‘பல்லவி’ என்ற சிறுகதையை எழுதியவர் மரிய ஜோஷிகா
பல்லவி
விடியற்காலைப்பொழுதில் அந்த தெருவில் இருக்கும் வீடுகள் அனைத்தும் பார்பதற்கு ரம்மியமாக இருந்தது. சொர்கத்தின் கண்கள் வெட்கபட்டுக்கொண்டே மெது மெதுவாக எட்டிப் பார்த்தது. அந்த தெருவில், இரண்டாவது வீட்டில், பல்லவி என்னும் பெண் தனது தந்தை தர்மராஜூடனும், தங்கை பமீலாவுடனும், பாட்டி லதாவுடனும் வசித்து வந்தாள். அவளது தாய் அவள் சிறு வயதாக இருக்கும்பொழுதே இறந்து விட்டாள். பல்லவியையும் பமீலாவையும் வளர்த்தது அவளுடைய பாட்டிதான். அது நடுத்தர வர்க்கத்து குடும்பம். பல்லவி மாநிறம் தான். ஆனால் பார்பதற்கு அழகாக இருப்பாள் எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் சாதாரண காட்டன் சுடிதார் போட்டால் கூட பார்பதற்கு நேர்த்தியாக இருக்கும். அதே பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரி ஒன்றில் அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது தங்கை பமீலா பத்தாம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் சுமாராக படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சவுகரியத்திற்கு எந்த குறையும் இல்லாமலே வளர்ந்தனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த வீடு, சிறிது நிலம், அவளது தந்தைக்கு ஒரு பைக், கார் என சற்றே வசதியாக வாழ்ந்தனர். தர்மராஜ் காலை அலுவலகத்திற்கு கிளம்பிய சற்று நேரத்தில் பல்லவியும் பமீலாவும் கிளம்புவார்கள். அதுபோல மாலை அவர்கள் இருவரும் வந்த பிறகே அவர் வீடு திரும்புவார்.
அவர்கள் இருக்கக்கூடிய வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி பிரசாத் என்னும் இளைஞன் வசித்து வந்தான். அவன் ஒரு ஆட்டோ ஓட்டுபவன். அவனுக்கு தந்தை இல்லை. தாய், ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி. தங்கையும் தம்பியும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். அவனது அம்மா நாலு வீட்டில் வேலை செய்து அவர்களை காப்பாற்றி வருகிறாள். அவன் ஆட்டோ ஓட்டி சிறிது சம்பாதித்தாலும் வறுமையில் வாழ்கின்றது அந்த குடும்பம். பிரசாத் பார்ப்பவர் கண்கள் கவரும்படியான தோற்றத்தில் இருப்பான். அவன் பல்லவியை காதலித்து வந்தான். ஆனால் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஆருத்ரா என்ற பெண் பிரசாத்தை காதலித்து வந்தாள். பிரசாத்திற்கு இது தெரிந்தும் அவன் அவளை கண்டுகொள்வதில்லை. அவளும் அவனைப் போல சற்று வறுமையில் வாழ்பவள் என்பதாலோ தெரியவில்லை.
பல்லவி காலையில் பேருந்திற்காக காத்திருக்கும்பொழுது அவனும் அவளை பார்த்துக்கொண்டே சற்று தூரத்தில் நிற்பான். மாலை அவள் திரும்பி வரும் நேரத்தில் அவளுக்காக அங்கே காத்திருப்பான். இப்படியே நாட்கள் சென்றது. பிறகு பல்லவியும் பிரசாத்தை காதலிக்க தொடங்கினாள். தினமும் காலை கல்லூரிக்கு செல்வது போல சென்று கேட்டின் வெளியே நின்றுகொண்டிருக்கும் அவனது ஆட்டோவில் ஏறிக்கொள்வாள். அதுபோல மாலை கல்லூரி விடும் நேரத்தில், அதே கேட்டின் முன்பு இறங்கிக் கொள்வாள். பிறகு பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்வாள். இப்படி நன்றாக அவனுடன் ஊர்சுற்றினாள். இதுவே வாரத்தின் பல நாட்களாக தொடர்ந்தது. அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வு சரியாக எழுதவில்லை, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டாள். யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்று எண்ணி நடிக்க தொடங்கினாள். தோழிகளிடம் முன்பு போல அவளால் சரியாக பேச முடியவில்லை. இந்த விஷயம் தெரிந்த ஒரு சில தோழிகளும் நமக்கென்ன என்று அமைதிக் காத்தனர். தனது தந்தை, தங்கை, பாட்டி, தோழிகள், ஆசிரியர்கள் என எல்லோரையும் ஏமாற்றினாள், பிரசாத்திற்காக மட்டும். காதல் கண்ணை மறைக்கும் என்று சொல்வது உண்மைதானோ?
பல்லவி இப்படி பிரசாத்துடன் சுற்றுவதை ஒருநாள் ஆருத்ரா பார்த்து விட்டாள். பிரசாத் தன்னுடைய காதலை கண்டுகொள்ள வில்லை என்ற கோபத்தில், இந்த விஷயத்தை பல்லவியின் தந்தையிடம் சொன்னாள். ஆனால் அவர் அதை நம்ப மறுத்துவிட்டார். தன்னுடைய பிள்ளை இப்படிபட்டவள் அல்ல என்று உறுதியாகச் சொன்னார். இந்தக் காலத்தில் பல பெற்றோர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் பிள்ளைகளால் அவர்களை எளிதாக ஏமாற்ற முடிகிறது. படித்த பெற்றோர்களே இப்படியென்றால் படிக்காத பெற்றோர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. சரி நாம் கதைக்கு வருவோம். சில நாட்கள் கழித்து, கல்லூரி விடும் நேரத்தில் அவள் அவனுடன் அங்கு வந்திறங்குவதை காவலாளி பார்த்துவிட்டார்.பல்லவி வசமாக சிக்கிக்கொண்டாள். அவர் அவளை தாளாளர் அறைக்கு இழுத்துச் சென்றார். நடந்ததைக் கூறினார். தாளாளர் அவளிடம் விசாரித்தப்பொழுது ௨ண்மை வெளியே வந்தது. அவர் அவளது தந்தையை வரவழைத்தார். அவரிடம் நடந்ததை விவரித்தார். இனி இவள் இந்த கல்லூரிக்கு வேண்டாம் என்று கூறிய தாளாளரிடம் கெஞ்சினார் தர்மராஜ். ஆனால் அது பயனளிக்கவில்லை. தலைகுனிந்து கொண்டே கண்களில் நீர் வழிய எழுந்து வெளியே சென்றார். வெளியே நின்று கொண்டிருந்த பல்லவியிடம், இதில் நீ எந்த தவரும் செய்யவில்லை. செல்போன், சினிமா, சமூக வலைதளங்கள் உன்னிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன.
காதலின் உண்மையான அர்த்தம் புரியாமல் இந்த தலைமுறை பிள்ளைகள் இருக்கிறார்கள். தாயில்லாப் பிள்ளை என்று உன் மீது அதிக பாசம் வைத்தேன். அளவு கடந்த நம்பிக்கை வைத்தேன். அது தான் நான் செய்த தவறு என்று கூறிச் சென்றார். அவர் தன்னை திட்டாமலும் அடிக்காமலும் இப்படி பேசிச் சென்றதை கேட்ட அவளது கண்கள் கலங்கினாலும், மனது பிரசாத்தை தேடியது. அன்றிரவு அவள் பிரசாத்தை சந்தித்து நாம் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாள். இந்த திட்டம் அவளது தந்தைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. பிரசாத்திடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த பல்லவியிடம் அவள் தந்தை, உன்னுடைய திட்டம் என்ன என்று எனக்கு தெரிந்துவிட்டது. நீ அப்படி பிரசாத்துடன் சென்றால் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ இந்த வீட்டிற்கு இனி எப்போதும் வரக்கூடாது. என்னுடைய சொத்தில் உனக்கு எந்த ௨ரிமையும் இல்லை என்று கூறினார்.
இதை பிரசாத்திடம் கூறிய அவள், அவனின் பதிலைக் கேட்டு அதிர்ந்தாள். நான் ௨ன்னை ௨ண்மையாக காதலிக்கவில்லை. உன்னிடம் கொஞ்சம் சொத்து இருப்பதை அறிந்தே ௨ன்னை காதலிப்பது போல நடித்தேன். இப்போது அந்த சொத்து எனக்கு கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. இனி எனக்கு நீ தேவையில்லை. அதனால் தான் நாம் ஊர் சுற்றும் போதும், பழகும் போதும் நான் செலவழிக்கவில்லை, ௨ன்னை செலவு செய்ய வைத்தேன். அப்பொழுதே நீ புரிந்திருப்பாய் என்று நினைத்தேன். ஆனால் நீ இவ்வளவு முட்டாளாக இருப்பாய் என்று எனக்கு தெரியாது. நான் உன்னை விட அழகான ஆருத்ராவை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்று அவன் கூற, அவள் கண்களில் நீர் பெருகி வழிந்தது. நாம் மற்றவர்களை முக்கியமாக நமது பெற்றோர்களை ஏமாற்றினால் நிச்சயமாக நாம் ஒருநாள், ஒருவனால் ஏமாற்றப்படுவோம் என்று நன்றாக புரிந்துக்கொண்ட அவள் அப்படியே சரிந்து விழுந்தாள்.
அவள் கண்களில் ஒளி மங்கி விட்டது. அவள் ௨தடு நீலம் பூத்துவிட்டது. அவள் கதையெல்லாம் சிறிது நேரத்திற்குள் சம்பூர்ணமாகிவிடும்………….. தவறான வயதில் ஏற்படக்கூடிய காதல் வாழ்க்கையை சீரழித்துவிடும். இக்காலத்து பிள்ளைகள் அனைவருக்கும் எல்லாவற்றையும் சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்ற அவசரம். அதை காதல் என்று நம்ப வைக்கிறது இந்த ௨லகம். காதலிப்பது தவறல்ல, சரியான வயதில், சரியானவரைக் காதலித்தால் வாழ்க்கை இனிமையாக மாறும்……
நிறைவு பெற்றது.
31 comments