Rani Govindh | 04 Nov 2025
Epi 12
இளமதி தனக்கு வந்த போன் கால் பற்றியே யோசித்தபடி
உட்கார்ந்திருந்தாள். அதற்கு மேல் அவளுக்கு வேலையே செய்ய முடியவில்லை, அவள் மனதில்
ஆயிரத்தெட்டு குழப்பங்களும் கவலைகளும் ஓடி கொண்டிருந்தது. இதை பற்றி அந்த
வக்கீலிடம் சொல்லி விடலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது.
“பேசாம அந்த லாயர் சார்கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்டுடலாமா? ஆனா அப்படி ஏதாவது
பண்ணி அவன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையும் சொல்லிட்டா, அப்படி மட்டும் நடந்தா அம்மாக்கு ஏதாவது ஆனாலும்
ஆகிடும், ஏற்கனவே
அந்த போலீஸ் தொல்லை வேற, இதுல
இவனும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிட்டா என் குடும்ப நிலைமை என்ன ஆகறது, ஒருவேள அவன் ஏதாவது பேச
கூட கூப்ட்டிருக்கலாம், அது
தெரியாம நானா ஏதாவது பண்ண போய் பிரச்சனை பெருசானா என்ன பண்றது?” என ஒருபுறம் அவள்
நினைத்தாலும் அவளுக்கு தவறாக தான் தோன்றியது.
“ஆமா உன்ன கூப்ட்டு வச்சி பேச அவனுக்கு நீ என்ன அத்தை
பொண்ணா, இல்ல மாமன்
பொண்ணா? முதல் முறை
போனப்போவே அவன் உன்ன எந்த கோலத்துல பார்த்தான்னு மறந்து போச்சா, இப்போ திரும்ப
கூப்டறான்னா ஒருவேள திரும்பவும்” என யோசிக்கும் போதே அவளுக்கு திக்கென்று
இருந்தது. முந்தைய நாள் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் அவள்
எதையும் யோசிக்காமல் அந்த கோலத்தில் அவன் முன்னால் நின்று விட்டாள், ஆனால் திரும்பவும்
இன்று அதே போல் நிற்க வேண்டும் என்றால் அவளால் நிச்சயம் முடியாது, இப்படி ஒரு சிக்கலில்
அவள் மாட்டி கொண்டிருக்க இதை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தலையை பிடித்தபடி
உட்கார்ந்து விட்டாள்.
இளமதியை கவனித்த சுமதி “என்ன ஆச்சி, ஏன் இப்படி
உட்கார்ந்திருக்க, ஏதாவது
பிரச்சனையா, உடம்பு
சரியில்லையா” என அக்கறையோடு விசாரித்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, லேசா தலைவலிக்கற மாதிரி இருக்கு”
“சரி அப்போ ஒரு டீ குடிச்சிட்டு வரலாம், வா”
“இல்லக்கா, இப்போ வேண்டாம்”
“ஹேய், என்ன நீ, தலைவலி
வச்சிக்கிட்டு சாயந்தரம் வரைக்கும் உட்கார்ந்திருக்க போறியா, இப்போ தான் கொஞ்சம்
ப்ரீயா இருக்கு, லக்ஷ்மி
மேடம் வந்துட்டாங்கன்னா அப்புறம் நிக்க நேரம் இருக்காது, அதுக்குள்ளே போயிட்டு வந்துடலாம் வா” என சுமதி
வற்புறுத்தி இளமதியை டீ குடுக்க அழைத்து சென்றார்.
இளமதியோ அங்கேயும் சோகமாக நின்று கொண்டிருக்க “இந்தா மதி, முதல்ல இந்த டீய குடி, தலைவலி குறையும்” என
கூற வேண்டாவெறுப்பாக டீயை வாங்கி குடித்து கொண்டிருந்தாள் இளமதி.
“ஆமா, உன்ன பார்த்தா தலைவலியால அவஸ்தை படற மாதிரி தெரியலையே” என டீ குடித்தபடி
சுமதி கேட்க திடுக்கிட்டு இளமதி அவளை பார்த்தாள்.
“ஒருவேள போன்ல நான் பேசினத சுமதி அக்கா
கேட்டிருப்பாங்களா?” என
இளமதிக்கு பயமாக இருந்தது.
“ஏன்க்கா இப்படி சொல்றீங்க”
“பின்ன எனக்கென்னவோ அப்படி தான் தோணுது, காலைலயே லேட்டா வந்த, அப்போவே உன் முகம் வாடி
இருந்துச்சி, இன்னைக்கு
நீ நடந்துக்கறதே வித்தியாசமா இருக்கே, அதான் கேட்கறேன், வீட்ல
ஏதாவது பிரச்சனையா, எதுவா
இருந்தாலும் என்கிட்டே சொல்லு” என சுமதி கேட்கவும் “அப்போ சுமதி அக்கா எதுவும்
கேட்கல போல, சாதராணமா
தான் விசாரிக்கறாங்க” என உணர்ந்தவள் நிம்மதி பெருமூச்சி விட்டு கொண்டாள்.
“என்னைக்குக்கா பிரச்சனை இல்லாம இருந்திருக்கு, எதோ தங்கச்சிக்காக தான்
வாழ்ந்துட்டு இருக்கேன்” என மனதில் இருந்த வலியை மேலோட்டமாக கூறினாள்.
“ஏய், என்ன நீ.. என்னவோ கிழவி மாதிரி பேசிட்டு இருக்க, உனக்கு இன்னும் எவ்ளோ வாழ்க்கை இருக்கு, அத விட்டுட்டு
சந்நியாசம் வாங்கிட்டு போறவ மாதிரி பேசற”
“எனக்கு இதுக்கு மேல என்னக்கா வாழ்க்கை இருக்கு, என்
தங்கச்சி ரெண்டு பேரையும் செட்டில் பண்ணி விட்டா அது போதும்”
“ஆமாடி, நீ இப்படியே பேசிட்டு இரு, உன் தங்கச்சிங்க கடைசில
உனக்கு நாமம் போட்டுட்டு தான் போக போறாங்க” என சுமதி கூறவும் இளமதி முறைத்தாள்.
“சரி, சரி,
கோவிச்சிக்காத, ஆனாலும்
உன் வாழ்க்கைய பத்தி கொஞ்சமாவது யோசிக்கணும் தானே, இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல உன் தங்கச்சிங்க அவங்க
வாழ்க்கைய பாத்துட்டு போய்டுவாங்க, அதுக்கு பின்னாடி உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும் தானே”
“ஐயோ அக்கா, இத பத்தி பேசாதிங்கன்னு எத்தனவாட்டி சொல்றது, இதுக்கு தான் டீ குடிக்க கூட்டிட்டு வந்தீங்களா, இப்போ தான் என் தலை
வெடிக்கற அளவுக்கு வலிக்குது” என எரிச்சல்பட்டாள் இளமதி.
“சரி விடு, டென்ஷன் ஆகாத, நான் இத
பத்தி பேசல, இன்னைக்கு
சாயங்காலம் அம்மன் கோவிலுக்கு போறேன், நீயும் வரியா, அந்த
கோவில் ரொம்ப சக்தி வாய்ந்தது, அங்க நம்ப பிரச்சனைய சீட்டுல எழுதி சாமி பாதத்துல வச்சி கும்பிட்டா
சீக்கிரமே பிரச்சனை சரி ஆகிடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு, நான் கூட போன முறை என் பையனுக்கு உடம்பு சரியில்லாம
போனப்போ அங்க தான் சீட்டு எழுதி வேண்டிக்கிட்டேன், உடனே சரி ஆகிடுச்சி தெரியுமா” என சுமதி கூறவும்
இளமதிக்கு இப்போது இருக்கும் நிலைமைக்கு அங்கு சென்றால் தேவலாம் என தோன்றியது.
“எத்தன மணிக்குக்கா போகணும்”
“கார்மெண்ட்ஸ் ஏழு மணிக்கு விடுவாங்களா, அப்போ போனா
சரியா இருக்கும்”
“ஏழு மணியா, ஆனா அவன் எட்டு மணிக்கு வர சொல்லி இருக்கானே, என்ன பண்றது” என யோசித்தாள் இளமதி.
“இல்லக்கா நான் வரல”
“ஏன் மதி”
“வீட்டுக்கு சீக்கிரம் வர சொன்னாங்க அம்மா, கோவிலுக்கு போயிட்டு
போனா லேட் ஆகிடும்”
“சரி, அப்போ ஆறு மணிக்கு பெர்மிஷன் கேட்டுட்டு போகலாம், உனக்கு ஓகேவா” என சுமதி கூற இளமதி முகம் மலர்ந்தது.
அந்த கோவிலுக்கு சென்றால் தன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து
விடும் என்கிற நம்பிக்கை அவள் மனதில் புகுந்து கொள்ள ஈவ்னிங் வரை கவலை இல்லாமல்
வேலை செய்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் விக்ரமன் மீட்டிங்கில் க்ளைண்ட்டிடம் கோபமாக
பேசி விட்டு தன் அறைக்கு வந்தான். அவன் பின்னாலேயே அவசரமாக வந்தான் அஜய்.
“டேய் என்னடா பண்ணி வச்சிருக்க” என அஜய் பதட்டமாக கேட்க
விக்ரமனோ கோபத்தோடு உட்கார்ந்திருந்தான்.
“இந்த ப்ராஜெக்ட் நம்பி நிறைய யோசிச்சி வச்சிருக்கோம், அத மறந்துட்டியா” என
அஜய் கேட்க விக்ரமன் அவனை முறைத்தான்.
“அதுக்காக அவனுங்களுக்கு ஸ்லேவ் மாதிரி இருக்கணுமா, என்னால முடியாது”
“விக்ரம், ப்ளீஸ்.. நீ வேற டென்ஷன கொண்டு வந்து இதுல காட்டாத, இந்த ப்ராஜெக்ட் நம்ப
கம்பெனிக்கு ரொம்ப முக்கியம்”
“அஜய், லீவ் இட்.. நான் வேற க்ளைண்ட் பார்த்துக்கறேன்”
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, இந்த டீல் பத்தி பேசவே
நான் எவ்ளோ எபோர்ட் போட்ருக்கேன் தெரியுமா, அத எல்லாம் உன்னோட கோபத்தால என்னால இழக்க முடியாது
விக்ரம்”
“உனக்கு என்ன விட இந்த ப்ராஜெக்ட் முக்கியமா போச்சா
அஜய்” என ஆத்திரத்தோடு கேட்டான் விக்ரமன்.
“வாட், உனக்கு அப்படி தோணுதா” என திருப்பி கேட்டான் அஜய்.
அவன் அந்த ஒற்றை கேள்வியும், அவன் பார்வையும் விக்ரமனை ஆப் செய்தது, அவனுக்கு தான் நன்கு
தெரியுமே, தனக்காக
தன் நண்பன் எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறான், எத்தனை பெரிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறான்
என்பதெல்லாம்.
“இப்போ என்ன செய்யணும்னு சொல்ற அஜய், நான் வந்து அவனுங்க
கால்ல விழணுமா” என எரிச்சலோடு விக்ரமன் கேட்க “ஐயோ சாமி, நீங்க ரொம்ப பெரிய ஆளு, உங்கள போய் அப்படி சொல்வேன்னா, தயவு செஞ்சு பேசாம வந்து உட்காரு, மீதிய நான்
பார்த்துக்கறேன், நீ ஒன்னும்
பண்ணாம இருந்தாலே போதும்” என அஜய் விக்ரமை சமாதானபடுத்தி மீட்டிங்கிற்கு அழைத்து
சென்றான்.
விக்ரம் அப்பொழுதும் கோபமாக உட்கார்ந்திருக்க, அஜய் தான் எப்படியோ
சமாளித்து டீலை நல்லவிதமாக முடித்து வைத்தான். க்ளைண்ட் சென்ற பிறகு இருவரும்
தங்கள் அறைக்கு வந்தனர்.
விக்ரமன் அப்பொழுதும் கடுப்பாகவே இருக்க, அவன் அருகில் வந்த அஜய்
அவனை சமாதானபடுத்த முயற்சி செய்தான்.
“நீ தானே சொல்லிருக்க விக்ரம், பெர்சனல் இஷ்யூவ பிசினஸ்ல கொண்டு வர கூடாதுன்னு, நீ அந்த பொண்ணு விசயத்த
பத்தி யோசிச்சி டென்ஷன் ஆகிட்டு இருக்க, அத இதுல காட்ற, கொஞ்சம்
யோசிச்சி பாரு உனக்கே அது புரியும்” என அஜய் கூற விக்ரமன் அமைதியாகவே
உட்கார்ந்திருந்தான்.
அவன் தனிமையில் யோசிக்கட்டும் என நினைத்த அஜய் எதுவும்
பேசாமல் அவன் அறைக்கு சென்று விட்டான்.
அஜய் சென்றதும் யோசித்து யோசித்து மேலும் கடுப்பான
விக்ரம் “ஷெட், எல்லாம்
அவளால வந்த பிரச்சனை.. என்னைய இவ்ளோ டார்ச்சர் பண்றா, அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என நினைத்தவன் கோபம்
தாளாமல் டேபிளில் இருந்ததை எல்லாம் மொத்தமாக கீழே தள்ளி விட்டிருந்தான்.
அதே நேரம் சுமதி ஈவ்னிங் சீக்கிரம் போக லக்ஷ்மியிடம்
பெர்மிஷன் கேட்கலாம் வா என இளமதிக்கு கண்ஜாடை காட்டி கொண்டிருந்தார்.
லக்ஷ்மியிடம் போய் பெர்மிஷன் கேட்பதா என இளமதிக்கு பயமாக
தான் இருந்தது,
இருந்தாலும் வேறு வழியில்லாமல் சுமதியோடு சென்றாள்.
லக்ஷ்மிபோன் பேசி கொண்டிருக்க “அக்கா எனக்கென்னவோ பயமா
இருக்கு, நீங்க
மட்டும் கேட்கறீங்களா, நான்
கோவிலுக்கு வரல” என கிசுகிசுத்தாள் இளமதி.
“சும்மா இருடி, உன்னால அப்புறம் நானும் திட்டு வாங்க போறேன், நான் பேசிக்கறேன், நீ அமைதியா நில்லு” என சுமதி கூறி கொண்டிருக்க போன்
பேசி முடித்த லக்ஷ்மி “என்ன ரெண்டு பேரும் ஜோடியா வந்திருக்கீங்க” என்றார் அதட்டல்
குரலில்.
“இன்னைக்கு ஈவ்னிங் சீக்கிரம் போகணும் மேடம், அதான் பெர்மிஷன்
கேட்கலாம்னு”
“அப்படி என்ன முக்கியமான வேலை இருக்குன்னு
தெரிஞ்சிக்கலாமா” என நக்கலாக கேட்டார் லக்ஷ்மி.
“என் பையனுக்கு உடம்பு சரி இல்லாம போச்சில்ல, அப்போ
வேண்டுதல் வச்சிருந்தேன், அத
செய்றதுக்கு தான்” என சுமதி கூறவும் சில வினாடிகள் யோசித்த லக்ஷ்மி “சரி, சரி..
அஞ்சு மணிக்கு கிளம்பு, ஆனா
நாளைக்கு சீக்கிரம் வந்திடனும்” என உடனே பெர்மிஷன் கொடுத்து விட்டார்.
பொதுவாக சாமி காரியங்களில் லக்ஷ்மி கொஞ்சம் கவனமாக
இருப்பவர், அந்த
தைரியத்தில் தான் சுமதி பெர்மிஷன் கேட்கவே வந்தார். அவர்கள் கேட்க நினைத்தது ஆறு
மணிக்கு, ஆனால்
அஞ்சு மணிக்கு போக சொல்லவும் இருவருக்கும் சந்தோசம் தாளவில்லை. ஆனால் இதில்
இன்னொரு சிக்கல் இருப்பது அவர்களுக்கு புரியவில்லை.
“இத கேட்க தான் மதிய துணைக்கு கூட்டிட்டு வந்தியா?” என்றதும் தான் மதிக்கு
பெர்மிஷன் கொடுக்கவில்லை என்பதே சுமதிக்கு புரிந்தது.
“இல்ல மேடம், மதியும் கோவிலுக்கு வரா, அதான் அவளுக்கும் பெர்மிஷன்” என சுமதி கூறியதும் லக்ஷ்மி முறைத்தார்.
“ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிட்டா இருக்கிற வேலைய யார்
பார்க்கறது, இன்னைக்கு
ராகவி வேற வரல, ஆறு
மணிக்கு தான் பர்சேஸ் பில்ஸ் அனுப்பறேன்னு சொல்லிருக்காங்க, அத இன்னைக்கே டேலில
பீட் பண்ணியாகனும், ரெண்டு
பேருல யாராவது ஒருத்தர் இருக்கனும், யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றவர் போனை எடுத்து கொண்டு
கிளம்பி விட சுமதி முகம் வாடியது.
“என்ன மதி, இப்படி ஆகிடுச்சி”
“பரவால்லக்கா, இன்னைக்கு நீங்க போயிட்டு வாங்க, இன்னொரு நாள் நானும் வரேன்” என மதி விட்டு கொடுத்தாள்.
“ஏன் கடவுளே, நீயும் என்ன இப்படி போட்டு சோதிக்கற, உன் கோவிலுக்கு வர கூட தகுதி இல்லாதவ ஆகிட்டேனா, அவ்ளோ பெரிய பாவியா
நானு” என மனதிற்குள் புழுங்கி கொண்டிருந்த மதிக்கு தெரியாது, மதி அன்று கோவிலுக்கு
சென்றால் நிச்சயம் அவள் வாழ்க்கை சூன்யம் ஆகிருக்கும் என்பது. சில நேரங்களில்
கடுவுளும் நம் மீது இரக்கம் காட்ட தானே செய்கிறார்.
மாலை ஐந்து மணி ஆக “மதி, நான் கிளம்பறேன், நாளைக்கு கோவில் பிரசாதம் எடுத்துட்டு வந்து
கொடுக்கறேன்” என்றார் சுமதி.
“சரிக்கா, நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” என மதி கூற சுமதி கிளம்பி சென்றாள்.
நேரம் போய் கொண்டே இருந்தது, ஆறு மணி ஆகியும் சேல்ஸ் ரிப்போர்ட் இன்னும்
வந்திருக்கவில்லை.
“மணி வேற ஆகுது, எப்போ ரிப்போர்ட் வந்து எப்போ நான் அத டேலில
போட்டு முடிக்கறது, எட்டு
மணிக்கு வேற மூன் டிலைட் ஹோட்டலுக்கு போயாகனும், ட்ரேபிக்
இல்லைன்னா கூட அரை மணி நேரத்துல போய்டலாம், இல்லைன்னா லேட் ஆகிடுமே, என்ன நடக்கும்னு தெரியல, எட்டு மணிக்கு போகலைன்னா அவன் சொன்ன மாதிரி
செஞ்சுடுவானா, ஐயோ கடவுளே, நினைக்க நினைக்க
பயத்துல எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது, இப்போ நான் என்ன பண்றது” என நொடிக்கு நொடி பதறி கொண்டிருந்தாள் மதி.
விக்ரமன் சொன்னபடி மதி நேரத்துக்கு வந்து சேர்வாளா?
மதி வரவில்லை என்றால் விக்ரமன் என்ன செய்வானோ?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
No comments yet.