‘பத்மா மாமி,(ச்)சாரி மாமா’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி. சீதா ராமநாதன்
பத்மா மாமி,(ச்)சாரி மாமா
வண்டி சக்கரம் சுழன்று, சுழன்று முன்னோக்கிதான் போகும். அதே போல காலம் என்னும் சக்கரமும் சுழன்று, சுழன்று முன்னோக்கி தான் போகும்.
ஆனால் நினைவலைகள் மனிதனை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் (உங்கள் ஞாபக சக்தியை பொறுத்து )பின்னோக்கி இழுத்துச் செல்லும் திறமை வாய்ந்தவை.
இன்று எழுபத்தி மூன்று வயதை கடந்து இருந்தும், என் ஞாபக சக்தியின் துணையால் வாசகர்களாகிய உங்களை கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்ல விரும்புகிறேன். நீங்கள் மறுக்காமல் இந்தப் பாட்டி எல்லா முதியவர்களைப் போல் அந்தக் காலத்து கதையை சொல்லி நம்மை அறு,அறு என்று அறுக்கப் போகிறாள், இவளிடம் சிக்க கூடாது என்று நினைக்காமல் இந்த உண்மைக் கதையை படிக்க பத்தே ,பத்து நிமிடங்கள் ஒதுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்-
இந்தக் கதையில் நானும், என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சம்பந்தப் பட்டு இருப்பதாலும், என் குடும்பத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே கதையை மேற் கொண்டு எழுத முடியும் என்பதால்,
என் தந்தை தமிழகத்திற்கு தண்ணீரை வாரி வழங்கும் காவேரி நதியின் நீரை சேமிப்பதற்காக அணை கட்டப் பட்டு இருக்கும் (சேலம் மாவட்டம்)மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியில் இருந்தார். அந்தக் காலத்து குடும்பங்கள் போல் என் குடும்பமும் பெரியது.
என் அண்ணா சேலத்தில் அரசாங்க பணியில்( Food Corporation of India) இருந்தார். சேலத்தில் இருந்து ,மேட்டூருக்கு ஒன்றரை மணி நேரப் பேருந்து பயணம் . அவர் ஒவ்வொரு வாரக் கடைசியிலும் மேட்டூர் வந்து விட்டு, திங்கள் கிழமை காலை திரும்ப சேலம் போவார்.
எப்போதும் போல வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்தவர் அதிசயமாக என் அம்மாவிடம் பேசி விட்டு எங்களுடனும் பேசினார்.
“அடுத்த வாரம் நான் வரும் போது முப்பத்தைந்து வயது ஆன்டியை அழைத்துவரப் போகிறேன். அவர் பெயர் பத்மா. சில நாட்கள் நம் வீட்டில் இருப்பார். அவருடன் நீங்கள் அன்பாக ,அதே சமயம் அவர் மனநிலை அறிந்து ஜாக்கிரதையாக பழக வேண்டும். அவர் சிறிது மனநிலை சரி இல்லாதவர். ஆனால் மிகவும் நல்லவர். அவர் என் நண்பர் ச்சாரியின் மனைவி. பத்மா .மாமி நம் வீட்டில் இருக்கும் வரை நானும் விடுமுறை எடுத்துக் கொண்டு இங்குதான் இருப்பேன்.
மாமா சேலத்தில் அனுமதி வாங்கி கொண்டு அலுவலகத்தில் உபயோகத்தில் இல்லாமல் ஒரு காலி அறை இருந்ததால், தினம் வேலைக்கு வரும் போது மாமியையும் கூட அழைத்து வருவார். மாமிக்கு படிப்பதில் ஈடுபாடு இருந்ததால் வார இதழ்கள், நாவல்கள் எல்லாம் வாங்கி குவிப்பார். மாமியை அறையினுள் வைத்து வெளியில் இருந்து தாழ்ப்பாள் போட்டு விட்டு, அப்பப்ப போய் பார்த்துக் கொள்வார். காலையில் எழுந்து சமைத்து, மதிய சாப்பாடு இருவருக்கும் எடுத்து வருவார். சாயந்திரம் இருவரும் வீட்டிற்கு போய் விடுவார்கள்.
இதுவரை இப்படிதான் நடந்து கொண்டு இருக்கிறது. போன வாரம் மாமாவிற்கு பதவி உயர்வு கிடைத்து மதுரைக்கு மாற்றி விட்டார்கள்.மாமா மட்டும் மதுரை போய்,அலுவலகம் அருகிலேயே வீடு பார்த்து ,சேலம் வீட்டை காலி செய்து, சாமான்களை மதுரை அனுப்ப வேண்டும். அலுவலகத்தில் மாமியை வைத்துக் கொள்ள வசதியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். மாமா இத்தனையும் செய்யும் வரை மாமி நம் வீட்டில் இருப்பார்கள்,”
அடுத்த வாரம் பத்மா மாமி, ச்சாரி மாமா அண்ணாவுடன் வந்தார்கள். மாமாவிற்கு பார்த்த உடனேயே
மாமியை எங்கள் வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன் ,மாமியிடம் கூடிய சீக்கிரம் மதுரையில் வீடு பார்த்து,அழைத்துப் போவதாக சொல்லி விட்டுப் போனார்.
மாமி ,மாமா போன அன்று யாரிடமும் எதுவும் பேசாமல் அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தார்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தார், எனக்கும், என்னை விட இரண்டு வயது மூத்த என் அக்காவிற்கும் தலை வாரி பின்னுவார். சாப்பாடு பறிமாறுவார்.
ஒரு நாள் சாப்பாட்டுக்கு அப்பளம் பொரித்தாள் என் அம்மா.மாமி எடுத்து வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு ஒவ்வொன்று போட்டார். என் தம்பி ,“இன்னொன்று போடுங்கள்” என்று கேட்டதற்கு, “ஒண்ணு போடச் சொல்லிதான் உத்தரவு ,“என்று சொன்னார்.
மதுரை போன பிறகு மாமா என் அண்ணாவிற்கும், மாமிக்கும் கடிதங்கள் எழுதினார். சேலம் அலுவலக அறையில் மாமியை வைத்துக் கொள்ள அறை இருந்தது போல, இங்கு இல்லை. அலுவலகம் அருகில் வீடு கிடைக்கவில்லை. பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு திரும்ப சேலமே வந்து விடலாம் என்று யோசித்துக் கொண்டு இருப்பதாக எழுதி இருந்தார்.
மாமி அதிகம் பேச மாட்டார். அவ்வப்போது சோர்ந்து படுத்தாலும், எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது, ஆனந்த விகடன் வார இதழில் அப்போது ” உன் கண்ணில் நீர் வழிந்தால் “ திரு.. சேவற்கொடியோன் எழுதிக் கொண்டு இருந்த தொடரை என் அம்மாவிற்காக மெல்லிய குரலில் ஏற்ற ,இறக்கத்தோடு ஒருநாள் படித்தது.
மாமி எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது.
ஒரு நாள் சாயந்திரம் நான் பள்ளியில் இருந்து திரும்பிய போது ,என் அம்மா சொன்னார்,மாமி இன்று மதியம் எங்கிருந்து கிடைத்ததோ தெரியவில்லை, ஒரு பழைய ப்ளேடால் கையை கீறிக் கொள்ள ,அதிகம் ரத்தம் வெளியேறிதாகவும், நல்ல காலம் என் அண்ணா சரியான சமயத்தில் பார்த்ததால், உடனே மருத்துவ மனை அழைத்து சென்றார்,என்று
அம்மா சொன்னது கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். சாயந்திரம் ஆறரை மணி அளவில் மாமி சோகமாக படுத்து இருந்தது பார்த்து ,மாமியிடம் சென்று மிகவும் வெகுளித் தனமாக அவர் மனப்பிறழ்வு உடையவர் என்பதை மறந்து ,மாமி, “நீங்க என்ன பைத்தியமா ?எதுக்கு கையை ப்ளேடால் அறுத்துக் கொண்டீர்கள் ?”என்று கேட்ட நொடியில் , படுத்து இருந்தவர் விருட்டென்று எழுந்து, என் பாவாடையை பிடித்து என்னை அருகில் இழுத்து ,”யாரை பாத்துடி பைத்தியம் என்று சொன்னே?” என்று மித மிஞ்சிய கோபத்துடன் என் கன்னத்தில் “பளார்”என்று அறைந்தார். நான் அலறிய அலறலில் வீட்டில் இருந்த எல்லாரும் ஓடி வர, என் பாவாடையை பிடித்து இருந்த மாமியின் கையில் இருந்து என்னை எப்படியோ விடுவித்தார் என் அண்ணா.
அதன் பிறகு தலையை சுவத்தில் மோதிக் கொண்டு “ஓ “வென்று அலறினார். தினமும் இரவு மாமி உறங்குவதே தூக்க மாத்திரை உதவியால்தான். இது போல நிலைமை கட்டுக் கடங்காமல் போகும் போது இன்னும் அதிக வீரியமுள்ள மாத்திரை கொடுத்தால், சில நிமிடங்களில் உறங்கி விடுவாராம். ஆனால் அது போன்ற சமயங்களில் மாமா சொன்னால் மட்டுமே மாத்திரை முழுங்க வாயை திறப்பாராம்-
என் அண்ணா எவ்வளவு முயன்றும் அவரை சமாளிக்க முடியவில்லை. என் அப்பா விரைந்து சென்று அடுத்த தெருவில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார்.
நாங்கள். எல்லோரும் சேர்ந்து மாமி திமிராமல் அமுக்கி கை ,கால்களை பிடித்துக் கொள்ள, மருத்துவர் ஊசி போட்ட,சில நிமிடங்களில் மாமியின் குறட்டை சத்தம் கேட்டது. நாங்கள் வசித்தது குடி இருப்பு, எல்லா குடும்ப உறுப்பினர்களும், சுக, துக்கம் சமயத்தில் அன்புடன் உதவிக் கரம் நீட்டுவார்கள்.
மாமியை பற்றி என் அண்ணா விவரங்கள் மருத்துவரிடம் சொல்ல, அவர் சேலத்தில் மாமிக்கு எப்போதும் மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்தால் நல்லது. மாமி மயக்க நிலையில் இருக்கும் போதே போனால் அவரை அழைத்து செல்வது எளிது என்று சொல்லி, உடனே தன்னுடைய காரையும், காரோட்டியையும் அனுப்பினார்- அந்தக் காலத்தில் மருத்துவரை சேர்த்து எங்கள் குடியிருப்பில் மூன்று பேரிடம் மட்டுமே கார் இருந்தது.
சேலத்திற்கு என் அப்பா, அண்ணா ,மாமியுடன் சென்றடைந்த போது இரவு மணி பத்து. மருத்துவரின் வீட்டை ஒட்டியே அவரின் மருத்துவ மனையும் இருந்தது. அங்கே மாமியை அட்மிட் செய்யச் சொன்ன மருத்துவர் ,சுவற்றில் ஆவேசமாக திரும்ப, திரும்ப மோதிக் கொண்டதால், மாமியின் நெற்றியில் கரு நீல நிறத்தில் ரத்தக் கட்டு, வீக்கம் பார்த்த மருத்துவர் ,மாமிக்கு நாளை shock treatment தர வேண்டியது அவசியம் என்றார்.
அவர் மன நல மருத்துவர் ஆகையால் பல வருடங்களுக்குப் பிறகு மாமி ,மாமாவை பிரிந்து இருந்ததால், இருபது நாட்களுக்கு மேலாகியும் ,மாமா வராததால் ,கணவர் தன்னை விட்டு சென்று விட்டார் ,என்ற பயம் அவருக்கு வந்து விட்டது ,என்று சொன்னார்.
அப்போது கை பேசி ஏது?trunk call பேசுவது என்றால் தபால் நிலையம் சென்று call book செய்து விட்டு காத்திருக்க வேண்டும். இரவு நேரத்தில் கூப்பிட்டால் கட்டணம் குறைவு, நள்ளிரவு ஒரு மணிக்கு மாமாவுடன் பேச முடிந்தது. என் அண்ணா சொன்னதை கேட்ட மாமா மிகவும் அரண்டு விட்டார்.
மறுநாள் காலை எப்போது விடியும் என்று காத்திருந்த மாமா, அலுவலகத்தில் மேலகாதிரியிடம் விஷயத்தை சொல்ல,மேலதிகாரிக்கு மாமா புதிதாக அங்கு வந்து இருப்பவர் ஆகையால் மாமாவின் சோகக் கதை அன்றுதான் தெரிந்தது. அவர் உடனே “அடே ,நம்ம சுந்தரேசன் வீடு இங்குதான் பக்கத்தில் இருக்கிறது “என்று சொல்லி அவரை உடனே அழைத்தார்.மேலதிகாரி அவரிடம் மாமாவின் நிலையை சொல்ல அவர், “Sir,இவர் பிராமணர் என்பதால் ,என் வீட்டோடு வாடகைக்காக கட்டி இருக்கும் போர்ஷனில் தங்க ஒப்புக் கொள்வாரா என்று நினைத்து சொல்லவில்லை. நிலைமை இவ்வளவு சீரியஸ் என்று தெரியாது.
இவருக்கு சம்மதம் என்றால் எனக்கென்ன தயக்கம்? இவர் வேலைக்கு வரும்போது என் அம்மா வேண்டுமானாலும் இவர் மனைவியை பாத்துப்பாங்க.”
இதைக் கேட்ட மாமா சுந்தரேசனை தழுவிக் கொண்டு, “இப்போதே சேலம் கிளம்புகிறேன் ,“என்று ஓடினார்.மாமாவை பார்த்த உடனேயே ,மாமி முகத்தில் தெளிவு.
என் அண்ணா, “Sir,நீங்க நாளைக்கு காலையில் மாமியை அழைத்துக் கொண்டு மதுரை போங்க. நான் இப்போதே மேட்டூர் போய் மாமியின் உடைமைகளை எடுத்துக் கொண்டு, சேலம் வந்து உங்கள் வீட்டை காலி செய்து சாமான்களுடன் மதுரை வந்து விடுகிறேன் ,“என்று சொன்னார்.
பல வருடங்கள் கழித்து எனக்கு தெரிந்தது,மாமி மன நோயாளியாக ஆனதின் காரணங்கள். மாமி மிகவும் அழகாக இருந்ததால், மாமா அவர் நடத்தையில் மிகவும் சந்தேகப் பட்டு சொற்களால் சுட்டு இருக்கிறார். இரண்டு முறை கர்ப்பம் தரித்து இரண்டு முறையும் குறைப் பிரசவம்.மாறாக மாமிக்கு மாமா மேல் அதீத அன்பு. குழந்தை இல்லாததால் அவரை விவாகரத்து செய்து விடுவாரோ என்ற பயம்.
தான் செய்த தவறை பின்னர் உணர்ந்த மாமா மனநிலை குன்றிய தன் மனைவியை கண்ணின் மணி போல் காத்தார்.
நிறைவு பெற்றது.
100 comments