ஹஜ் யாத்திரை  – போட்டி கதை எண் – 44

0
(0)

‘ஹஜ் யாத்திரை’ என்ற சிறுகதையை எழுதியவர் வைரமணி (புனை பெயர்-மகா)

                                           ஹஜ் யாத்திரை

அந்த தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம். முன் பதிவு செய்த பயணிகள் பெட்டியில் பயணியர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென ஓர் அவலக்குரல்! “என் செல்லமே! உனக்கு என்னாச்சி?”
அந்தக்குரல் கேட்டுப் பக்கவாட்டுப் படுக்கையில் படுத்திருந்த ரஹீம் பாய் கண்விழித்தார்.
என்னம்மா? என்னாச்சு?
நன்றாக இருந்த என் குழந்தை திடீரென்று மூச்சு வாங்குது… எனக்கு ஒரே பயமா இருக்கு என்றாள் மாலா.
பதட்டப்டாதே அம்மா!
ரஹீம் பாய் தன் மனைவி பாத்திமாவை எழுப்பிக் குழந்தையைப் பார்க்கச் சொன்னார்.
பாத்திமாவும் அந்தக் குழந்தையை வாங்கித் தன் தோளில் போட்டு முதுகில் தட்டிக் கொடுத்துப் பார்த்தார். குழந்தை மூச்சு வாங்குவது நிற்கவில்லை.
ஏங்க! குழந்தையை உடனே டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும்.
சரி பாத்திமா! அப்படியே செய்வோம்.
ரஹீம் பாய் மணியைப் பார்த்தார். அதிகாலை மணி 1.15.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் வண்டி திண்டுக்கல் சந்திப்பை அடைந்துவிடும். அங்கு இறங்கி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம்.
ஏம்மா? உன் கூட யாரும் வரவில்லையா?
என் மாமியார் வந்திருக்கிறார். கீழ் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
அவரையும் எழுப்பி விடு! நாம் எல்லோரும் திண்டுக்கல்லில் இறங்கிவிடுவோம்.
மாலா ஃபாத்திமாவிடம் ”அம்மா, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்றாள்.
நாங்கள் திருநெல்வேலி செல்ல வேண்டும்.
பிறகு திண்டுக்கல்லில் இறங்குவோம் என்கிறீர்கள்.
உன் குழந்தையை இப்படிப் பார்த்தபிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்?
திண்டுக்கல் ரயில் நிலையம். பாய், அவரது மனைவி, மாலா, அவள் குழந்தை மற்றும் மாமியாருடன் வண்டியிலிருந்து இறங்கினர். பாய் ஒரு வாடகை டாக்ஸி ஏற்பாடு செய்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் 24 மணி நேர ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தையைச் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
பணியிலிருந்த டாக்டர் குழந்தையைப் பரிசோதித்து உடன் ஐசியு வார்டில் சேர்க்க பரிந்துரைத்தார். பணம் 20000 உடன் கட்டச் சொன்னார்.
மாலா, பாய் என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே? நான் என்ன செய்வேன்?
மகளே கலங்காதே! நான் பார்த்துக் கொள்கிறேன்.
பாய் அருகிலிருந்த ஏடிஎம் சென்று பணம் எடுத்துக் கட்டிக் குழந்தையை ஐசியு வார்டில் சேர்த்து விட்டு, மனதில் அல்லாவே! அந்தக் குழந்தைக்கு ஏதும் ஆகக் கூடாது என அந்த அதிகாலை நேரத்தில் நெஞ்சுருக பிரார்த்தனை செய்தார்.
டாக்டர் ஐசியு வார்டிலிருந்து வரவும் மாலா டாக்டரிடம் என் குழந்தை எப்படி இருக்கிறாள்? என்றாள்.
மூச்சு வாங்குவது குறைந்திருக்கிறது. இன்னும் சீரான மூச்சு வரவில்லை. காலையில் குழந்தைநல சிறப்பு மருத்துவர் வருவார். அவர் வந்து மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார். இப்போதைக்குப் பயப்பட வேண்டாம்.
மாலாவும் தன் குலதெய்வத்தை நினைத்து மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டாள்.
ரஹீம் பாய், மகளே சற்று நேரம் ஓய்வெடு. உன் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என கூறினார்.
காலை மணி 6 ஆனதும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த வேப்பமரத்தடியில் ஒரு துண்டு விரித்து மண்டியிட்டு பாய் துஆ (தொழுகை) செய்ய ஆரம்பித்தார்.
10 மணிக்கு குழந்தைநல சிறப்பு மருத்துவர் வரவும் மாலா, டாக்டர் என் குழந்தையை காப்பாத்துங்க! எனக்கூறிக் கொண்டே அழுதுவிட்டாள்.
இன்னும் சில டெஸ்ட் எடுக்கணும். ஸ்கேன் வேற எடுக்கணும். மேற்கொண்டு 20000 பணத்தைக் கட்டுங்க என்றார் அந்த டாக்டர்.
ரஹீம் பாய் அதற்கும் ஏற்பாடு செய்தார்.
மணி 11.00 ஆனது. மாலா பாயிடம், என்னால் உங்களுக்குத் தான் எவ்வளவு சிரமம்? நீங்கள் போக வேண்டிய ஊருக்கும் போகாம என் குழந்தைக்காக இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கே?
இதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல. இன்னும் யாரும் சாப்பிடாம இருக்கீங்களே? நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்.
சிறிது நேரத்தில் ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் எல்லோரும் டாக்டரிடம் போய் குழந்தை எப்படி உள்ளது? அதற்கு என்ன பிரச்சனை? என்றனர்.
குழந்தையின் இதயத்தில் ஒரு சிறு ஊசிமுனை அளவுக்குத் துளை உள்ளது. அதை சர்ஜரி செய்து சரி செய்ய வேண்டும்.
ஆப்பரேஷனா? என மூர்ச்சையானாள் மாலா.
அவளை ஆசுவாசப்படுத்தினார் அவரது மாமியார்.
ஆப்பரேஷன் உடனே செய்ய வேண்டுமா?
இல்லை. குழந்தைக்கு ஒரு வயது ஆனபிறகு செய்தால் போதும். இப்போதைக்கு மூச்சு சீராகிவிட்டது. டிஸ்சார்ஜ் செய்து நீங்கள் கூட்டிப் போகலாம். ஆனால் மீண்டும் மூச்சு சீராக இல்லையென்றால் சர்ஜரி உடனே செய்ய வேண்டியிருக்கும். குழந்தையைப் பத்திரமா பாத்துங்கோ!
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசன்.
மாலா மடியில் அவள் குழந்தை. குழந்தை ஃபாத்திமாவைப் பார்த்துக் கை நீட்டிச் சிரித்தது. பாயம்மா குழந்தையைத் தூக்கவும் பொக்கை வாயைக் காட்டி இன்னும் பலமாய் சிரித்து கைதட்டி ஆரவாரம் செய்தது.
அதைக் கண்ட ரஹீம் பாய் அல்லாவின் கருணையை நினைத்து மனதிற்குள் நன்றி கூறினார்.
அவர்கள் செல்லவேண்டிய ரயில் வரவும் ஏறிப் புறப்பட்டனர்.
மாலா உன் வீட்டுக்காரர் என்ன செய்கிறார்? தூத்துக்குடிக்கு டிக்கட் எடுக்கச் சொன்னாய்? அங்கு எங்கிருக்கீங்க?
ஸ்பிக் நகரில் இருக்கோம். நாங்க இருக்கிறது ஒரு குடிசை வீடு தான். அவரு ஒரு உப்பளத்தில் வேலை பார்க்கிறார். என் குழந்தைக்காக நிறைய செலவு செய்து விட்டீர்கள். இந்தக் கடனை நான் எப்படி அடைப்பேன்?
உன்னிடம் நாங்கள் பணம் ஏதும் கேட்கவில்லையே! ஒரு வயசு ஆனதும் சொல்லு! உன் குழந்தைக்கான ஆப்பரேஷனை நான் செலவு பண்ணி முடிச்சித் தாரேன். என் வீடு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில இருக்கு. இது தான் என் விலாசம் என கார்டு கொடுத்தார். எந்த உதவி வேணும்னாலும் இந்த வாப்பா கிட்ட தயங்காமக் கேளு.
ஓராண்டு நிறைவுக்குப் பின் குழந்தைக்கு ரஹீம் பாயின் முயற்சியால் நல்லபடியாக சர்ஜரி முடித்து வீடு திரும்பினார்கள்.
மாலா தன் கணவனுடன் பாய் வீட்டுக்கு வந்தாள். கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்து ஃபாத்திமாவிடம் கொடுத்தாள்.
இதெல்லாம் எதுக்கும்மா? என ஃபாத்திமா சொல்ல, என் வாப்பா உம்மாவுக்கு இதைக் கூட நான் செய்யலேன்னா நான் மனுஷியே இல்ல.
பரவாயில்லையே! நல்லாப் பேசுறியே? குழந்தை நன்றாயிருக்கிறாளா?
உங்களோட ஆசிர்வாதத்தாலும் அல்லாவுடைய கருணையாலும் அவள் நல்லாருக்காம்மா!
மாலா பாயையும் ஃபாத்திமாவையும் ஒன்றாக நிற்க வைத்து தானும் தனது கணவன் மற்றும் குழந்தையுடன் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
நீங்க நல்லாயிருக்கணும் என வாழ்த்தினர் ரஹீம் பாய் தம்பதி.
நான் தான் உங்களுக்கு ரொம்ப செலவு வச்சிட்டேன். அன்னைக்குத் திண்டுக்கல்லில் நிறைய செலவு செஞ்சீங்க. இப்பவும் ஆப்பரேஷனுக்கு லட்ச ரூபாய்க்கு மேல செலவு பண்ணீட்டீங்க?
நான் உன்கிட்ட கணக்கு கேட்டேனா?
எனக்கு மனசு உறுத்துது. முன்ன பின்ன தெரியாத இந்த ஏழைக்கு உதவி செய்ய எவ்வளவு பெரிய மனசு வேணும்?
மகளே, இது ஹஜ் பயணத்துக்காக நான் சேர்த்து வச்ச சேமிப்பு.
அப்படியா? என்னால உங்க புனிதப் பயணம் தடை பட்டுடுச்சே?
அதெல்லாம் இல்லை. அல்லா இந்தக் குழந்தையைக் காப்பாத்துற நல்ல காரியத்துல எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார். அவருக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.
ரொம்ப நன்றி வாப்பா, உம்மா! உங்களுடைய ஹஜ் பயணம் தடைபட்டதில் எனக்குத் தான் ரொம்ப வருத்தம்.
கவலைப்படாதம்மா. இன்னும் இரண்டு வருஷம் காசு சேர்த்து வச்சோம்னா ஹஜ் போகப் போறோம்.
உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதால தான் நாட்டில் மழை பெய்யுது. என் பெண்ணுக்கு என்ன பெயர் வைச்சிருக்கேன் தெரியுமா? பாத்திமா.
நீ வேற மதத்தைச் சேர்ந்தவ. எங்க மதத்துப் பேரை வைக்கிறியே?
எல்லா மதமும் ஒண்ணு தாம்மா! எல்லா உடம்புலேயும் இரத்தம் சிகப்பாத்தானம்மா ஓடுது! என் மகளுக்கு உயிர் கொடுத்த உங்களுக்கு என்னோட நன்றி தானம்மா அது.
பாய் மருமகள் வந்து இப்படியே பேசிக்கிட்டிருந்தால் எப்படி? வாங்க எல்லோரும்! சாப்பிடலாம் என அழைத்தார்.
எல்லோரையும் உட்கார வைத்து தலை வாழை இலை போட்டு பாயின் மருமகளும் மகனும் அறுசுவை விருந்து அளித்தனர். பாயின் மகனுக்கும் மருமகளுக்கும் அன்று தான் முதலாம் ஆண்டுத் திருமண நாளாம். அதனால் தான் அந்த சிறப்பு விருந்தை அவர்களே பரிமாறினார்களாம்.
சரி வாப்பா… உம்மா… நாங்கள் கிளம்புகிறோம். நீங்க செய்த உதவிக்கு நன்றின்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமாயிடும். எங்க உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை மறக்க மாட்டோம். நீங்களும் ஒரு நாள் எங்க குடிசைக்கு வரணும். உங்க மகனையும், மருமகளையும் கூட்டிட்டு வாங்க!
அப்படியே ஆகட்டும். நல்லபடியா போயிட்டு வாங்க. குழந்தையைப் பத்திரமா பாத்துங்கோங்க! என அவர்கள் வாங்கி வைத்திருந்த பட்டுப்புடவை, வேட்டி சட்டை, குட்டி ஃபாத்திமாவுக்கு ரோஜா நிறத்தில் ஒரு கவுன் என அனைத்தையும் வெற்றிலை, பாக்கு பழத் தட்டுடன் ஆயிரத்தி ஒரு ரூபாய் சேர்த்து கொடுத்தார்கள் பாயும். பாயம்மாவும்.
வாப்பா, எங்களை மேலும் மேலும் கடன்காரர் ஆக்குறீங்களே?
பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே. எங்களுக்குப் பெண் குழந்தை இல்லையேன்னு வருத்தப்பட்டோம். நீ தான் எங்களுடைய பெண் குழந்தை. என் பேத்தி தான் குட்டி ஃபாத்திமா. சரியா?
சரி தான். என்று கூறிய மாலாவின் கண்ணிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கொட்டியது.

மாலாவும் அவள் கணவனும் சீக்கிரம் பாய்க்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்க வேண்டும் என திருச்செந்தூர் முருகனை மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டு கிளம்பினர். அந்த நேரம் மாதா கோவிலின் மணி ஓசை ஒலித்து அவர்களது பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டது.

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!