‘மனதில் உறுதி கொள்வாய் தோழா!’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ச.க.சுவாமிநாதன்
மனதில் உறுதி கொள்வாய் தோழா!
தலப்பாக்கட்டியில் பிரியாணி… தள்ளுவண்டி கடையில் பரோட்டா… கையில் ஒரு பைக்… காசு கேட்டால் வாரி வழங்கும் வள்ளலாய்த் தாத்தா-பாட்டி…
இப்படி இருந்த ராகேஷ் வாழ்க்கையில் ஏற்பட்ட சனி சாராயத்தின் பலனே!
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ராகேஷின் அப்பா ஜெனரல் மேனேஜராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா வீட்டில் துணி தைப்பதும் அவ்வப்போது தோட்ட வேலைகளைச் செய்வதுமாய்… அழகாய்ச் சென்றது அவர்களின் குடும்பம்
அப்போது சாராயத்தில் பிறந்தான் சுக்கிரன். கை நிறைய பணம் இருந்த காரணமும் சில பணக்கார நண்பர்களின் நட்பும் பல முதலாளிகளின் நட்பும் என சின்னச்சின்ன பார்ட்டி விருந்தில் தொடங்கிய மதுப்பழக்கம் அவரை மொடா குடிகாரன் ஆக்கியது. அவரை எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மிதப்பில் மதுவில் மிதந்து மாதுவில் கலந்தார். இதை சகித்துக்கொள்ள முடியாத ராகேஷின் அம்மா சண்டையிட்டாள்.
“ஏங்க இப்படி பண்றீங்க? உங்களுக்கு இதெல்லாம் தேவைதானா?”
அடியேய்! என்னைக் கேட்க நீ யாருடீ? என் ஸ்டேட்டஸ் தெரியுமா? என் ரேஞ்சு உனக்குத் தெரியுமா? நான் முன்ன மாதிரி ஜி.எம். கிடையாது. இப்ப நான் பல கம்பெனிகளுக்கு சேர்ஹோல்டர். இப்ப நான் கோடீஸ்வரன் டீ. நான் இப்படித்தான் இருப்பேன். அதெல்லாம் நீ கேட்கவே கூடாது.
வெறும் 50பவுன் போட்டு வந்த கழுதை நீ… என்னை எதிர்த்துப் பேசுறியா? குருக்குல ஒன்னு விட்டேன்னா விலா எலும்பு முறிஞ்சிரும்.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவள், “எங்க அப்பா அப்பவே சொன்னாரு… உங்க பணக்காரப் புத்தி இப்படித்தான் குடியை கெடுக்குமுனு… நான்தான் சரி சரின்னு விட்டுட்டேன். நான்தான் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க… சரி, என்ன ஆகப் போகுது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்… இப்பதான் தெரியுது அது எங்க வந்து நிறுத்தும்னு..!
“ஏஏய்! நிறுத்து இந்த ஒப்பாரிய… உன் அப்ப வீட்ல போய் வெச்சுக்கோ!”
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ராகேஷ் மனதில் ஏதோ ஓர் உறுத்தல் ஏற்பட்டது.
காலையில் அப்பா அவனை அரவணைத்துக் கொஞ்சுவதும், மாலையில் அவர் அம்மாவிடம் சண்டையிடுவதும்… சிறுசிறு சண்டைகள் தொடங்கிக் கடைசியில் பிரிவில் கொண்டுபோய் விட்டது!
ஒரு நாள் அவன் தன் நண்பனிடம், “நாங்க ஊர்ல கௌரவமா வாழ்ந்துகிட்டு இருந்த குடும்பம். இப்ப எங்க வீட்ல நடக்கிற பிரச்சனைகள வெளியே சொல்ல முடியாம தவிக்கிறேன். அப்பா சாராயத்துல மூழ்க… அம்மா கண்ணீர்ல கரையிறாங்க! நான் தாத்தா வீட்ல தங்கி இருக்கேன். இருந்தாலும் ஊர்ல உள்ள உள்ளவங்க அம்மா வாழாவெட்டியா வந்துட்டான்னு சொல்றாங்க! என்னால அதை எல்லாம் கேட்டு சகிச்சுகிட்டு வாழ முடியல. நான் என்ன பண்றது? நான் செத்திடவா..?
இதைக்கேட்ட நித்திஷ், “வாழ்க்கையில ஆயிரம் பிராப்ளம்ஸ் வரும்டா. ஆனா அதுக்கெல்லாம் தற்கொலை தான் முடிவுனா நான் செத்து பத்து வருஷம் ஆகியிருக்கும்!”
அதிர்ந்து போய்க் கேட்ட ராகேஷ், “என்ன சொல்ற..?
“ஆமா! வறுமையின் கோரப்பிடியில சிக்கி எங்க குடும்பம்… பல வருஷமா தவிச்சிட்டு இருக்கேன்… நான் ஒன்னும் இதுக்காக சாகல. நான் சாதிப்பேன்!
இன்னும் எத்தனையோ குடும்பங்கள் காசு பணம் இல்லாம இருக்காங்க. அவங்க குடும்பத்துல இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு? அவங்க சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலயா..?
நீ இப்ப உன் படிப்பப் பாரு… உனக்கு அதுதான் முக்கியம். அது உன்னை முன்னேத்தும். மத்தத விடு!
ஊரு ஆயிரம் சொல்லலாம்… உனக்காக நீ தான் வாழனும். நீ எந்த பிரச்சனையையும் மனசுல போட்டு கொழம்பாத… நீ நல்லாப் படி. அதை மட்டும் செய்! எல்லாமே உனக்கு நல்லதாவே அமையும்.”
இதைப் பற்றி இருவரும் மாறிமாறி ஆறுதல் சொல்லிக்கொண்டனர். இவ்வாறே சென்றது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வும் வந்தது. ராகேஷ் அவன் குடும்ப சூழ்நிலையை நினைத்து நன்றாகப் படிக்க ஆரம்பித்தான்.
இறுதியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வந்தது. அவன் மாவட்டத்தில் சிறந்த மாணவனாகத் தேர்வு பெற்றிருந்தான். அவன் அப்பாவும் மனம் திருந்தி வந்தார். குடும்பம் ஒன்றானது.
பலரும் ராகேஷைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர்.
அப்போது, மளிகைக் கடை நாகராசு சொன்னார் – “ராகேஷைப் பாருடா தம்பி. அந்த அண்ணன் மாதிரி நல்லா படிக்கணும்” காதில் வாங்கினான் ராகேஷ்.
பக்கத்து வீட்டுப் பெரியசாமி, “அங்க பாருடா குடிகாரன் மகன் நல்ல மார்க் எடுக்குறான்! நீ ஏன்டா கம்மியான மார்க் எடுத்தே?” என்று தன் மகனைத் திட்டுவதற்கு இவனது குடும்பவாழ்வைச் சந்திக்குக் கொண்டு வந்ததையும் காதில் வாங்கினான் ராகேஷ்.
இசைமொழி, வசைமொழி என இரண்டையும் கேட்ட ராகேஷ் ‘இந்த உலகம், வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்; என்றாலும், நம்முடைய செயல்பாடுகளே நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும்’, மேலும், மதிப்பெண் உயர்வு மட்டுமே தனது வாழ்க்கையை உயர்த்தி விடாது எனும் உண்மையை உணர்ந்தவனாய், மனவுறுதியுடன் வீறுநடை போட்டான் நேர்வழியில்…!
நிறைவு பெற்றது.
7 comments