சுறு சுறுப்பான காலை நேரத்தில் கதிரவன் தன் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்க…..பறவைகளும் காகங்களும் தங்கள் மொழியில் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றுக்கு யாரும் பதில் வணக்கம் கூறாமல் காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தனர் பூஞ்சோலை கிராமத்தினர்.
தங்களுக்கு யாரும் பதில் வணக்கம் கூறவில்லை என்ற கோபத்தில் ஒரு காகம் சாலையில் அமர்ந்து உரக்க கத்தி வணக்கம் கூற….அதனை ஒரு பொருட்டாக மதியாமல் ஒரு சிறுவன் சைக்கிளில் மணி அடித்துக்கொண்டு அந்த காகத்தின் மீது மோதும் அளவிற்கு வேகமாக வந்து கொண்டே, “இன்னக்கி நம்ம ஊருக்கும் சுனையக்காட்டு ஊருக்கும் கிரிக்கெட் மேட்ச்…பிட்ச் ரெடி பண்ணிட்டாங்க…. “என சந்தோஷ கூச்சலிட்டு பறந்து கொண்டிருந்தான்.
” அட நாறப்பயலே… நம்மள எந்த மனுஷனும் மதிக்கிறது இல்ல… திதி குடுக்குற அன்னக்கி மட்டும் என்னைய கூப்பிடுங்க.. ஒரு பருக்கை கூட திங்க மாட்டேன் டா… “என மூஞ்சியை உர்றென தூக்கி வைத்து கொண்டு ஒரு மரக்கிளையில் சென்று அமர்ந்தது.
“நீ கவலை படாத… உனக்கு நான் பதில் வணக்கம் சொல்லுறேன்… “என கம்பீர புன்னகை புரிந்து கொண்டு தன் கதிர்களை நிலப்பரப்பினில் நன்றாக பரப்பி கொண்டு காகத்திற்கு பதில் வணக்கம் கூறியது சூரியன்.
சூரியனின் அந்த கம்பீர புன்னகையில் மயங்கியவாறு அமர்ந்திருந்த காகம், தட் தட் என்ற புல்லட் சத்தம் கேட்கவும் மயக்கத்தில் இருந்து வெளி வந்து சாலையை கவனித்தது. வானில் உள்ள சூரியனுக்கு போட்டியாக பூஞ்சோலை கிராமத்து சாலையில் செஞ்சூரியனாக.. கம்பீரத்தின் மறு உருவமாக ஒரு இளைஞன் புல்லட்டில் வந்து கொண்டிருந்தான். “யார்ரா இவன்? நம்ம ஊருக்கு புதுசா இருக்கான்? இவனோட கூரிய கண்ணுல குத்தீட்டியோட கூர்மையும் மழுங்கி போயிருமே… இவன் உடம்புல இருந்து வர்ற தேஜஸ் ஒளிக்கு சூரியனோட ஒளியும் மங்கி போயிரும் போலயே … எப்பிடியும் ஒரு 28 வயசு இருக்கும்…..என்னே ஒரு கம்பீரம்…. “என தனக்கு தெரிந்தவாறு, புல்லட்டில் வந்து கொண்டிருந்த இளைஞனை மனதிற்குள் வர்ணித்து கொண்டிருந்தது காகம். புல்லட்டில் வந்து கொண்டிருந்த இளைஞன் , மரத்தில் அமர்ந்திருந்த காகத்தை கடந்து செல்லுகையில் அதனை ஒரு பார்வை பார்க்க, அந்த காகம் பிறவி பயன் அடைந்துவிட்டேன் என சந்தோஷ குரலிட்டு மகிழ்ச்சியாக பறந்து சென்றது.
பூஞ்சோலை கிராமத்துக்கு புதியவனான அந்த இளைஞன் ஒரு சிறிய பெட்டிக்கடையின் முன் தனது புல்லட்டை நிறுத்தினான். விழிகள் மட்டும் தெரிய கைக்குட்டையை முகத்தை மறைத்து கட்டி ஹெல்மெட் அணிந்த வந்த அவனை யார் என்று அடையாளம் தெரியாமல் கடைக்கார பையன் “என்ன வேணும் ஸார்? “என விசாரித்தான்.
“தம்பி… சேதுபதி கடை இதுதானப்பா? “என விசாரித்தான் அந்த புல்லட் இளைஞன்.
“இதுதான் ஸார்… ஓஓ… நீங்க அண்ணன பாக்க வந்து இருக்கீங்களா? அண்ணே சாப்பிட வீட்டுக்கு போய் இருக்கு… இப்ப வந்துரும் ஸார்… இல்லனா பக்கத்துல தான் ஸார் அண்ண வீடு.. வீட்ல போய் பாக்குறீங்களா? “
“இல்லடா தம்பி… நான் இங்கயே வெயிட் பண்றேன்… “என கூறியவாறு தனது ஹெல்மெட்டை மட்டும் கழட்டி விட்டு புல்லட்டில் சாய்வாக அமர்ந்தான் அந்த இளைஞன்.
” யாரா இருப்பாங்க… நல்லா வாட்ட சாட்டமா இருக்காங்களே… முகத்தையும் கர்சீப் வச்சு கட்டி மறைச்சு வச்சுட்டாங்க… “என மனதுக்குள் நினைத்துக்கொண்டு வேலையை கவனித்தான் கடைக்காரப்பையன்.
சிறிது நேரத்தில் சேதுபதி வந்து விட, “அண்ணே… உங்கள தேடி ஒரு ஸார் வந்து இருக்காங்க… “என புல்லட் இளைஞனை சேதுபதிக்கு கைகாட்டினான் கடைக்காரப்பையன்.
” சரி டா… நான் பாத்துக்கிறேன்.. நீ வேலைய பாரு… ” என்று கூறி விட்டு அந்த புல்லட் இளைஞனை நோக்கி நடந்தான் சேதுபதி.
“நான் தான் சேதுபதி… நீங்க யாரு? ” என புல்லட் இளைஞனிடம் வினவினான் சேதுபதி.
“டேய்.. மச்சான்… என்னைய தெரியலயா? “என சிரித்தவாறு தனது கர்சீப்பை சிறிது விலக்கி முகத்தை காட்டி விட்டு திரும்ப தன் முகத்தை மறைத்துக் கொண்டான் அந்த புல்லட் இளைஞன்.
“டேய்….. மாப்ள…. இளா….. எவ்ளோ பெரிய ஆளு நீ… இந்த சின்ன ஊருக்கு…. முதல்ல உள்ள வாடா… வீட்டுக்கு வந்து இருக்கலாம்ல… ” என மகிழ்ச்சியுடன் தனது கல்லூரி நண்பனை ஆரத்தழுவி கடைக்குள் அழைத்து சென்றான் சேதுபதி.
“இங்க ஒரு முக்கியமான விஷயமா வந்தேன்டா…..அப்பிடியே உன்னையவும் பாத்துறலாம் னு…. வீட்டுக்கு லாம் வந்தா நேரம் ஆகிரும் டா மச்சான்…. அப்புறம்…. ஸார் எப்படி இருக்கீங்க? உள்ளூர்லயே செட்டில் ஆகிட்டியா எரும? “என்றான் இளா என்கிற புல்லட் இளைஞன்.
“ஹா ஹா…. ஆமா டா…. உள்ளூர்க்குள்ள தான் என் எதிர்காலம் சுத்திட்டு இருக்கு…. அதான் நானும் அப்பிடியே….. “என லேசாக வெட்கப்பட்டான் சேதுபதி.
“டேய்… மாப்ள…. பொண்ணு யார்ரா? மாமன் பொண்ணா? “இளா.
“ப்ச்… என் கதைய விடு…நீ என்ன முக்கியமான வேலையா வந்து இருக்க? அத சொல்லு முதல்ல… ” சேதுபதி.
“வீட்ல எனக்கு பொண்ணு பாத்து இருக்காங்க மச்சான்… பொண்ணு இந்த ஊரு தான்…. எனக்கு இந்த பொண்ணு தான் செட் ஆகும் னு அக்கா ஒத்த காலுல நிக்குது டா…. அதான்… பொண்ணு வீட்லயே நேரா போய் பொண்ண எனக்கு புடிக்கல னு சொல்ல போறேன் டா…. ” இளா.
“லூசா டா நீ? எங்க ஊரு பொண்ண கட்டிக்க உனக்கு கசக்குதோ? நீ ஏன் கல்லியாணம்னா எட்டிக்காயா நினைக்கிற? மொதல்ல பொண்ண நேரா பாத்து பேசி பாரு…. சரி… பொண்ணு ஃபோட்டோ இருக்கா? ” சேதுபதி.
“என் மனைவியா வரப்போறவள பத்தி எனக்கு னு ஒரு சில ஆசை இருக்கு டா மச்சான்….. இப்பிடி கிராமத்துக்குள்ள உள்ள பொண்ணு லாம் எனக்கு ஒத்து வராது டா…. ” இளா.
“சொல்லு… உன் ஆசைய… கேப்போம்…. ” சேதுபதி.
“அட போடா…. எனக்கு இந்த பயந்த சுபாவம் உள்ள பொண்ணு… மரியாதை ங்கிற பேருல கீழ குனிஞ்சுட்டு பத்தடி தள்ளி நின்னு பேசுற பொண்ணு லாம் செட் ஆகாது…. தைரியமா தில்லா இருக்கனும்… வாட்சப் ஸ்டேட்டஸ்..டிபி ல மட்டும் தைரியமான பொண்ணு னு காமிச்சுக்காம… நிஜத்துலயும் தைரியமான நேர்மையான பொண்ணா இருக்கனும்… நெருப்பு மாதிரி இருக்கனும்…. இப்ப லாம் யாரு மச்சான் தைரியமா இருக்குறாங்க? பசங்க லைட்டா கிண்டல் பண்ணுனாலும் ஓஓ னு அழுகுறாங்க… இல்ல… வீட்ல ஆளு கூட்டிட்டு வர்றாங்க… அந்த இடத்துலயே தைரியமா திருப்பி எந்த பொண்ணும் ஒரு அறை கூட… இவ்வளவு ஏன்… ஒரு சின்ன மொறைப்பு கூட மொறைக்க மாட்டேன்ங்குறாங்களே…. டக்குனு கண்ணு கலங்கி தான நிக்கிறாங்க… இப்பிடிலாம் என் பொண்டாட்டி இருக்க கூடாது…. அண்டஞ் சிதறினால் அஞ்சமாட்டோம் ங்கிற பாரதி யோட வார்த்தைக்கு அர்த்தமா அவ இருக்கனும்….. ” இளா.
“ஹா ஹா ஹா…. உன்னைய மாதிரி பிரபலமான செலிப்ரட்டிய கல்லியாணம் பண்ணிக்கனும் னா சும்மாவா? ” சேதுபதி.
“டேய் டேய்…. நான் யாருனு அடையாளம் தெரிய கூடாது னு தான் கர்சீப்ப கட்டி முகத்த மறைச்சு வந்து இருக்கேன்…. நீ இப்பிடிலாம் பேசி என்னைய காட்டி குடுத்துறாத…. ” இளா.
“சரி சரி…. சொல்ல மாட்டேன்… பொண்ணு ஃபோட்டோ இருந்தா குடு… என் ஊரு பொண்ணு யாரு னு பாக்குறேன்… ” சேதுபதி.
“இந்தா…. இதான்…. பாரு… என்னமோ மைதா மாவு ல செஞ்சு வச்ச பொம்மை மாதிரி இருக்கு…. இந்த பொண்ணு லாம் எப்பிடி டா எனக்கு செட் ஆகும்? ” என கூறியவாறு ஃபோட்டோவை சேதுபதியிடம் காட்டினான்.
பொண்ணு ஃபோட்டோவையே சிறிது நேரம் அமைதியாக பார்த்த சேதுபதி… “இந்த பொண்ணா? ” என்று மட்டும் கேட்டு விட்டு அமைதியாகி விட்டான்.
அந்த நேரம் சைக்கிளில் மணி அடித்துக்கொண்டு ஒரு குட்டி பையன், “சேது அண்ணா… மேட்ச் ஆரம்பிச்சாச்சு…..சுனையக்காடு பர்ஸ்ட் பேட்டிங்…. பத்து ஓவர் ல 87 ரன் எடுத்துட்டாங்க…..அடுத்து நாம தான்… நீங்க மேட்ச் பாக்க வரலயா? ” என கத்திக் கொண்டு பறந்து கொண்டிருந்தான்.
“டேய் இளா…மேட்ச் பாக்க போலாமா? “சேதுபதி.
“என்ன விளையாடுறியா? நான் வந்த வேலைய பாத்துட்டு கிளம்புறேன்…போடா…” இளா.
“எப்பிடியும்….புடிக்கல னு தான சொல்ல போற… மேட்ச் பாத்துட்டு போகலாம்….நானும் வேணுனா கூட வர்றேன்….” என்று இளா வையும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் அவர்கள் ஊர் குளத்துக்கு சென்றான் சேதுபதி.
“என்னடா….குளத்துக்குள்ள தண்ணி இருக்கும் னு பாத்தா….நீங்க அத கிரிக்கெட் க்ரவுண்டா மாத்தி வச்சு இருக்கீங்க…..”இளா.
“ஹா ஹா….நாங்கலாம் அப்பிடித்தான்… மழைகாலத்துல தான் இந்த குளத்துக்கு தண்ணீ வரும்….மத்த நாளுல லாம் எங்க ஊரு சேப்பாக்கம் இதுதான்….நாங்க இருபது ஓவர் மேட்ச்ச பத்து ஓவரா வச்சு விளையாடுவோம்…இதுல பர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சுருச்சு….88 ரன் எடுத்தா எங்க ஊரு வின்….இது ரெண்டு ஊருக்கான பெட் மேட்ச்… ரெண்டு ஓவர் ல ரெண்டு பேரு அவுட் ஆகி நிக்கிறானுக….என்ன தான் விளையாடுறாங்களோ இந்த ஊரு பசங்க….இந்த மேட்ச் ல ஜெயிக்கிற ஊரு டீம் க்கு 5001 ரூபாய்….” சேதுபதி.
இதற்கு பதிலளிக்க இளா வாய் திறக்க போகும் போது….பக்கத்தில் இருந்த அனைவரும் உற்சாக கூச்சலிட்டனர்…..யாராவது சிக்ஸ் எதுவும் அடிச்சுட்டாங்களா? என நினைத்தவாறு க்ரவுண்டை இளா உத்து பார்க்க….குட்டையான ஒரு பையன் பேட்டிங் க்கு வந்து கொண்டிருந்தான்…அவனை உற்சாகபடுத்த தான் இந்த கூச்சல்…..அவர்கள் இட்ட கூச்சலில் காது வலிக்க ஆரம்பித்தது இளாவிற்கு. இளா திரும்பி தனது நண்பன் சேதுபதியை பார்க்க, அவன் மோகன புன்னகையுடன் க்ரவுண்ட்டில் இறங்கும் அந்த குட்டையான பையனையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான்.
அட யார்ரா இவன்….இப்பிடி மொத்த பேரையும் ரசிகனாக்கி வச்சு இருக்கான் னு நினைத்துக்கொண்டு அந்த குட்டை பையனை நன்றாக உற்று பார்த்தான்…..அப்பொழுது அந்த குட்டையான பையன் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை சிக்ஸாக பறக்க விட்டான்….அதைக்கண்டதும் மேட்ச் பார்த்து கொண்டிருந்தவர்கள்….”குட்டச்சி….குட்டச்சி…குட்டச்சி….”என கூக்குரலிட்டனர்.
” என்னது… குட்டச்சியா? அப்ப அது பொண்ணா டா மச்சான்? ” என இளா சேதுபதியிடம் வினவ… அவன் “ஆமாம் ” என தலையாட்டினான்.
“ஹே… செம ல… இத்தன பசங்களுக்கு மத்தியில….ஒத்த பொண்ணா…பசங்க வீசுற பந்த இப்பிடி சிக்ஸ் லாம் அடிக்குதே….உங்க ஊருல இப்பிடி பட்ட பொண்ணு லாம் இருக்கா டா? செம போல்ட் ல….” என கூறி கொண்டிருக்கையில் அந்த குட்டியான பொண்ணு அடித்த சிக்ஸரில் பந்து பறந்து வந்து இளாவின் காலடியில் விழுந்தது.
அதை எடுத்து திரும்ப க்ரவுண்டுக்குள் வீசி கொண்டே சேதுபதி, இளாவிடம் கூறினான்.. “இந்த பொண்ணு தான் டா எங்க ஊரு லேடி சச்சின்… இதான் டா மாப்ள… நீ பாக்க வந்த பொண்ணு… நிலா.. இன்பநிலா….. “
“என்ன???? அந்த மைதா மாவு மூஞ்சியா இந்த பொண்ணு? ” என மனதுக்குள் ஆச்சரியப்பட்டு கொண்டே க்ரவுண்டில் அந்த பொண்ணை இளா பார்க்க … மீண்டும் சிக்ஸ் அடித்து ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தாள் நிலா….
(நிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.