Rani Govindh | 04 Nov 2025
Epi 6
மாணிக்கம் இருவரையும் அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில்
இறக்கி விட்டார். அப்பார்ட்மெண்ட் என்றால் அதிக வாடகை வசூலிக்கவே, இருக்கும்
இடத்தை எப்படியோ சமாளித்து கட்டி இது ஒரு வீடு என்று கணக்கு காட்டுவது போல் கட்டமைக்கபட்ட
அப்பார்மென்ட் தான் அது. அதுவும் கட்டி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த
அப்பார்ட்மெண்ட்டில் கிட்டதட்ட பதினைந்து வீடுகள் இருக்க, இளமதியின் ப்ளாட் மூன்றாம் தளத்தில் இருந்தது. அந்த
அபார்ட்மெண்ட்டை பார்த்தாலே ஒரு வீட்டில் நடக்கும் சண்டையும் சச்சரவும் நிச்சயம்
அடுத்த வீட்டிற்கு கேட்டே தீரும். அந்த அளவிற்கு தான் இருந்தது, பத்து மணிக்கு மேல்
ஆட்டோ சத்தம் கேட்கவும் ஒன்றிரண்டு தலைகள் மாடியில் இருந்து எட்டி பார்த்ததை
மாணிக்கம் கவனிக்கவே செய்தார். இதற்கு மேல் இங்கிருந்தால் தேவை இல்லாத கேள்விகள்
எழலாம் என்று உணர்ந்தவர் இளமதியை
அக்கறையோடு பார்த்தார்.
“எதுக்கும் பயப்படாதம்மா, நான் சொன்ன மாதிரி நாளைக்கு அந்த லாயர் வீட்டுக்கு போ, நல்லதே நடக்கும்”
அக்கறையாக கூறி விட்டு மாணிக்கம் கிளம்பி விட இளமதி யாரும் பார்ப்பதற்குள்
வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று தனக்கு ஏற்பட்ட காயத்தை கூட
பொருட்படுத்தாமல் வெண்ணிலாவை அழைத்து கொண்டு வேக நடை போட்டு மாடிப்படிகளில் ஓடாத
குறையாக ஏறி தன் வீட்டு வாசலை அடைந்து விட்டாள்.
“வெண்ணிலா முகத்தை துடச்சிக்கோ, வீட்ல யாருக்கும் நடந்த எதுவும் தெரிய கூடாது, நான் என்ன சொல்றேன்னோ
அதுக்கு ம் மட்டும் சொல்லி சமாளிச்சிடு, புரிதா” என்று முகத்தை துடைத்தபடி இளமதி கூற வெண்ணிலா
சரி என்று தலையசைத்தாள். அவர்கள் வாசலில் அடி வைக்கும் போதே அவள் அம்மா மரகதம், அவளின் குடிகார அப்பாவை திட்டி
கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
“யோவ் நீயெல்லாம் எதுக்கு தான்யா உசுரோட இருக்க, இருந்து எங்க உசுர
வாங்கவா, வயசுக்கு
வந்த புள்ளைய காணோம், அத பார்க்க
போன பொண்ணும் இன்னும் வீடு வந்து சேரல, நான் வயித்துல நெருப்ப கட்டிட்டு உட்கார்ந்திருக்கேன், உனக்கு ஏதாவது வெசனம்
இருக்கா, இப்போ கூட
குடிச்சிட்டு வந்து மலமாடு மாதிரி படுத்துட்டு இருக்கியே, இதுல ஸ்கூல் படிக்கற சின்ன புள்ளைக்கிட்ட காசு கேட்டு
ஒரண்டு இழுத்துட்டு இருக்க, நீலாம்
உருப்புடுவியா” மரகதம் இத்தனை கேள்வி கேட்டும் கூட கந்தசாமிக்கு
உரைக்கவில்லை.
“ஏய் வாய மூடுடி, எதுக்கு இப்போ சும்மா கத்திட்டு கிடக்கற, திமிரு எடுத்து போய்
அந்த ரெண்டு கழுதையும் திரிஞ்சா அதுக்கு நான் எதுக்குடி வெசனபடனும். இந்த வீட்ல
ஆம்பளைன்னு நான் ஒருத்தன் தான இருக்கேன், எதுகளாவது என்ன மதிக்குதா? எல்லாம் சம்பாதிக்கற திமிரு. அதுக்கு நான் என்னடி பண்ணுவேன், ஆம்பளைய மதிக்காத வீடு
உருப்படாது, எழுதி
வச்சிக்கோ, இதுகளாம் சீரழிஞ்சி தான் போவும்” மனச்சாட்சி இல்லாமல் தந்தை என்கிற
ஸ்தானத்தை கூட மறந்து பேசி கொண்டிருப்பவனை ஏதாவது செய்ய வேண்டும் போல்
மரகதத்திற்கு ஆத்திரம் வந்தது.
அவள் அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அவன் தலையை
குறி பார்த்து விட்டெரிய அதில் இருந்து எஸ்கேப் ஆகி நகர்ந்து படுத்தவன் எதையோ
சாதித்தது போல் காலாட்டி கொண்டு படுத்திருந்தான். வீட்டிற்குள் வரும் போதே இந்த
கலவரத்தை எல்லாம் கேட்டு கொண்டே வந்த இளமதி, வெண்ணிலாவிற்கு எதற்கு வீட்டிற்கு
வந்தோம் என்பது போல் தான் இருந்தது.
அவர்கள் உள்ளே வந்ததை பார்த்ததும் மரகதம்
“வந்துட்டிங்களா கண்ணு” என்று தட்டுதடுமாறி எழுந்து வந்தார். அதுவரை அக்காக்களை
காணவில்லை என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த பத்தாவது படிக்கும் மதியழகியோ
அவர்களை பார்த்ததும் அவர்களிடம் ஓடி வந்து இளமதியை கட்டி கொண்டாள்.
“எங்க அக்கா போனீங்க, எனக்கு ரொம்ப பயமாகிடுச்சி”
“ஒன்னும் இல்லடா தங்கம், வெண்ணிலா பஸ் வராத இடத்துல மாட்டிக்கிட்டா, அதான் அவள கூட்டிட்டு
வர நான் போனேன், திரும்ப
வண்டி பிடிச்சி வரதுக்குள்ள லேட் ஆகிடுச்சி, வேற ஒன்னும் இல்ல” தனக்கு நடந்த கொடுமை எல்லாவற்றையும் மதியழகியின் முகத்தை பார்த்ததும் மறந்தவளாக பேசினாள்.
அவள் ஆறுதல் வார்த்தைகளை கேட்ட பிறகு தான் அழகி அழுவதை நிறுத்தினாள். இளமதியின்
தலையில் அடிபட்டிருப்பதை கவனித்த மரகதம் பதறி கொண்டு அவள் அருகில் வந்தார்.
“என்னடி ஆச்சி, என்ன தலைல அடிபட்டிருக்கு”
முகத்தை பிடித்து நெற்றியை பார்த்தபடி கேட்கும் போதே
அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“ஐயோ அம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்ல, கால் இடறி கீழ விழுந்துட்டேன், அதுல அடிபட்டுடுச்சி, நீ பதர்ற அளவுக்கு வேற ஒன்னும் இல்ல”
“என்னடி என்னென்னமோ சொல்ற, எதோ போன் வந்துச்சின்னு வெண்ணிலாவ கூட்டிட்டு வர போன, நான் உனக்கு எத்தன முறை
போன் பண்ணேன், போன கூட எடுக்காம ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கழிச்சி வரீங்க, இதுல வேற உன் நெத்தில
ரத்தம் வர அளவுக்கு அடிபட்டுருக்கு, உங்க ரெண்டு பேர் முகமே சரி இல்ல, என்ன நடந்தது எதுவா இருந்தாலும் மறைக்காம அம்மாகிட்ட
சொல்லுங்கடீ, எனக்கு
மனசெல்லாம் படபடன்னு அடிச்சிக்குது”
“ஷப்பா, நான் தான் சொல்றேன்ல, ஒன்னும் ஆகலம்மா, இதோ இங்க
நிக்கறாளே, எல்லாம்
இந்த மேடமால வந்தது தான், க்ரூப்
ஸ்டடி பண்ண போறேன்னு ப்ரெண்டு வீட்டுக்கு போயிருக்கா, திரும்ப வரதுக்கு வழி தெரியாம வேற பஸ்ல ஏறிட்டா, இவள கண்டுபிடிச்சி
கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி, இதுல ஒரு நாய் வேற துரத்துச்சா, அதுக்கு பயந்து ஓடி வரும் போது தான் கீழ விழுந்து
அடிபட்டுருச்சி, வேற
ஒன்னும் இல்ல” என்று கூறி கொண்டே கிச்சனுக்கு சென்று சொம்பில் இருந்த தண்ணீரை
மடக்மடக்கென்று குடித்து கொண்டிருந்தாள்.
“என்ன நிலா, இளமதி சொல்றது எல்லாம் உண்மையா”
மரகதம் வெண்ணிலாவிடம் கேட்க அவளோ சடனாக கேட்டதும்
முழிக்க ஆரம்பித்து விட்டாள், எங்கு அவள் முழியை வைத்தே மரகதம் சந்தேகப்பட்டு விடுவாளோ என்று இளமதி குறுக்க புகுந்து வெண்ணிலாவை
காப்பாற்றினாள்.
“அதான் நான் சொல்றேன்லம்மா, அப்புறம் என்ன அவகிட்ட வேற குறுக்கு விசாரணை, நாங்க ரெண்டு பேரும்
வழி தேடி அலைஞ்சி எவ்ளோ பசியோட வந்திருக்கோம் தெரியுமா? வந்த பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுக்காம விசாரணை
பண்ணிட்டு இருக்க”
அவள் கேட்ட பிறகு தான் அவருக்கு உறைக்கவே செய்தது.
“ஐயோ, நான் பாரு, பேசிகிட்டே
மறந்துட்டேன், எப்படியோ
என் ரெண்டு புள்ளைங்கள காப்பாத்திட்டியே மாரியாத்தா, உனக்கு கோழி அறுத்து பொங்கல் வைக்கறேன், என் புள்ளைங்கள நீ தான்
நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்” வேண்டி கொண்டே சாமி படத்திற்கு முன்னால் இருந்த
விபூதியை எடுத்து வந்து மூன்று பெண்கள் நெற்றியிலும் பூசி விட்டு அடுப்படிக்கு
சென்றார். கந்தசாமியோ வந்தவர்களுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாதது போல் படுத்து
கொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தான்.
இளமதி வெண்ணிலாவை அறைக்கு செல்ல சொல்லி கண்ஜாடை காட்ட
அவள் நைசாக அறைக்குள் சென்று விட்டாள்.
அந்த வீட்டில் இருக்கும் ஒரே ப்ரைவசி இடம் அந்த பத்துக்கு பத்து அறை மட்டும் தான். அவள்
பின்னால் சென்ற இளமதி துணி மாத்துவது போல் கதவை தாள் போட்டு விட்டு வெண்ணிலாவிடம்
வந்தாள்.
“நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல, இன்னைக்கு நடந்த
விசயத்தை தப்பி தவறி கூட நீ வீட்ல யாருக்கிட்டயும் சொல்லிட கூடாது, புரிதா”
“ஆனா அக்கா, போலீஸ் என்ன கூட்டிட்டு போனது காலேஜ்ல எல்லாருக்கும் இந்நேரம்
தெரிஞ்சிருக்கும்ல, இதுக்கு
மேல நான் எப்படிக்கா காலேஜ்க்கு போறது, இனி நான் காலேஜ்க்கு போக மாட்டேன்’
அவள் அப்படி கூறிய அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார்
என்று அறை விழுந்தது.
அடிவிழுந்த அதிர்ச்சியில் “அக்கா” என்று கண்ணீரோடு அழைத்தாள்.
“வாய மூடு, நான் உன்கிட்ட எவ்ளோ முறை சொன்னேன், அதெல்லாம் பணக்காரபசங்க போற இடம், நீ அங்கல்லாம் போகாதன்னு, பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து காலேஜ்க்கு போக
மாட்டேன்னு சொல்ற, இங்க பாரு
வெண்ணிலா,
நமக்கெல்லாம் படிப்பு மட்டும் தாண்டி துணையா இருக்கும், இதோ வெளிய படுத்துட்டு நாம எப்போ கெட்டு போவோம்னு
காத்துட்டு இருக்காரே, இந்த மாதிரி
ஆம்பளைங்க யாரும் நமக்கு துணையா நிக்க மாட்டாங்க, இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, நான் உன் கூட இல்லாம
போனா கூட நீ படிப்ப விட கூடாது, அம்மாவையும் அழகியையும் காப்பாத்த வேண்டிய கடமை உனக்கு இருக்கு, அத மனசுல வச்சிக்கிட்டு
ஒழுங்கா படிக்கற வேலைய பாரு, இன்னும் ஆறு மாசம் தான, காலேஜ்ல என்ன நடந்தாலும் சரி, பல்ல கடிச்சிட்டு படிச்சி முடிச்சிரு, அதுக்கப்புறம் நீ தான் இந்த குடும்ப பொறுப்பெல்லாம்
பாத்துக்கணும்”
இளமதி பேசி கொண்டிருந்ததை கேட்ட வெண்ணிலாவுக்கு
வித்தியாசமாக பட்டது, அவள்
இப்படியெல்லாம் பேசியதே இல்லை, கடைசி வரை இந்த குடும்ப பொறுப்பை நான் தான் பார்த்து கொள்வேன் என்று
எப்பொழுதும் பேசுபவள் இன்று ஒரேயடியாக இது உன் பொறுப்பு என்று கூறுவது
வெண்ணிலாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை இன்று தன்னால் நடந்த
குழப்பத்தால் கோபத்தில் இப்படி பேசுகிறாளோ என்று தன்னை தானே சமாதானம் செய்து
கொண்டாள்.
அன்று இரவு சாப்பிட்டு எல்லாரும் தூங்கிய பிறகு இளமதி
மெதுவாக கதவை திறந்து கொண்டு மாடிக்கு சென்றாள். மாடிக்கு சென்று ஒரு மூலையில்
உட்கார்ந்த பிறகு தான் அவள் தேக்கி வைத்த அழுகை எல்லாம் காட்டாற்று அருவி போல்
வெளி வந்தது. ஹோட்டலில் ஒருவன் முன் ஆடை இல்லாமல் நின்ற வலி கூட அவளுக்கு மறந்து
போகும் அளவுக்கு ஸ்டேஷனில் அளவுக்கு
அதிகமாக பட்டு விட்டாள். ஆனால் இந்த சித்திரவதை எல்லாம் இன்றோடு முடியவில்லை
என்பது தான் மேலும் அவள் மனதை ரணமாக்கி கொண்டிருந்தது.
“ஏன் கடவுளே என்ன இப்படி சோதிக்கற, நான் யாருக்கு என்ன பாவம்
பண்ணேன்,
படிக்கணும்னு ஆசைப்பட்ட என்ன பதினெட்டு வயசுல கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி
வச்சாங்க, கல்யாண
வாழ்க்கைன்னா என்னனே புரியறதுக்கு முன்னாடி டிவோர்ஸ் பண்ணி அனுப்பி வச்சிட்டாங்க, சரி இனி என்
தங்கச்சிங்கள படிக்க வச்சி அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கறது தான் என்
வாழ்க்கைன்னு நினச்சேன், ஆனா இப்போ
ஒவ்வொரு நிமிசமும் எந்த மிருகம் என்ன வேட்டையாட போகுதுன்னு தெரியாம தவிக்கிற
நிலமைய கொடுத்திட்டியே, இத நான்
யாருக்கிட்ட சொல்றது, யாரு
எனக்கு உதவி செய்வாங்க” என்று கதறி அழுது கொண்டிருந்தாள்.
“இல்ல, யாரும் எனக்கு உதவி செய்ய மாட்டாங்க, நீயும் இப்படி கல்லா தான் எல்லாத்தையும்
வேடிக்கை பார்க்க போற, இதெல்லாம் என்ன
பழி வாங்க தான் நடக்குதுன்னா நான் உயிரோட இருந்தா தானே இது நடக்கும், என்னால என் குடும்பம்
கஷ்டப்பட வேண்டாம், நானே
இல்லாம போய்ட்டா” கண்ணீரை துடைத்தவள் விபரீதமாக யோசித்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் ஒரு பெரிய ஹோட்டல் அறையில் சொகுசு பெட்டில் படுத்து
கொண்டிருந்த விக்ரமன் தனக்கு முன்னால் ஆடையின்றி நின்ற அழகு தேவதையை பற்றி
யோசித்து கொண்டிருந்தான்.
இளமதியின் உயிரை காப்பாற்ற போவது யார்?
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவள் எப்படி
தப்பிக்க போகிறாள்?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
அடுத்த எபிசோட் நாளை பதிவிடப்படும். உங்கள் கருத்துகளை
மறக்காம சொல்லுங்க.
No comments yet.