நிலா உறங்கியதும் இளஞ்சேரன் மெதுவாக உள்ளே வந்து அவளின் கை கால்களை அமுக்கி விட்டுக்கொண்டிருந்தான். வலிக்கு அருமருந்தாக தூக்கத்தில் ஆழ்ந்து இருந்த நிலா உணர… தூக்கத்திலேயே புன்னைகைத்து, “தேங்க்யூ ” என உதட்டசைத்தாள்.
நிலாவின் புன்னகையை கண்டதும் இளஞ்சேரனின் மனது துள்ளி குதிக்க, தூங்கி கொண்டிருக்கும் நிலாவிடம் காதல் வசனம் பேச ஆரம்பித்தான்.
“அச்சோ… என் வெல்லக்கட்டி… சிரிக்கிறியேடி… என் பொண்டாட்டி ஸோ க்யூட்…. ” என செல்லம் கொஞ்சினான் இளா.
இளஞ்சேரன் நிலாவை கொஞ்சி கொண்டிருப்பதை இரு விழிகள் குரோதத்துடன் கவனித்து கொண்டிருந்தது.
இளஞ்சேரன் மேலும் நிலாவை கொஞ்ச….அந்த குரோத விழிகளுக்கு சொந்தகார உருவம் மெதுவாக இளஞ்சேரனின் பின்னே வந்து அவனை கட்டையால் பின்மண்டையில் அடிக்க ஓங்க…. “சேரா…… “என அலறி கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் நிலா.
உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க நிலாவின் இதயம் தாறுமாறாக எகிறிகொண்டிருந்தது.
“சே…. எல்லாம் கனவா… நிலா…. அவன் ரொம்ப டேஞ்சரா இருக்கான்டி…. அவன் கிட்ட நீ சிக்கிற போற…. கேர்ஃபுல் நிலா…. “என தனக்குத்தானே ஆறுதல் கூறி கொண்டாள் நிலா.
எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு ஜன்னலில் ஒரு முறை எட்டி பார்த்தவள் ,யாரும் இல்லை என உறுதிபடுத்திக்கொண்டு நிம்மதியாக படுத்தாள் நிலா.
“சே…. என்னமா வந்து பயமுறுத்திட்டான்…. இந்த கொஞ்சு கொஞ்சுறான் நம்மள…. அவனுக்கு என்ன ஆனா எனக்கு என்ன? நான் ஏன் பதறுறேன்…. இதுல சேரா னு செல்ல பேரு வேற சொல்லுறேன்… அவன் இன்னக்கி தான் வந்தான்… அதுக்குள்ளயும் என் பெட்ரூம் வரைக்கும் வந்துட்டான்…. அடியேய் நிலா… அவன் உன் கனவுல தான் வந்தான்…. அய்யையோ எனக்கு என்னமோ ஆச்சு…. நிலா… கெத்த விட்டுறாத… நிலானா கெத்து…. அய்யோ… நடுராத்திரில என்னைய இப்பிடி புலம்ப வச்சுட்டானே….. டேய் சேரா… செத்தடா நீ… “என தனியே புலம்பி கொண்டே நித்ராதேவியின் பிடியில் சிக்கினாள் நிலா.
ஜன்னல் வழியே வந்த அதிகாலை நேர காற்று நிலாவின் அறைக்குள் நுழைந்து மெதுவாக அவளின் கன்னத்தை உரச…அதில் சிறிது உதட்டை சுழித்துக்கொண்டு அசைந்து படுத்தாள் நிலா. என்னவளின் கன்னத்தை தீண்டாதே என நிலாவின் கார்குழல் காற்றுக்கு தடை விதிக்க….அதில் சற்று கோபமான காற்று, பலமாக நிலாவின் கன்னத்தை தீண்டி… அந்த திமிரான கார்குழல் கற்றையையும் நிலாவின் கன்னத்தில் இழுத்து விட்டது. நிலாவின் கன்னத்தில் விழுந்த கார்குழல் கற்றை , அவளின் கன்னத்தின் மென்மையில் மயங்கி இன்னும் சற்று வசதியாக நிலாவின் கன்னத்தின் மென்மையை உணர்ந்து ரசித்தது. காற்றும், தனது கார்குழல் கற்றையும் செய்த சேட்டையில் மெதுவாக துயில் கலைந்தாள் நிலா.
ஜன்னல் வழியே, மெல்லிய ஒளியை வீசியபடி எட்டி பார்த்த கதிரோனுக்கு விரிந்த புன்னகையுடன், “குட் மார்னிங் டார்லிங்…. இன்னக்கி நான் எடுக்குற முயற்சி வெற்றி அடையனும் டார்லிங்… என்னைய ஆசிர்வாதம் பண்ணுங்க… “என்று கூறி விட்டு தனது வேலைகளை கவனிக்க சென்றாள் நிலா. இன்று வரை நிலாவின் புன்னகை கதிரோன் மட்டுமே அறிந்த ரகசியம்.
அடுத்த நாள் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி க்கு பயிற்சி எடுக்க தனது கிட் பேக்கை எடுத்துக்கொண்டு க்ரவுண்டிற்கு கிளம்பினாள் நிலா.
நிலா புறப்படுவதை கண்ட அலமேலு, “தரித்திரம் வீட்ட விட்டு கிளம்பிருச்சு இனி வெளில வா பேராண்டி… “என அபியின் அறையை நோக்கி குரல் குடுத்தார்.
“ஒழுங்கா அடங்கி வீட்ல இருக்காம… திமிரெடுத்து ஆட கிளம்புது… இதெல்லாம் எங்க உருப்படபோகுது…. அடியே… குட்டச்சி… அடுத்த வாரம் உனக்கு நிச்சயதார்த்தம்…. மனசுல வச்சுட்டு கல்லியாணப்பொண்ணா அடங்கி வீட்ல இரு….உன்னைய வீடு கடத்துனா தான் இந்த வீடு உருப்படும்…. ” என சமையலறையில் இருந்து வள்ளி குரல் குடுத்தாள்.
அனைத்தும் காதில் விழுந்தும் எவ்வித ரியாக்ஸனும் குடுக்காமல் கிட் பேக்கை தனது சைக்கிளில் வைத்து கிரவுண்டை நோக்கி பயணித்தாள் நிலா.
க்ரவுண்டில் நிலாவிற்காக முகத்தை மறைத்தப்படி இளஞ்சேரனும் சேதுபதியும் காத்துக்கொண்டிருந்தனர். நிலா வருவதை பார்த்தவர்கள் அவளை நோக்கி புன்னகையை வீசினர்.
இளஞ்சேரனை கண்டதும் நிலாவிற்கு கனவு ஞாபகம் வர… அவள் உடல் தன்னாலே சிலிர்த்தது. வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் முகத்தை எப்போதும் போல இறுக்கத்துடனே வைத்துக்கொண்டு அவர்கள் அருகில் வந்தாள் நிலா.
“என் கிட்ட பேசனும் னு சொன்னியா நிலா? சேது சொன்னான்… ” இளா.
“ம்… ஆமா….நீங்க போலீஸா? ” நிலா.
“இத கேக்க தான் வர சொன்னியா? நான் கூட வேற என்னமோ னு நினைச்சேன்… ” இளா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தனது சைக்கிளில் வேகமாக அவர்கள் இடையில் வந்து இறங்கினாள் இசை.
” ஹே…நான் வர்றதுக்குள்ள பேசிட்டியா டி பக்கி? ” இசை .
“இல்லடி… இப்பத்தான் நானும் வந்தேன்…. இனித்தான் சொல்லனும்… “நிலா.
“அப்பிடி என்ன தான் பேசனும் ? சொல்லுங்க இளவரசிகளே…” சேது.
“யோவ்…உன் புதைகுழிய கொஞ்சம் க்ளோஸ் பண்ணிக்க…நிலா….நீ பேசுடி…நாங்க கொஞ்சம் தள்ளி நிக்கிறோம்….” என்று கூறியபடி இருவரும் பேசினால் கேட்கும் தூரத்தில் சேதுவை தள்ளி கொண்டு சென்று உட்கார்ந்தாள் இசை.
அவர்கள் தள்ளி சென்றதும், “சொல்லுங்க… நீங்க நிஜமாலும் போலீஸா? ” என இளாவிடம் கேட்டாள் நிலா.
இளா எதுவும் கூறாமல் தனது அடையாள அட்டையை நிலாவிடம் குடுத்துவிட்டு உதட்டுக்குள் புன்னகையை அடக்கி கொண்டு அவளை பார்த்துக்கொண்டு நின்றான்.
அதை வாங்கி பார்த்த நிலா, விழிவிரிய அவனது உத்யோக அடையாள அட்டையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
“இப்ப சொல்லு… என் கிட்ட என்ன சொல்லனும்? ” என வினவினான் இளா ,தன்னுடைய அடையாள அட்டையை நிலாவிடம் இருந்து வாங்கி வைத்துக் கொண்டு.
“அது… பர்ஸனலா ஒரு கம்ளைண்ட் குடுக்கனும்… ” நிலா.
அவள் தன் வீட்டாரை பற்றி கூறப்போகிறாள் என்றெண்ணி, “கம்ப்ளைண்டா? என்ன ஆச்சு மா? ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லு… ” என்றான் இளா.
“என் எதிர்த்த வீட்டுல ப்ளாக் ல சாராயம் விக்கிறாங்க… ” நிலா.
“என்ன????? கொஞ்சம் டீட்டைலா சொல்லு… “இளா.
” ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருல கவர்ன்மெண்ட் வொயின் ஷாப் இருந்துச்சு… அத எடுக்கனும் னு நாங்கலாம் போராட்டம் நடத்தி அத எடுக்க வச்சுட்டோம்… ஆனா அத எடுத்ததுக்கு அப்புறம் தான் பிரச்சனையே பெருசு ஆச்சு… டவுன் ல போய் சரக்கு வாங்கிட்டு வந்து வீட்டுக்கு வீடு விக்க ஆரம்பிச்சுட்டாங்க…. இதே ஊருல என் எதிர்த்த வீட்டையும் சேர்த்து பன்னென்டு வீட்டுல விக்கிறாங்க…..வீட்ல விக்கிறதுனால சின்ன பசங்கல்ல இருந்து வயசானவங்க வரைக்கும் வந்து வாங்கி குடிக்கிறாங்க….அதுவும் என் எதிர்த்த வீட்டில அப்பா அம்மா ரெண்டு பசங்க னு இந்த சாராயம் விக்கிறத குடும்ப தொழிலா பாக்குறாங்க….. அவங்களுக்கு ஒரு பொண்ணு… ஒரு பையன் …ரெண்டு பேருமே காலேஜ் படிக்கிறாங்க… பாட்டில் எடுத்து குடுக்குறது எல்லாம் அந்த பொண்ணும் பையனும் தான்… அந்த வீட்ல பொண்ணு இருக்குறதால கண்ட கண்ட ரௌடி பயலுகலாம் வர்றானுக…. அதுல வேற மாதிரி பிரச்சினை லாம் வருது….ஸ்கூல் படிக்கிற பசங்கலாம் குடிக்க வர்றானுக ….இப்ப கொஞ்ச நாளா, ஸ்கூல்ல பொண்ணுங்களுக்கு கூல்ட்ரிங்க்ஸ் ல கலந்து குடுத்து பழக்கி அந்த பொண்ணுங்கள குடிக்கு அடிமையாக்குறாங்க…. இத பத்தி நான் ஏற்கனவே போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்தேன்….ஆனா எந்த யூஸூம் இல்ல… அதான் உங்களால இத தடுக்க முடியுமா னு கேட்க வந்தேன்….நேத்து நீங்க போலீஸ் னு சொன்னதும் உங்க கிட்ட இத சொல்லலாம் னு தோனுச்சு… ப்ளீஸ்… ஏதாவது பண்ணுங்க….” நிலா.
நிலா கூறுவதை முகம் இறுக கேட்ட இளா , “சேது….” என கர்ஜித்தான்.
இளாவின் குரல் மாற்றத்தை உணர்ந்த சேது, “மாப்ள….”என தயங்கியபடி உரைத்தான்.
“இத பத்தி உனக்கு முன்னாடியே தெரியுமா? ” என இளா உறுமினான்.
“ம்…” என சேது முனங்கினான்.
“என்ன முனங்குற? வாய தொறந்து பதில் சொல்லு… “என அதிகாரமாய் வினவினான் இளா.
“அது வந்து மாப்ள… இத விட மோசமாலாம் நடக்குது… போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுனா அசிங்கம் நமக்கு தான்… ஏற்கனவே நிலா கம்ப்ளைண்ட் பண்ணி, உள்ள போன ஏழு மணி நேரத்துல அந்த ஆளு வெளில வந்து நிலாவ அசிங்க அசிங்கமா பேசி… அது தனி பிரச்சினை ஆகிருச்சு… இதே போல இந்த ஊருக்குள்ள நாலஞ்சு பேரு கம்ப்ளைண்ட் பண்ணி, அவங்க தலை நிமிந்து நடக்க முடியாத அளவுக்கு ஆகிருச்சு…. அதான்….. ” சேது.
அதை கேட்ட இளா, சேதுவிற்கு இழுத்து ஒரு அறை விட்டு, ” ஏன்… ஸாருக்கு என் ஞாபகம் வரலையோ? ” என்றான்.
“என் சார்பா ரெண்டு போடுங்க அண்ணா… உங்கள மாதிரி போலீஸ் ப்ரண்ட் இருக்குறத இதுவரைக்கும் சொல்லவே இல்ல இவரு…. “என இசை, இளாவிடம் முறையிட்டாள்.
“நீயெல்லாம் ஒரு லவ்வராடி…. க்ரீன் துரோகி….. உன் லவ்வர ஒருத்தன் அடிக்கிறான்… நீ அவன அண்ணா னு உறவு முறை சொல்லி அவனுக்கு சப்போட்டா ஜூஸ் புழிஞ்சு குடுக்குற…. ” என மூக்கை உறிஞ்சினான் சேது.
இசை, சேதுவை முறைத்துக்கொண்டு அவனுக்கு மறுமொழி கூற முயலுகையில், “கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா? இங்க எத பத்தி பேசிட்டு இருக்கோம்…. நீங்க ரெண்டு பேரும் விளையாடிட்டு இருக்கீங்க… ” என நிலா, இருவரின் இடையில் புகுந்தாள்.
“ஹே… கூல்… பொண்டாட்டி…. அதான் மாமன்கிட்ட சொல்லிட்ட ல… நான் பாத்துக்கிறேன்… இனி நீ அந்த பிரச்சனைய மறந்துட்டு போய் ப்ராக்டிஸ் பண்ணு… அடுத்த வாரம் டிஸ்ட்டிக் செலக்சன் வேற இருக்கு… நாளைக்கி ஊருல மேட்ச் போல…. ” என இளா, நிலாவை சமாதானம் படுத்தினான்.
இளா கூறுவதை கேட்ட நிலா ,அவனை முறைக்க… சேதுவும் இசையும் அவர்களை வாயை ஆஆஆ என திறந்தவாறு பார்த்தனர்.
“என்னடி முறைப்பு? ” என இளா, நிலாவிடம் கண்ணடித்து வினவ… அதை பார்த்த இசை, “யாத்தேய்….” என தன் கண்களை மூடிக் கொண்டாள்.
“நீ ஏன்டி கண்ண மூடிக்கிற? “என சேது இசையிடம் வினவ, “இது ஓவர் ரொமான்ஸா இருக்குடா மச்சான்… “என்று வெட்கப்பட்டாள் இசை.
இசையை பார்த்து தலையலடித்துக்கொண்டு, ” இளா… அவனுக்கு அரசியல் ஆதரவு லாம் இருக்கு டா…. கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுடா…. ” என்றான் சேது.
“இந்த இளஞ்சேரன பத்தி தெரிஞ்சுமா நீ இப்படி பேசுற…. இனி பாரு என் ஆட்டத்த… “இளா.
இளாவை பற்றி நன்கு தெரிந்த சேது, “பிசாச மலையேத்தி விட்டுட்டாளே இந்த நிலா… “என மனதிற்குள் புலம்பியவாறு தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து விட்டான்.
அதை பார்த்த இசை, “டேய் மச்சான்… என்னடா ஆச்சு… அதான் அண்ணா பாத்துக்கிறேன் னு சொல்லிட்டாங்கல்ல… அப்புறம் என்ன? ” என்றாள்.
“கடங்காரி… அதான்டி பிரச்சனையே…. இவன பத்தி எனக்கு தான தெரியும்…. “சேது.
“ஆகான்…. ரொம்ப தான் உங்க ப்ரண்ட்டுக்கு பில் டப் குடுக்குறீங்க… முதல்ல உங்க ப்ரண்ட் என்ன செய்றாங்க னு பாப்போம்….நான் ப்ராக்டிஸ் பண்ண போறேன்…. ” நிலா.
“சரி… இத நான் முடிச்சுட்டா நான் சொல்லுறத நீ செய்வியா நிலா? ” என புன்னகைத்தான் இளா.
“என்ன? இந்த கல்லியாணத்துக்கு சம்மதிக்கனுமா? “என இகழ்ச்சியாக கேட்டாள் நிலா.
“அதெல்லாம் ஓல்டு பேஷன் ….நீ தான் என்னைய கல்லியாணம் பண்ண மனசளவுல தயார் ஆகிட்டியே ….அப்புறம் ஏன் நான் அத கேக்க போறேன்…. இது வேற…. சொல்லு….இந்த பிரச்சனைய நான் ஸால்வ் பண்ணிட்டா… நீ, நான் சொல்லுறத செய்வியா? ” என முகங்கொள்ளா புன்னகையுடன் வினவினான் இளா.
“வாட்???? நான் எப்ப உங்களுக்கு ஓகே சொன்னேன்? ” நிலா.
“ஹா ஹா ஹா…. உன் மனசு என்னைய ஏத்துக்காமலா நைட் என்னைய உன் பெட் ரூம் வரைக்கும் அனுமதிச்ச…. இன்னும்ம்ம்ம்…..இதுல சேரா னு செல்ல பேரு வேற…. ” என விழிகளில் காதல் தத்தளிக்க உரைத்தான்.
இளா கூறியதை கேட்ட நிலா, அதிர்ச்சியில் உறைந்து நிற்க…. சேது, ஆஆஆ என்றவாறு நிற்க…. இசை, மயங்கியே விழுந்தாள்……
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.