Rani Govindh | 04 Nov 2025
Epi 7
இளமதி தனக்கு நடக்கும் அநியாயங்களை தடுக்கவும் முடியாமல், தாங்கி கொள்ளவும்
முடியாமல் மரணம் தான் இதற்கு தீர்வு என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
“என்ன மன்னிச்சிருங்கம்மா, வெண்ணிலா, அழகி ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிருங்க, உங்கள நட்டாத்துல
விட்டுட்டு போறேன், ஆனா இத
தவிர எனக்கு வேற வழி தெரியல, நான் உயிரோட இருந்தா உங்களுக்கும் கஷ்டம் தான், நான் செத்த பிறகாவது நம்ப குடும்பத்த பிடிச்ச கஷ்டம்
விடுதான்னு பார்க்கலாம்” கண்ணீரோடு மனதிற்குள் நினைத்து கொண்டவள் மாடியில் இருந்து
குதிக்கும் முடிவோடு மாடியின் ஓரத்திற்கு சென்றாள்.
மாடியில் இருந்து எட்டி பார்த்தால் ஐந்து மாடி உயரம், இங்கிருந்து குதித்தால்
மரணம் நிச்சயம் என்பது அவளும் அறிந்தது தான், அந்த நம்பிக்கையில் அந்த திட்டின் மேல் ஏற போனவளை
பின்னால் இருந்து வந்த குரல் தடுத்தது.
“அக்கா”
அது அழகியின் குரல், அந்த குரலை கேட்டதும் இளமதி பதறி போய் திரும்பி
பார்த்தாள். பாதி தூக்கத்தில் எழுந்த அழகி இளமதியை காணவில்லை என்று கண்ணை
கசக்கியபடி வந்து கொண்டிருந்தாள். இளமதியின் இந்த முயற்சி கூட அவளுக்கு கை
கொடுக்கவில்லை. வேகமாக முகத்தை துடைத்து கொண்டவள் அழகியிடம் வேக நடை போட்டு
வந்தாள்.
“என்ன ஆச்சுடா, ஏன் இந்நேரத்துக்கு மாடிக்கு வந்திருக்க”
“நீ இங்க என்னக்கா பண்ற”
“அது, அது வந்து.. என்னனு தெரியலடா, ரூமுக்குள்ள இருக்கறது ஒரு மாதிரி மூச்சடைக்கிற மாதிரி இருந்துச்சி, அதான் மாடிக்கு வந்தேன், இங்க வந்த பிறகு இப்போ
நல்லா இருக்கு, சரி நீ கீழ
போ, நான் கொஞ்ச
நேரம் இருந்துட்டு வரேன்”
அழகியை அனுப்பி வைத்து விட்டு அவள் தன் முடிவை
செயல்படுத்தலாம் என்று நினைத்தாள்.
“இல்லக்கா, எனக்கும் தூக்கம் வரல, நானும் உன்கூட கொஞ்ச நேரம் இருக்கேன்க்கா”
இளமதி அடுத்து பேசுவதற்குள் அவள் இளமதியை கட்டி பிடித்து
கொண்டாள்.
“ஏண்டாம்மா, என்ன ஆச்சி”
“இன்னைக்கு நீ வர லேட் ஆனதும் நான் ரொம்ப பயந்து
போயிட்டேன்க்கா,
வெண்ணிலாக்கா இல்லாம கூட இருந்துருவேன், ஆனா நீ இல்லாம என்னால இருக்கவே முடியாதுக்கா, எனக்கு அழுகை அழுகையா வந்துச்சி தெரியுமா, அப்பா வேற என்னென்னமோ
சொல்லி பயமுறுத்திருச்சி, அக்கா இனி
நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக கூடாது, அப்படியே போறதா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போகணும், இல்லாட்டி நீ எங்க
இருந்தாலும் நானே உன்ன தேடி வந்துருவேன்”
இதை கேட்டதும் இளமதிக்கு அடக்க முடியாமல் அழுகை பீறிட்டு
கொண்டு வந்தது, அவளையும்
மீறி அழுது விட்டாள்.
“சாரி அழகி, அக்காவ மன்னிச்சிரு” வாய் விட்டு அவள் கூற அழகி புரியாமல் அவளை
பார்த்தாள்.
“எதுக்குக்கா சாரி”
“அது, இன்னைக்கு லேட்டா வந்து உன்ன அழ வச்சிட்டேன்ல அதுக்கு தான்”
“சாரிலாம் வேண்டாம்க்கா, ஆனா நீ இனி இப்படி பண்ண கூடாது சரியா, உனக்கு ஒன்னு தெரியுமா, இந்த வீட்லயே, இல்ல இல்ல, இந்த உலகத்துலையே எனக்கு
பிடிச்சது நீ மட்டும் தான்” என கூறியபடி அழகி இளமதியை கட்டி பிடித்து கன்னத்தில்
முத்தமிட்ட அந்த நொடி இளமதி உள்ளத்தால் உடைந்து போனாள்.
தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ண பார்த்தோம், தன்னை நம்பி இருக்கும்
குடும்பத்தையே நட்டாத்தில் விட பார்த்தோமே, இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்களை தவிக்க விட்டு போனால்
அந்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் தீராதே என்பது அவள் மூளைக்கு உரைத்தது.
கண்ணீரை துடைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
“இங்க பாருடா, அக்கா இனி உன்ன இப்படி அழ விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன், இது ப்ராமிஸ், சரி இங்க பனியா இருக்கு, வா நாம போய் தூங்குவோம், நாளைக்கு உனக்கு ஸ்கூல்
வேற இருக்குல்ல” என்று அவளை அழைத்து
போனாள்.
அந்த நொடியே இனி எத்தனை பிரச்சனை வந்தாலும் எதிர்த்து
போராடி பார்த்து விடுவோம் என்கிற மன உறுதி அவளுக்கு வந்து விட்டது. அடுத்த நாள்
காலை அக்கா தங்கை மூவரும் அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தனர், மரகதம் மூவருக்கும்
சாப்பாடு செய்து கொண்டிருந்தார். வெண்ணிலா முகத்திலோ சோகம் கரைபுரண்டு
கொண்டிருந்தது, காலேஜுக்கு
போனால் எல்லாரும் கேலி செய்ய போகிறார்கள் என்று அவளுக்கு பயமாக இருந்தாலும், வீட்டில் இருக்க வழியே
இல்லை என்பது தெரிந்து கிளம்பி கொண்டிருந்தாள்.
“வெண்ணிலா இன்னைக்கு நீ அழகிய ஸ்கூல்ல விட்டுட்டு
காலேஜ்க்கு போ, எனக்கு
வேலைக்கு நேரமாச்சி”
“ஐயோ அக்கா, ஏற்கனவே எனக்கு லேட் ஆச்சி, இதோ இவ இப்போ தான் தலையே சீவிட்டு இருக்கா, இவ ரெடியாகி, இவள நான் ஸ்கூல்ல விட்டுட்டு போறதுக்குள்ள
எனக்கு பர்ஸ்ட் பீரியடே முடிஞ்சிரும்”
“வெண்ணிலா, இன்னைக்கு ஒரு நாள் தான, அதெல்லாம் லேட் ஆகாது, என்ன அழகி, சீக்கிரம்
கிளம்புடுவ தான”
அழகி முகத்தை சோகமாக வைத்து கொண்டாள்.
“அக்கா நீயே என்ன ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ, அவ கூட நான் போக
மாட்டேன்”
அழகி அடம் பிடிக்க இளமதி அவளை முறைத்தாள்.
“அழகி, இப்படிலாம் அடம் பிடிக்க கூடாது, பத்தாவது படிக்கிற, இன்னும் நீ
குழந்தை மாதிரி பண்ணா எப்படி, இன்னைக்கு வெண்ணிலா உன்ன கூட்டிட்டு போவா, ரெண்டு பேரும் சண்டை போடாம போகணும் புரிதா” என்று
கூறியபடியே தன் ஹேன்ட்பேக்கை எடுத்து மாட்டியவள் மரகதத்திடம் சென்றாள்.
“அம்மா நான் கிளம்பறேன், எனக்கு லேட் ஆச்சி”
“என்னடி உனக்கு ஒன்பது மணிக்கு தான ஆபிஸ், மணி எட்டு தான ஆகுது, இப்போவே கிளம்பற, இன்னும் பத்து
நிமிஷத்துல குழம்பு வெந்துடும், சாப்ட்டுட்டு போ”
“அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லம்மா, முக்கியமான கெஸ்ட்
ஆபிசுக்கு வர போறாங்களாம், அதுக்கு
எல்லாம் ஏற்பாடு பண்ற பொறுப்ப என்கிட்டே தான் கொடுத்திருக்காங்க, இன்னைக்கு மட்டும்
லேட்டா போனேன், அப்புறம்
ஓனர் என்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவாரு, சரி பேச நேரம் இல்ல, நான் கிளம்பறேன்’
“அப்போ மதிய சாப்பாடு”
“நான் கடைல வாங்கிக்கறேன்மா” என்று கூறியபடியே அவள்
வீட்டில் இருந்து கிளம்பி விட்டாள்.
ரோட்டிற்கு வந்தவள் மாணிக்கம் கொடுத்த லாயர் விசிட்டிங்
கார்டை ஹேன்ட்பேக்கில் இருந்து எடுத்து பார்த்தாள்.
இங்கிருந்து அவர் வீட்டிற்கு போக எப்படியும் ஒரு மணி
நேரத்திற்கு மேல் ஆகும், அதுவும்
இந்த காலை நேர ட்ரேபிக்கில் போக வேண்டும், அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள்.
“ஒருவேள அவர் வீட்ல இல்லன்னா என்ன பண்றது, அவருக்கு கால் பண்ணி
சொல்லிடலாமா, இல்ல பேசாம மாணிக்கம் அண்ணாகிட்ட பேசிட்டா அவரு லாயர்கிட்ட இன்பார்ம்
பண்ணிடுவாரு, அது தான்
சரியா இருக்கும்”
மாணிக்கத்துக்கு கால் பண்ணி விசயத்தை கூறினாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, அவரு வீட்ல தான் இருப்பாரு, எதுக்கும் இப்போ போன் பண்ணி அவர்கிட்ட பேசிடறேன், நீ நேரா அவர் வீட்டுக்கே போ, நான் நைட்டே எல்லா விசயத்தையும் சொல்லிட்டேன்ல, இனி அவரு
பார்த்துப்பாரு, நானும் உன்
கூட வந்திருப்பேன், ஆனா இப்போ ஸ்கூல்
சவாரிக்கு போய்ட்டு இருக்கேன், அதனால தான் வர முடியல”
“அண்ணா அதனால என்ன, நீங்க எனக்கு இவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க, இதுவே பெரிய விஷயம்”
“சரிம்மா, நீ அங்க போயிட்டு லாயர்கிட்ட
பேசிட்டு எனக்கு கூப்டு,
அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்”
அவர் பேசி விட்டு கால் கட் செய்ய இளமதி அந்த ஏரியாவிற்கு
செல்லும் பஸ்ஸில் ஏறினாள். ஒன்னரை மணி நேர அலைச்சலுக்கு பிறகு எப்படியோ அந்த
அட்ரெசை கண்டுபிடித்து வீட்டு வாசல் வரை வந்து விட்டாள்.
அந்த பங்களா வீட்டை பார்த்தவளுக்கு உள்ளே செல்ல பயமாக
இருக்க,
செக்யூரிட்டியிடம் விசிட்டிங் கார்டை காட்டி விசாரித்தாள்.
“ஆமாம்மா, இது சார் வீடு தான், ஆனா சார் உன்ன இன்னைக்கு பார்க்க வர சொன்னாரா, நீ பாட்டுக்கு உள்ள போனா அப்புறம் என் சீட்டு
கிழிஞ்சிரும்”
“ஐயோ அண்ணா, அவர் சொல்லி தான் வந்திருக்கேன்’
“சரிம்மா, அப்போ எதுக்கும் நான் போய் கேட்டுட்டு வந்துறேன், நீ இங்கயே நிக்கறயா”
செக்யூரிட்டு உள்ளே அனுமதி வாங்க செல்ல, “அண்ணா ஒரு நிமிஷம்,
ஆட்டோ டிரைவர் மாணிக்கம் நேத்து போன்ல சொன்ன பொண்ணு இளமதி வந்திருக்குன்னு தெளிவா
சொல்லுங்கண்ணா”
“சரிம்மா”
செக்யூரிட்டி போன பிறகு இளமதி மனது படபடக்க ஆரம்பித்து
விட்டது.
“ஒருவேள அப்படி யாரையும் வர சொல்லன்னு சொல்லிட்டா, செக்யூரிட்டி அண்ணா
விவரமா சொல்லாம போய்ட்டா, பேசாம
நானும் உள்ள போயிருக்கணுமோ, நேர்ல அவர
பார்த்தா கண்டிப்பா என் நிலமைய அவருக்கு புரிய வச்சிருப்பேன், இப்போ என்ன பண்றது, பேசாம உள்ள போய்டலாமா, இல்ல செக்யூரிட்டி
அண்ணா வேற இங்கயே நிக்க சொன்னாரே’
இப்படி அவள் மனதிற்குள் ஆயிரத்தி எட்டு கேள்விகள், குழப்பங்கள் அவளை
டார்ச்சர் செய்து கொண்டிருக்க, செக்யூரிட்டி போன ஐந்து
நிமிடத்தில் திரும்ப கேட்டிற்கு வந்தார்.
“உன்ன உள்ள வர சொல்லிட்டாரும்மா, சார் ஹால்ல தான் உட்கார்ந்திருக்காரு, உள்ள போம்மா”
இவராவது தனக்கு உதவி செய்வாரா, தன் பிரச்சனை எல்லாம் தீருமா என்கிற குழப்பத்திலும்
ஏக்கத்திலும் உள்ளே போனாள்.
ஹாலில் சோபாவில் டிப்டாப்பாக ஒருவன் உட்கார்ந்திருக்க,
அவன் முன்னால் போய் நின்றவள் பாவமாக அவனை பார்த்தாள். அவனோ போனில் எதையோ பார்த்து
கொண்டிருந்தான்.
“சார்.. சார்”
பயத்தில் அவள் குரல் கூட வெளி வந்திருக்கவில்லை. அவனோ
இப்படி ஒரு ஜீவன் தனக்கு முன்னால் நிற்கிறது என்பது கூட அறியாமல் இன்னுமும் போனை
நோண்டி கொண்டிருந்தான்.
இவனை எப்படி அழைப்பது, வேறு யாராவது இருக்கிறார்களா? என்று நோட்டம் விட்டவள்
அங்கு யாரும் இல்லாமல் போக திரும்பவும் அவனை அழைக்க முயற்சி செய்தாள்.
“சார்” இந்த முறை கொஞ்சம் சத்தமாக அவள் அழைக்க அந்த
சத்தம் தந்த அதிர்வில் அவன் போனை நோண்டுவதை நிறுத்தி விட்டு அவளை நிமிர்ந்து
பார்த்தான்.
அவளை பார்த்த அந்த நொடி அவன் இதயம் ஒரு நொடி துடிப்பதை
நிறுத்தி விட்டது போல் ஆனது.
“ஏய், யூ, யூ.. நீ இங்க என்ன பண்ற, உனக்கு எப்படி இந்த அட்ரெஸ் கிடைச்சது” என்று விக்ரமன் பதறி போய் எழுந்து
நின்றான்.
அவனின் இருட்டு வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்ததை அவனால்
ஏற்று கொள்ள முடியவில்லை, ஆனால்
இளமதியோ தன் வாழ்க்கையில் உருவாகி இருக்கும் இருளை சரி செய்வதற்கு
வந்திருக்கிறாள். இதை அறியாத விக்ரமன் என்ன செய்ய போகிறான்? உதவி கேட்க வந்த
இடத்தில் உபத்திரவம் முழு உருவமாக இருப்பதை இளமதி அறிவாளா? நேற்றிரவு தன்னை ரசித்தவன் இவன் தான் என்பது அறிந்தால்
அவள் மனநிலை எப்படி இருக்கும்?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.