Rani Govindh | 04 Nov 2025
அத்தியாயம் 17
மரகதம் கூறியதை கேட்டு இளமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னம்மா, என்னென்னவோ உளறிட்டு இருக்க?”
“உளறலடி, அந்த தம்பி சொன்னத தான் சொல்றேன், அவருக்கு உன்ன பிடிச்சிருக்காம், கல்யாணம்
பண்ணிக்கனும்னு கேட்கறாரு, இதுல என்ன
தப்பு இருக்கு”
“என்ன தப்பா, எல்லாமே தப்பு தான்” என எரிச்சலோடு கூறினாள் இளமதி.
“ஏண்டி, அவரோட முதல் தாரம் தவறிடுச்சே, அத மனசுல வச்சிக்கிட்டு பேசறயா”
“ஐயோ அம்மா அதெல்லாம இல்ல, எனக்கும் தான ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சி”
“அப்புறம் என்னடி, அந்த தம்பி ரொம்ப நல்லவரு, அவங்க குடும்பம் நமக்கு நல்லா தெரிஞ்சவங்க, இந்த பையனும் நல்ல
பையன் தான், இத்தன நாளா
நமக்கு எவ்ளோ உதவி பண்ணிட்டு இருந்துச்சி”
“எல்லாம் சரி தான்மா, அதுக்காக கல்யாணம் பண்ணிக்க சொல்றியா?”
“எனக்கு ஒன்னு புரியல இளமதி, உன் மனசுல என்ன தாண்டி
நினச்சிட்டு இருக்க, இன்னும்
எத்தன நாளைக்கு இப்படியே இருக்க போற”
“அம்மா ப்ளீஸ், காலைல வேலைக்கு போறப்போ டென்ஷன் பண்ணாத, நீ அவருகிட்ட எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லிடு”
“அப்படிலாம் எடுத்த எடுப்பில சொல்ல முடியாதுடி. என்
பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேடி வரப்போ என்னால அத கெடுத்து விட முடியாது” என
மரகதம் கூறவும் இளமதி கையை கட்டி கொண்டு மரகதத்தை பார்த்தாள்.
“ஏண்டி அப்படி பார்க்கற”
“இல்ல, ஒருவேள அந்த சேகரு அப்பா மேல கேஸ் கொடுக்க கூடாதுன்னா என்ன கட்டி வைக்க
சொன்னாரா, அதுக்காக
தான் இவ்ளோ தூரம் பேசறயா” என இளமதி சந்தேகமாக கேட்க மரகதம் உடைந்து போனார். அவர்
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“அவ்ளோ மோசமான அம்மாவாடி நானு, ஏண்டி இப்படி இரக்கமில்லாம பேசற”
“நீ தான்மா என்ன பேச வைக்கற, நீ இந்த கல்யாண விசயத்துல ஆர்வம் காட்ட காட்ட
எனக்கென்னவோ அப்படி தான் தோணுது” என கூறி விட்டு அதற்கு மேல் நிற்க முடியாமல்
இளமதி வேலைக்கு கிளம்பினாள். மரகதமோ இளமதி கூறிய வார்த்தையில் வேதனை தாங்காமல்
உட்கார்ந்திருந்தார்.
வீட்டை விட்டு வெளியே வந்த இளமதி மனமும் வேதனைபட்டது.
“சாரிம்மா, நான் இப்படி பேசினா தான் உன் வாய அடைக்க முடியும், அதான் அப்படி பேசிட்டேன்” என மனதிற்குள் மன்னிப்பு
கேட்டு கொண்டவள் வேகமாக கம்பெனிக்கு கிளம்பி சென்றாள்.
கம்பெனிக்குள் நுழைந்ததும் அவள் மனதிற்குள் அன்று செய்ய
வேண்டிய வேலை எல்லாம் லைனில் வந்து நின்றது. அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டுக்கு
சென்றவள் அவள் இடத்தில் போய் அமர்ந்தாள். இன்னும் சுமதி வந்திருக்கவில்லை. அவளின்
டேபிளில் சேல்ஸ் பைல் இருக்கவும் வந்ததும் வராததுமாக அதை டேலியில் பீட் பண்ண
ஆரம்பித்தாள். சில நிமிடங்கள் கழித்து தான் சுமதி வந்தாள். லக்ஷ்மி இருக்கிறாரா என
எட்டி பார்த்தவள் இளமதி மட்டுமே இருக்கிறாள் என தெரிந்ததும் தைரியமாக உள்ளே
வந்தார்.
“என்ன மதி, லக்ஷ்மி மேடம் இன்னும் வரலையா?”
“தெரியலக்கா, நான் வரும் போது மேடம் இல்ல”
“ஆமா, நேத்து எத்தன மணிக்கு கிளம்பின”
“ஏழு மணிக்கே கிளம்பிட்டேன்க்கா”
“அதுக்குள்ளே சேல்ஸ் டேட்டா போட்டு முடிச்சிட்டியா” என
சுமதி ஆச்சரியமாக கேட்டாள்.
“ஐயோ அக்கா, அத இப்போ தான் பண்ணிட்டு இருக்கேன், காலைல தான் கொடுத்தாங்க”
“ஓஹோ, அப்போ சரி.. ஆமா மேடம் ஏன் இன்னும் வரல, என்னவா இருக்கும்”
“அவங்க வரது இருக்கட்டும், நீங்க நேத்து பெண்டிங் வச்ச வேலைய முடிச்சிட்டிங்களா, அப்புறம் மேடம் வந்து
டோஸ் கொடுப்பாங்க,
பார்த்துக்கோங்க”
“ஆமா மதி, மேடம் வரதுக்குள்ள வேலைய பார்க்கறேன்” என சுமதியும் தன் வேலையில்
மும்முரமானார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் லக்ஷ்மி டென்ஷனாக உள்ளே
நுழைந்தார்.
“எல்லாருக்கும் யாரையாவது திட்டனும்னா அக்கவுண்ட்ஸ்
டிப்பார்ட்மெண்ட் தான் கிடைக்கும் போல, எப்போ பாரு கூப்ட்டு வச்சி கேள்வி கேட்டுக்கிட்டு” என கடுப்பாக கூறி
கொண்டே அவர் வரவும் சுமதி இளமதியை பார்த்தார்.
“என்னவா இருக்கும், மேடம் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்காங்க?”
“தெரியலையேக்கா”
“சரி இரு, நான் போய் விசாரிக்கறேன்”
“தேவை இல்லாத வேலை பார்க்கறீங்கக்கா”
“சும்மா இரு மதி, நம்ப மேடம்க்கு ஒரு பிரச்சனைன்னா நாம தான சப்போர்ட்
பண்ணனும்” என சுமதி கூற இளமதிக்கு சிரிப்பு தான் வந்தது.
பைலை கொண்டு போய் கொடுப்பது போல அவர் டேபிளுக்கு சென்ற
சுமதி “என்ன மேடம் ஆச்சி, ஏன்
டென்ஷனா இருக்கீங்க” என பேச்சு கொடுத்தாள்.
“வேற என்ன ஆகும், யாராவது புதுசா வந்தா நம்ம தலைய தான உருட்டுவாங்க”
“யாரு மேடம் வந்தது”
“வேற யாரு, சுபாஷ் சார் தான்.. இனி அவரும் கம்பெனிய பார்த்துக்க போறாராம், வந்ததும் வராததுமா
அக்கவுண்ட்ஸ் டீடைல்ஸ் பார்க்கணும்னு கூப்ட்டாரு” எனவும் சுமதிக்கு மனதிற்குள்
குதூகலமானது. விசயத்தை தெரிந்து கொண்ட சந்தோஷத்தில் சுமதி வந்து தன் சேரில் அமர
லஷ்மியோ அதற்குள் யாரோ அழைக்கவும் எழுந்து வந்தார்.
“ரெண்டு பேரும் வேலைய பாருங்க, எதோ டவுட்டாம், நான் கிளியர் பண்ணிட்டு வரேன்” என லஷ்மி சென்றதும்
சுமதி இளமதியிடம் வந்தாள்.
“உனக்கு விசயம் தெரியுமா மதி, சுபாஷ் சார் இனி டெய்லியும் கம்பெனிக்கு வர போறாராம்”
“என்னக்கா சொல்றிங்க, ஆனா அவரு எப்படி”
“அதான் தெரியல, பெரிய எம்டி எப்படி விட்டாருன்னு தெரியல, ஆனா ஒன்னு சுபாஷ் சார் வந்த பிறகு இனி கம்பெனி ஒழுங்கா
இருக்கும்”
“என்னவோக்கா, நல்ல விசயம் தான் நடந்திருக்கு”
“அத இங்கயே உட்கார்ந்து சொன்னா எப்படி, வா நாமளும் சார
பார்த்துட்டு வந்துடலாம், நீ தான் அவர பார்க்கனும்னு ஆசைபட்டயே”
“என்னக்கா சொல்றீங்க, சார எப்படி நாம போய் பார்க்கறது”
“அதுக்கு என்கிட்டே ஒரு ஐடியா இருக்கே”
“என்ன ஐடியா?”
“அங்க பாரு, மேடம் கொண்டு வந்த பைல விட்டுட்டு போய்ட்டாங்க, எப்படியும் அந்த பைல் தேவைப்படும், அதை கொண்டு போய்
கொடுக்கற சாக்குல பார்த்துட்டு வந்துடலாம்” என சுமதி அழைக்க இளமதியோ ஆர்வம்
இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.
“நான் வரலக்கா, இத மேடம் வரதுக்குள்ள முடிச்சாகணும், நீங்க வேணும்னா போயிட்டு வாங்க”
“என்ன மதி, நேத்து அவ்ளோ ஆர்வமா இருந்த”
“அது ஒரு நாள் கூத்துக்கா, நேத்து பார்க்கனும்னு தோணுச்சி, அதுக்குன்னு தினமும் அவர பார்க்க ஆசைபடுவன்னா என்ன, எப்படியும் இனி அவரு
டெய்லியும் கம்பெனிக்கு வருவாரு தானே, இன்னொரு நாள் பார்த்துக்கறேன்” என்றவள் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
“சரி விடு, நான் போயிட்டு வரேன்” என்ற சுமதி அங்கிருந்து கிளம்பி போக சில வினாடிகள்
கழித்து சுபாஷ் அந்த பக்கமாக வந்தான்.
உண்மையில் அவனுக்கு அங்கு தான் இளமதி இருக்கிறாள் என்பது
தெரியாது. லக்ஷ்மி அவனை பார்க்க சென்றது தெரியாமல் அக்கவுண்ட்ஸ் டீடைல்ஸ் தெரிந்து
கொள்ள தான் எதார்த்தமாக வந்து விட்டான். அவன் நல்ல நேரம் இளமதி மட்டும் அங்கே
தனியகா இருந்தாள்.
அவளை பார்த்ததும் ஒரு வினாடி பதறியவன் பின் இயல்பாகி
விட்டு “என்ன மேடம், தனியா
என்னவோ பண்ணிட்டு இருக்கீங்க” என கேட்டு கொண்டே அவளருகில் வந்தான்.
ஆண் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் அவனை
பார்த்ததும் புன்னகைத்தாள்.
“நீங்களா, ஆமா நீங்க எப்படி இங்க”
“லக்ஷ்மி மேடம பார்க்க வந்தேன்”
“அவங்க சார பார்க்க தானே போனாங்க”
“இருக்கும், சார் கூட தான் பேசிட்டு இருப்பாங்கன்னு நினைக்கறேன், ஆமா என்ன தனியா வேலை
செஞ்சுட்டு இருக்கீங்க”
“மேடம் சார பார்க்க போனாங்க, சுமதி அக்கா பைல கொடுக்க போயிருக்காங்க”
“ஓஹோ, ஆமா அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் ரொம்ப சின்னதா இருக்கே, இங்க
உங்களுக்கு கம்பர்டபிளா இருக்கா” என விசாரித்தான்.
“என்னது இது சின்னதா, இவ்ளோ பெரிய ஹாலா இருக்கு, இதுவே அதிகம் தான்” என வேலை செய்தபடியே பதில் கூறி
கொண்டிருந்தாள் இளமதி.
“ஓகே, ஆமா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா.. சுபாஷ் சார் இனி கம்பெனிக்கு
தினமும் வர போறாரு”
“ம்ம்.. தெரியுமே,”
“உங்களுக்கு சந்தோஷமா இல்லையா?”
“இருக்காதா பின்ன, அவரு டைய்லி வந்தா கம்பெனி ஒழுங்கா இருக்கும்ல, எனக்கு மட்டும் இல்ல
எல்லாருக்குமே சந்தோஷமா தான் இருக்கும்”
“அவ்ளோ தானா, தனிப்பட்ட விதத்துல எதுவும் பீல் ஆகலையா” என சுபாஷ் கேட்கவும் இளமதி
நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“என்ன கேட்கறீங்க, எனக்கு புரியலையே, தனிப்பட்ட விதத்துல என்ன பீல்
ஆகணும்”
“இல்ல, அது சும்மா கேட்டேன்..” என சமாளித்தான் சுபாஷ்.
“சரி, சுபாஷ் சார் டெய்லி இங்க வந்தா அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க, உங்களுக்கு
வேலை இருக்காதே” என இளமதி கேட்கவும் சுபாஷ் சிரித்தான்.
“இங்க தான் எனக்கு நிறைய வேலை இருக்கே” என சுபாஷ் கூற
“என்னது” என இளமதி புரியாமல் கேட்டாள்.
“இப்போ பண்ற வேலை தான், எல்லார்கிட்டயும் பேசறது தான்” என சுபாஷ் கூறவும் இளமதி
சிரித்தாள்.
“நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க” என சுபாஷ் கூற
இளமதிக்கு ஒரு செகன்ட் இது தவறான ரூட்டில் செல்வது போல இருந்தது.
அவள் அமைதியாக இருக்கவும் “அழகா இருக்கீங்கன்னு சொல்றது
கூட தப்பா எடுத்துக்குவீங்க போல இருக்கே” என சுபாஷே பேசினான்.
“இல்ல அப்படிலாம் இல்ல”
“நான் கேசுவலா தாங்க சொன்னேன், சரிங்க சார் என்ன கூப்ட்டாலும் கூப்டுவாரு, நான் கிளம்பறேன்” என
சுபாஷ் அங்கிருந்து கிளம்ப போக “ஏங்க ஒரு நிமிசம்” என்றாள் இளமதி.
“எஸ், டெல் மீ”
“நான் சொன்ன தேங்க்ஸ சார்கிட்ட கொண்டு போய்
சேர்த்துட்டீங்களா?” என இளமதி கேட்கவும் ஒரு வினாடி யோசித்தவன் “சேர்த்துட்டேன், ஆனா சார் திருப்பி
கொடுத்த கிப்ட எப்படி உங்ககிட்ட கொடுக்கறதுன்னு தான் தெரியல” என்றான்.
“கிப்ட்டா” என ஆச்சரியபட்டாள் இளமதி.
“ஆமா”
“என்ன கிப்ட்”
“அத சொல்றத விட கொடுக்கறேன், ஆனா நீங்க தப்பா நினைக்க கூடாது”
“தப்பா நினைக்கற மாதிரி என்ன கிப்ட்டா இருக்கும்” என
இளமதி குழம்பி போய் பார்க்க சுபாஷ் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து டைரி மில்க்
ஷாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதை பார்த்து அவளுக்கு தப்பாக ஒன்றும் தோன்றவில்லை.
“சுபாஷ் சாரா கொடுத்தாரு”
“ஆமாங்க, நம்பலையா”
“அதுக்கில்ல, நான் என்ன சின்ன புள்ளையா”
“தெரியல, கொடுக்க சொன்னாரு, இந்தாங்க”
என சுபாஷ் நீட்டவும் இளமதி மறுக்காமல் வாங்கி கொண்டாள்.
தான் எதை நினைத்து கம்பெனிக்கு வந்தோமோ அந்த வேலை
முடிந்து விட்ட சந்தோஷத்தில் சுபாஷ் அங்கிருந்து கிளம்ப போக திரும்பவும் இளமதி
அழைத்தாள்.
“ஏங்க ஒரு நிமிஷம்”
“எஸ், சொல்லுங்க”
“ஆமா, நீங்க என்னங்க எதோ இந்த கம்பெனி எம்டி மாதிரி இவ்ளோ அழகா டிப்டாப்பா ட்ரெஸ்
பண்ணி இருக்கீங்க” என அவன் போட்டிருந்த நேர்த்தியான ஆடையை வைத்து கேட்டாள் இளமதி.
அவள் டக்கென்று அப்படி கேட்கவும் சுபாஷோ என்ன சொல்வது என புரியாமல் விழித்தான்.
சுபாஷ் தான் கம்பெனி ஓனர் என இளமதிக்கு தெரிய வருமா?
சுபாஷால் இளமதி வாழ்வில் வீச போவது தென்றலா புயலா?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.