‘மைதிலி என்னை மன்னித்து விடு !’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
மைதிலி என்னை மன்னித்து விடு !
அன்று சங்கட சதுர்த்தி. மைதிலி பூஜையறையில் உள்ள விநாயகர் படத்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அப்போது “ மைதிலி மைதிலி “ என்று கோபத்துடன் கத்திக்கொண்டே மோகன் காய்கறி பையுடன் வீட்டிற்குள் நுழைந்தான். சட்டையை கழட்டி கோட் ஸ்டாண்ட்டில் மாட்டிக்கொண்டே “மைதிலி மைதிலி நீ எங்க இருக்கே?“ என்று மீண்டும் கத்தினான்.
“என்னங்க நான் பூஜை அறையில்தான் இருக்கேன். இப்ப என்ன வேணும் உங்களுக்கு“ என்றாள் மைதிலி.
“மைதிலி இது வீடா இல்ல சத்ரமா?” என்று கோபத்துடன் கேட்டான்.
“ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சு. இன்னிக்கி இப்படி வந்தததும் வராதுமா என்கிட்ட கத்தறீங்க”
“கத்தாமல் வேறு என்ன செய்யச் சொல்றே? நம்ம வீட்டு முன்னாடி உள்ள திண்ணையைப் போய் பார். ஒரு வெளியூர் கூட்டமே இலைபோட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கு. நீ பார்க்கலயா?” என்று கத்தினான்.
“ஏங்க இதுக்குதான் இப்படி கத்தறீங்களா? குடும்பத்தோடு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருக்காங்க. அவர்கள் வயசானவங்களா இருக்காங்க. எங்கிட்ட கேட்டுத்தான் நம்ம திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுறாங்க” என்று அமைதியாக கூறினாள்.
“மைதிலி ஓ… நீதான் அவங்களுக்கு பெர்மிஷன் கொடுத்தாயா? நல்லாயிருக்கு ரெம்ப நல்லா இருக்கு. அவங்க சாப்பிட்டுட்டு திண்ணை எல்லாம் நாஸ்டி பண்ணிட்டு போயிடுவாங்கன்னு உனக்கு தெரியாதா? “
“ இல்லீங்க அவங்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோணலே. சாப்பிட்டுட்டு சுத்தம் செய்யச் சொன்னா சுத்தம் செய்திடுவாங்க“ என்று மைதிலி அமைதியாக கூறினாள்.
மோகன் கூடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு “மைதிலி இதெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கலே. அவங்க அப்படியே போட்டுட்டு போனா நீ போய் பெருக்கி சுத்தம் செய்வாயா?” என்று திண்ணையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் காதில் விழும்படி கத்தினான்.
மோகன் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணி புரிந்து வருகிறான். அவன் குடியிருப்பது அவன் முப்பாட்டன் கட்டிய பழமையான வீடு. மனைவி மைதிலியுடன் வசித்து வருகிறான். வீட்டின் முன்புறத்தில் செங்கல் பதித்து செவ்வக வடிவத்தில் திண்ணை இருந்தது. அதில் பத்துபேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிடலாம். ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் ஏழை மக்கள் கிராமத்து மக்கள் தாங்கள் கொண்டுவந்த சாப்பாட்டை திண்ணையில் வைத்து சாப்பிட்டு போகட்டும் என்ற நோக்கத்தில் முப்பாட்டன் திண்ணையை கட்டியிருந்தார்.
அந்த பழமையான வீடு கோவிலுக்கு அருகில் அமைந்திருந்தது. வீட்டு வாசலுக்கு வந்தால் கோபுர தரிசனம் செய்யலாம். மோகனுக்கு கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை. மைதிலிக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம். ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியூரிலிருந்து வருபவர்களில் சிலர் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை அவள் வீட்டுத் திண்ணையில் வைத்து சாப்பிட வருவார்கள். அப்படி வரக்கூடிய குடும்பத்தில், யாராவது குழந்தையோடு வந்தால் போதும் மைதிலி சந்தோசப்படுவாள்.
மோகன் வீட்டில் இல்லை என்றால் அவர்கள் சாப்பிட்டு போகும்வரை அவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி கொஞ்சிக் கொண்டிருப்பாள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் மகிழ்ச்சியுடன் செய்வாள். சிலர் பெரிய எவர்சில்வர் தூக்கில் கொண்டு வந்த சாப்பாட்டை அந்த திண்ணையில் வைத்து சாப்பிடத் தயங்குவார்கள். அப்போது மைதிலி அவர்களை திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடும்படி அன்போடு கூறுவாள். மோகனுக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது.
திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் மைதிலியிடம் எதுவும் வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். ஆனால் மைதிலி ஒரு சிறிய பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையின் ஓரத்தில் குடிப்பதற்கு வைத்து விடுவாள். அவர்கள் போகும்போது ‘தாயே நீங்க நல்லா இருக்கணும்னு’ வாழ்த்தி விட்டு செல்வார்கள்.
மோகன் மைதிலிக்கு எதிர்மறையாக இருந்தான். வீட்டு வாசல் முன்னால் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து விட்டால் போதும். அவர்களை சத்தம்போட்டு விரட்டி விடுவான். அதனால் சிறுவர்கள் மோகன் வீட்டில் இருப்பதைப் பார்த்து விட்டால் யாரும் அவன் வீட்டின் முன்னால் வந்து விளையாடமாட்டார்கள். சிறுவர்கள் விளையாட வரும்போதே “டேய் வீட்லே அந்த சிடுமூஞ்சி இருக்காரான்னு பாருங்க“ என்று ஒருவருக்கொருவர் தங்களுக்குள் மோகனைப் பற்றி பேசிக் கொள்வார்கள்.
மைதிலி மட்டும் வீட்டில் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான். “டேய் மைதிலி அக்கா மட்டும்தான் இருக்காங்க. நாம அந்த அக்கா வீட்டுத் திண்ணையில்கூட ஏறி நல்லா விளையாடலாம் வாங்கடா” என்று கூறி சந்தோசமாக வீட்டுத்திண்ணையில் விளையாடி விட்டு செல்வார்கள். சில நேரங்களில் மைதிலி அவர்கள் விளையாடுவதை வாசப்படியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்வாள்.
வீட்டுத் திண்ணையில் யாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ, யாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தாலோ மோகன் பார்த்து விட்டால் போதும். உடனே அவன் மைதிலியிடம் வந்து கத்துவதற்கு ஆரம்பித்து விடுவான். மைதிலி ஏதாவது கூறி அவனை சமாதானம் செய்வதற்கு அவளுக்கு பெரும்பாடாக விடும்.
மோகன் அலுவலகத்துக்கு காலையில் செல்லும்போது பெரும்பாலும் மதியம் சாப்பாடு டிபன் பாக்ஸில் எடுத்துச் சென்று விடுவான். அவன் இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவான். மைதிலி வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து அவன் வரும்வரையில் டி.வி. பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த பழமையான வீட்டில் மோகன் மைதிலி இருவர் மட்டும்தான் இருந்தார்கள். பக்கத்தில் இருக்கும் பழமையான ஓட்டு வீடுகள் கவனிப்பாரற்று இடிந்து தகர்ந்து கிடந்தன.
மைதிலி வெளியில் கடைக்கு செல்லும்போது வாசல் கதவை மட்டும் சாத்திவிட்டுச் செல்வாள். அப்போது வெளியூரிலிருந்து கோவிலுக்கு வந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்த சாப்பாட்டை அவள் வீட்டுத்திண்ணையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தால், அவர்களிடம் ‘கடைக்கு போயிட்டு வர்றேன். மெதுவா சாப்பிடுங்க ‘ என்று கூறி விட்டுச் செல்வாள்.
அன்று புதன் கிழமை. பிள்ளையார்குளம் கிராமத்தில் இருந்து ஒரு குடும்பம் இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தது. அவர்களில் ரமேஷ் மட்டும்தான் ஓரளவுக்கு படித்தவன். அவன் மனைவி லதா, அப்பா குமாரசாமி, அம்மா மீனாட்சியம்மாள் எல்லாம் படிக்காத நாட்டுப்புறத்தார்கள். அவன் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக அந்தக் குடும்பம் இராமேஸ்வரம் வந்திருந்தது. குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு கோவில் பிரகாரம் சுற்றி விட்டு வருவதற்கு பகல் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
எவர்சில்வர் பெரிய தூக்குவாளியில் தாங்கள் கொண்டுவந்த புளியோதரையை சாப்பிடுவதற்கு அவர்கள் நல்ல இடமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். மைதிலி வீட்டுக்கு அருகில் குமாரசாமி குடும்பத்தினர் வந்தார்கள். வீட்டுக்கு முன்னால் இருந்த செங்கல் பதித்த திண்ணையை பார்த்தார்கள்.
குமாரசாமி “ரமேஷ் நாம சாப்பிடுதற்கு இந்த இடம் நல்லா வசதியாக திண்ணை இருக்கு. இங்க சாப்பிடலாம். சோத்துச்சட்டியை இன்னும் நாம சுமந்துட்டு வேறு இடம் பாத்து அலைய வேணாம்.” என்றார்.
மீனாட்சியம்மாள் “ஆமாண்டா திண்ணை நல்லா குளிர்ச்சியா இருக்கு. இங்க உக்காந்து சாப்பிடலாம்“ என்று அவள் இடுப்பில் வைத்திருந்த தூக்குவாளியை ‘அப்பாடா’ என்று சோர்ந்துபோய் திண்ணையில் வைத்தாள்.
“அப்பா முதலிலே வீட்டில் இருக்கிறவங்ககிட்ட கேட்டுட்டு திண்ணையில் உட்காருவோம்“ என்றான் ரமேஷ்.
குமாரசாமி, வீட்டுக்கதவை மெதுவாக தட்டினார். மோகன் அலுவலகம் போயிருந்தான். மைதிலி கதவைத் திறந்தவள், வீட்டு வாசல் முன்னே நிற்கும் குடும்பத்தினரை பார்த்தாள். குமாரசாமி தலையில் சிவப்பு நிறத்தில் குற்றால சீசன் துண்டை சுற்றிக் கட்டியிருந்தார். அவருக்கு அருகே இருந்த மீனாட்சியம்மாள் வயதானவர்கள் சேலை கட்டியிருப்பதுபோல் ஏனோதானோ என்று கட்டியிருந்தாள். தொங்கும் காதுகளில் பாம்படம் ஆடிக் கொண்டிருந்தது. சிரித்தால் தெரியும் வெற்றிலைபோட்டு சிவந்தவாயில் காவியேறிய பற்கள். மூக்கில் தங்கத்திலான ஒரு சிறுவளையம் போட்டிருந்தாள்.
மைதிலி அவர்களைப் பார்த்தவுடன் கிராமப்புறத்து ஆட்கள் என்று தெரிந்து கொண்டாள். அவர்கள் கொண்டு வந்த எவர்சில்வர் தூக்குவாளி திண்ணையில் இருப்பதையும் பார்த்து விட்டாள். அவர்கள் தன்னிடம் கேட்பதற்கு முன்பாக மைதிலி “ நீங்க கோவிலுக்கு வந்திருக்கீங்க. இங்க உட்கார்ந்து சாப்பிடப்போறீங்க. அதான் எங்கிட்ட கேட்கிறீங்க“ என்றாள்.
“ஆமா தாயி இங்க உட்கார்ந்து சாப்பிடலாமா தாயி” என்று தன் காவிநிறப் பற்களைக் காட்டி மீனாட்சியம்மாள் கேட்டாள்.
ரமேஷ், மொட்டை போட்ட தன்னோட மூன்று வயது குழந்தையை கையில் வைத்திருந்தான். குழந்தை மொட்டைத் தலையில் சந்தனம் பூசப்பட்டு காய்ந்திருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் மைதிலி எந்தவிதமான தயக்கம் கொள்ளாமல் “உங்க குழந்தையா” என்று கேட்டு, குழந்தையை தன்னோட கையில் வாங்கி வைத்து கொஞ்சுவதற்கு ஆரம்பித்தாள்.
“நீங்க உங்க வீடு மாதிரி நினைச்சு இங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. நேரமாயிட்டது பசியோட இருப்பீங்க. சாப்பிடுங்க நான் குடிக்கத் தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்” என்று கையில் வைத்திருந்த குழந்தையை ரமேஷிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குள் சென்றாள்.
குமாரசாமி “பாத்தியாடா ரமேஷ் நல்ல குணவதியா இருக்காங்க நாம ஒண்ணுமே கேட்காமலே இங்க உட்காந்து சாப்பிடச் சொல்லிட்டாங்க பாத்தியா“ என்றார்.
மீனாட்சியம்மாள் “ஆமாங்க நல்ல பொண்ணுதான். அது சொல்லிச்சு பாருங்க‘ உங்க வீடு மாதிரி நினைச்சி சாப்பிடுங்கன்னு. அது எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு“ என்று காதில் பாம்படம் ஊசலாட கூறினாள்.
ரமேஷ் கைபேசியில் நண்பனிடம் எதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். குமாரசாமி “டேய் ரமேஷ் சாப்பிட்டுட்டு அப்பறம் பேசலாம்டா வா” என்று சாப்பிட அழைத்தார்.
மீனாட்சியம்மாள் மருமகள் லதாவை கூப்பிட்டு “லதா புளியோதரையை எல்லாத்துக்கும் இலையில் எடுத்து வை“ என்றாள்.
லதா கட்டைப்பையில் சுருட்டி வைத்திருந்த வாழை இலைகளை எடுத்தாள். எவர்சில்வர் தூக்குவாளியில் இருந்து புளியோதரையை எடுத்து இலைகளில் வைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மைதிலி வழக்கம்போல ஒரு சிறிய பிளாஸ்டிக் குடத்தில் குடிக்க தண்ணீர் வீட்டுக்குள் இருந்து எடுத்து வந்து கொண்டிருந்தாள். வாசல் அருகில் வந்தவள் குடத்துடன் திடீரென்று மயங்கி கீழே விழுந்தாள்.
அவள் விழுவதைப் பார்த்த குமாரசாமி குடும்பத்தினர் பதறியடித்துகொண்டு எழுந்தார்கள். குமாரசாமி “மீனாட்சி அந்த அம்மாவை உட்கார வெச்சு தண்ணியை மொகத்திலே தொளி” என்றார்.
மீனாட்சியம்மாளும் லதாவும் மைதிலியை கைத்தாங்கலாக பிடித்து உட்கார வைத்தார்கள். லதா கையில் வைத்திருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தாள். ஆனால் தண்ணீர் தெளித்தும் மைதிலி கண்களை திறக்கவில்லை. குமாரசாமியும் மீனாட்சியும் பதறிக்கொண்டு “ தாயி கண் திறந்து பாரும்மா” என்று பலமுறை அழைத்துப் பார்த்தார்கள். அவள் மூடிய கண்களை திறக்கவில்லை.
ரமேஷ் “அப்பா வீட்டிலே இந்த அம்மாவைத் தவிர யாரும் இருப்பதுபோல் எனக்குத் தெரியலே. பக்கத்து வீடுகளும் இடிந்து தகர்ந்து கிடக்கு. இவங்களை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்” என்றான்.
மீனாட்சி “ரமேஷ் நீ இப்படி பேசிட்டே இருந்தா எப்படி? ஏதாவது சீக்கிரம் யோசனை பண்ணுடா“ என்று பதட்டத்துடன் கூறினாள்.
“அப்பா நூத்தெட்டுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வரச்சொல்றேன். அதிலே கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் நாம சேர்த்திடலாம்” என்று கூறினான். ரமேஷ் நூற்றெட்டுக்கு போன் செய்தான். பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது.
குமாரசாமி குடும்பத்தினர் சாப்பாட்டை மறந்தார்கள். அவர்கள் பசியை மறந்தார்கள். குமாரசாமியைத் தவிர மற்றவர்கள் மைதிலியுடன் ஆம்புலன்ஸில் சென்றார்கள். குமாரசாமி மட்டும் வீட்டுக்கு காவல் இருந்தார்.
“அப்பா யாரும் இந்த அம்மாவை தேடி வந்தால் ஜி.எச்.க்கு வரச் சொல்லுங்க“ என்று ரமேஷ் அவரிடம் கூறிச் சென்றான்.
மோகன் அன்று அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது என்று மதியம் சாப்பிடுவதற்கு சாப்பாடு எதுவும் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்லவில்லை. அதனால் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தான். திண்ணையில் குமாரசாமி கவலையுடன் உட்கார்ந்து இருந்தார். திண்ணையில் போடப்பட்ட இலைகளில் புளியோதரை இருந்தது. அதனை மோகன் பார்த்தவுடன் வழக்கம்போல் “மைதிலி மைதிலி” என்று கோபத்துடன் கத்திக்கொண்டே வீட்டுக்குள் சென்றான். வீட்டுக்குள் மைதிலி இல்லை என்று தெரிந்துகொண்டு வெளியே வந்தான்.
குமாரசாமி “ஐயா இது உங்க வீடா. இங்கிருந்த அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மயக்கம்போட்டு கீழே விழுந்திட்டாங்க. அவங்களை என்னோட மகன் ரமேஷ் பொஞ்சாதி மருமகள் சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு வெள்ளை வண்டியிலே கூட்டிட்டு போயிருக்காங்க.“ என்றார்.
மோகன் பதட்டத்துடன் அவரையும் அழைத்துக்கொண்டு, ஆட்டோவில் ஆஸ்பத்திரியை அடைந்தான். மைதிலி இருக்கும் அறையை பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே சென்றான்.
அப்போது டாக்டர் மைதிலியை பரிசோதித்து விட்டு, ஊசி போட்டுக்கொண்டு இருந்தார். மோகன் டாக்டரிடம் பதட்டத்துடன் மைதிலியின் உடல்நிலை குறித்து விசாரித்தான்.
“இவங்க உங்க ஒய்:.பா. பக்கத்தில் நின்று கொண்டிருந்த குமாரசாமி குடும்பத்தினரை சுட்டிக்காட்டி இவங்களெல்லாம் யாரு“ என்று மோகனிடம் கேட்டார்.
“சார். இவங்களைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. கோவிலுக்கு வந்திருக்காங்க என்பது மட்டும் தெரியும்” என்றான்.
“உங்க ஒய்:.பை இன்னும் பத்து நிமிஷம் லேட்டா கொண்டு வந்து இவங்க சேர்த்தாங்கன்னா, உங்க ஒய்பை உயிரோட நீங்க பார்த்திருக்க முடியாது. சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து ஒங்க ஒய்பை காப்பத்திட்டாங்க” என்றார்.
“சார் என் ஒய்புக்கு என்னாச்சு” என்று கேட்டான்.
“மோகன் உங்க ஒய்புக்கு மைல்டா ஹார்ட் அட்டாக். பயப்பட வேண்டியதில்லை. உங்க ஒய்ப் இப்ப கன்சிவாக இருக்காங்க” என்றார் டாக்டர்.
“ரெம்ப தேங்க்ஸ் சார்“ என்றான்.
“நீங்க முதலே உங்க ஒய்பை இங்க கொண்டு வந்து சேர்த்தாங்களே அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க“ என்று கூறினார்.
மோகன் “ஐயா உங்க குடும்பத்தார் எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்க. நீங்க யாரோ எவரோ தெய்வம்போல் வந்து என்னோட மைதிலியை காப்பாத்தியிருக்கீங்க” என்று குமாரசாமி குடும்பத்தினரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.
ரமேஷ் “சார் இந்த அம்மா குணத்துக்கு நீங்க பயப்படரமாதிரி ஒண்ணும் நடக்காதுங்க. தெய்வம்தான் எங்களையெல்லாம் உங்க வீட்டுக்கு இன்னக்கி வரவழைச்சு இருக்கு. மைதிலி அம்மாவை பார்த்த டாக்டர் ‘இனிமேல் இந்த அம்மாவைப் பற்றி நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லைன்னு’ எங்ககிட்ட சொன்ன பிறகுதான் எங்களுக்கெல்லாம் நிம்மதியே வந்தது“ என்றான்.
மைதிலி சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்தாள். அருகில் அவள் கணவன் மோகன் நின்று கொண்டிருந்தான். சுற்றி நிற்கும் குமாரசாமி குடும்பத்தினரையும் பார்த்தாள்.
“மைதிலி எப்படி இருக்கே” என்று மோகன் அவள் அருகில் குனிந்து கேட்டான்.
“நான் எப்படி இங்க வந்தேன்“ என்று கேட்ட தன் மனைவி மைதிலியிடம் மோகன் எல்லா விபரமும் அமைதியாக கூறினான்.
“மைதிலி வெளியூர்க்காரங்க நம்ம வீட்டுத் திண்ணையில் சாப்பிடுவதைப் பார்த்து எத்தனையோ முறை உன்னைத் திட்டி இருக்கேன். அதை நினைச்சு இப்ப வருத்தப்படறேன். மைதிலி என்னை மன்னித்துடு. இனிமேல் உன்னைத் திட்ட மாட்டேன். அது தப்புன்னு இப்ப நான் நல்லா உணர்ந்திட்டேன். இன்னக்கி ஊர் பேர் தெரியாத கோவிலுக்கு வந்தவங்கதான் இங்க சேர்த்து உன்னை காப்பாத்தி இருக்காங்க.” என்று மோகன் கூறும்போது கண் கலங்கி நின்றான். “அப்பறம் மைதிலி நீ அம்மாவாகப் போற. என்ன அப்படி பார்க்கற நீ கன்சீவ் ஆகியிருக்கே டாக்டர் சொன்னாரு” என்று மோகன் மகிழ்ச்சியுடன் கூறினான். அதைக் கேட்டவுடன் மைதிலி மகிழ்ச்சியில் கண்கள் விரிய புன்னகை புரிந்தாள்.
நிறைவு பெற்றது.