சித்திரப் பேரழகி

Vaishnavi Vijayaraghavan | 28 Apr 2026 | Share

சித்திரப் பேரழகி 

சித்திர நல்லூர் கிராமம்( கற்பனை பெயர்), தஞ்சாவூர் மாவட்டம். 

“இளமதிப்பிரியன் வெட்ஸ் தேனிசைச்செல்வி” என்று பூ அலங்காரத்துடன் திருமண மண்டப வாசலில் வரவேற்பு பலகை பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்க அதில் சிரித்த முகத்துடன் மணமகனும் மணமகளும் வணக்கம் சொல்லிய புகைப்படம் இருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே அனைவரும் உள்ளே சென்றனர்.

தேனிசைச்செல்வியின் பெற்றோர்

வேந்தன் மற்றும் மலர்க்குழலி.

தங்கள் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால் சீரும் சிறப்புமாய் செய்தனர்.

தேனிசைச்செல்வியின் அண்ணன் 

அனல் விழியன், பெரிய அக்கா பைந்தமிழ் செல்வி, சிரிய அக்கா வளர்மதி அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

 பெண் வீட்டு கல்யாணமாக இருந்தாலும், அனைத்து வேலைகளையும் காண்ட்ராக்டில் விட்டதால் பெண் வீட்டாரருக்கு எந்த பரப்பரப்பும் இல்லை. 

அவரவர் தங்கள் ஜோடிகளுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வதும் வருபவர்களை வரவேற்பதும், நலம் விசாரிப்பதுமாக இருந்தனர்.

டிஜே போட்ட பாட்டிற்கு சிறு குழந்தை முதல் வயதானவர் வரை, வயது பாரபட்சம் இல்லாமல் நடனத்தில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் ஆடிக் கொண்டு இருந்தனர். 

இளமதிப்பிரியன் தேனிசைச்செல்விக்கு ஏற்றார் போல அழகிலும் அறிவிலும் அந்தஸ்திலும் குணத்திலும் சிறந்தவன்.

வந்த அனைவரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று இரு வீட்டாரிடம் சொல்லிவிட்டு சென்றனர்.

பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் இவர்களுடையது.

இருவருக்குமே ஒருவரை ஒருவர் பார்த்த உடனேயே பிடித்து விட்டது.

அதனால் மறு மாதமே திருமணம் நிச்சயக்கப்பட்டது. இப்போது திருமணம் நடைபெற உள்ளது.

இருவரும் முகம் மலர்ச்சியுடன் அனைத்து ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர்.

 இளமதிப்பிரியனின் அப்பா செல்வரசன், அம்மா வெற்றியரசி.

அக்கா நீலவிழி மற்றும் தங்கை அருளரசி.

அக்காவிற்கு திருமணம் ஆகி விட்டது. தங்கை காலேஜ் படிக்கிறாள்.

 மணி 10 ஆகிவிட்டது. மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள் அனைவரையும் உபசரித்து விருந்துக்கு அழைத்துச் சென்றனர்.

 ஒரு வழியாக கிஃப்ட் கொடுக்கும் கூட்டம் காலியானது. அனைவரும் சாப்பிட சென்று விட்டனர்.

 அப்போது போட்டோகிராஃபர் மணமகன் மற்றும் மணமகளிடம் தோளில் கை போட்டும், அருகில் அமர்ந்தும், கைபிடித்தும் இன்னும் பல ஸ்டில்களை எடுத்தார்.

இருவருக்கும் வெட்கமாக இருந்தது.

இருப்பினும் போட்டோகிராஃபர் சொல்வது போல போஸ் கொடுத்தனர்.

போட்டோகிராஃபர் மணமகனை மணமகளின் இடுப்பில் கை வைத்து, மணமகள் கீழே விழப் போவதற்கு முன்னர் மணமகன் தாங்கிப்பிடித்து தூக்குவது போல நிற்கச் சொன்னார்.

“அண்ணா அதெல்லாம் வேண்டாம்”

என்றான் இளமதிப்பிரியன்.

தேனிசைச்செல்விக்கும் அதில் விருப்பமில்லை. 

‘தன் மனதில் நினைத்ததை இளமதிப்பிரியன் சொல்கிறானே?’ என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

ஆனால் போட்டோகிராஃபரும் அவருடன் இருந்த மற்ற இரண்டு அசிஸ்டன்ட்களும் 

‘அந்த ஸ்டில் ரொம்ப நன்றாக இருக்கும்’ என்று வேறு ஒரு திருமணத்தில் எடுத்த ஃபோட்டோவை காண்பித்து வற்புறுத்தினார்கள்.

இளமதிப்பிரியனால் அதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியவில்லை.

அதனால் தன் வருங்கால மனைவியிடம்,

“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா, அந்த ஸ்டில் எடுத்துக்கலாமா?” என்றான்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள்.

பின்னர் வேறு வழி இன்றி சம்மதம் தெரிவித்தாள்.

அந்த போட்டோகிராஃபர் சொன்னது போல இருவரும் போஸ் கொடுத்தனர்.

ஆனால் அதன் பின்னர் தேனிசைச்செல்வியின் முகம் 

மாறிவிட்டது. 

‘அவளுக்கு அது பிடிக்கவில்லை’ என்பதை புரிந்து கொண்டான் இளமதிப்பிரியன்.

‘அவள் முதலிலேயே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே? சரி என்று சொல்லிவிட்டு அப்புறம் ஏன் அவள் முகம் இப்படி மாறிவிட்டது?’ என்று நினைத்துக் கொண்டான். 

இருவரும் உணவருந்தும் போது கூட அவளுடைய முகம் மாறவில்லை. சற்று இறுக்கமாகவே இருந்தாள்.

அப்போதும் ஊட்டி விட சொல்லி இரண்டு ஃபோட்டோக்கள் எடுத்தனர்.

 ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்தாளே தவிர, அந்த சிரிப்பு அவளுடைய ஆழ் மனதில் இருந்து வந்ததாக இளமதிப்பிரியனுக்கு தெரியவில்லை.

விடியற்காலை எழுந்தவுடன்,

எண்ணெய்  நலங்கு வைக்க இரு வரையும் அழைத்தனர்.

 மணமகன் அறையில் இருந்து இளமதிப்பிரியன் வருவதற்கும் மணமகள் அறையிலிருந்து தேனிசைச்செல்வி வருவதற்கும் சரியாக இருந்தது. விடியற்காலை என்பதால் யாரும் எழுந்திருக்கவில்லை.

அப்போது தேனிசைச்செல்வியே அவனிடம் முதலில் பேசினாள்.

“குட் மார்னிங்” என்று ஸ்மைல் செய்தபடி கூறினாள்.

அப்போதுதான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

 அவனும் ஸ்மைல் செய்தபடி “குட் மார்னிங்” என்றான்.

அனைத்து சம்பிரதாயங்களும் நடத்தினார்கள்.

 

இருவருக்கும் திருமண உடைகளை கொடுத்து அதை மாற்றிக் கொண்டு வரச் சொன்னார் ஐயர்.

மங்கள வாத்தியம் முழங்க தேனிசைச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டினான் இளமதிப்பிரியன்.

திருமணத்திற்கு பின் இருக்கும் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு மணமகன் மணமகள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் மணமகன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற சொன்னார்கள்.

அந்த சம்பிரதாயங்களும் முடிந்து பெண் வீட்டிற்கு முதலிரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு உணவு அருந்திய பின் இருவரையும் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

தேனிசைச்செல்வி சற்று பதற்றத்துடன் கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்த இளமதிப்பிரியன், அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“ஒன்னும் இல்லைங்க” என்று சொல்லும் பொழுதே அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது.

“ரூமே ஏசியால சில்லுனு இருக்கு, ஃபேன் ஓடுது. அப்படி இருக்கும் போது ஏன் உனக்கு இப்படி வியர்க்குது”

“தெரியல” என்ற சொல்லும் பொழுது அவளுடைய குரல் நடுங்குவதை புரிந்து கொண்ட இளமதிப்பிரியன்.

“நான் உன்னை தேன் என்று கூப்பிடலாமா?”

சரி என்பது போல தலை அசைத்தாள்.

“நீயும் என்னை பேர் சொல்லியே கூப்பிடு”

“அது, எங்க வீட்ல இருக்கவங்க ஒத்துக்க மாட்டாங்க”

“எங்க வீட்ல யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன். சரி அட்லீஸ்ட், நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது மட்டும் கூப்பிடு”

“சரி உங்களை எப்படி கூப்பிடட்டும்?”

“உன்னுடைய விருப்பம். நான் சொன்னேன் அல்லவா தேன் என்று கூப்பிடவா என்று. அதேபோல நீயும் சொல்லு அது எனக்கு ஓகேவா இல்லையான்னு நான் சொல்றேன்”

“உங்களை எல்லாரும் உங்க வீட்ல எப்படி கூப்பிடுவாங்க?”

“இளான்னு என்னோட வீட்ல இருக்கவங்க எல்லாம் கூப்பிடுவாங்க. பிரியன்னு என்னோட பிரெண்ட்ஸ் கூப்பிடுவாங்க”

“ஓ, நான் மதின்னு கூப்பிடவா?”

“சரி கூப்பிடு” என்று சொல்லி அவள் அருகில் நகர்ந்து அமர்ந்தான்.

இவ்வளவு நேரமாக சற்று நடுக்கம் குறைந்திருந்தது. அவன் அருகில் வந்ததும் மறுபடியும் நடுக்கம் அதிகமானது.

“இதோ பாரு தேனு. என்னால புரிஞ்சுக்க முடியுது. நம்ம ரெண்டு பேரும் பார்த்து முழுசா இரண்டு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள முதல் இரவு நடக்கணும்னா எந்த பொண்ணுக்காக இருந்தாலும் பயமாகவும் நடக்கமாகவும் தான் இருக்கும்.

உண்மைய சொல்லனும்னா எனக்கே கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. அதனால நீ கவலைப்படாத நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருவர் நல்லா புரிஞ்சிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையில நடக்க வேண்டியது தானாக நடக்கும்”

என்று அவன் சொன்னது தான் தாமதம்.

“ஓகே மதி, நான் தூங்கட்டுமா? குட் நைட்” என்று சொல்லிவிட்டு அவன் சரி என்று பதில் சொல்வதற்குள் கட்டிலில் ஓரமாக படுத்து போர்வையை இழுத்து முகம் வரை மூடிக்கொண்டாள்.

 அவளுக்கு தூக்கம் வரவில்லை. ‘தூக்கத்தில் தன் மேல் கை போடுவானோ? கட்டி அணைப்பானோ? முத்தம் கொடுப்பானோ? அல்லது நம்மை வற்புறுத்துவானோ?’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே வெகு நேரமாக விழித்திருந்தாள்.

 ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மெதுவாக தன் போர்வையை விலக்கிப் பார்த்தபோது, கட்டிலில் எதிர்பக்க ஓரமாக படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் இளமதிப்பிரியன். 

 அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை பார்த்த பிறகு தான் அவளுக்கு தூக்கம் வந்தது.

மறுநாள் காலை அவள் எழுவதற்குள் இளமதிப்பிரியன் எழுந்து குளித்துவிட்டு அவர்கள் இருந்த ரூமிலேயே சேரில் அமர்ந்து கொண்டு தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான்.

எட்டு மணி அளவில் கண் விழித்தவள் தன் கணவன் எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருப்பதை பார்த்து சட்டென்று எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“சாரி மதி, தூங்கிட்டேன். நீங்க எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

“குட் மார்னிங் சொல்லாம, என்ன சாரி சொல்றீங்க மை டியர் பொண்டாட்டி?” என்ற சொல்லிக்கொண்டு கட்டிலில் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“இல்ல, இதுவே உங்க வீடா இருந்தால், இந்த நேரம் எழுந்து வெளியே போய் இருப்பீங்க. எங்க வீடாக இருக்கிறதால நான் எழுந்துக்கிற வரைக்கும் நீங்க உட்கார்ந்து கிட்டு இருந்தீங்களே அதனால சொன்னேன்”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ போய் குளிச்சிட்டு வா நம்ம வெளியே போகலாம். எனக்கு ரொம்ப பசிக்குது”

“சாரி, உடனே குளிச்சிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு கட்டிலில் இருந்து இறங்கியவள் திரும்ப கட்டிலின் மேல் ஏறி அவன் கன்னத்தில் ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்து “ஐ லவ் யூ புருஷா” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் ஓடி சென்றாள்.

 ஸ்மைல் செய்தான் இளமதிப்பிரியன்.

ஒரு வாரமாக இருவரும் நன்றாக பேசி பழகினார்கள்.

ஆனால் ஒவ்வொரு இரவிலும் அவளுக்கு வியர்ப்பது மட்டும் குறையவில்லை. 

“நமக்குள் இன்று இரவும் எதுவும் வேண்டாம்” என்று அவன் சொன்னால் தான் திரும்பவும் நார்மல் ஆவாள்.

தேனிசைச்செல்வி அவளாகவே இளமதிப்பிரியனுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது, கொஞ்சுவது, கிள்ளுவது என அனைத்தும் செய்தாள். 

ஆனால் இளமதிப்பிரியனை அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க கூட அனுமதிக்கவில்லை.

அவனாக அவள் அருகில் சென்றாலே அவளுக்கு வியர்க்கத் தொடங்கி விடுகிறது. 

திருமணம் முடித்த பத்து நாட்களுக்குப் பிறகு அவனுடைய லீவு முடிந்துவிட்டதால் தன் மனைவியை கூட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பினான் இளமதிப்பிரியன்.

சென்னையில் இரண்டு வருடத்திற்கு முன்னரே வீடு வாங்கி இருந்தான்.

 இருவர் வீட்டில் இருந்து அனைவரும் வந்து இவர்கள் இருவரையும் அந்த வீட்டில் குடி வைத்துவிட்டு இரண்டு நாள் தங்கிச் சென்னையில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டனர்.

 சென்னையில் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். அவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாத காலம் முடிந்து விட்டது.

இருவரும் மனதளவில் ஒன்று சேர்ந்தாலும் உடலளவில் சேரவில்லை.

 நாளாக ஆக, இது இளமதிப்பிரியனுக்கு சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் இரவு அவளிடம் நேராகவே கேட்டு விட்டான்.

“தேனு, உனக்கு முதலிரவில் விருப்பம் இல்லையா?”

“அப்படி எல்லாம் இல்ல மதி”

“அப்புறம் ஏன், என்னை உன்னிடம் நெருங்கவே விட மாட்டேங்குற?”

“எனக்கே தெரியல”

“சரி அப்படின்னா டாக்டர் கிட்ட போகலாமா?”

“இல்ல வேண்டாம்”

“அப்படின்னா எதுவுமே பண்ணாம, ஃபிரெண்ட்ஸ் போல இப்படியே வாழலாம்னு சொல்றியா?”

“இல்ல எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்”

“நமக்கு கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆயிடுச்சு தெரியுமா? இதுவரைக்கும் என் சுண்டு விரல் கூட உன் மேல பட்டதில்லை”

“உங்களுக்கு அதுதான் இம்பார்டன்ட்னா? நான் ரெடி வாங்க “

என்று சொல்லி தான் போட்டிருந்த சுடிதார் டாப்பை அவிழ்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

“என்னை என்ன நெனச்ச? என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்டியே? முதலிரவு தான் முக்கியம்னு நினைச்சிருந்தேன்னா அன்னைக்கே உன்னை வற்புறுத்தி இருப்பேன். இத்தனை மாசம் பொறுத்து இருக்க மாட்டேன்”

“சாரி மதி, நான் அப்படி மீன் பண்ணல”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லி அவள் அவிழ்த்த சுடிதார் டாப்பை அவள் மேல் போட்டுவிட்டு அந்த ரூமை விட்டு கோபமாக வெளியே சென்றான்.

 இரண்டு நாட்களாக அவன் அவளிடம் சரியாக பேசவில்லை.

 தேனிசைச்செல்வி அவனைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டாள்.

 அதற்கு மேல் அவனால், அவள் மேல் கோபத்தை காட்ட முடியவில்லை .

 பிறகு ஒரு வாரம் இருவரும் நார்மலாக இருந்தனர்.

ஒரு நாள் இரவு இளமதிப்பிரியன் ரூமிற்குள் வந்தவுடன்,

 கதவை சாத்திவிட்டு அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு, “எனக்கு ஓகே மதி” என்றாள்.

அவளே சம்மதம் சொன்னதால், அவள் இதழ் அருகில் சென்றான் இளமதிப்பிரியன்.

அவன் இதழ் அவள் இதழில் பட்ட அடுத்த நொடி மயங்கி விழுந்தாள்

தேனிசைச்செல்வி.

அவளை அப்படியே தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவள் மேல் தண்ணீர் தெளித்தான். 

 அப்போதும் அவள் எழுந்திருக்காததால் பயந்து போய், அவளை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.

 அவளுக்கு டிரிப்ஸ் போட்டனர்.

இளமதிப்பிரியனிடம் டாக்டர் பேசினார்.

 நான்கு ஐந்து வருடங்களாக அந்த டாக்டருக்கு அவனைத் தெரியும்.

“என்ன பிராப்ளம் இளா?”

 என்றார் டாக்டர்.

“தெரியல டாக்டர் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா” என்று பதட்டமாக பேசினான் இளமதிப்பிரியன். 

“பிபி ரொம்ப ரெயிஸ் ஆயிருக்கு. பிளட் டெஸ்ட் எடுத்திருக்கோம். எதனாலயோ ரொம்ப நர்வசாவோ டென்ஷனா இருந்து இருக்காங்க.

எனக்கு தெரிஞ்சு வேற எதுவும் பிரச்சினை இருக்க மாதிரி தெரியல. இருந்தாலும் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்த அப்புறம் சொல்றேன்” என்றார் டாக்டர்.

“டாக்டர், உங்களுக்கு தெரிந்த சைக்கியாட்ரிஸ்ட் யாராவது இருக்காங்களா?”

“ஏன் என்னாச்சு?”

 டாக்டரிடம் அனைத்தையும் கூறினான் இளமதிப்பிரியன்.

 “ஓகே, என்னுடைய வைஃப் கைனகாலஜிஸ்ட். அவளுடைய பிரெண்டு சைக்கியாட்ரிஸ்ட் ஒரு லேடி டாக்டர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். நான் என்னுடைய வைஃப் கிட்ட கேட்டு சொல்றேன், நீங்க அவங்க கிட்ட கேட்டு அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிப் பாருங்க” 

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றான்.

 அடுத்த வாரத்தில் சைக்கியாட்ரிஸ்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்து இருவரும் சென்றனர்.

 ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனிசைச்செல்வியிடம் பேசினார் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர்.

 பின்னர் அவளை வெளியே அனுப்பிவிட்டு இளமதிப்பிரியனை அழைத்தார்.

“சொல்லுங்க டாக்டர்”

“உங்க வைஃப் கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவங்களுக்கு என்ன நடக்குதுன்னு அவங்களுக்கே தெரியல. அதனால அவங்களுக்கு ஆழ்மன டெஸ்ட் எடுத்தேன். இதுல ரெக்கார்ட் பண்ணி இருக்கேன். நீங்களே வீட்டுக்கு போய் கேளுங்க “

“என்ன பிரச்சனை டாக்டர்”

“நீங்க இதை கேளுங்க உங்களுக்கே புரியும். முக்கியமான விஷயம் உங்க மனைவிக்கு தெரியாம இதை நீங்க கேளுங்க”

“அவங்களுக்கு ட்ரீட்மெண்ட்?”

“நீங்க இதைப் பார்த்திட்டு நாளைக்கு ஈவினிங் வந்து என்னை பாருங்க “

” ஓகே டாக்டர், தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். 

 வீட்டிற்கு வந்த பிறகு, இருவரும் உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர்,

“எனக்கு கொஞ்சம் ஆஃபீஸ் வேலை இருக்கு தேனு. நீ போய் தூங்கு”

 என்றான் இளமதிப்பிரியன்.

“ஓகே மதி, குட் நைட்” என்று சொல்லிவிட்டு அவள் சென்ற பிறகு தன் லேப்டாப்பை எடுத்து டாக்டர் கொடுத்த அந்த பென் டிரைவை போட்டு பார்த்தான்.

“சொல்லுங்க தேனிசைச்செல்வி,

 உங்களுக்கு செக்ஸ்ல விருப்பம் இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல டாக்டர், எதனாலன்னு தெரியல? அவர் என்கிட்ட வந்தாலே எனக்கு வியர்க்குது. பயமா இருக்கு, மனசு எல்லாம் படபடன்னு அடிக்குது”

இன்னும் பல கேள்விகளை கேட்ட பிறகு அவளை ஒரு ஈஸி சேரில் படுக்க வைத்து கண்களை மூடச் சொன்னார் டாக்டர்.

 அவள் கண்கள் மூடிய பிறகு ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள கேள்விகளை கேட்க தொடங்கினார்.

“உங்களுக்கு இப்ப வயசு 10. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

என்று டாக்டர் கேட்டது தான் தாமதம்,

அவளுடைய உடம்பெல்லாம் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது.

“காம் டவுன் தேனிசைச்செல்வி, என்னாச்சு? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?”

“நான், நான் எங்க வீட்டு பக்கத்து தெருவுல இருக்க கடைக்கு போனேன்.

அம்மா அப்பளம் வாங்கிட்டு வர சொன்னாங்க. அந்த கடையில் இருக்கிற அங்கிள் என்னை அவர் கிட்ட கூப்பிட்டாரு. 

நானும் அவரோட பக்கத்துல போனேன். அப்போ என் கன்னத்தை கிள்ளி, என்ன படிக்கிற? என்று கேட்டார்.

நானும் ஃபோர்த் ஸ்டாண்டர்ட் என்று சொன்னேன். ரொம்ப க்யூட்டா இருக்க என்று சொல்லி என் தோளில் கைப் போட்டார். 

அப்புறம்… அப்புறம்… கையை அப்படியே கீழே இறக்கி தொட்டார். எனக்கு பயமா இருந்துச்சு.

அங்கிள் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். ஒரு நிமிஷம் இரு உனக்கு சாக்லேட் தரேன்னு சொல்லி ஒரு சாக்லேட் கொடுத்தார்.

 அதை வேண்டாம்னு சொல்லி நான் போகலாம்னு நினைக்கும் போது என் இடுப்பை புடிச்சு இழுத்து எனக்கு உதட்டுலயே ஒரு முத்தம் கொடுத்துட்டாரு. அப்படியே என் உடம்பெல்லாம் கையை வச்சு தேய்ச்சாரு” என்று சொல்லும் பொழுதே அவள் அழுதாள்.

அந்த சம்பவம் இப்போது நடப்பது போலவும் உடம்பெல்லாம் இப்போதும் கூசுவது போல உடம்பை உதறினாள்.

 அதைக் கேட்ட சைக்கியாட்ரிஸ்ட் டாக்டருக்கும் கண்கள் கலங்கியது.

“அப்புறம் என்ன ஆச்சு?” என்றார் டாக்டர்.

 “அப்போ யாரோ ஒருத்தவங்க கடைக்கு வர சத்தம் கேட்டு அந்த அங்கிள் என்னை விட்டார்.

‘இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. முக்கியமா உங்க அப்பா அம்மா கிட்ட. சொன்னன்னு வச்சிக்கோ அவங்களை நான் கொன்னுடுவேன்’னு மிரட்டினார். நான் பயந்து உடனே வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அடுத்த நாள் எனக்கு பயங்கரமா ஜுரம் வந்துச்சு. அவ்வளவுதான் அதுக்கப்புறம் எதுவும் ஞாபகம் இல்லை” என்று ஒரு குழந்தை பேசுவது போல பேசி முடித்தாள் தேனிசைச்செல்வி.

“அதுக்கப்புறம் எப்பவாவது மறுபடியும் அந்த கடைக்கு போனீங்களா?”

“இல்ல, நான் போக மாட்டேன் என்று அம்மா கிட்ட சொல்லிடுவேன். அதுக்கப்புறம் அம்மா, ‘ஒரு வேலையும் செய்யாத’ அப்படின்னு என்னை திட்டிட்டு, அண்ணாவை கடைக்கு அனுப்பிடுவாங்க”

 பின்னர் ரெக்கார்டை ஆஃப் செய்தார் டாக்டர்.

 இதை அனைத்தையும் பார்த்த இளமதிப்பிரியனுக்கு கண்கள் கலங்கியது. 

‘எதனால் தன் மனைவி நடுங்குகிறாள்’ என்பதை புரிந்து கொண்டான்.

 மறுநாள் டாக்டரைப் பார்த்தான்.

“டாக்டர் என்னுடைய வைஃப்க்கு டிரீட்மென்ட்?”

“நீங்கதான்”

“என்ன சொல்றீங்க டாக்டர்?”

“நீங்க காட்டுற அன்பிலேயும், பாசத்திலேயும் தான் அவங்க அந்த ட்ராமாவில்(trauma) இருந்து வெளியே வர முடியும். அவங்க சீக்கிரமா குணமாகிறது உங்க கையில தான் இருக்கு. 

கொஞ்சம் மாத்திரை மருந்தும் தரேன். அது அவங்களுடைய ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும்.

 

இன்னொரு ட்ரீட்மெண்டும் இருக்கு…….”

என்று கூறினார் டாக்டர்.

“ஓகே டாக்டர் தேங்க்யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

 தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றான்.

 அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்ற போது, இரவு டின்னர் சாப்பிட்டவுடன்.

“வா தேனு, சும்மா வெளிய வாக்கிங் போயிட்டு வரலாம்” என்று அழைத்தான்.

இருவரும் நடந்து சென்றனர்.

 அப்போது அந்த கடை பக்கம் செல்லாமல் வேறு பக்கம் திரும்ப நினைத்த தன் மனைவியின் கையை பிடித்து அந்தக் கடைக்கு அழைத்துச் சென்றான்.

 அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. சிறுவயதில் நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. 

 அப்போது அந்த வயதாகி போயிருந்த அந்த கடைக்காரர்,

“என்ன வேணும்?” என்று அவனைப் பார்த்து கேட்டான்.

 ‘பளார் பளார்’ என்று அவனுடைய இரு கன்னத்திலும் அறைந்தான் இளமதிப்பிரியன்.

 பின்னர் அவனுடைய கைகளை பிடித்து அவன் கை விரல்களை உடைத்தான். 

ஒன்றும் புரியாமல் அந்த கடைக்காரன் வலியால் கத்தினான்.

அவ்வளவு நேரமாக அதிர்ச்சியில் இருந்த தேனிசைச்செல்வி “பளார்” என்று அந்த கடைக்காரனின் கன்னத்தில் அறைந்தாள்.

 அவளைப் பார்த்த பிறகு தான் அந்த கடைக்காரனுக்கு புரிந்தது.

 வலியில் அப்படியே தரையில் அமர்ந்தான் அந்த கடைக்காரன்.

“குழந்தைங்க மேலேயா கை வைக்கிற?” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான்.

“வீட்டுக்கு போலாமா?” என்றான் இளமதிப்பிரியன்.

“வேண்டாம் இன்னும் கொஞ்ச தூரம் நடக்கலாம்” என்றாள் தேனிசைச்செல்வி.

 அவனுடைய கையை கோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்த படி நடந்து சென்றாள் தேனிசைச்செல்வி.

டாக்டர் சொன்ன இன்னொரு ட்ரீட்மென்ட் இதுதான். அதை செய்ததும் அவளுக்குள் இருந்த பயம் நடுக்கம் எல்லாம் குறைந்தது. 

 டாக்டர் கொடுத்த மாத்திரையும் மற்றும் யோகா இரண்டும் சேர்ந்து தேனிசைச்செல்வியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இளமதிப்பிரியன் மற்றும் தேனிசைச்செல்வி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையை தடையின்றி தொடங்கினார்கள்.

(சித்திர நல்லூரின் பேரழகி தேனிசைச்செல்வி – சித்திரப் பேரழகி)

அவர்கள் வாழ்க்கை இனிதே தொடங்கியது. அவர்கள் நன்றாக இருக்க நாமும் வாழ்த்துவோம்.

 பெண் குழந்தைகளிடம் பெற்றோர்கள், 

‘எது நடந்தாலும் தைரியமாக எங்களிடம் முதலில் சொல்லுங்கள்’ என்று நம்பிக்கையூட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

 அதேபோல ஆண் குழந்தைகளிடம், ‘ஒரு பெண்ணை எப்படி மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும்’ என்று கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

 முற்றும்.

அ. வைஷ்ணவி விஜயராகவன்.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.