‘ராஜாத்திக்குப் புரியவில்லை’ என்ற சிறுகதையை எழுதியவர் சுசிகிருஷ்ணமூர்த்தி
ராஜாத்திக்குப் புரியவில்லை
ராஜாத்திக்கு எதைப் பார்த்தாலும் எரிச்சலாக வந்தது. அன்று காலையில் எழுந்த பொழுது ஒரு சின்ன எதிர்பார்ப்போடு எழுந்தாள் ராஜாத்தி, ஏனென்றாள் அன்று அவள் பிறந்தநாள்.
இது நாள் வரை அவள் பிறந்தநாளை அவளும் ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அதே மாதிரி கணவரோ மகனோ தன் பிறந்தநாளை ஞாபகம் வைத்து ஒரு வாழ்த்துக் கூட சொல்லாததை நினைத்து அவள் வருந்தியதும் இல்லை.
ஆனால் இந்த முறை அவளுக்கே தன்னைப் பற்றி நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. அறுபது வருடங்களாக கொண்டாடாத தன் பிறந்த நாளை இந்த முறை மட்டும் கணவரோ , மகனோ இல்லை புதிதாக வந்த மருமகள் யாழினியோ ஞாபகம் வைத்துக் கொண்டாடுவார்கள் என்ற ஒரு சின்ன நப்பாசை தனக்குள் ஏன வந்தது என்று நினைக்க நினைக்க அவளுக்கே தன்னைப் பற்றி ஒரு கழிவிரக்கம் தோன்றியது.
தன் பிறந்த நாள் பற்றி இனிமேல் நினைக்கவே கூடாது என்ற வைராக்கியத்தோடு வீட்டு வேலையில் முனைந்தாள் ராஜாத்தி. ராஜாத்தி என்பது பெயரில் மட்டும் தானே தவிர கணவர், மகன், மருமகள் யாழினி மூவருமே அலுவலகம் செல்வதால், அவளுக்கு நாள் பூரா வேலைதான்.
பாவம் மருமகள் யாழினி நல்ல பெண்தான். ஆனால் காலையில் சீக்கிரமே அவள் அலுவலக பஸ் வந்து விடுவதால் அவளால் தன் மாமியாருக்கு அதிகம் உதவ முடிவதில்லை. ராஜாத்தியும் குற்றம் சொல்லும் மாமியார் இல்லை என்பதால் , “சரி! பெயரில்தான் ராஜாத்தி – வீட்டில் முழு நேர வேலைக்காரி’ என்பது போல் ராஜாத்தி எதையும் எதிர்பார்க்காமல் தன் வேலையை செய்து வந்தாள்.
ஆனால் போனவாரம் யாழினி, தன் அலுவலகத் தோழி புடவை வியாபாரம் செய்கிறாள் என்று சொல்லி, ராஜாத்தியின் கையில் ஒரு பச்சை நிற பட்டுப் புடவையை கொடுத்த பொழுது கூட, யாழினி புடவை எப்படி இருக்கிறது என்று தன்னை அபிப்பிராயம் கேட்கிறாள் என்று நினைத்து
“ யாழினி ! இந்தக் கலர் உனக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.”
என்று சொல்லி, புடவையை அவள் கையில் திருப்பிக் கொடுத்ததும், யாழினி சிரித்துக் கொண்டே “அம்மா! நான் புடவை எங்கே உடுத்தறேன்? சூடிதார் தான் எனக்குப் பிடிக்கும். இது உங்களுக்காக வாங்கினேன். அளவு பிளவுஸ் கொடுங்கோ. எனக்கு தெரிந்த டெய்லரிடம் பிளவுஸ் தச்சு வாங்கிண்டு வரேன். அப்புறம் நீங்க உடுத்திக்கலாம்” என்று சொன்னபோது, ராஜாத்திக்கு கண் கலங்கி விட்டது.
ஏனென்றால் அதுவரை அவள் கணவரோ மகனோ அவளுக்கு புடவை வாங்கிக் கொடுத்ததே இல்லை. அவளுக்கு வேண்டியதை அவளே தான் வாங்கிக் கொள்வாள். கணவர் பணம் தந்து விடுவார். இதுதான் முதல் முறை அவளுக்கு குடும்பத்தில் ஒருவர் புடவை வாங்கிக் கொடுப்பது.
பிளவுஸும் யாழினி டெய்லரிடம் கொடுத்து தைத்து வாங்கி வந்துக் கொடுத்து விட்டாள். முதலில் ராஜாத்திக்கு அந்தப் புதுப்புடவையை இன்று பிறந்தநாளைக்கு புதுசு உடுத்திக் கொள்ளலாமா என்ற நினைப்பு வந்தது. ஆனால் யாருமே பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லவில்லை. இந்த அழகில் புதுப்புடவை கேட்கிறதோ, என்று தன்னையே கடிந்துக் கொண்டு வேலையில் மூழ்கிவிட்டாள். தன் நினைப்புடன் கூட வேலையில் மூழ்கி இருந்த ராஜாத்தியை, யாழினியின் குரல் எழுப்பியது.
” அம்மா ! விக்னேஷ் ‘பர்த்டே பார்ட்டி’ க்கு நான் போனவாரம் வாங்கிண்டு வந்துக் கொடுத்த அந்த பச்சை பட்டுப்புடவையையே கட்டிண்டுடுங்கோ. மேட்சிங்க் பிளவுஸ் நேத்திக்கு டெய்லர் கிட்டேருத்து வாங்கி புடவை கூடவே வச்சிருக்கேன். கூடவே என்னோட ‘ஜேட் செட்’ ம் வச்சிருக்கேன் . அதையும் போட்டுண்டு சீக்கிரம் ரெடி ஆயிடுங்கோ – நீங்க 7 மணிக்கு மொட்டை மாடிக்கு வந்தாப் போறும் .
நான் முன்னாடி போய் விக்னேஷ் அம்மாக்கு உதவிப் பண்ணிட்டு 7 மணிக்குக் கீழே வந்துட்டு உங்களையும் அப்பாவையும் கூட்டிண்டுப் போறேன். நான் வந்தப்புறம் நீங்க என் கூட மேலே வந்தாப் போதும்.”
யாழினியின் இந்த பேச்சு கேட்டு ராசாத்திக்கு இன்னும் எரிச்சல் பத்திக்கொண்டு வந்தது. யாழினி அவளுக்குப் ரொம்பப் பிடித்த மருமகள் தான் என்றாலும் அன்று என்னவோ யாரைக் கண்டாலும் எரிச்சல் தான் வந்தது.
“பக்கத்து வீட்டு குழந்தை பிறந்தநாள் எல்லாம் கொண்டாடத் தெரியறது. சொந்த மாமியார் பிறந்தநாள் இன்னிக்கு. – அது யாருக்குமே ஞாபகம் இல்லை. புது மருமகளுக்கு என் பிறந்தநாள் இன்னிக்கு என்று தெரியாது – அதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் நான் பெத்து வளர்த்த மகன் ராஜுவோ இல்லை தாலி கட்டிய கணவரோ கூட என்னோட பிறந்தநாள் என்னிக்கு என்று யோஜித்தது கூட கிடையாது. கேட்டா,
“நீ சொல்லி இருந்தா நாங்க உன் பிறந்தநாளையும் விமரிசையாகக் கொண்டாடி இருப்போம் என்பார்கள். நான் என்ன, இவர்கள் எல்லோர் பிறந்தநாளையும் இவர்களைக் கேட்டா கொண்டாடுகிறேன்? இவர்கள் சொல்லாமலேயே நான் எல்லோருடைய பிறந்த நாளையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையா? மறக்காம ஒவ்வொருத்தர் பிறந்த நாளையும் கொண்டாட வில்லையா?
ஏன் – இப்பத்தான் கல்யாணம் ஆகி வந்த மருமகப்பெண் யாழினியோட பிறந்தநாளைக்கூட அவள் ஜாதகம் பார்த்து தேதி குறித்து வைத்துக் கொண்டு விமரிசையாகக் கொண்டாட வில்லையா?
யாழினி கூட “எப்படி அம்மா! கண்டு பிடிச்சு ஞாபகமாகக் கொண்டாடினேள்?” என்று ஆச்சரியப்பட வில்லையா?
இதெல்லாம் நான் யாரும் சொல்லித்தான் கொண்டாடுகிறேனா? மனசிலே பாசமிருந்தா தானே கண்டு பிடிச்சுக் கொண்டாட முடியாதா? ஆனா இங்கே யாருக்கு என்னை பத்தி கவலை இருக்கு? வேலை செய்யறதுக்கு மட்டும் தான் நான் வேணும். மத்தபடி இங்கிலீஷ்லே சொல்வாளே – அது மாதிரி ‘பாத்ரூம் மிதியடி’ தான் நான்.”
இந்த எண்ணமெல்லாம் மனதில் ஓடினாலும் யாழினி கூறியது போல எல்லா அலங்காரங்களையும் இயந்திரக்கதியாகப் பண்ணிக்கொள்ள மறக்கவில்லை ராஜாத்தி. என்ன இருந்தாலும் புது மருமகளின் மனதை வருத்தப் படுத்தக்கூடாது என்பது ஒன்றே அவளின் ஒரே எண்ணமாக இருந்தது அந்த நேரம்.
<<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4893218576531553″
crossorigin=”anonymous”></script>
<ins class=”adsbygoogle”
style=”display:block”
data-ad-format=”fluid”
data-ad-layout-key=”+22+pv+54-z-46″
data-ad-client=”ca-pub-4893218576531553″
data-ad-slot=”7788688586″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script> >
ஆச்சு 7 மணியும் அடித்தது – மனம் முழுவதும் வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கணவரையும் தயாராக இருக்கும்படிச் செய்திருந்தாள் ராஜாத்தி.
யாழினி வந்தததும் , மகனும் கூடவே வந்துவிட எல்லோருமே கிளம்பினார்கள். அவர்கள் இருந்தது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்களது அபார்ட்மெண்ட் மூன்றாவது மாடியில் இருந்தது. மொட்டை மாடி என்பது 5வது மாடி. அங்குதான் அந்தக் குடியிருப்பின் எல்லா சின்ன சின்ன விசேஷங்கள் எல்லாம் நடை பெறும்.
ஒவ்வொரு மாடியிலும் நான்கு குடித்தனங்கள் என்று மொத்தம் 16 குடித்தனங்கள். இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என்று பலவிதமான மனிதர்கள் இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் வருடத்தில் 200 நாட்கள் யாருக்காவது பிறந்தநாள் இல்லை கல்யாண நாள் என்று விசேஷங்கள் இருக்கும்.
எல்லா விசேஷங்களும் 5வது மாடியில் தான் நடைபெறும் . விசேஷங்கள் நடத்துவதற்காகவே என்று அங்கு ஒரு சின்ன ஹால் அமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்கான உணவு வைப்பதற்கு என்று சிமெண்டால் கட்டப்பட்ட ஒரு சிறு மேடையும் சாப்பிட்டபின் கை கழுவுவதற்கு என்று அழகான ஒரு வாஷ்பேஸினும் கூட அமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமில்லை கிட்டத்தட்ட ஐம்பது அறுபது பேர் அமர என்று பிளாஸ்டிக் நாற்காலிகளும் ஒருபுறம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வேண்டும்பொழுது உபயோகிக்க என்று. விசேஷங்கள் என்றால் விருந்து மட்டுமல்ல. பாட்டு கூத்து என்று அமர்க்களப்படும் அந்த ஐந்தாவது மாடி. ராஜாத்தி பலமுறை அந்த மாதிரி விசேஷங்களுக்கு வந்திருக்கிறாள். ஏன் – யாழினியின் பிறந்த நாள் விழா கூட இந்த மொட்டை மாடியில் தான் நடந்தது என்பது அவள் ஞாபகத்திற்கு வந்தது.
இரண்டே மாடி தான் என்பதால் அவர்கள் படியிலேயே ஏறிச் சென்றார்கள். படியில் ஏறும் பொழுது மகன் ராஜு மட்டும் ஏன் கிடுகிடுவென்று முதலில் ஓடுகிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏறினாள் ராஜாத்தி.
தன்னுடைய பிறந்த நாளும் இன்றுதான் என்றுக் கூறி விடலாமா என்றுக் கூட மனதில் தோன்றினாலும், “இதெல்லாம் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றால் 60 வயது வரைக்கும் கொண்டாடாத பிறந்தநாள் இனிமேலும் கொண்டாட வேண்டிய அவசியமில்லை “ என்று மனதைத் திடப் படுத்திக் கொண்டாள்.
ஆச்சு ! மொட்டை மாடி கிட்டே வந்தாச்சு.. எங்கேயாவது ஒரு இரண்டு நிமிடம் உட்கார்ந்தால் தான் மூச்சிறைப்பு நிற்கும் என்று நினைக்கும் பொழுது திடுமென்று மொட்டை மாடியில் எல்லா விளக்குகளும் அணைந்து ஓரே கும்மிருட்டு . யாழினி அவள் அவள் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் சென்றாள்.
மொட்டை மாடியில் கால் பதித்ததும் திடுமென்று எல்லா விளக்குகளும் சொல்லி வைத்தது போல் எரிய ஆரம்பித்தது. அதே நேரம் வானத்திலிருந்து பொழிவது போல ராஜாத்தி மேல் எல்லாம் ரோஜா இதழ்கள் பொழிந்தன.
கிட்டத்தட்ட 40, 50 பேர் ‘ஹேப்பி பார்த்த டே டூ ராஜாத்தி மாமி என்றுப் பாட , ராஜாத்தி அப்படியே அசந்து நின்றுவிட்டாள். இதெல்லாம் தனக்குத்தான் என்றுப் புரியவே இரண்டு நிமிடங்கள் ஆயிற்று அவளுக்கு.
பெரிய ‘கேக்’ முன் . நின்று தன்னை அழைக்கும் யாழினியைப் பார்த்ததும் புரிந்தது அவளுக்கு இதெல்லாம் யாழினியின் முன்னேற்பாடு என்று.
எல்லோரும் வாழ்த்த கண்களில் நீர் வழிய ‘கேக்’ வெட்டினாள் தன் வாழ்க்கையில் முதன் முறையாகப் பிறந்தநாள் கொண்டாடும் ராஜாத்தி. அதன் பிறகு யாழினியும் மகனும் சேர்ந்து ஒரு மொபைல் போனை பிறந்த நாள் பரிசாகக் கொடுக்க, கூடவே கணவர் சுவாமிநாதனும் ஒரு நகைப் பெட்டியை பரிசாக நீட்ட, தான் காண்பது கனவா இல்லை நனவா என்றுத் தெரியாமல் முழித்தாள் ராஜாத்தி.
எல்லோரும் கேக் மற்றும் சிற்றுண்டி சாப்பிடும் பொழுது தான் யாழினி ஒரு சின்ன லெக்சர் கொடுத்தாள். ‘இன்று அம்மாவைப் பார்த்தீர்களா? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று. சில நாட்கள் முன்பு நானும் அம்மாவும் டிவி பார்த்ததுக் கொண்டிருந்தோம் .அதில் ஒரு ’பர்த்டே பார்ட்டி’ காட்சி.
அதை பார்த்ததும் அம்மா என்னிடம் . “இது வரை நான் பிறந்தநாளே நாளே கொண்டாடியதில்லை” என்றாள். நான் ஏன் என்றுக் கேட்டவுடன் ‘”நானே என் பிறந்த நாளைக் கொண்டாட முடியுமா? என் பிறந்தநாள் யாருக்குமே ஞாபகம் இருந்தது இல்லை ‘ என்றாள். நான்,
“ஏன் நீங்களே அவங்க கிட்டே சொல்லக் கூடாதா’?” என்றுக் கேட்டதற்கு “பிறந்தநாள் எல்லாம் சொல்லாமத்தான் கொண்டாடணும். கேட்டு வாங்கிப் பிறந்தநாள் கொண்டாடினால் அது பிறந்தநாள் இல்லை”’ என்றாள்..எனக்கும் அம்மா சொன்னது சரியாகத்தான் பட்டது.
அந்த நேரம் எனக்குள் முடிவு செய்து கொண்டேன், ‘அம்மாவோட அடுத்த பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடணும்’ என்று. அதனால் ஆதார்’ கார்ட் வாங்கவேண்டும் என்று சொல்லி அவள் பிறந்தநாள் தேதி எல்லாம் தெரிந்தக் கொண்டு, பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து எல்லா ஏற்பாடுகளும் செய்தோம்.
நாங்கள் மட்டும் பண்ணினால் போதாது என்று அப்பாவையையும் சேர்த்துக் கொண்டோம் ” என்றுக் கூற எல்லோரும் கை தட்டும் பொழுது ராஜாத்திக்கு ஏற்பட்டது ‘இன்ப அதிர்ச்சி’ என்பதைக் கூறவும் வேண்டுமா?
ஆனாலும் ராஜாத்திக்குப் புரியவில்லை “ஏன் எல்லோரும் இந்த காலத்து மருமகள்கள் மாமியாரை மதிப்பதில்லை. மாமியாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள்” என்று. அந்த நேரம் ராஜாத்தின் மனதில் தோன்றியது “மாமியார் மருமகளிடம் மரியாதை எதிர்பார்ப்பதில்லை. பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறாள்” என்று.
28 comments