தனது மாலை நேர கல்லூரி வகுப்பிற்கு தாமதமாகி விட்டது என்ற பரபரப்புடன் தனது சைக்கிளில் வீட்டில் வந்து இறங்கினாள் நிலா.
தனது இல்லம் ஒரு வித அமைதியில் நிறைந்து இருக்க, எப்பொழுதும் போல் அதை கண்டும் காணாமல் கல்லூரிக்கு கிளம்ப தனது அறைக்குள் நுழைய போன நிலாவை, “அடியே தரித்திரம் புடிச்சவளே…”என்ற அகங்கார குரல் ஒன்று தடுத்து நிறுத்தியது.
என்ன என்று கேட்காமல் அப்படியே நின்றாள் நிலா, தனக்கு மட்டுமே பிரத்தேயகமான ….தன்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் அழைப்பை கேட்டு.
“ஏன்…..என்ன னு வாய தொறந்து கேட்டா வாயில உள்ள முத்து உதிந்துருமோ? ” வள்ளி.
தனது தாயின் நக்கலை கேட்ட நிலா, எதுவும் கூறாமல் நன்றாக திரும்பி தனது தாயை பார்த்தாள். அந்த கூரிய பார்வையில் சற்று தடுமாறிய வள்ளி, “அம்மணி எங்க ஊரு பொறக்கிட்டு வர்றீங்க? ” என்றாள்.
அமைதியாக கையில் வைத்திருந்த தனது கிட் பேக்கை தூக்கி காட்டினாள் நிலா.
“ஓஓஓ…..ஆம்பளை பயலுக கூட ஆட்டம் போட்டுட்டு வர்ற? இல்ல…தெரியாம தான் கேக்குறேன்… உனக்குலாம் கொஞ்சமாச்சும் கூச்சநாச்சம் இருக்கா? பயலுக கூட சரிக்கு சமமா இப்பிடி டவுசர் சட்டைய போட்டுட்டு மினுக்கி கிட்டு திரியுற? ” வள்ளி.
” அது எப்படி டி அவளுக்கு இருக்கும்? அவ பொறந்த நேரம் அப்பிடி… இதே வீட்ல தான் என் பேரனும் இருக்கான்… அவன் எவ்ளோ பொறுப்பா இருக்கான்… இது இப்பிடி கொழுப்பெடுத்து ஊர் மேய்ஞ்சுட்டு திரியுது…” என்று தன் நாக்கில் விசத்தை கக்கியபடி வந்தார் நிலாவின் பாட்டி அலமேலு.
அந்த நேரம் பார்த்து சரியாக நிலாவின் தம்பி அபிஷேக் வீட்டிற்குள் நுழைந்து தன் பாட்டி அலமேலுவின் காதுகளில் ரகசியம் பேசி விட்டு தனது அக்கா நிலாவை வன்மமாக பார்த்து சிரித்தான்.
அபிஷேக் கூறியதை செவிமடுத்த அலமேலு, “அடியாத்தீ… இந்த அக்கிரமம் எங்காச்சும் உண்டா? அய்யோ…. அய்யோ… புள்ளையா இது….குலத்தை கெடுக்க வந்தவ இவ….அய்யோ…..அய்யோ… ” என தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
தனது மாமியார் அழுவதை பார்த்த வள்ளி பதறி கொண்டு, “அய்யோ அத்த….என்ன ஆச்சு…ஏய்….என்னடி பண்ணி தொலைஞ்ச….அப்பத்தா இப்பிடி அழுவுதே கொஞ்சமாச்சும் என்ன ஏது னு கேக்குறாளா? அசையாம குத்துக்கல்லாட்டம் நிக்கிறா… ஏன்டி என் வயித்துல வந்து பொறந்த? ” என்றாள்.
நடப்பதனைத்தையும் முகம் இறுக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
” அவ எப்பிடி வாய தொறப்பா ? அதான் வெளியூர் ஆம்பள பயலயே கண்ட இடத்துல உதைச்சுட்டு வந்து இருக்காளே… எம்புட்டு திண்ணக்கம் குட்டக்கழுதைக்கு… ” அலமேலு.
“என்ன? ???என்னடி பண்ணி வச்சுட்டு வந்து இருக்க? ஒரு ஆம்பள புள்ளை கிட்ட கால் நீட்டிட்டு வந்து இருக்க….அபி….எடுடா அந்த விளக்கமாத்த…இவள நாலு மொத்துனா தான் வழிக்கு வருவா… ” வள்ளி.
நிலாவின் தம்பி அபி குதூகலத்துடன் விளக்கமாற்றை எடுத்து தன் தாயிடம் குடுக்க, அதை வாங்கிய வள்ளி… “இனிமே ஆம்பள புள்ளக்கிட்ட வம்பு வச்சுப்பியா? “எனக்கேட்டவாறே அடித்து இரண்டு விளக்கமாற்றை முடிக்க… அடுத்த விளக்கமாற்றை அலமேலு எடுத்து குடுக்க, அதையும் வாங்கி அடித்தாள்.
அனைத்து அடியையும் கண்கள் கலங்காமல் ஒரு வித வைராக்கியத்துடன் அமைதியாக அசையாமல் நின்று வாங்கி கொண்டிருந்தாள் நிலா.
“ஹே… விடுடி…. சனியன் கண்ணுல காதுல குத்தி ஊனமாயிற போகுது….அப்புறம் அதுக்கும் சேத்து வரதட்சணைய நாம தான் அழுகனும்…. இவள சீக்கிரமே கை கழுவி விட்டுறனும்….ஆமா… போன வாரம் ஒரு வரன் வந்துச்சே… அங்கயே பேசி முடிச்சுறலாம்…..நம்மள புடிச்ச பீடை தொலைஞ்சது னு தலைமுழுகிட்டு இருக்கலாம்…. ” என்றார் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் தந்தை கதிர்வேல்.
தனது கணவன் கூறியதை கேட்ட வள்ளி , நிலாவை அடிப்பதை நிறுத்தி விட்டு, ” ஆமாங்க… சீக்கிரமே இவள வீட்ட விட்டு தொரத்தனும்…. அப்பதான் இந்த வீடு விடியும்… அந்த பையன் பேரு கூட ஏதோ… இளஞ்சேரன் போல… அம்மா அப்பா யாரும் இல்லை… அக்கா மட்டும் தான் போல… அக்காக்கும் கல்லியாணம் ஆகி குடும்பம் குட்டி னு தனியா இருக்காங்க…. பையனும் ஏதோ பெரிய உத்தியோகம் பாக்குறான் னு சொன்னாங்க…. இந்த குட்டக்கழுதைய விரும்பி வேற கேக்குறாங்க… பத்து பைசா வேண்டாமாம்…. நமக்கு செலவு மிச்சம்… இவள தள்ளி விட்டுட்டு அடுத்து நம்ம பையன நல்லா படிக்க வைக்கலாம்…. “என்றாள்.
“இன்னும் கொஞ்ச நாளு தான்டா என் செல்ல பேராண்டி… உனக்கு முன்ன பொறந்த இந்த வீட்டோட தரித்திரம் ஒழிஞ்சுரும்…. அதுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு விடிவு காலம் தான்டா சிங்கக்குட்டி….” என தன் பேரன் அபியை முத்தம் கொஞ்சினாள் அலமேலு.
தன் பாட்டி கூறுவதை கேட்ட அபி, முகத்தில் மகிழ்ச்சி பரவ…. நிலாவை இளக்காரமாக பார்த்தான்.
அங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்த நிலா, கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்தவள் தன் அறைக்குள் நுழைந்து வேக வேகமாக மாலை நேர வகுப்பிற்கு புறப்பட்டாள்.
கல்லூரிக்கு தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்த நிலா, வீட்டின் நடுக்கூடத்தில் அமர்ந்து இருந்தவர்களை பார்த்தவள் சிறிது அதிர்ந்தாள்.
“வாடி நிலா…. இவர் தான் உன்னைய கட்டிக்க போற மாப்ள… நம்ம சேது வோட கூட படிச்சவராம்…. அதான் சேதுவையும் கூட கூட்டிட்டு வந்து இருக்காரு…. இந்தா… இந்த காபி ய குடு…. ” என பற்களை கடித்தவாறு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் காபி கப் அடங்கிய தட்டை நிலாவிடம் நீட்டினார் வள்ளி.
மாப்பிள்ளை என அறிமுகப்படுத்தப்படவனை பார்த்தவள், “இவன்…. அந்த முகமூடி கொள்ளைக்காரன் ல… இப்ப மட்டும் எதுக்கு கர்சீப் கட்டாம இருக்கான்… மூஞ்ச பாரு…. மூஞ்சி ஃபுல்லா பல்லு தான்…. இந்த மொசரக்கட்டைய நாம எங்கேயோ பாத்து இருக்கோமே…. ” என இளஞ்சேரனை மனதிற்குள் பொறித்து எடுத்து கொண்டும் பாதி யோசனையோடும் தன் தாயிடம் இருந்து காபி ட்ரேயை வாங்கி இருவருக்கும் காபியை குடுத்தாள் நிலா.
தோள் வரை வெட்டி விட்டிருந்த கூந்தலை சிறு க்ளிப்பினுள் அடக்கி, இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து கையில் ஒற்றை வளையலோடு… காதை ஒட்டிய தோடும் …கழுத்தில் சிறிய கருப்பு கயிறும் …புருவ மத்தியில் புள்ளி போன்ற ஸ்டிக்கர் பொட்டுடன் மஞ்சள் குளித்து எவ்வித ஒப்பனையும் இன்றி புத்தம் புது மலராய் தன் முன்னே காபி யை நீட்டிய நிலாவை கண்டவுடன் ,
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ…
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ…
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்…
போதை கணமே குடையாயிரு நீ… என இளாவின் மனதிற்குள் கோரஸ் பாட ஆரம்பித்தது.
நீட்டிய காபி யை எடுக்காமல் நிலாவின் விழியில் கவி பாடி கொண்டிருந்த இளா வின் நிலமையை உணர்ந்த சேது, தன் நண்பனை கையால் லேசாக ஒரு இடி இடித்தான். அதில் சுய உணர்வுக்கு வந்த இளா, இமைக்காமல் நிலாவின் விழியை ஊடுருவி கொண்டே காபியை எடுத்தவன் விழிகளில் விளக்கமாற்று அடியால் நிலாவின் உடம்பில் அங்காங்கே சிவந்து இருந்த காயம் விழுந்தது. அதுவரை காதல் மொழி பேசிய இளாவின் விழிகள் கோபம் ருத்ரதாண்டவமாடியது.
தன் நண்பனின் விழியின் மொழியை படித்த சேது, இளா வின் விழிகள் பயணித்த திசையில் பார்த்தான். நிலாவின் உடம்பில் காயத்தை கண்டவன் கண் கலங்கினான்.
இதை ஏதும் உணராமல் அறியாமல் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு தன் மாலை நேர வகுப்பிற்கு புறப்பட்டாள் நிலா.
சிறிது தூரம் சென்றதும் நிலாவுடன் அவளது தோழி இசை அவளது சைக்கிளுடன் இணைந்து கொண்டாள்.
நிலா, சாதாரணமாக பேசும் ஒரே ஜீவன் இசையரசி மட்டுமே. எவ்வித விகல்பமும் இன்றி நிலாவுடன் பழகும் ஒரே ஜீவன் இசை மட்டுமே. இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்து இப்பொழுது ஒன்றாக மாலை நேர கல்லூரியில் BA history படித்து கொண்டிருக்கின்றனர்.
” என்ன மச்சி…. இன்னக்கி க்ரவுண்ட நாலா கிழிச்சு தொங்க விட்டுட்ட போல… “என புன்னகைத்துக்கொண்டு சைக்கிளை உருட்டி கொண்டே நிலாவிடம் வினவினாள் இசை.
“ப்ச்…. அப்பிடிலாம் ஒன்னும் இல்ல டி… சாதாரணமா தான் அடிச்சேன்… நாளைக்கழிச்சு ஒரு மேட்ச் இருக்கு… நம்ம விநாயகம்பட்டி ஊரு கூட….அவனுக செம டஃப் டீம்… அவனுக கிட்ட அடிக்கனும் டி….” நிலா.
“அதெல்லாம் நீ வெளுத்து வாங்குவ மச்சி… அது இருக்கட்டும்… உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு… உடம்பும் அங்கங்க சிவந்து தடிச்சு போய் இருக்கு…. ” இசை.
“மேட்ச் முடிச்சுட்டு நேரா கிளம்பி வந்துட்டேன் டி… சாப்பிடல… பசிக்குது… அதான் குரல் டல் அடிக்குது… ” நிலா.
“உன்னைய…. அச்சீ நாயே… சைக்கிள நிறுத்து முதல்ல… ” என சைக்கிளை நிறுத்தி விட்டு நிலாவை ஒரு மரத்தடிக்கு இழுத்து சென்றாள் இசை.
“என்னடி இப்ப…. க்ளாஸ்க்கு டைம் ஆச்சு… ” நிலா.
“உஷ்… பேசாத… இந்த கல்லுல உக்காரு முதல்ல… ” என்று நிலாவை அதட்டி விட்டு தனது பேக்கில் உள்ள டிபன் பாக்ஸை எடுத்து அதில் உள்ள சாப்பாட்டை நிலாவிற்கு ஊட்டி விட ஆரம்பித்தாள் இசை.
அமைதியாக இசை குடுத்த உணவை ஒரு வாய் ருசித்தவள் ,”ஹே… சீம்பாலாடி….. அய்….. குடுடி இங்க பாக்ஸ… “என கண்கள் மின்ன கூறிய நிலா, பாக்ஸை பறிக்க பார்த்தாள்.
பாக்ஸை நிலாவிடம் குடுக்காமல், “ஊகூம்…. நான் தான் ஊட்டி விடுவேன்…. எனக்கு தெரியும் டி…. நீ சாப்பிட்டு இருக்க மாட்ட …இன்னக்கி நீ மேட்ச் ஜெயிச்சதும் உங்க வீட்ல ஒரு போரே நடக்கும் னு…. அதான் எடுத்துட்டு வந்தேன்…. விளையாடுற புள்ளைக்கு தெம்பு வேணும் னு ஆட்டு சீம்பால அம்மாக்கு தெரியாம ஆட்டைய போட்டுட்டு வந்துட்டேன்…. ” என புன்னகைத்தாள் இசை.
தன் தோழியின் அன்பில் நெகிழ்ந்தவள், ” லவ் யூ மச்சி… “என்றாள் நிலா.
“இதெல்லாம் உனக்கு வரப்போறவன் கிட்ட சொல்லு…. இப்ப சாப்பிடு… ” என அதட்டி நிலாவை உண்ண வைத்தாள் இசை.
“ஹா ஹா… உனக்கு தெரியுமா? என்னைய எவனோ பொண்ணு கேட்டு வந்து இருக்கான்…. அதுவும் உன் ஆளோட ப்ரண்ட் தானாம்… ” நிலா.
” ஹே…. என்ன மச்சி சொல்லுற… அந்த ஆளு என் கிட்ட எதுவும் சொல்லலயே…. இன்னக்கி செத்த டா சேது… அது இருக்கட்டும்… நாம அத அப்புறம் பாத்துக்கலாம்… இதென்ன உடம்புல காயம்? ” இசை.
“இதுவா….வழக்கம் போல தான் டி… மூணு விளக்கமாறு…. ” என தோளை குலுக்கினாள் நிலா.
“நீ ஏன் மச்சி இப்பிடி அமைதியா பொறுத்து போற? இப்பிடி அடங்கி போகாதடி…. நீ இப்படி அமைதியா இருக்க இருக்க தான் உன் வீட்ல உள்ள பிசாசுக அந்த ஆட்டம் போடுதுக…. ” இசை.
“இதுக்கு பேரு பொறுத்து போறது இல்ல டி…. என்னைய நானே தயார்படுத்திக்கிறேன்…. க்ரவுண்ட்ல எத்தனை பந்து என் உடம்புல படுது… அத தாங்குறதுக்கான ஒரு சின்ன உடற்பயிற்சி தான் மச்சி இந்த அடி வாங்குறது…. அத்தோட அவங்கள எதிர்த்து பேச எனக்கு ஒரு செகண்ட் ஆகாது…. ஆனா நான் எனக்கான நேரத்துக்காக காத்து இருக்கேன்…. நான் பேசுறப்ப எவனும் என்னைய எதிர்த்து பேச முடியாத அளவுக்கு நான் வளந்து இருக்கனும்… என்னோட பேச்சு அவங்களுக்கு பதிலடியா இருக்குறத விட என்னோட செயல் அவங்களுக்கு சிறந்த பதிலடியா இருக்கனும்…. இவ்வளவு ஏன்… இந்த ஊரே நான் குட்டை னு என்னைய குட்டச்சி குட்டச்சி னு கிண்டல் பண்ணுச்சு… ஆனா இப்ப…அதே பேர கிண்டல் பண்ணுனவங்க வாயால ஆச்சரியமா பயங்கலந்த மரியாதையோட சொல்ல வச்சு இருக்கேன்…அதே போல தான் இவங்களையும்…..என்ன அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்….” நிலா.
“சரி… சரி… உடனே நூத்து கிழவி மாதிரி பேசாம கைய காட்டு மருந்து போட்டு விடுறேன்….” இசை.
“எப்பிடி டி மருந்தெல்லாம் ரெடியா வச்சு இருக்க… “நிலா.
“அதெல்லாம் பழகிருச்சு… எத்தனை வருஷமா மருந்து போட்டுட்டு இருக்கேன்… எங்க கிட்டையேவா? ” இசை.
இருவரும் பேசி கொண்டே சைக்கிளை தள்ளி கொண்டு சிறிது தூரம் சென்றவர்கள், “அரசி… நில்லு… ” என்ற குரலை கேட்டு இருவரும் நின்றார்கள்.
“ஹே… உன் ஆளு டி… “என நிலா இசையின் காதில் கிசுகிசுத்தாள்.
இளாவும் சேதுபதியும் பைக்கில் வந்து இரு பெண்களின் முன்னே இறங்கினர்.
“அரசி… அப்பிடி கொஞ்சம் வாயேன்… உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்… ” என நிலாவையும் இளாவையும் கண்ணால் இசையிடம் காட்டிவிட்டு அவளை இழுத்து சென்றான் சேது.
சேதுவின் பின்னே சென்ற இசை, ” இப்ப எதுக்கு அவங்கள தனியா விட்டுட்டு வந்தீங்க? ” என்றாள்.
” கோப படாதடி… அவன் என் ப்ரண்ட் தான்… அவன் நிலாவ லவ் பண்றான்… அதான் அவன் நிலாக்கிட்ட பேசட்டும் னு உன்னைய கூட்டிட்டு வந்தேன்…. “சேது.
” ஓஓஓ…. இவரு தான் அந்த மாப்ளையா? ஆளு பாக்க நல்லா தான் இருக்காரு… ” இசை.
” அடியேய்… அவன் உனக்கு அண்ணன் டி…. ” என பொறாமையில் வெடித்தான் சேது.
“ஹா ஹா… சரி சரி… பொங்காத…ஓவரா கருகுது… ” என சிரித்தாள் இசை.
“போடிங்க்….” சேது.
“ஹே… நிலா இதுக்கு ஒத்துப்பாளா? “இசை
“அதான்டி எனக்கும் தெரியல…இரு அவங்கள கவனிப்போம் ” சேது.
அங்கு… தன்னை நோக்கி வந்த இளஞ்சேரனை கண்ட நிலா, ” என்ன? “என்றாள்.
“ஒன்னுல்ல…. ஒரு விசயம் சொல்லிட்டு போகலாம் னு வந்தேன்… காலையில சொன்னியே… உன் பேரு இன்பநிலா னு… அத இனி திருத்திக்க…. ” என புன்னகைத்தான் இளா.
ஒன்றும் பேசாமல் தன் புருவத்தை உயர்த்தினாள் நிலா.
“இனி உன் பேரு இன்பநிலா இல்ல… சேரநிலா…. இந்த சேரனோட நிலா…. ஸோ… மாத்திக்க பொண்டாட்டி…. “என கண்களில் காதல் மின்ன கூறினான் இளா.
இளாவிற்கு பதிலளிக்க வாயை திறந்த நிலா, இசையும் சேதுவும் அவர்களை நோக்கி வருவதை கண்டவுடன் இளைவை அலட்சியப்படுத்திவிட்டு இசையிடம் விரைந்து சென்றாள் நிலா.
இசையும் சேதுவும் அவர்களை நோக்கி வந்ததும் ,”வா மச்சான் நாம கிளம்பலாம்… வந்த வேலை முடிஞ்சது… “என புன்னகைத்துக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான் இளா.
சேதுவும் இசையும் ஆர்வமாக நிலாவின் முகத்தை பார்க்க, அவள் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது. சேது ஒன்றும் புரியாமல் பைக்கில் ஏறி அமர…
“வரட்டா பொண்டாட்டி…. ஒரு போலீஸ்காரனோட பொண்டாட்டி இப்பிடிலாம் ஷாக் ஆகி நிக்க கூடாது….கெத்தா….இந்த சேரனோட நிலாவா… சேரநிலாவா கர்வமா எல்லாத்தையும் சமாளிக்கனும் ….”என்று கூறியபடி பைக்கில் சேதுவுடன் பறந்தான் இளஞ்சேரன் IPS.
இவன் போலீஸா? காலையில ப்ளேயர் னு சொன்னான்…. ஒரு வேளை உண்மையிலே போலீஸா இருந்தா….. என நினைத்த நிலாவின் மனது தன் எதிர்த்த வீட்டின் நினைவில் நிலைத்து… பல மனக்கணக்கை போட்டது நிலாவின் மனம் , அவன் கூறி சென்ற மற்ற வார்த்தைகளை மறந்து…..
(இனி நிலா, சேரநிலாவாக மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.