சமீபத்தில் என் நண்பர் ஒருவரின் மகனுடைய திருமண நிச்சயதாரத்திற்க்கு சென்றிருந்தேன். அங்கே மணமகன் மணப்பெண்ணின் கையில் மோதிரம் அணிவித்தும் எல்லோரும் பையனை பார்த்து “மாட்டிக்கிட்ட தம்பி ” அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சது. இனி சிரிக்க கூட மாட்ட என எல்லோரும் பேச அந்த பையன் முகம் வாட ஆரம்பித்தது .
நான் அந்த பையனையும் , பெண்ணையும் கூப்பிட்டு அவங்க எல்லோரும் சொல்லுறமாதிரி திருமணம் என்பது அவ்வளவு கஷ்டமில்லை.அது வாழ்வின் அடுத்த பரிணாமம் தான் ,ஆனால் அதற்க்கு சில விஷயங்களின் புரிதல் அவசியம் அவ்வளவே என ஆரம்பித்தேன். இப்போது அவர்கள் இருவர் முகத்திலும் ஒரு மாற்றத்தை பார்க்க முடிந்தது.
குழந்தை எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது எல்லோரும் அதை பார்த்து ” பார்த்து பார்த்து விழுந்திட போகுது” என சொல்ல வீட்டில் இருக்கும் பாட்டியோ ,தாத்தாவோ பரவாயில்லை விடு விழுந்தா ஒரு தடவை தானே விழட்டும் . அப்பறம் எப்படி அது நடக்க பழகும் என்பார்கள். அப்படி தான் இவர்கள் எல்லோரும் உன்னை பயமுறுத்துவது எனவே கவலை வேண்டாம்.
திருமண வாழ்க்கை என்பதும் அப்படித்தான் புரிதல் வரும் வரை அது ஒரு புதிர் தான் , இது ஒரு வாழ்க்கை வளர்ச்சி அதற்கு ஏற்ப நம்மை மாற்றி கொள்ள அதன் சுகம் புரியும். நீங்க ரெண்டு பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர் என்பதால் உங்களுக்கு புரியும் படி சொல்கிறேன், இன்ஜினீயர் என தொடுக்கும் உங்கள் வேலை பயணம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் போது அந்த பதவிக்கேற்ப வரும் வேலை பளுவை எதிர்கொள்ளும் பண்பு வர அந்த பளு இலகுவாக தெரியும். அது போல திருமணம் எனும் பந்தத்திற்குள் வர அதற்க்கு ஏற்ப ஒரு பளு வரும் உங்களை பயன்படுத்திக்கொள்ள அந்த பளுவும் ஒரு சுகமாய் தெரியும்.
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல்(understand ) என்பது புத்திகூர்மை (intelligence) போல , ஒருவரையொருவர் அவரை அவராய் ஏற்று கொள்ளுதல்( acceptance ) என்பதுஅனுபவம் (experience) போன்றது. இரு வேறுபட்ட குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்த இருவர் ஒன்றாய் வாழ தொடங்கும் போது , பல்வேறுபட்ட நிகழ்வுகள் இயல்பே . பாடங்களை புரிந்துகொள்ள அதன் கஷ்டங்கள் இலகுவாக மாறுவது போல , அடிப்படையான மாற்றத்தை மனம் ஏற்றுக்கொள்ள அதன் சுவாரசியம் சுகம் தரும் . பல காலங்கள் அந்த பாடம் படிக்க கிடைக்கும் அனுபவம் அதன் கஷ்டங்களை தாண்டி அதை கையாளும் பக்குவம் தரும்.
வாழ்க்கையும் அப்படி தான் ஆரம்பத்தில் கஷ்டமாய் தோணும். எந்த ஒரு விஷயமும் ஆர்வத்துடன் எதிர்க்கொள்ள அதன் எதார்த்தம் எளிதாய் புரியும். காலில் சக்கரம் கட்டி ஓடப்பழகும் குழந்தை முதலில் சிரமம் கொள்ளும் , அதன் நுணுக்கங்கள் தெரிய எளிதாய் ஓட்டம் கொள்ளும் அப்படி தான் வாழ்வில் வரும் ஒவ்வொரு மாற்றமும் அதன் நுணுக்கங்கள் புரிய சுலபம் ஆகும்.
எனவே உங்கள் இதுவரையிலான வாழ்வியல் முறைகளை உங்களுக்குள் பகிர்ந்து உங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள செய்யுங்கள். உங்களுக்கு இடையே வரும் மாற்று கருத்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்து மனதினை தெளிவு பெற செய்யுங்கள். கோபம் கொள்ளுங்கள் ஆனால் கோபம் கொள்ளும் போது பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். பிறகு அமைதியாய் உங்களுக்குள் அலசி ஆராய்ந்து கொள்ளுங்கள் , உங்கள் மேல் குறை இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள் .
நன்றியையும் , மன்னிப்பையும் , பாராட்டையும் மறைக்காமல் உடனுக்குடன் பரிமாறி கொள்ளுங்கள் , அது ஒரு பரஸ்பர பரவசமான நிலையை தரும் .
வாழ்க்கையை வாழ பழகி கொள்ள அதன் அளப்பரிய ஆனந்தம் உங்களை வந்து சேரும் . ஆகவே பயம் இன்றி நீங்கள் நீங்களாய் வாழ தொடங்குங்கள் , பின்பு வரும் மாற்றங்களை பொருத்து உங்களை மகிழ்வுடன் மாற்றி கொள்ளுங்கள். இந்த பண்பு உங்களை பக்குவப்படுத்தி பலரும் வியக்கும் படி வாழ செய்யும்.
எண்ணம் போல் வாழ்க்கை . எண்ணங்களின் வண்ணத்தை போலவே வாழ்வின் வண்ணங்கள் தீர்மானிக்க படுகின்றன. எல்லாம் நல்லதாய் நடக்கும் என நம்பி வாழ்க்கையை தொடங்கி , எப்பொழுதும் அந்த நிலை மாறாது வாழுங்கள் . இன்று உங்களை பயமுறுத்தும் பலரும் அந்த சூட்சமம் தெரியாதவர் என்பது தெளிவாய் புரியும் என முடித்தேன்.
இப்போது அந்த இருவர் முகத்திலும் ஒரு சந்தோசம் மற்றும் தெளிவை உணர்ந்தேன் . அதற்க்கு அத்தாட்சியாய் அவர்களிடம் இருந்து கிடைத்தது ” ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் ” என்ற ஒரு வார்த்தை ….
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் – மகோ
+91-98438-12650
கோவை-35