அத்தியாயம் -02

Chellammal Bharathi | 19 Nov 2025 | Share

      சூரியன் தன் கரங்களை உக்கிரமாக வீசி கொண்டிருக்க… பூஞ்சோலை கிராமத்தின் விளையாட்டு மைதானமான குளத்தை சுற்றிலும் “குட்டச்சி…. குட்டச்சி… குட்டச்சி… “எனும் உற்சாக குரல்கள் காதை கிழித்து கொண்டிருந்தது.

        இவ்வளவு உற்சாக கூக்குரல்களுக்கு காரணமானவளோ சிறிதும் பதட்டபடாமல் தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை லாவகமாக பவுண்ட்ரி லைனுக்கு தள்ளி விட்டு தனது அரை சதத்தை பூர்த்தி செய்தாள்.

       நிலா, 50 அடித்ததும் விசில்கள் பறந்தன… ஆனால் அவள் சிறிது கூட புன்னகைக்காமல் தனது மட்டைக்கு ஒரு முத்தம் கொடுத்து மேலே வான் நோக்கி காட்டி விட்டு அடுத்த பந்தை சந்திக்க தயாரானாள். அடுத்து வீசப்பட்ட மூன்று பந்துகளில் ஆட்டத்தை முடித்து வைத்தாள் நிலா. ஒற்றை ஆளாக நின்று 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தை எளிதாக தன் பக்கம் சாய்த்தாள் நிலா. 7 ஓவர்களிலே 88 ரன்கள் எடுத்து பூஞ்சோலை கிராமம் எளிதாக வெற்றி பெற்றது. இவ்வெற்றிக்கு காரணமானவளோ, வெற்றி கொண்டாட்டத்தில் சிறிதும் பங்கு பெறாமல் ஹெல்மெட்டை சிறிது கழட்டி தனது தலை மேல் வைத்துக்கொண்டு க்ளவுஸ் இரண்டையும் கழட்டியவாறே க்ரவுண்டை விட்டு வெளியேறினாள்.

        அவள் புறப்படுவதை கண்ட இளா, வேகவேகமாக சேதுபதியை இழுத்துக்கொண்டு நிலாவின் முன் சென்று நின்றான். தன் முன் நிழலாடியதை உணர்ந்த நிலா, நிமிர்ந்து பார்த்தாள் . கண்முன்னே சேதுபதியும் புதிதாக ஒருவனும் நிற்பதை கண்டவள் ” என்ன விஷயம்? ” என தன் விழிகளாலயே சேதுபதியிடம் வினவினாள்.

        இந்த கிரகம் புடிச்சவன் எதுக்கு நம்மள இவ முன்னாடி இழுத்துட்டு வந்து நிக்க வச்சு இருக்கான்…. என இளா வை மனதிற்குள் வறுத்து கொண்டே, “அது.. அது… நிலா மா …இவன் என்னோட காலேஜ் ப்ரண்ட்… உன் ஆட்டத்த பாத்துட்டு உனக்கு விஷ் பண்ண வந்து இருக்கான்… “என நிலா பார்த்த பார்வைக்கு திக்கி திணறி சேதுபதி பதிலளித்தான்.

        “அவ்ளோதானா? ” என்ற ரீதியில் இதழை வளைத்துவிட்டு தனது உடைமைகளை எடுத்து கொண்டிருந்தாள்.

      அங்கிருந்து கிளம்ப போன நிலாவை, “ஒரு நிமிஷம்… “எனக் கூறி அவளை தடுத்து நிறுத்தினான் இளா.

       புறப்பட்ட நிலா, நின்று சற்று திரும்பி “என்ன ?” என்ற பொருளில் தன் புருவத்தை உயர்த்தினாள்.

       ” ஐ ஆம் இளா… இளஞ்சேரன்…. நானும் ஒரு ப்ளேயர் தான்… “இளா.

       “ஸோ வாட்? “என பொருள்படுமாறு தன் இரு கைகளை கட்டி கொண்டு இளஞ்சேரனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து கூர்ந்து நோக்கினாள் நிலா.

     ப்பா….என்ன பார்வை டா இது….இவ்ளோ ஷார்பா இருக்கு… நம்ம பேஜ்லர் ஹார்ட்ட குத்தி கிழிச்சுருமோ? என நினைத்து கொண்டு, “உங்க ஆட்டம் வேற லெவல் ங்க… அது எப்படி ங்க ஒரு பொண்ணா இருந்துட்டு இத்தனை பசங்களுக்கு மத்தியில… பசங்க வீசுற பந்த இப்பிடி பந்தாடுறீங்க… இதுவரைக்கும் இப்பிடி ஒரு பொண்ண பாத்தது இல்ல… ஹாட்ஸ் ஆப்ட் யூ மிஸ் நிலா… ” என கை குலுக்க தன் கையை நீட்டினான் இளஞ்சேரன்.

        இளஞ்சேரன் நீட்டிய கையை ஒரு தடவை கூர்ந்து நோக்கி விட்டு… “அவ்வளவு தானா? நான் கிளம்பலாமா? ” என முதன் முறையாக தனது செப்பிதழை அசைத்தாள் நிலா.

       முதல் முறையாக அவளின் குரலை கேட்டவன், அவளின் அந்த ஐஸ் கிரீம் குரலில் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தான்… நிலைமையை உணர்ந்த சேதுபதி, தன் நண்பனை மெல்ல சுரண்ட… அதில் சுய உணர்வுக்கு வந்தான் இளஞ்சேரன்.

        அவள் அவ்வாறு கூறியதும் சிறிது ஏமாற்றமும் நிறைய சுவாரசியமும் தோன்ற… “நிலா…. ” என மீண்டும் அழைத்து நிறுத்தினான் இளஞ்சேரன்.

        விழிகளில் அனல் தெறிக்க… “மிஸ்டர் இளஞ்சேரன்… ஐ ஆம் இன்பநிலா… என் பேர இப்பிடி யாருன்னெ தெரியாதவங்க சுருக்கி கூப்பிடுறது எனக்கு பிடிக்காது… மைண்ட் இட்… “என வார்த்தைகளில் அனல் வீசினாள் நிலா.

         “ஓகே ஓகே…. கூல்… நீங்க நல்லா விளையாடுறீங்க… அத நான் பாராட்டுனேன்….ஜஸ்ட்… அவ்ளோதான்….இது நார்மல் தான? இதுக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகிறீங்க? ” இளா.

       “நீங்க பாராட்டுனது நார்மலா? அது என்ன ஒரு பொண்ணா….இத்தனை பசங்களுக்கு மத்தியில???? நாங்களும் மனுஷ ஜீவன்கள் தான்… ஒரு பொண்ணு ஜெயிச்சா பாராட்டுங்க… ஊக்கப்படுத்துங்க… ஆனா இப்பிடி அதிசயமா பாக்குறத முதல்ல நிறுத்துங்க…..பாராட்டுங்கிற பேர்வழில என்னைய உலக அதிசயமா பாக்குறவங்கள பாத்தாலே எரிச்சல் தான் வருது… டிஸ்கஸ்டிங்… வழிய விடுறீங்களா மிஸ்டர்…??? ” என கூறி விட்டு நிற்காமல் சென்று கொண்டிருந்தாள் நிலா.

         சிறிது தூரம் நடந்தவள், எதிரணியில் விளையாண்ட ஒருவன் தன் பின்புறம் தட்டவும் அதிர்ந்து நின்றாள் நிலா.

         “ஹே…. குட்டி… தம்மாதுண்டு இருந்துட்டு சூப்பரா விளையாடுற… அதுவும் இத்தன ஆம்பள பசங்களுக்கு மத்தியில…. “என தன் மொத்த பற்களையும் காட்டினான் அவன்.

         இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த இளா, அடுத்து நிலா என்ன செய்ய போகிறாள் என்பதை ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தான். அங்கு செல்ல துடித்த சேதுபதி யையும் தடுத்து விட்டான் இளா.

        தன் பின்புறம் தட்டிவிட்டு தன் எதிரே பல் இழித்து கொண்டு நின்றிருந்தவனை ஏற இறங்க தன் அனல் விழிகளால் பார்த்துவிட்டு ,”என்ன? என்னைய தொட்டு பாக்கனுமா? இந்தா தொட்டுக்கோ… “என்றாள் நிலா.

         நிலா நேரடியாக இப்பிடி பேசவும் சற்று அதிர்ந்து விழித்தான் வந்தவன்.

           “ஆனா…. எனக்கும் உன்னைய தொட்டு பாக்கனும் னு ரொம்ப ஆசையா இருக்கே….”என கூறியவாறு தன் முட்டிக்காலை ஓங்கி அவன் இடுப்புக்கு கீழே ஒரு உதை விட்டாள் நிலா.

          நிலா விட்ட உதையில் அலறிகொண்டு சுருண்டு விழுந்தான் வந்தவன். விழுந்தவனின் பக்கத்தில் தரையில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு “நசுக்கிருவேன்…”என கூறி விட்டு தன் இல்லத்தை நோக்கி புறப்பட்டாள் நிலா.

        நடந்த அத்தனையும் பார்த்து கொண்டிருந்த இளா, “சே… என்ன பொண்ணு டா மச்சான்…. இவங்க வீட்ல நிலாவ செம தைரியமா வளத்து இருக்காங்கல்ல? ” என்றான்.

         அதை கேட்ட சேதுபதி, “நிலா வீட்ல தான? ஆமா ஆமா… ரொம்ப நல்லா வளத்து இருக்காங்க… “என்றான்.

         அடி வாங்கி விழுந்து கிடந்தவன் மெல்ல எழுந்து நடக்கவும், “டேய் மச்சான்… வேகமா வாடா… ஒரு முக்கியமான வேலை இருக்கு….”என கூறியவாறு அந்த நிலாவிடம் வம்பு இழுத்தவனை நோக்கி சேதுபதியை இழுத்து கொண்டு சென்றான் இளஞ்சேரன்.

          “சனியன் புடிச்ச மூதேவி….ஊரு பொறக்க போய்ட்டா… பொம்பளை புள்ளையா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்காம….கட்டைய தூக்கிட்டு போய்ட்டா விளையாட னு….ஆம்ளங்க கூட ஊரு சுத்திட்டு திரியுறா குட்டச்சிறுக்கி….ஊருல உள்ள பொம்பளை புள்ளங்க எல்லாம் இப்பிடியா இருக்குதுக? ஊருல இல்லாத அதிசயமா இவ தான் விளையாடுறா… சீக்கிரமா ஒரு இளிச்சவாயன் கையில இவள புடிச்சு குடுத்துறனும்… அப்பதான் இந்த வீட்டுக்கு விடிவு காலம் பொறக்கும்… தரித்திரம் புடிச்சவ… வரட்டும் கழுதை இன்னக்கி… இருக்குற நாலு மயித்தையும் ஆஞ்சு புடுறேன் ஆஞ்சு…. “என துடைப்பக்கட்டையை ஆயத்தமாக வைத்து கொண்டு வெற்றியுடன் வீட்டிற்கு வரும் நிலாவிற்கு வரவேற்புரை நிகழ்த்தி கொண்டிருந்தார் நிலாவின் தாய் வள்ளி….

        அங்கு, நிலாவிடம் வம்பு இழுத்தவனின் உள்ளங்கையை ஒடித்து கொண்டிருந்தான் இளஞ்சேரன்.

                         (நிலா மிளிர்வாள்… )

                       -செல்லம்மாள்பாரதி

    No comments yet.