தன் கையில் சூடு வைத்தும் சிறிதும் அசராமல் மறுகையிலும் சூடு வைக்க சொல்லி நிமிர்வுடன் கேட்டாள் நிலா.
அவளின் அவ்வுறுதியை கண்ட குடும்பத்தினர் சிலையென மலைத்து நின்றிருந்தனர். அவர்களை ஒரு பார்வை பார்த்தவள், மெதுவாக நிமிர்ந்த நடையுடன் தனது அறைக்குள் நுழைந்தாள் நிலா.
நிலா உள்ளே சென்றதும் அபி தன் தாயிடம், “ம்மா.. இவ பேரு இன்பநிலா தான? இவ என்ன சேரநிலா னு சொல்லிட்டு போறா… ஒரு வேளை பேர மாத்திட்டாளோ குட்டச்சி? ” என வினவினான்.
“அட ஆமா பேராண்டி… சேரநிலா னு தான சொன்னா… “அலமேலு.
“அவளுக்கென்ன… பேர மாத்தி இருந்தாலும் மாத்தி இருப்பா… சரியான ராங்கிகாரி…. ” என கழுத்தை நொடித்துக்கொண்டு சமையலறையினுள் தன் வேலையை கவனிக்க சென்றாள் வள்ளி.
“பேர மாத்தி என்ன பண்ண… இவ தலைகீழா நடந்தாலும் குட்டச்சி குட்டச்சி தான்… ” என சிலுப்பி கொண்டார் அலமேலு.
இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த கதிர்வேலுவின் மனதில் நிலாவை பற்றிய எண்ணம் சூறாவளியாய் சுழன்று அடிக்க தொடங்கியது.
இவை அனைத்தையும் காதில் வாங்கிய நிலா,” நான் சேரநிலா னுனா சொன்னேன்…. அய்யோ… இவன் இம்சை தாங்க முடியல… ” என நினைத்தவாறு தன் அறைக்குள் நுழைந்தாள் நிலா.
அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு, “ஸ்ஸ் ஆஆ… எரியுதே… “என கூறியவாறு ஆபத்திற்கு உதவும் என இசை குடுத்த மருந்தை எடுத்து தடவினாள் நிலா.
வலியின் அசதியில் சிறிது நேரத்தில் நிலா நன்றாக உறங்கி விட, தூக்கத்தில் யாரோ தனது காயத்தின் மீது மயிலறகால் வருடுவது போல் உணர… “சேரா… “எனக் கூறியபடி இருசொட்டு கண்ணீரை சிந்தினாள் நிலா.
“அழாம தூங்குடி….”என ஒரு கரம் தன் கண்ணீரை துடைக்க, பதறி எழுந்தாள் நிலா. விழியில் இரு சொட்டு கண்ணீர் சிந்தி இருக்க, தன் காயத்தின் மீது ஜன்னல் வழியே பறந்து வந்த ஒரு இலை காற்றில் வருடி கொண்டிருந்தது.
“அய்யோ….நிலா, உனக்கு என்ன தான்டி ஆச்சு… அவன பாத்து ரெண்டு நாள் தான்டி ஆகி இருக்கு…..அதுக்குள்ள அவன தூக்கத்துல கூட நினைச்சுட்டு இருக்க… நேத்து அவ்ளோ கோபத்துலயும் சேரநிலா னு சொல்லி இருக்க…. இதுல அவன பாத்தாலே இந்த ஹார்ட்டுக்கு ஏதோ ஆகிருது…. சே…நாளைக்கி முக்கியமான மேட்ச் டி சாத்தானே… அதுதான் உன் மண்டைக்குள்ள இருக்கனும்… வேற எதுவும்… எவனும்… உன் மண்டைக்குள்ள மத்தளம் போட கூடாது…. பேசாம தூங்கு டி ….”என நேற்றைய இரவை போல் புலம்பி கொண்டே உறங்கினாள்.
மறுநாள் விடியலில் வழக்கம் போல் காற்று வந்து திருப்பள்ளியெழுச்சி பாடி நிலாவை உசுப்ப…. அல்லி மலரொன்று மொட்டவிழ்வது போல் அழகான தன் மலர்விழியை மலர்ந்தருளினாள் நிலா.
விடியலின் நாயகனான கதிரோனை கண்டு புன்னகை புரிந்தவள், “ஓ மை ஸ்வீட் டார்லிங்… லவ் யூ… உம்ம்ம்ம்ம்மா…. இன்னக்கி பெரிய மேட்ச் டார்லிங்… என்னோட திறமைய நான் சரியா காட்டனும்… எனக்கென்னமோ இன்னக்கி பெருசா நடக்க போற மாதிரி தோனுது… எது நடந்தாலும் உன்னைய மாதிரி தடுமாறாம… தடம் மாறாம… இருக்கனும்…குட் மார்னிங்.. ஹேவ் எ க்ரேட் டே டார்லிங்…”என கதிரோனுடனான தன் உரையாடலை முடித்து விட்டு க்ரவுண்டிற்கு விரைவாக கிளம்பினாள் நிலா.
நிலா க்ரவுண்டிற்கு புறப்படுவதை கண்ட அலமேலு, “ஏன்டி… நேத்து சூடு வச்சும் உனக்கு புத்தி வரல ல… ” என்றார்.
“இவளுக்கு அதெல்லாம் எங்க உறைக்க போகுது…கால உடைச்சு மூலையில போட்டா தான் இவ அடங்குவா… ” வள்ளி.
“அவ போகட்டும்…விடுங்க….” கதிர்வேல்
“என்னங்க சொல்லுறீங்க? அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் ங்க….இவள எப்படி ங்க வெளில அனுப்புறது? இந்த தரித்திரத்த வீட்ட விட்டு அனுப்புற வரைக்கும் நாம இவள பாதுகாத்து ஆகனுமே….” வள்ளி.
“விடு வள்ளி…..அவ போகட்டும்….அடுத்த வாரம் தான நிச்சயதார்த்தம்… அது வரைக்கும் அவ இஷ்டத்துக்கு இருக்கட்டும்… நேத்து சூடு வச்சவ அசையாம நின்னப்ப அவ வைராக்கியம் உனக்கு புரியலயா? நிலா… நீ கிளம்பு… நல்லா விளையாடு…” கதிர்வேல்.
நேற்று அசையாமல் நின்ற நிலாவின் தோற்றமும் …கண்ணீர் சிந்தாத அவளின் வைராக்கியமும் …அவள் கூறிய வார்த்தைகளும் கதிர்வேலின் மனதை அசைத்து பார்க்க… பலவருடம் கழித்து நிலா என அழைத்து அவளிடம் பேசி இருந்தார் நிலாவின் தந்தை.
பலவருடம் கழித்து தன்னிடம், தனக்கு ஆதரவாக பேசிய தந்தையை நோக்கி ஒரு கூரிய பார்வையை வீசி விட்டு அமைதியாக க்ரவுண்டிற்கு புறப்பட்டாள் நிலா.
சிந்தனை முழுதும் தன் தந்தை தன்னிடம் பேசியதிலே நிலைத்து இருக்க, தன் கை காயத்தை மறந்து இருந்தாள் நிலா.
வழமையின்றி ஏதோ ஒரு யோசனையில் க்ரவுண்டிற்கு சைக்கிளில் வந்து இறங்கிய நிலாவை கூர்ந்து நோக்கிய இளாவின் விழிகளில் அவளின் தீக்காயம் சிக்கியது.
“ஹே… நிலா…என்ன ஆச்சு? என்ன காயம் இது? ” என பதறினான் இளா.
இளாவின் குரலை கேட்டவள், தன் நினைவலையில் இருந்து வெளிவந்து ,”உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்னையவே சுத்தி வந்துட்டு இருக்கீங்க? “என இளாவிடம் சீறினாள் நிலா.
“அடி மக்கு…புருஷன், பொண்டாட்டிய தான்டி சுத்தி வருவான்…..” என கலகலவென நகைத்தான் இளா.
அவன் கூறிய வார்த்தைகள் இதயத்தில் சில்லென்று பரவினாலும், வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனை முறைத்து தள்ளினாள் நிலா.
நிலா முறைப்பதை சிரிப்புடன் பார்த்தவன், “நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்… நீ முறைக்கிறது எனக்கு ப்ளையிங் கிஸ் குடுக்குற மாதிரி தான் இருக்கு னு… சரி… அத விடு…. கையில என்ன தீக்காயம் மாதிரி இருக்கு… என்ன ஆச்சு? இதுக்கு முதல்ல பதில் சொல்லு… “என்றான் இளா.
“ப்ச்… அது ஒன்னும் இல்லை… ஒரு வாரத்துல நிச்சயதார்த்தத்த வச்சுட்டு விளையாட வந்தேன் னு நேத்து பாட்டி சூடு வச்சுட்டாங்க… வேற ஒன்னும் இல்ல… ” என நிலா சாதாரணமாக கூற… அதை கேட்ட இளாவின் நெஞ்சில் ரணம் தீயாய் பரவியது.
நிலாவின் காயத்தை கண்டு உள்ளே மூண்ட கோபத்தீயையும் கண்ணீர்த்தீயையும் முகத்தில் காட்டாமல், “இத காரணமா வச்சுட்டு மேட்ச்ச சொதப்ப போறடி… ” என நிலாவை சீண்டினான் இளா.
இளாவை உற்று தன் கூரிய கண்களால் ஒரு வெட்டு வெட்டியபடி, “அவ்ளோதான் என் மேல உள்ள நம்பிக்கையா? ” என்றாள் நிலா.
“ம்கூம்… வரலையே… வேணும்னா.. இந்த மேட்ச் ல 100 அடி… அப்புறம் பார்க்கலாம்… ” என நிலாவை உசுப்பி விட்டான் இளா.
” என்ன… நான் அடிக்க மாட்டேன் னு நம்பிக்கையா? “என தன் புருவத்தை உயர்த்தினாள் நிலா.
“இருக்கலாம்… “என உதட்டை பிதுக்கினான் இளா.
“ஓகே…. இந்த நிலாவ இன்னக்கி வேற நிலாவா பாப்பிங்க… “என கூறி விட்டு தன் கிட் பேக்கை தூக்கி கொண்டு தனது டீமிடம் நகர்ந்தாள் நிலா.
“எப்படி… சேரநிலா ஆகவா?” என குறுஞ்சிரிப்புடன் இளா கத்தினான்.
நேற்று தன்னை மீறி சேரநிலா என வெளிவந்ததை நினைத்துக்கொண்டு இளாவை பார்த்தவளினால் தன் இதழ் வளைவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதை கண்டு கொண்ட இளா, “டவுட் தான்… நீ சதம் போடுறது…. “என நிலாவை மீண்டும் சீண்டினான்.
அதை கேட்ட நிலா, அவனை நோக்கி ஒரு கோப பார்வையை வீசி விட்டு தன் டீமிடம் சென்று இணைந்தாள்.
அப்பொழுது தான் க்ரவுண்டின் ஒரு ஓரத்தில் மேடை போடபட்டு அதில் ஊர் முக்கியஸ்தர்கள் அமர்ந்து இருப்பதை கவனித்த நிலா தனது டீம் கேப்டனிடம் ,” எப்போதும் நார்மலா தான விளையாடுவோம்… இன்னக்கி என்ன மேடை லாம் போட்டு இருக்காங்க… ” என வினவினாள் .
“இன்னக்கி இந்த மேட்ச்ச பார்க்க யாரோ பெரிய ஆளு லாம் வர்றாங்கலாம்… அதான்… அத்தோட ப்ரைஸ் அமௌண்ட் 10001…இதுல பெஸ்ட்டா விளையாடுற ப்ளேயருக்கு 5000 …செம ல …” என்றான் பூஞ்சோலை கிராம கிரிக்கெட் டீமின் கேப்டன்.
“ஓஓ… “என இழுத்தபடி தனியே சென்று அமர்ந்தாள் நிலா.
அப்பொழுது, இசை எங்கிருந்தோ ஓடி வந்து, “மச்சி… இளா அண்ணா தான் இந்த மேட்ச் க்கு சீப் கெஸ்ட்டாம்… இங்க பாரு… அண்ணா எனக்கு எவ்ளோ ஸ்நாக்ஸ் வாங்கி குடுத்து இருக்காங்க னு… ” என நிலாவை கட்டியணைத்துவிட்டு இளா வாங்கி குடுத்த ஸ்நாக்ஸ் அடங்கிய ஒரு குட்டி மூட்டையை காட்டினாள்.
“ஓஓ… சீப் கெஸ்ட் அவருதானா? ” முனுமுனுத்துக்கொண்டாள் நிலா.
அப்பொழுது சேது வந்து, “ஹே வாடி நீ… நிலா விளையாட்டட்டும்…நாம ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே பாப்போம்…ஆல் தி பெஸ்ட் நிலாமா… ” என இசையை க்ரவுண்டிற்கு வெளியே தள்ளிக்கொண்டு சென்றான்.
அப்பொழுது பூஞ்சோலை கிராம டீம் கேப்டனையும் விநாயகம்பட்டி கிராம டீம் கேப்டனையும் டாஸ் போட அழைக்க….நடுவர்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. விநாயகம்பட்டி டீம் டாஸ் வென்று ஃபீல்டிங் எடுக்க… முதலில் பூஞ்சோலை டீம் பேட்டிங் செய்ய நேர்ந்தது.
மூன்றாவதாக களமிறங்க நிலா தயாராகி கொண்டு மேடையை ஒரு பார்வை பார்க்க ….தூரத்தில் இருந்தாலும் அங்கு இளஞ்சேரன் பக்கத்தில் அமர்ந்து இருப்பவரிடம் பேசி கொண்டே நிலாவை பார்வையால் தீண்டி கொண்டிருந்தான்.
அவனின் அந்த பார்வை பாவையவளிற்கு கோடி பலம் தர…தீக்காயம் எல்லாம் தித்திப்பாய் இருந்தது.
வழக்கமான 10 ஓவர் இல்லாமல் 20 ஓவர் கிரிக்கெட்டாக மாற்றப்பட்டிருக்க… இரண்டாவது ஓவரிலேயே பூஞ்சோலை டீம் ஒரு விக்கெட்டை இழக்க….அடுத்ததாக நிலா களமிறங்கினாள்.
நிலா களத்திற்குள் வந்ததும் பூஞ்சோலை கிராம கிரிக்கெட் ரசிகர்கள், “குட்டச்சி….குட்டச்சி….குட்டச்சி….” என கோஷமிட இசை மட்டும், “கமான் நிலா…”என தனியாக கத்திக்கொண்டிருந்தாள் .அவளருகில் சேது அமைதியாக இளா ,இசைக்கு வாங்கி குடுத்த ஸ்நாக்ஸை வாயில் இட்டு அரைத்துக்கொண்டிருந்தான்.
“யோவ்… மேட்ச்ச கவனிக்காம என்னடா அரைச்சுட்டு இருக்க….குடுடா இங்க…” என சேதுவிடம் இருந்து ஸ்நாக்ஸை பறித்துக்கொண்டாள் இசை.
“ஸ்நாக்ஸ் போச்சே…..” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மேட்ச்சை கவனிக்க ஆரம்பித்தான்.
க்ரவுண்டில் போடபட்ட முதல் பந்தை எதிர்கொண்ட நிலா சற்று தடுமாறினாள்.
அதை கண்ட இளா மேடையில் அமர்ந்தபடி நிலாவை நோக்கி உதட்டை பிதுக்கி கொண்டு தன் கை கட்டை விரலை கீழ்நோக்கி காமித்தான்.
நிலா அதை பார்த்து விட்டு க்ளவுஸை கழட்டி மீண்டும் மாட்டிக்கொண்டு அடுத்த பந்தை நேராக மேடையில் இருந்த இளாவை நோக்கி சிக்ஸாக அடித்தாள்.
தனது மூக்கை பதம் பார்க்க வந்த பந்தை கண்ணிமைக்கும் நொடியில் ஒற்றை கையில் அழகாக கேட்ச் பிடித்து நிலாவை பார்த்து, “பரவாயில்லையே…” என பார்வையாலே மொழிந்தான் இளா.
அனைவரும் சற்று ஸ்தம்பித்து இருக்க… இளா அந்த பந்தை மீண்டும் நிலாவின் முகத்தை நோக்கி வீசினான். தன்னை நோக்கி பறந்து வந்த பந்தை ஒரு கையால் பேட்டை வைத்துக்கொண்டு மறுகையால் அசால்ட்டாக பிடித்து இளாவை பார்த்து புருவத்தை உயர்த்தினாள் நிலா.
“அடேய்… இது கிரிக்கெட் மேட்ச் டா… நீங்க ரெண்டு பேரும் மட்டும் என்னடா தனியா த்ரோ பால் விளையாடிட்டு இருக்கீங்க…. “தலையில் கை வைத்து புலம்பி தள்ளினான் சேது.
“இவனுக ரொமான்ஸ் அன்கண்ட்ரோலா ல போய்ட்டு இருக்கு….டேய் சேது…. நாம எத்தனை வருஷமா லவ் பண்றோம்… ஒரு நாளாச்சும் இப்பிடி என் கிட்ட ரொமான்ஸ் பண்ணி இருக்கியா? என் அண்ணன பாரு… ரெண்டு ஊருக்கு முன்னாடி ரொமான்ஸ்ஸ எப்பிடி போட்டு தாக்குறாரு னு…நீயும் தான் இருக்கியே…..” என இசை சேதுவிடம் சிடுசிடுத்தாள்.
“ஆரம்பிச்சுட்டாய்யா… இனி ரேடியோவ ஆரம்பிச்சுருவாளே…. ” என நினைத்துக்கொண்டு… ” ஹே… அரசி… அங்க பாரு… நிலா அடுத்து பவுண்ட்ரி அடிச்சுட்டா… ” என இசையின் கவனத்தை நிலாவின் பக்கம் திருப்பினான் சேது.
இளா விடுத்த சவாலும் வீட்டில் உள்ளவர்களின் இளக்கார பேச்சும் ஒன்று சேர்ந்து நிலாவின் நெஞ்சில் வைராக்கிய புயலை உருவாக்க…. நிலா அப்புயலை தன் பேட்டிற்கு கொண்டு வந்து பவுலர்களை பந்தாடினாள்.
எந்த பந்து எப்பிடி வீசினாலும் அது நிலாவின் பேட்டில் பட்டு தெறித்து க்ரவுண்டிற்கு வெளியே பறந்தோடியது….
அவளின் அவ்வாட்டத்தை கண்ட இளாவும் சற்று திகைத்து தான் போனான். ஒரு ஓரத்தில் இகழ்ச்சியான புன்னகையுடன் மேட்சை கவனித்து கொண்டிருந்த நிலாவின் தம்பி அபியும் தன் சகோதரியின் ஆட்டத்தை கண்டு மலைத்து அமர்ந்து இருந்தான்.
தனக்கு இடப்பட்ட சூட்டின் வலியை பந்தில் காட்டினாள் நிலா. தன் வீட்டில் தன்னை பேசப்படுகின்ற அனைத்து ஏளான பேச்சுக்களுக்கும் பதிலளிப்பது போல் கண்ணில் வைராக்கிய வெறி மின்ன சூறாவளியாய் சுழன்றடித்தாள் நிலா…
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.