரெண்டு பேரையும் கண்டாலே தெறிச்சு ஓடுறான்…. நீயே அவன் கிட்ட என்ன னு கேளுடி… ” சேது.
“என்னது??? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா? உன்னைய பாத்து ஓடி ஒளிஞ்சா ஒரு லாஜிக் இருக்கு… எதுக்கு இளா அண்ணன பார்த்து ஓடனும்? ” இசை.
“அதை …அவன் கிட்டயே கேளுடி வெண்ண… “சேது.
சேதுவை முறைத்துக்கொண்டே… நிலாவின் பின் ஒளிந்து இருந்த அந்த பையனை முன்னே இழுத்து நிலாவிற்கும் தனக்கும் நடுவே வைத்துக்கொண்டு ,”ஏன்டா இவங்க ரெண்டு பேரையும் பார்த்து பயந்து ஓடுற? என் கிட்ட சொல்லு நான் கேக்குறேன்… ” என்றாள் இசை.
மீண்டும் சேதுவையும் இளாவையும் பார்த்து அந்த பையன் நிலாவின் பின் ஒளிய முயல…. அதைக்கண்ட இளாவும் சேதுவும் புரியாத பார்வை பார்த்துக்கொண்டனர்.
“நீ என்ன னு சொன்னா தான எங்களுக்கு தெரியும்? என்ன னு சொல்லு… ” என நிலா அந்த கடைக்காரப்பையனிடம் கேட்டாள்.
சிறிது தயங்கியவன், “ரெண்டு பேரும் உங்க காத குடுங்க… “என நிலாவையும் இசையையும் அருகில் அழைத்து இருவர் காதிலும் ரகசியம் பேச… அதை கேட்ட இருவருக்கும் சிரிப்பு நதியாக ஓடி வந்தது.
கடைக்காரப்பையன் கூறியதை கேட்ட நிலா, தங்கு தடையின்றி நீண்ட வருடங்களுக்கு பிறகு, இளாவையும் சேதுவையும் பார்த்து வாய் விட்டு நகைக்க…. அதை மற்ற மூவரும் அன்புடன் பார்த்தனர்.
சேது முதலில் சுதாரித்துக்கொண்டு, “அப்பிடி அவன் என்ன சொல்லிட்டான் னு இப்பிடி ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க? “என வினவினான்.
பதில் கூற இசை வாயை திறக்க… அவளை முந்திக்கொண்டு, “அக்கா… இவங்க கூட சேராதீங்க….இவங்க ரெண்டு பேரும் வேற மாதிரி…. அன்னக்கி சேது அண்ணா, இந்த அண்ணா மேல வாய வச்சு படுத்து ஒரு மாதிரி கிடந்தாங்க…. இவங்க கிட்ட பேசாதீங்க க்கா… ” என கூறி விட்டு ஓடி மறைந்து விட்டான்.
“எதேய்…. “என இளாவும் சேதுவும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க… “டேய்… நீங்க ரெண்டு பேரும் அவனுங்களா? சொல்லவே இல்ல…. “என இசை சிரித்தாள்.
“கிண்டல் பண்ணாத இசை, ஒரு நல்ல நாளா பாத்து ரெண்டு பேருக்கும் கல்லியாணம் பண்ணி வச்சுறலாம்… என்ன சொல்லுற இசை? “என நிலா கண்களில் நீர் வர சிரித்தாள்.
சிரிக்கும் நிலாவின் இதழ்களை கண்ட இளா, சிரிக்கும் அந்த செவ்விதழ்களில் தன் இதழ்களை ஒற்றி எடுக்கும் தாபம் ஊற்றெடுக்க…. வற்புறுத்தி தன் உள்ளத்தை அடக்கி வைத்தான்.
இளா வின் நிலமையை உணர்ந்த சேது, “நம்ம மானம் இங்க காத்துல பறக்குது… உனக்கு ரொமான்ஸ் கேக்குதாடா? ” என்றான்.
“நான் என்ன மச்சான் பண்ணேன்… நீதானடா அன்னக்கி எனக்கு உம்மா குடுத்த? அன்னக்கி பண்ணுன ரொமான்ஸ் இனிச்சது….இப்ப கசக்குதோ? “இளா.
“இதுவேறயா? ரொம்ப முத்தி போச்சு நிலா….சீக்கிரமே ரெண்டு பேருக்கும் கல்லியாணம் பண்ணி வைக்கிறது ஊருக்கு நல்லது….” என்றாள் இசை சிரித்துக்கொண்டே.
“அடியேய்……”என சேது இசையை அடிக்க துரத்த… “நிலா, நாம நாளைக்கி இந்த கல்லியாணத்த பத்தி பேசுவோம்…..கல்லியாணத்துக்கு எனக்கு புது ட்ரெஸ் வந்தாகனும் சொல்லிட்டேன்….”என கத்தியபடி தன் சைக்கிளில் பறந்தாள் இசை.
“அப்பிடித்தான்டி….ஊருக்கே தம்பட்டம் அடிச்சு சொல்லிட்டு போ….எனக்குனு வந்து வாச்சு இருக்கியே….” என தலையில் அடித்துக் கொண்டு இசையை பிடிக்க முடியாமல் இளாவிடம் திரும்பி வந்தான் சேது.
சிரித்துக்கொண்டிருக்கும் நிலாவை பார்வையாலே விழுங்கி கொண்டிருக்கும் இளாவை கண்டவன், அவர்களுக்கு தனிமை தர வேண்டி…”மாப்ள….நான் போய் அந்த பையன் கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன்….இல்லனா இது பெரிய மானக்கேடா போயிரும்….பக்கத்துல தான் அவன் வீடு… நான் நடந்தே போறேன் மாப்ள….பை டா… “என கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டான் சேது.
சேது சென்றதும்…..தனிமையை உணர்ந்த நிலா, இளாவை நோக்கினாள். அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்டவள்…எதுவும் பேசாமல் வெட்க சிவப்புடன் மெதுவாக சைக்கிளை தள்ளி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
தன்னவளின் முகத்தில் தனக்கான வெட்க சிவப்பை கண்ட இளாவிற்கு பெரிதாக சாதித்த உணர்வு தோன்ற அவ்விடத்திலேயே துள்ளி குதிக்க தோன்றியது. தன் தலை முடியை அழுந்த கோதி, அவ்வுணர்வை அடக்கி கொண்டு மகிழ்ச்சி நிறைந்த புன்னகையுடன் அமைதியாக பைக்கை தள்ளி கொண்டு நிலாவிற்கு இணையாக நடக்க ஆரம்பித்தான் இளா.
இருவருமே எதுவும் பேச முயற்சிக்கவில்லை. இருவரிடையே நிகழும் இந்த மௌனமும் கூட இன்பமாக இருந்தது இருவருக்கும். பேசாத மௌனம் கூட பேரழகே என்பதை உணர்ந்து ரசித்தனர்.
நிலாவின் இல்லம் வரை துணையாக வந்தவன்… நிலா ,தன் இல்லத்தின் முன் சைக்கிளை நிறுத்தவும் தன் பார்வையை எதிர்த்த வீட்டில் மேய விட்டான் இளா.
வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இளாவை திரும்பி ஒருமுறை நிலா பார்க்க… அப்பார்வைக்காக காத்திருந்தவன் போல் தன் மோகன புன்னகையை தன்னவளை நோக்கி வீசினான். நிலா அமைதியாக இளாவையும் எதிர்த்த வீட்டையும் ஒரு பார்வை பார்த்தவள் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
தன்னவள் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தவன், அடுத்த நாளிற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டு நிமிர்வுடன் பைக்கில் ஏறி புறப்பட்டான் இளா.
மறுநாள் விடியலில் கண்ணாடி பாட்டில்கள் உடையும் சத்தமே நிலாவை எழுப்பியது. நிறைய கண்ணாடி பாட்டில்கள் உடையும் சத்தமும்.. கோபமான கூக்குரலும் காதில் மோத… தன் அன்பான டார்லிங்கை கூட காணாமல் வெளியே சென்றாள் நிலா.
வீட்டின் வெளியே, அன்றைய நாளின் தொடக்கத்தில் இளாவின் முகத்திலேயே கண் விழித்தாள் நிலா .
எதிர்த்த வீட்டுக்காரன் தாம் தூம் என்று குதித்து கொண்டிருக்க….இளா தன் பைக்கில் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு தன்னுடைய ஆட்களை ஏவி கொண்டிருந்தான் ஆளுமையுடன். அவனின் அந்த ஆளுமையில் தொலைந்த நிலா, தன்னவன் தன்னை நோக்கி கண்ணடித்ததும் சுய உணர்விற்கு வந்தாள்.
எதிர்த்த வீட்டில் உள்ள அத்தனை சாராய பாட்டில்களையும் இளாவின் ஆட்கள் அப்புறபடுத்தி கொண்டிருக்க…எதிர்த்த வீட்டுக்காரன் கோபமாக இளாவிடம் வந்து, “ஏய்….யாருய்யா நீ? வீடு புகுந்து ரௌடி தனம் பண்றியா? போலீஸ கூப்பிடவா? ” என்றான்.
“வீட்டுல சாராயம் விக்கிற உனக்குலாம் அறிவில்ல? “என கூறி கொண்டே அந்த எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இழுத்து ஒரு அறை விட்டான் இளா.
இளா விட்ட அறையில் காது உய்ய் என்றிருக்க…”என் வீடு….நான் என்ன வேணுனா பண்ணுவேன்….அத கேக்க நீ யாருடா? “என ஆத்திரமாய் வினவினான் அவன்.
அதற்கு இளா, அமைதியாக தனது கூலரை எடுத்து அணிந்து கொண்டு, “அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்… இளஞ்சேரன் IPS…”என்றான்.
(சேரநிலா மிளிர்வாள்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.