பாகம் 8

Vaishnavi Vijayaraghavan | 28 Jul 2026 | Share

பாகம் 8 

” கோபால் நீயும் பிரேமாவும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்கப்பா.

 எவ்வளவு நேரம் ஹாஸ்பிட்டலே உட்கார்ந்து இருப்பீங்க? ” என்றார் ராஜசேகர்.

” இல்லப்பா சேகர், தர்ஷி கண் விழிக்கட்டும். அவளைப் பார்த்த அப்புறமா நாங்க வீட்டுக்கு போறோம் “

” வீட்டுக்குன்னா எங்க சொல்றப்பா? இங்கேயா? இல்ல சென்னையா?”

“இல்ல இல்ல சேகர், இங்க தான் சொன்னேன். நீ கொஞ்சம் நார்மலா ஆனப் பிறகே நாங்க போறோம். ஓகே வா?”

“சரி கோபால். ரொம்ப தேங்க்ஸ் பா “

” என்னப்பா இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்ற? “

“இப்போதைக்கு நாங்களே தர்ஷினியை பாக்குற நிலைமையில் இல்ல. உங்களை எல்லாம் பார்த்தா இன்னும் அவ டென்ஷன் ஆயிடப் போறா. அதனால நீங்க வீட்ல போய் இருங்க.

அனேகமா நாளைக்கு காலைல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாரு டாக்டர். நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரோம் “

“சரி சேகர், நீ வீட்டுக்கு கூட்டிட்டு வா. ரெண்டு நாளைக்கு உங்க கூட இருந்துட்டு போகலாம் என்று நினைத்து தான் வந்தோம்”

” உனக்கும் பிசினஸ் இருக்கு தொல்லை பண்றேன்னு நினைக்காத. இந்த சடங்கு எல்லாம் முடிகிற வரைக்கும் பத்து நாளைக்கு இருக்க முடியுமா பா? அதுக்கப்புறம் நானும் கற்பகவல்லியும் உங்க கூட சேர்ந்து சென்னைக்கு வந்திடறோம்.

 கொஞ்ச நாளைக்கு என் பொண்ணுக்கு இங்க இருக்க வேண்டாம்னு நினைக்கிறோம். கொஞ்சம் மாறுதலா இருக்கறதுக்காக தான் “

” சரிப்பா கண்டிப்பா, என்னோட பிசினஸ் மீட்டிங்லாம் நான் ஆன்லைன்ல மாத்திக்கிறேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.

 அங்க என்னோட பிஏ இருக்காரு.

 அவர் எல்லாம் பாத்துக்குவாரு. இந் நேரத்துல நீ டென்ஷன் ஆகாத, தைரியமா இரு. அப்படியே ஏதாவது அவசரம் நான் கூட பிளைட்ல போயிட்டு வந்துடறேன்.”

” ரொம்ப தேங்க்ஸ் பா. ” என்று சொல்லி அவர் கையை பிடித்து கண்களில் வைத்து அழுதார் ராஜசேகர்.

 ராஜசேகர் சொன்னதை தன் மனைவியிடம் சொன்னார் கோபாலகிருஷ்ணன்.அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

 ஆனால் விக்னேஷ் அத்தனை நாள் வொர்க் ஃபரம் ஹோம் கிடைக்காது என்ற காரணத்தால், இரண்டு நாட்கள் அங்கு இருந்து, தர்ஷினி வீட்டுக்கு வந்ததும், தர்ஷினியை பார்த்து சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

 ராஜசேகர் நினைத்தது போல மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவில்லை.

 அதற்கு மறுநாளே டிஸ்சார்ஜ் செய்தனர். 

 ராஜசேகர் வீட்டிற்கு வந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்து விக்னேஷ், கோபாலகிருஷ்ணன் பிரேமலதா மூவரும் ஹோட்டலில் தங்கினார்கள்.

 வீட்டில் தன்னுடைய அத்தை சற்று அதிகமாகப் பேசுவார்கள். அதனால் தான் இல்லாத போது அவர்கள் அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து ராஜசேகரும் கோபாலகிருஷ்ணனை தன் வீட்டில் தங்குமாறு வற்புறுத்தவில்லை.

 ராஜசேகரின் அத்தை முத்துலட்சுமி.

 அவர்தான் சாஸ்திரம் சம்பிரதாயம் பற்றி பேசியதால் பிரேமலதாவிற்கு கோபம் வந்து திட்டி விட்டார்.

 முத்துலட்சுமிக்கு ஒரே மகன் பெயர் குமரவேல். தர்ஷினிக்கு தாய் மாமன் முறை. அவனுக்கு தர்ஷினியின் மேல் ஒரு தலை காதல். ஆனால் ராஜசேகர் பெரிய பணக்காரன் மற்றும் அந்தஸ்து உடையவர் என்பதால் அவரை எதிர்த்தோ அவரிடம் நேரடியாக கேட்கவோ தைரியம் இல்லாமல் தர்ஷியின் மேல் தனக்கு இருந்த காதலை மூடி வைத்து விட்டான்.

 அதேபோல கற்பகவல்லியின் அண்ணன் அண்ணி சோமசுந்தரம் மற்றும் ஈஸ்வரி. அவர்களுக்கும் ஒரே மகன் பெயர் தீரஜ்.

 தீரஜ் ஒரு ஐடி கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிறான்.

 மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறான். கற்பகவல்லியின் அண்ணன் அண்ணிக்கு தங்களது ஒரே மகனை தர்ஷினிக்கு கட்டிக் கொடுக்க ஆசை. ஆனால் அதற்குள் தர்ஷினி வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்களும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டனர்.

 ஆனால் தீரஜ்க்கு தர்ஷினி மேல் காதல் இல்லை. தன்னுடைய அத்தை மகள் என்ற அன்பும் பாசமும் மட்டுமே இருந்தது. அவளுடன் எப்போதுமே நன்றாக பேசிப் பழகுவான்.

 தீரஜ் ஆஃபீஸ் விஷயமாக லண்டன் சென்று இருந்ததால், அவனுக்கு அஜய் பற்றிய விஷயம் தெரியாது.

 குமரவேல் விஷயம் தெரிந்து தன் அம்மாவுடன் அவனும் ராஜசேகர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான். தர்ஷினி வீட்டுக்கு வந்ததும் பார்த்து விட்டு செல்ல அவனும் காத்திருந்தான்.

 யாரும் இல்லாத சமயமாக தன் அம்மாவிடம் போய் பேசினான் குமரவேல்,

” அம்மா”

” சொல்லுடா”

” நான் ஒன்னு சொல்லவா? “

” என்னடா பேசுறத பாத்தா, ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கு? “

” நீங்க அறிவாளி தான் மா, சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே? “

” விஷயத்தை சொல்லு “

 ஒருமுறை அக்கம் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு,

” அம்மா இந்த சடங்கெல்லாம் முடிஞ்சா அப்புறமா தர்ஷினியே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி, ராஜசேகர் மாமா கிட்ட கேக்குறீங்களா? “

” என்னடா சொல்ற? அவ ஒரு விதவை பொண்ணு. அவளைப் போய் கல்யாணம் பண்ணிக்கினம்னு நினைக்கிற? “

” அம்மா, சின்ன வயசுல இருந்தே எனக்கு தர்ஷினி என்றால் ரொம்ப பிடிக்கும். அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இல்லைன்றதனால நான் அமைதியாக இருந்து விட்டேன்.

 அவளும் வேற யாரையோ லவ் பண்ணா, சரி நமக்கு விதி அவ கிடைக்கலன்னு நினைச்சேன். கடவுளே எனக்கு ஒரு சான்ஸ் தர மாதிரி தோணுது. 

ராஜசேகர் மாமா கிட்ட இப்போ கேட்டா அவளுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிற மாதிரி இருக்கும். நானும் லைஃப்ல செட்டில் ஆயிடுவேன். என்ன சொல்றீங்க?”

” டேய் அவ முழுகாம இருக்காளே டா “

” அதனால என்ன? “

” பொறக்க போற குழந்தைக்கு நீ அப்பாவா இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா? “

” சே சே, கண்டவன் குழந்தைக்கு எல்லாம் நான் ஏன் அப்பாவா இருக்கணும்? “

“பின்ன?”

” அவ முழுகாம தானே இருக்க குழந்தை பொறந்தா பாத்துக்கலாம்”

” என்னடா பேசுற நீ? “

” அம்மா, குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அது என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்” 

” டேய் வேணாம்டா “

” என்னமா பாவம் எல்லாம் பாக்குறியா என்ன?”

” இல்லடா என்னதான் இருந்தாலும், ராஜசேகர் என்னோட அண்ணன் பையன். அவனோட பொண்ணாச்சே”

” அப்போ வாழ்நாள் ஃபுல்லாவும் கடனும் பிரச்சனையுமா நம்ம வாடகை வீட்டிலேயே இருக்கலாம் என்று சொல்றீங்களா? “

” அதுக்கு இல்ல? “

” அம்மா, நான் முடிவு பண்ணிட்டேன். மாமா கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி, நடிச்சு நல்ல பேரு சம்பாதிச்சு, அவரே அவர் பொண்ண எனக்கு கட்டித் தரணும்னு நினைக்கிற மாதிரி பண்ண போறேன்”

” வேலா, நீ எல்லாம் பண்ணு ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னே ஒன்னு பண்ணிக்கவா? “

” என்னம்மா? “

” உன்னோட ஜாதகத்தையும் அந்த பொண்ணு தர்ஷினியோட ஜாதகத்தையும் எடுத்து போய் ஐயர் கிட்ட பார்த்துட்டு வந்துடவா? “

” எதுக்குமா? “

” இல்ல அவளுக்கு இரண்டாவது தாலியாவது நிலைக்குமான்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான். நீ வேற ரொம்ப ரிஸ்க் எடுக்க போற? உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா? உன்னை தவிர எனக்கு வேற யாருடா இருக்காங்க “

 தன் அம்மா அப்படி சொன்னதும் உள்ளூர அவனுக்கும் ஒரு பயம் வந்துவிட்டது.

” சரி சரி நாளைக்கு கேட்டு சொல்லு அதுக்கப்புறம் நாளை மறுநாளில் இருந்து நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்” என்றான் குமரவேல்.

 முதலில் பேசும் போது யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த குமரவேல், பேச்சின் சுவாரசியத்தில் 

 இவை அனைத்தையும் கற்பகவல்லியின் அண்ணன் அண்ணியான சோமசுந்தரம் மற்றும் ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.

 இதைக் கேட்ட அவர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் தங்கள் மகன் தீரஜை ஏன் தர்ஷினிக்கு கட்டிக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கத் தொடங்கினர். 

 தர்ஷினியின் திருமணத்திற்கு முன்னால் ஆசைப்பட்டார்களே தவிர, தர்ஷினிக்கு திருமணம் ஆன பின் அவர்கள் அதைப்பற்றி நினைக்கவில்லை.

 இப்போது குமரவேல் பேசியதை கேட்டவுடன், கெட்டவனான அவனுக்கு தர்ஷினியை கட்டிக் கொடுப்பதை விட உண்மை அனைத்தையும் ராஜசேகர் இடம் கூறி தங்கள் மகனுக்கு தர்ஷினியை கேட்கலாம் என்று இருவரும் அவர்களது ரூமிற்கு வந்து பேசிக் கொண்டனர். 

 ஆனால் அவர்களுடைய மகன் பற்றி அவர்களுக்கு தெரியும். எப்படியாவது அவனை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள்.

 அடுத்த வாரம் அவன் லண்டனில் இருந்து வருகிறான். அவனை எப்படியாவது பேசி தயார் செய்து கருணையின் பெயரில் தர்ஷினியுடன் நெருங்கி பழக வைத்து, அவளது நிலைமையை புரிய வைத்து. அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கள் மகனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர்.

” என்னங்க இப்பவே நம்ம பையன் கிட்ட விஷயத்தை சொல்லலாமா? “

 என்றார் ஈஸ்வரி.

” இப்ப வேண்டாம். அடுத்த வாரம் அவன் வரட்டும் நம்ம நேர்ல பேசினா தான் சரி வரும். அவனை நேரடியாக தர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோன்னு நம்ம சொல்லவே கூடாது. 

ஏன்னா நம்ம அப்படி சொன்னா அவன் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டான். அவனுக்கே அவ மேல பாவம் வர மாதிரி நம்ம பேசணும். அவனே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லணும் “

 என்றார் சோமசுந்தரம்.

” சரிங்க புரியுது ” என்றார் ஈஸ்வரி.

 இவர்கள் நால்வரும் இப்படி திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். 

 இரண்டு நாட்களாக ஹாஸ்பிடலில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தாள் தர்ஷினி.

 ஆனால் தன் அப்பா அம்மா கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு, ஒரு ஜடம் போல இருந்தாள்.

 வீட்டில் உள்ள நால்வரும் திட்டம் போடுவது தெரியாமல் இரண்டு நாட்கள் கழித்து தர்ஷினியை வீட்டுக்கு அழைத்து வந்தனர் ராஜசேகர் மற்றும் கற்பகவல்லி.

 டிஸ்சார்ஜ் செய்து காரில் ஏறும் முன்னரே தன் நண்பன் கோபாலகிருஷ்ணனுக்கு கால் செய்தார் ராஜசேகர்.

 விக்னேஷ், கோபாலகிருஷ்ணன் பிரேமலதா மூவரும் கால் டாக்ஸி வைத்துக் கொண்டு ராஜசேகர் வீட்டிற்கு வந்தனர்.

 ராஜசேகர் வருவதற்கும் கோபாலகிருஷ்ணன் வருவதற்கும் சரியாக இருந்தது.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.