அத்தியாயம் -03

Chellammal Bharathi | 19 Nov 2025 | Share

        வேகவேகமாக சேதுபதியை இழுத்துக்கொண்டு நிலாவிடம் வம்பு இழுத்தவனின் முன் நின்றான் இளா. அவன் தோள் மீது கை போட்டு, “தம்பி… கொஞ்சம் அப்பிடி  வர்றியா …உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்…. “எனக் கூறி அவனை தனியே இழுத்து சென்றான் இளா.

        யாருமில்லாத இடத்திற்கு சென்றதும், அவன் உள்ளங்கையை ஒரு திருப்பு திருப்பி உடைத்து வைத்தான் இளா.

        “ஐயோ…. ஏன் ஸார் இப்பிடி பண்றீங்க? யாரு ஸார் நீங்க? “என வலியில் கதறினான் அவன்.

         “என்ன தைரியம் இருந்தா பொண்ணு மேல கை வைப்ப? இனி அப்பிடி ஒரு எண்ணமே வரக்கூடாது…. அதுவும் என் நிலா மேல…. உன்னைய….. “என மிரட்டியவாறு அவன் கழுத்தை நெரித்தான் இளா.

       “ஸாரி…. ஸாரி ஸார்…. இனி இப்பிடி பண்ண மாட்டேன்… “என அவன் கதற… “சரி… பொழச்சு போ…. “என அவனை விட்டுவிட்டான் இளா.
  
         இவை அனைத்தையும் மௌனமாக ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்த சேதுபதி அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான்.

          சேதுபதி உறைந்து நிற்பதை பார்த்த இளா, “டேய்…. மச்சான்….என்னடா? உன் வாய்க்குள்ள நாலு ஈ…..ஏழு கொசு உள்ள போறது கூட தெரியாம என்னைய இப்பிடி சைட் அடிச்சுட்டு இருக்க….அவ்ளோ அழகாவா இருக்கேன் நானு? ” என கண்ணடித்துக்கொண்டு வினவினான்.

     “எதேய்…சை…சை…இப்பிடி முகமூடி ராட்சசனை எந்த மனுஷன் பார்ப்பான்…முட்டக்கண்ணு மட்டும் தான் தெரியுது….பாத்துடா …அந்த முட்டக்கண்ணு பிதுங்கி வெளியே விழுந்திர போகுது… ” சேதுபதி.

         “உனக்கு பொறாமை…உண்மைய சொல்லு மச்சான்… என் கண்ணு க்ளாமரா இருக்கு னு உனக்கு வயித்தெறிச்சல் தான  ?ஹா ஹா… அப்புறம் எதுக்கு டா என்னைய உத்து உத்து பாத்துட்டு இருந்த? ” இளா.

          “தூ….நான் உன்னைய பாக்கல…
இங்க…இளஞ்சேரன்…இளஞ்சேரன் னு ஒரு மானஸ்தன் இருந்தான்…. அவன காணோம்… அவன தேடிட்டு இருந்தேன்… “சேதுபதி.

           “என்ன மச்சான்??? ” இளா.

           “என்ன நொன்ன மச்சான் ? காலையில இதே வாயால தான் எங்க நிலாவ வேண்டாம் னு சொல்லிட்டு இருந்த… இப்ப அதே வாயால, என் நிலா னு சொல்லுற…வெக்கமா இல்ல? ” சேதுபதி.

          “ஹா ஹா ஹா…. காண்டாகாத மச்சான்….வா…உன் கடைக்கு போய் பேசுவோம்… ” இளா.

         இளா வை முறைத்துக்கொண்டே, “வந்து தொலை… ” என  திட்டியவாறு தன் கடைக்கு அழைத்து சென்றான் சேதுபதி.

         “இப்ப சொல்லு….நிலாவ பத்தி என்ன தெரியும் னு அவள உன்னோட நிலா னு சொன்ன? காலையில புடிக்கல னு சொல்லிட்டு…மதியத்துக்குள்ள இப்பிடி அந்தர் பல்டி அடிக்கிற? ” சேதுபதி.

        “என் பொண்டாட்டி எப்பிடி இருக்கனும் னு நான் நெனைச்சேனோ… அப்பிடியே இருக்கா டா நிலா… அவளோட அந்த கண்ணு….அந்த திமிரான பார்வை… இங்க.. இந்த நெஞ்சுக்குள்ள இறங்கி ஆழமா தைச்சுருச்சு டா….அந்த வாய்ஸ்… ப்பா…ஐஸ் க்ரீம உருக்கி தொண்டைக்குள்ள இறக்குற மாதிரி… சும்மா அப்பிடி ஜிவ்வு னு இருக்கு டா….அந்த தைரியம்…என்ன பொண்ணு டா மச்சான்… நிலா …..நான் முடிவு பண்ணிட்டேன்… என் அக்கா பாத்த பொண்ணையே கட்டிக்க போறேன்…. நிலாவ அவங்க வீட்ல செம தைரியமா வளத்து இருக்காங்கல்ல…. வேற லெவல் டா மச்சான் அவங்க… ” இளா.

         ” உனக்கு இன்னும் அவள பத்தி தெரியல டா…. அவ சிரிச்சு பன்னென்டு வருஷம் ஆகிருச்சு… அது தெரியுமா? அதே போல அவ அழுதும் பல வருஷம் ஆச்சு… இப்ப சொன்னியே… அவ வீட்ல அவள தைரியமா வளத்து இருக்காங்க னு…. நிலாவோட சிரிப்ப குழி தோண்டி புதைச்சவங்க டா அவங்க…. அவங்க , இவள தைரியமா வளத்தாங்கலா? நிலா சுயம்பு டா…. அவளா இப்படி தைரியமா வளந்து நிக்கிறா… அவ வீட்ல உள்ளதுங்க எல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்ல…. எல்லாம் மூடநம்பிக்கைக்கு அடிமையான முட்டா வாத்துங்க…. ” சேதுபதி.

           “என்ன மச்சான் சொல்லுற….எனக்கு ஒன்னும் புரியல… தெளிவா சொல்லு… ” இளா.

           “நிலா….கதிர்வேல் – வள்ளி க்கு மூத்த பொண்ணு…..ரெண்டாவது ஒரு பையன்…..அபிஷேக்…. நிலா, ஆடி மாசத்துல பொறந்தா டா மாப்ள … நம்ம ஊரு ல ஒரு மூட நம்பிக்கை இருக்கு….குடும்பத்துக்கு மூத்த புள்ள… ஆடியில பொறந்தா குடும்பத்தையே ஆட்டி வச்சுரும் னு…. அதுவும் பொண்ணு வேறயா…. இந்த ஊருக்காரங்களுக்கு சொல்லவா வேணும்… குடும்பத்துக்கு தலைச்சன் புள்ள… பொட்டபுள்ளையா ஆடி மாசத்துல வந்து பொறந்து இருக்கு… குடும்பத்தையே தரித்திரம் புடிச்சு உலுக்க போகுது னு வாய்க்கு வந்தத பேச ஆரம்பிச்சுட்டாங்க…. நிலா பொறந்ததுல இருந்து அவங்க வீட்ல யாருக்கும் அவள புடிக்காது… சனியன் புடிச்சவ…தரித்திரம் புடிச்சவ….மூதேவி னு தான் கூப்பிடுவாங்க… ஸ்கூல் ல தமிழ் ஐயா தான் இவளுக்கு இன்பநிலா னு பேரு வச்சாங்க… பெத்த அப்பா அம்மா வ விட ஒரு பங்கு மேல நிலாவோட தம்பி அபிஷேக்… பன்னென்டு வயசு வரைக்கும் நிலாக்கு எதுவும் புரியல…..அப்புறம் போக போக தான் எல்லாம் முழுசா புரிய ஆரம்பிச்சுச்சு…..அதுலயும் நிலா கொஞ்சம் வளர்ச்சி கம்மி….அதை வச்சே அபிஷேக் அவள நிறைய அவமானபடுத்துவான்….நிலா க்கு அடிபட்டா கூட… அவளுக்கு விளக்கமாத்தால நாலு அடி போட்டு ஹாஸ்பிடல் செலவ இழுத்துட்டு வந்து நிக்கிறா மூதேவி னு தான் திட்டுவாங்க…..ஆனா அவ தம்பிய தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க…..அதுலயும் அந்த வீட்ல ஒரு கிழவி இருக்கு…..அலமேலு அம்மாள்…..கதிர்வேலோட அம்மா….சரியான ராட்சசி…. அதுக்கு முழுநேர வேலையே நிலாவ திட்டி தீக்கிறது தான்…..நிலாக்கு விவரம் புரிஞ்சதுக்கு அப்புறம் எல்லாத்தையும் ஏத்துக்க பழகிட்டா…..சிரிக்கிறத நிறுத்திட்டா…..உலகமே எதிர்த்தாலும் அவளுக்கு புடிச்சத செய்ய ஆரம்பிச்சுட்டா….கிரிக்கெட் எப்படி விளையாடுவா தெரியுமா? சும்மா அனல் பறக்கும் அவ ஆட்டத்துல……பெட் மேட்ச் ஜெயிச்சு வர்ற பணத்த சேத்து வச்சு… அங்க இங்க வயல் வேலை பாத்து பணம் சேத்து காலேஜ் படிச்சுட்டு இருக்கா….எதுக்காகவும் அவ பெத்தவங்கள அவ எதிர்பார்க்காதவளா மாறிட்டா…..அவளோட இந்த வைராக்கியத்த அவ வீட்ல திமிரு னு திட்டுவாங்க…..ஆமா….நான் திமிர் புடிச்சவ தான் னு நெஞ்ச நிமித்தி சொல்லுவா…..அவளோட வளர்ச்சி குறைபாட்ட ஊருல உள்ள பசங்கலாம் குட்டச்சி… குட்டச்சி…னு கிண்டல் பண்றத, தன்னோட பெருமையான அடையாளமா மாத்திக்கிட்டா ….அவ சாதாரணமா இப்பிடி தைரியமா மாறல…..அவளோட வலி லாம் தான் அவள இப்பிடி இறுகி போக வச்சுருச்சு…. இந்த தண்ணி இல்லாத நிலம் காய்ஞ்சு இறுகி போயிரும் ல….அது போல தான் நிலாவும்….அவளுக்கான எந்த அன்பும் பாசமும் கிடைக்காததுனால அது எதுவும் எனக்கு தேவை இல்லை னு இரும்பா இறுகி நிக்கிறா….ஏன்…..இப்ப கூட…ஒத்த ஆளா மேட்ச ஜெயிச்சு இருக்கா….ஆனா அவ வீட்ல இப்ப அவளுக்கு நல்ல நல்ல வார்த்தையால பாராட்டு விழா நடந்துட்டு இருக்கும்….எனக்கு இதுல ஆச்சரியமான விஷயம் என்னன்னா…..நிலா வ எப்பிடி உங்க அக்கா உனக்கு பிக்ஸ் பண்ணாங்க? அவ ஃபோட்டோலாம் வேற…..அந்த வீட்டு மனுஷங்க நிலாக்கு இப்பிடி ஒரு நல்லது செய்வாங்களா னு சந்தேகமா இருக்கு…..” சேதுபதி.

         சேதுபதி கூறியதை முழுவதுமாக கேட்ட இளா ……முகத்தில் இருந்த கர்சீபை விலக்கி விட்டு, கட கட வென பக்கத்தில் இருந்த தண்ணீரை அருந்தினான்.

          “டேய்…டேய்….இவ்ளோ நேரம் தொண்டை தண்ணி வத்த பேசிட்டு இருந்தவன் நான் டா….நீ என்னத்துக்கு இப்ப தண்ணி குடிக்கிற? ”  சேதுபதி.

         “உனக்கு தெரியாதா? பேசுறவங்கள விட பேசுறத கேட்டுட்டு இருக்குறவங்களுக்குத்தான் அதிகமா தண்ணி தாகம் எடுக்குமாம்….நேத்து பிபிசி ல சொன்னாங்க….” இளா.

          “உதை வாங்குவ மாப்ள….இப்ப சொல்லு……உனக்கு இப்பிடி பட்ட குடும்பத்துல உள்ள பொண்ணு வேணுமா? கல்லியாணம் ங்கிறது ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்டது இல்ல… ரெண்டு குடும்பம்….அவங்க பழக்கவழக்கம் இப்பிடி நிறைய இணையிற நிகழ்ச்சி….ஸோ…நல்லா யோசிச்சுக்கோ…. ” சேதுபதி.

          ” எனக்கு நிலாவ புடிச்சு இருக்கு…. நிலாக்கு என்னைய புடிக்கனும்… இது ஒன்னு மட்டும் தான்….. வேற எதுவும் எனக்கு தேவை இல்லை…. இந்த இளஞ்சேரனோட வாழ்க்கையில மனைவி னு ஒருத்தி வந்தா… அது நிலா மட்டும் தான்… நிலாக்கு கிடைக்காத எல்லா அன்பும் பாசமும் என் காதலால நான் குடுப்பேன்… நிலா சிரிச்சு பன்னென்டு வருஷம் ஆச்சு னு சொன்ன ல… இனி அவ வாழ்க்கை முழுக்க சிரிச்சுட்டு தான் இருப்பா… “என கண்களில் தீவிர காதல் மின்ன கூறினான் இளா.

        “நண்பேன்டா… லவ் யூ மாப்ள…. உம்ம்ம்ம்ம்மா….. நிலா ரொம்ப நல்லவ டா… அவளுக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்கனும்…. ” சேதுபதி.

         “ச்சீ… ச்சீ…. உன் கிட்ட முத்தம் வாங்கவாடா நான் பொறந்தேன்… ஐயோ… இந்த அழுக்க நான் எங்க போய் துடைப்பேன்… காசிக்கு போனா கூட கழுவ முடியாது போலயே…. ” இளா.

        “ஓவரா பண்ணாதடா…. அப்புறம் இன்னும் நிறைய முத்தம் குடுத்துருவேன்… ” சேதுபதி.

        அந்த நேரம் பார்த்து கடைக்காரப்பையன் உள்ளே வர…. இதே கேட்டதும்… சேதுபதியை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டு வெளியே ஓடி விட்டான்.

         “டேய் டேய்… அவன் நம்மள வேற மாதிரி நினைச்சுட்டு போய்ட்டான் டா… எல்லாம் உன்னால தான் டா…. “என சேதுபதியை ஓங்கி குத்தினான் இளா.

       இளா தன்னை குத்துவதை தடுத்தவன் தடுமாறி அவன் மேலயே விழுந்தான் சேதுபதி. சேதுபதி திடீரென தன் மேல் விழவும் இளாவும் சேதுபதியும் சேர்ந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் இருவர் இதழ்களும் உரசி கொள்ள… சரியாக அதே நேரம் மீண்டும் கடைக்காரப்பையன் உள்ளே வர… இருவரின் நிலையை பார்த்து விட்டு “சை.. சை …உவ்வே… ” என்றவாறு ஓடிவிட்டான்.

       அவன் ஓடியதை பார்த்தவர்கள், “ஹய்யோ… மானம் போச்சே…. ” என இருவரும் ஒரே நேரத்தில் கூற…. அதில் சிரிப்பு வர…. இருவரும் இணைந்து சிரித்தனர்.

         இங்கு இருவரும் சிரித்து கொண்டிருக்க…அங்கு நிலாவின் வீட்டு நடுகூடத்தில் நிலாவுக்கு விளக்கமாறு அபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது….மூன்று விளக்கமாறால் அடித்த வள்ளி, அலமேலு நாலாவது விளக்கமாறை எடுத்து குடுக்க, அதை வாங்கி நிலாவை அடிக்க ஆரம்பித்து இருந்தாள்.

        இது எதுவும் தன்னை பாதிக்காது எனுமாறு அமைதியாக …உறுதியாக நின்று கொண்டிருந்தாள் நிலா…..

                        (நிலா மிளிர்வாள்….)

                       -செல்லம்மாள்பாரதி

    No comments yet.