Episode 1

Madhu Niki | 05 Nov 2025

வருணை வெறுப்பேத்துவதற்காக அவனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்று அகல்யா பொய் ஒன்றை சொல்லியிருக்க வருணோ அதை சீரியஸாக எடுத்து கொண்டது இருவரையும் பெரும் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் இருவருக்குமே விபரீதம் புரிந்தது, எப்படி இதற்கு தான் ஒத்துழைத்தேன் என்று இருவர் மனமும் கேள்வி கேட்டு அவர்களை டார்ச்சர் செய்து கொண்டிருக்க அகல்யா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

பாத்ரூமில் இருந்து ஒரு முடிவோடு வெளியில் வந்த அகல்யா வருணை கோபமாக பார்த்தாள். வருணோ தலையை தலையணையில் அழுத்தி கொண்டு டென்ஷனாக உட்கார்ந்திருக்க சொடக்கு போட்டு அகல்யா அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

சொடக்கு சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்த வருண் அகல்யா அவனின் முன்னால்  இருப்பதை பார்த்ததும் அவளை நேருக்கு நேர் பேஸ் பண்ண முடியாமல் ரூமை விட்டு வெளியில் செல்ல வேகமாக எழுந்து கதவருகில் சென்றான்.

வருண் ரூமிலிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்வதை உணர்ந்த அகல்யா அவனின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், எந்த கலாட்டாவும் பண்ணாம வந்து உட்காருங்க” என்று அகல்யா அழுத்தமான குரலில் கூறவும் வருண் வேறு வழியில்லாமல் பம்மியபடி பெட்டில் அமர்ந்தான்.

அப்பொழுதும் கூட வருணால் எதுவும் பேச முடியவில்லை, ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி, மறுபக்கம் அவன் மீதே கோபம் ஆத்திரம், இப்படி எல்லா உணர்வுகளும் அவனை போட்டு அழுத்தி கொண்டிருக்க அந்த பாரம் தாங்காமல் தடுமாறி கொண்டிருந்தான் வருண்.

“நடந்து முடிஞ்சத பத்தி பேசி ஒன்னும் ஆக போறதில்லை தான், ஆனா இன்னைக்கு நடந்தத பத்தி நாம பேசி தான் ஆகணும், அதுக்கும் முன்னாடி நான் ஒரே ஒரு விசயத்தை மட்டும் தெரிஞ்சிக்கணும்னு ஆசைபடறேன், அதுக்கு மட்டும் உண்மையான பதிலை சொல்லுங்க’ என்று அகல்யா வருணின் முகத்தை பார்த்தபடி கூறினாள்.

தலை குனிந்தபடி அமர்ந்திருந்த வருண் “என்ன கேட்கணும்” என்று பதட்டமான குரலில் கேட்டான்.

“இந்த கல்யாணத்துக்கு எதுக்காக சம்மதம் சொன்னிங்க, அப்புறம் எதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னிங்க, இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க, அதுகப்பறம் நாம இன்னைக்கு நடந்த விசயத்துக்கு வருவோம்” என்று அகல்யா விடாபிடியாக கேட்கவும் வருணோ பதில் கூறாமல் சில நிமிடங்களுக்கு அமைதியாகவே உட்கார்ந்திருந்தான்.

அவனின் அமைதி அகல்யாவை கடுப்பாக்கியது, “உங்கள தான் கேட்கறேன், இது நம்ப ரெண்டு பேரோட லைப், இதுல எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ப ரெண்டு பேரையும் தான் பாதிக்கும், சோ நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கான காரணத்தை தெரிஞ்சிக்க எனக்கு முழு உரிமையும் இருக்கு, ப்ளீஸ் அத மட்டும் சொல்லிடுங்க” என்று அகல்யா திரும்பவும் பொறுமையாக கேட்டாள்.

வருணோ அப்பொழுதும் அந்த ரகசியத்தை பற்றி அகல்யாவிற்கு கூறவே கூடாது என்று உறுதியாக இருந்தான், அவனிடம் இருந்து அமைதி மட்டுமே பதிலாக கிடைத்து கொண்டிருந்தது. அவனின் அமைதி அகல்யாவிற்குள் எரிமலையாக உருமாறி கொண்டிருக்க அதற்கு மேலும் பொறுமை இழந்த அகல்யா திரும்பவும் வில்லி ரோலுக்கு மாறி இருந்தாள்.

“உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன், நீங்க அத யூஸ் பண்ணிக்கல, சரி பரவால்ல இருக்கட்டும், பழச விடுங்க, இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு வருவோம், பர்ஸ்ட் நைட்ல நான் எந்த அளவுக்கு வருத்தப்பட்டேனோ, ஏமாற்றம் அடைஞ்சேனோ அதெல்லாத்துக்கும் மேல இன்னைக்கு என்ன சந்தோஷபடுத்திட்டிங்க, என்ன ஒன்னு அது நம்ப ரூம்ல நடந்திருந்தா இன்னும் கொஞ்ச நேரம் ஹேப்பியா இருந்திருக்கலாம், இப்படி பதறி போய் ரூம்க்கு வந்திருக்க வேண்டியது இருந்திருக்காது, மத்தபடி நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி, அத்தை என்கிட்ட கேட்ட மாதிரி அவங்களுக்கு சீக்கிரமே ஒரு பேர குழந்தைய பெத்து கொடுக்கற ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணிட்டோம், இனி பாருங்க நம்ப லைப்ல எல்லாமே ஹேப்பியா தான் இருக்க போகுது” என்று அகல்யா அப்படியே வேறு ஒரு டோனில் பேசி கொண்டிருக்க வருனுக்கோ இதயமே நின்று விடும் போல் ஆகி விட்டது.

“என்ன சொல்ற, ஹேப்பியா இருந்தியா, அப்போ உனக்கு, பிடிச்சி தான்” என்று வருண் இழுக்கவும் அகல்யா வேகமாக “என்னங்க பேசறீங்க, பிடிச்சி தான் இருந்தேன், இதுல உங்களுக்கு என்ன சந்தேகம், நீங்களும் பிடிச்சி தான என்கூட இருந்திங்க” என்று கேட்டாள்.

அப்படி கேட்டு விட்டு அவனின் பதில் என்னவாக இருக்கும் என்று டென்ஷனாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

எந்த ஒரு மனைவியாக இருந்தாலும், கணவன் தன்னோடு உறவு கொள்வது அவனின் விருப்பத்தோடு தான் இருக்க வேண்டும் என்று சின்ன எதிர்பார்ப்பாவது அவளுக்கு இருக்க தானே செய்யும். ஒருவேளை வருண் அவனின் விருப்பத்தின் பேரில் அகல்யாவோடு உறவு கொண்டிருந்தான் என்று கூறிவிட்டால் அது அகல்யாவிற்கு கடுகளவிற்காவது நிம்மதியை கொடுத்திருக்கும், ஆனால் வருணின் பதிலோ வேறு மாதிரி இருந்தது, அந்த பதில் அகல்யாவை மேலும் வேதனைபடுத்தியது, அவளின் மனதில் சுடர் விட்டு கொண்டிருந்த எரிமலையை கொதித்தெழ செய்தது.

‘”சாரி, இது என் சுயநினைவோட நடக்கல, நேத்து நடந்தத பத்தி என் ப்ரென்ட்ஸ்கிட்ட சொன்னேன், அப்புறம் நேரா வீட்டுக்கு வந்தேன், அதுகப்ரம் நடந்ததெல்லாம் என்னோட கண்ட்ரோல மீறி நடந்தது தான்” என்று கூறியவனுக்கு சடனாக கார்த்திக் கொடுத்த பாதாம்பால் நினைவுக்கு வந்தது.

“எஸ், இப்போ தான் நியாபகம் வருது, கார்த்திக் எனக்கு பாதாம் பால் கொடுத்தான், அவன் தான் ஏதாவது பால்ல கலந்திருக்கணும், எனக்கு நல்லது செய்றேன்னு நினச்சி அவன் தான் லூசுதனமா இத பண்ணிருக்கணும்” என்று சத்தமாக கூறியவன் மனதிற்குள் கார்த்திக்கை கேவலமாக திட்டி கொண்டிருந்தான்.

“டேய் கார்த்திக், நல்லது பண்றேன்னு நல்லா பண்ணி வச்சிருக்கடா, உன்ன யாருடா எனக்கு மாமா வேலைலாம் பார்க்க சொன்னது, ஆனா உன்ன சும்மாவே விட மாட்டேன்” என்று சில கெட்ட வார்த்தைகளை சேர்த்து போட்டு வருண் மனதிற்குள் கார்த்திக்கை வறுத்தெடுத்து கொண்டிருக்க அகல்யாவிற்கோ சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.

“ஹோ இதெல்லாம்  உங்க வேலை தானா, இந்த வருண பத்தின உண்மைய மறைச்சி நல்லவங்க மாதிரி நடிச்சி இந்த கல்யாணத்தை நடத்தினது மட்டும் போதாதுன்னு என்ன அவனுக்கு தாரை வார்த்து வேற கொடுக்க மாமா வேலை பார்த்திருக்கிங்க, இது கும்பலா பண்ண சதியா, இல்ல அந்த கார்த்திக் மட்டும் சிங்குலா பண்ணதான்னு தெரில, ஆனா முதல்ல அந்த கார்த்திக்கு நரகம்னா என்னனு காட்றேன், அதுக்கப்றம் எல்லாரையும் மொத்தமா நரகத்துக்கு பார்சல் பண்ணி அனுப்பறேன், கார்த்திக் ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணினன்னு நீ காலம் முழுக்க கவலைபடர மாதிரி சீக்கிரமே பண்றேன்” என்று அகல்யா கார்த்திக்கை தன் பழிவாங்கும் லிஸ்டிற்குள் முக்கிய குற்றவாளியாய் சேர்த்திருந்தாள்.

இப்படி இருவருமே கார்த்திக்கை பழி வாங்கும் எண்ணத்தில் உறுதியாக இருக்க, இதில் வருணின் பழிவாங்கும் எண்ணம் உப்புக்கு கூட பெறாத விஷயம் என்று அனைவருக்குமே தெரிந்தது தான், ஆனால் அகல்யா அப்படி இல்லை, ஏற்கனவே அவள் அடிபட்ட பாம்பாய் சீறி கொண்டிருந்தாள், இதில் இந்த விஷயம் அவளை மேலும் சீண்டி விட்டிருக்க அவளின் சாப்ட்கார்னர் எல்லாம் காணாமல் போய் கோபம் மட்டுமே அவள் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.

யாருக்காக இருந்தாலும் கற்பு என்பது பொக்கிஷம் தானே, மனம் விரும்பியவரோடு உடலையும் பகிர்ந்து கொள்ள தானே ஆசைபடுவர், அப்படி இருக்க அகல்யாவிற்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கும் போது அவளால் எப்படி அமைதியாக இருக்க முடியும். அவளின் வேதனையை மனதிற்குள் பூட்டி வைத்து கொண்டவள் திரும்பவும் விளையாட்டை ஆரம்பித்தாள்.

அகல்யாவிற்கு நேற்று வரை தடையாக இருந்தது அவளின் கற்பு மட்டுமே, இன்று அதுவும் வருணால் களவாடபட்டிக்கும் போது அவளின் பழிவாங்கும் உணர்ச்சிக்கு அதுவே பலமாகி போனது. அகல்யா அந்த பலத்தை வைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.  

“என்ன சொல்றிங்க, நீங்க சொல்றதுல ஏதாவது அர்த்தம் இருக்கா, பாதாம்பால் கொடுத்தா உங்களுக்கு கான்சியஸ் போய்டுமா, இப்போ என்ன சொல்ல வரிங்க சுயநினைவு இல்லாம தான் என் கூட இருந்திங்கன்னா, இத நான் நம்பனுமா, விளையாட்டுக்கு ஒரு அளவு இருக்குங்க, என்கிட்டே விளையாடின வரைக்கும் போதும், எனக்கு ரொம்ப பசிக்குது, இன்னைக்கு என்னோட எனெர்ஜி புல்லா உங்களால போய்டுச்சி, இப்போ ஏதாவது சாப்ட்டா மட்டும் தான் எனக்கு எனெர்ஜி கிடைக்கும், எனக்கு கீழ போக ஷையா இருக்கு, நீங்க கீழ போய் எனக்கு, சாப்ட ஏதாவது எடுத்துட்டு வரீங்களா” என்று அகல்யா வெட்கப்பட்டு கொண்டே பேசினாள்.

அவளின் இந்த சடன் சேஞ் வருணை பயங்கரமாக குழப்பியது, தன்னை போலவே அகல்யாவும் கண்ட்ரோலை இழந்து தான் உறவில் ஈடுபட்டிருப்பாள் என்று நினைத்த வருணுக்கு அகல்யாவின் இந்த பேச்சு குழப்பத்தை கொடுத்தது.

அவனால் அகல்யாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை, கல்யாணத்திற்கு முந்தைய நாள் வருணையே மிரட்டினாள், கல்யாணம் முடிந்து வேனில் வரும் போது தெரியாமல் கை பட்டதுக்கு கோபப்பட்டு சீறினாள், பர்ஸ்ட் நைட்டிலோ எல்லாவற்றிற்கும் சம்மதம் என்று அவனை பாடாய்படுத்தினாள், கடைசியில் அவனின் ஆண்மை மீதே குற்றம் சுமத்தியவள் வருணின் ஆண்மை வீறு கொண்டு எழுந்த போது அடிபணிந்து அவனோடு உறவாடினாள். இப்படி இரண்டு நாட்களாக ஒவ்வொரு நேரத்திலும் அகல்யாவிடம் ஏற்படும் பிஹேவியர் சேஞ் வருணை மொத்தமாக குழப்பியது. இப்படி குழம்பி கொண்டிருந்தவன் சட்டென்று ஸ்ட்ராங்கான மனநிலைக்கு தாவியிருந்தான்.

“நோ வருண், இவ தான் எதோ பண்ணி உன்னோட ஒண்ணா இருந்திருக்கா, இந்த கல்யாணத்தை கண்டின்யூ பண்ண இவ போட்ட ப்ளான்ல இதுவும் ஒண்ணா கூட இருக்கலாம், அப்போ கார்த்திக் கொடுத்த பால்ல எதுவும் இல்ல, இவ தான் எதோ பண்ணிட்டா, இல்லைன்னா கார்த்திக் வீட்ல இருந்து இங்க வர வரைக்கும் எப்படி எதுவும் ரியாக்ட் ஆகாம இருந்திருக்கும், இவள பார்த்த பிறகு தான் என்னோட கண்ட்ரோலே என்ன விட்டு போச்சி, அப்போ இந்த சதிக்கு காரணம் கன்பார்ம் இவளா தான் இருக்கும்” என்று வருண் கார்த்திக்கை விட்டு விட்டு இந்த சம்பவத்திற்கு காரணம் அகல்யா தான் என்று முடிவு கட்டியிருந்தான்.

“ச்சீ, என்ன பொண்ணு இவ, பணத்துக்காக இவ்ளோ தூரம் இரங்கி போவாளா, இவள பொண்ணுன்னு நினச்சேன் பாரு அதுவே பெரிய தப்பு, இனியும் இவள இப்படியே விட கூடாது, என் கற்ப சூறையாடிட்டால்ல, இனி இந்த வருனோட அரகன்ட் முகத்தை இவளுக்கு காட்றேன்” என்று அகல்யாவின் வலிமை புரியாமல் வில்லன் ரோல் ப்ளே செய்யும் முடிவுக்கு வந்திருந்தான் வருண்.

வருண் இப்படி யோசித்து கொண்டிருக்க “உங்கள தான், எனக்கு பசிக்குது சீக்கிரம் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வாங்க” என்று உசிப்பினாள் அகல்யா.

“என்னது நான் உனக்கு சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரதா, உன்ன போனா போதுன்னு விட்டா, நீ எனக்கே தண்ணி காட்ட பார்க்கறையா, வேண்டாண்டி, ஒழுங்கா நான் கட்டின தாலிய கழட்டி வச்சிட்டு இந்த வீட்ட விட்டே ஓடி போயிரு, இல்லாட்டி நான் அடிக்கற அடில ரத்த கண்ணீர் வடிக்க வேண்டியது தான்” என்று நெஞ்சை நிமிர்த்து கொண்டு கண்கள் சிவக்க கோபமான குரலில் மிரட்டினான் வருண்.

அவனின் இந்த புது டோன் அகல்யாவை திடுக்கிட வைத்தது, அவனின் பயந்த சுபாவத்தை  பார்த்து பழகிய அகல்யாவிற்கு அவனின் இந்த கர்ஜனை அவளை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது.

அவனை டம்மி பீஸ் என்று நினைத்து கொண்டிருந்தவளின் யூகம் எந்த அளவுக்கு தவறு என்று வருணின் இந்த முகம் புரிய வைத்தது. அவன் பேசியதில் ஒரு செகன்ட் ஜெர்க் ஆன அகல்யா உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி இருந்தாள்.

“அகல்யா பீ ஸ்ட்ராங், தப்பு செஞ்ச இவனே இவ்ளோ தைரியமா நெஞ்ச நிமித்திகிட்டு மிரட்டும் போது நீ பாதிக்கபட்டவ, நீ எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கணும், இவனோட மிரட்டல்கெல்லாம் நீ பயந்தா அப்புறம் இவன் உன்ன மட்டும் இல்ல, உன்ன மாதிரி இன்னும் எத்தன பொண்ணுங்கள வேணும்னாலும் ஏமாத்துவான்,  இவன மாதிரி ஆளுங்கள சும்மா விடவே கூடாது, இப்படிபட்ட ஆளுங்க எல்லாருக்கும் நீ கொடுக்கற பதிலடியா இவனுக்கு கொடுக்க போற தண்டனை இருக்கணும், சோ உன்னோட உறுதியான மைன்ட்செட்ல இருந்து பின்வாங்கிடாத” என்று தனக்கு தானே தைரிய வார்த்தைகள் கூறியவள் தைரியமாக அவனை பார்த்தாள்.

“என்னங்க காமெடி பண்ணிட்டு இருக்கீங்க, நான் வீட்ட விட்டு போறது இருக்கட்டும், நீங்க முதல்ல எனக்கு சாப்பாடு கொண்டு வர போறீங்களா இல்லையா” என்று விடாபிடியாக கேட்டாள் அகல்யா.

“நான் போக மாட்டேன்னு சொன்னா என்னடி பன்னுவ” என்று பதிலுக்கு வேகமாக குரலை உயர்த்தி கேட்டான் வருண்.

“நான் என்னங்க பண்ண போறேன், நானே கிச்சனுக்கு போய் சாப்பாடு போட்டுட்டு வர போறேன், அவ்ளோ தான் பண்ண போறேன், ஆனா நடுவுல யாராவது என்கிட்டே ஏதாவது கேட்டா அப்புறம் மாடி ரூம்ல நமக்குள்ள நடந்ததெல்லாம் உளறி கொட்டிருவேன், அப்புறம் வீட்ல இருக்க எல்லாருக்குமே நமக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் முடிஞ்சிடுச்சின்னு தெரிஞ்சி போய்டும், அதுவும் மாடி ரூம்ல நடந்தது தெரிஞ்சிடும், எல்லாரும் நம்மள ஒரு மாதிரி பார்ப்பாங்க, அப்புறம்” என்று அகல்யா பேசி கொண்டே போக வருண் கையை அவளுக்கு முன் நீட்டி, நிறுத்து என்பதை போல சைகை செய்தான்.

“சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன்” என்று அமைதியான குரலில் கூறியவன் அவள் முகத்தை கூட பார்க்காமல் வேகமாக ரூமிலிருந்து வெளியேறினான், அவன் இப்படி திருப்பி போட்ட தோசை மாதிரி அடக்கமாக செல்வதை பார்த்த அகல்யாவிற்கு சிரிப்பு வந்தது.

“கொஞ்ச நேரத்துல இவன வில்லன் ரேஞ்சுக்கு நினச்சிட்டேன், இவன் ஒரு டம்மி பீசு தான்” என்று நினைத்து கொண்டு அகல்யா சிரித்து கொண்டிருக்க அவளிடம் அவமானப்பட்ட வருண், வில்லன் ஆக மாற ஒரு ப்ளான் போட ஆரம்பித்திருந்தான்.

வருண் போடும் ப்ளான் அவனை வில்லன் ஆக்க போகிறதா, இல்லை அவனுக்கே ஆப்பு வைக்க போகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடரும்..

    No comments yet.