‘பச்சை முத்து (முத்தா – நச்சா?)’ என்ற சிறுகதையை எழுதியவர் திருமதி. சீதா ராமநாதன்
பச்சை முத்து (முத்தா – நச்சா?)
“அம்மா” என்ற பச்சைமுத்துவின் குரல் கேட்டு சூடான காஃபியை டம்ளரில் எடுத்து வந்த கோமதி அவன் கையில் கொடுத்து விட்டு, “என்ன பச்சை இன்னும் எவ்வளவு நாள்ல மாடி வேலையை முடிப்ப?” என்று கேட்க,
“ஆச்சுங்கம்மா. காரை பூசி சுண்ணாம்பு அடிச்சுட்டா , அப்புறம் கதவு, ஜன்னல் எல்லாம் தச்சனார் வேலை. எங்க வேலை இன்னும் பத்து நாள்ல முடிஞ்சுடும். காஃபி சூடா நல்லா இருந்ததும்மா. காலைல வந்து மகாலட்சுமி உங்களை பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு உங்க கையால சூடா ஒரு டம்ளர் காஃபி வாங்கி குடிச்சா நாள்முழுக்க உற்சாகமா வேலைசெய்ய முடியுதும்மா. அதைவிட காலைல வந்து நீங்க தலைக்கு குளித்து பெரிய குங்கும பொட்டோட தரிசனம் தரீங்களா , மகராசிம்மா நீங்க . இன்னும் பத்து நாளு. அதுக்கப்பறம் உங்களை பார்க்க முடியாதுங்கறதுதான் வருத்தமா இருக்கு” என்று சொல்லி அவளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு காஃபி குடித்த டம்ளரை தோட்டத்தில் இருந்த குழாயில் கழுவி வராந்தாவில் வைத்து விட்டு மாடிப்படி ஏறினான்.
அவன் உதவியாள் அவனுக்கு முன்னே வந்து காத்து இருந்தான், வேலையை ஆரம்பிக்க.
கோமதி அம்மாவின் கணவர் திருச்சியின் பிரபலமான வக்கீல்களில் ஒருவர் வயது 65. தொழிலில் ஓரளவு பணம் சேர்த்தாயிற்று. ஒரே மகன் சுகுமாரன். சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். மனைவி அருணாவும் வேலைக்கு செல்லும் பெண். இரண்டு குழந்தைகள். அருணாவின் பெற்றோர் பக்கத்திலேயே வசித்து வந்ததால் அருணாவிற்கு குழந்தைகள் பற்றிய கவலையே இல்லாமல் வேலைக்கு போக முடிந்தது.
மருமகள் அருணா நல்ல பெண். சுகுமாரனும் அருணாவும் வரதனையும், கோமதியையும் சென்னை வந்து பேரக் குழந்தைகளுடன் வயசான காலத்தில் சந்தோஷமாக இருக்கும் படியும், சம்பாதித்தது போதும் என்று சொல்கிறார்கள்.
பேரக்குழந்தைகளும் பாட்டி, தாத்தா ஒவ்வொரு முறை வந்து விட்டு போகும்போதும் அங்கேயே தங்கும்படி அடம் பிடிப்பார்கள்.
மாடியில் ஒரு பெட்ரூம், பாத்ரூம், சின்னதாக ஒரு சமையல் அறையும் கட்டினால் கீழ் போர்ஷன் பெரியதாக இருந்ததால் அதை வாடகைக்கு விட்டால் வீட்டை பூட்டி வைக்க வேண்டாம். தேவையான சாமான்களை மட்டும் மாடியில் வைத்துவிட்டு மீதியை வந்த விலைக்கு கொடுத்துவிட்டு மதராஸ் போய் மகனுடன் இருந்து விடலாம் என்று திட்டம்.
ஆனால் அவர்கள் இருவருக்குமே மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது ஶ்ரீரங்கநாதனை தரிசனம் செய்தாக வேண்டும் . திருச்சி வந்தால் தங்க சௌகரியமாக இருக்கும் என்பதால் மாடியில் அறைகள் கட்டும் திட்டம்.
சென்ற வாரம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் ஒரு மாதத்தில் மதராஸ் வந்து விடுவோம் என்று எழுதி இருந்தார்கள்.
அன்று சாயந்திரம் வேலை முடிந்து பச்சைமுத்து அவன் குடியிருப்பு போய்க்கொண்டு இருந்த போது எதிரே கந்துவட்டி கண்ணாயிரம் வருவதை பார்த்து அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக பக்கத்து சந்தில் நுழைந்தவனை பின்பக்கத்தில் இருந்து ஒரு கை அவன் கழுத்தை வளைத்துப் பிடித்தது.
“என்ன பச்சை, வாங்கின காசை திருப்பிக் கேப்பேன்ற பயத்துல என்னை பார்த்ததும் நழுவ பாக்கறே. ஆறு மாதங்களுக்கு முன்ன தங்கை கண்ணாலத்துக்கு பணம் வேணும்னு 200 ரூபாய் வாங்கினே. (80 வருடங்களுக்கு முன் 200 ரூபாய் கிட்டத்தட்ட இன்று 50ஆயிரத்திற்கு சமம்) குடிகாரப் பயலே, உன்னை நம்பி காசு கொடுத்தது என் தப்பு. எப்ப கேட்டாலும் ஏதாவது சாக்கு சொல்லற. இன்னும் ஒரு வாரத்துல வட்டியும் அசலும் சேர்த்து 250 ரூபாய் கொடுக்கல, உன்னை கட்டிக்கப்போற மாமன் மக பொன்மணிகிட்ட உன்னை பற்றிய விஷயத்தை எல்லாம் புட்டு புட்டு வச்சுடுவேன். எங்கயாவது திருடுவயோ கன்னம் வைப்பயோ எனக்கு தெரியாது. ஒரு வாரத்துல என் பணம் எனக்கு வந்தாகணும். இல்லாட்டி நடக்கிற கதையே வேற.”
கண்ணாயிரம் மிரட்டிய மிரட்டலில் ராத்திரி முழுக்க தூங்காத பச்சைமுத்து, மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றியது.
எப்பவும் ராத்திரியில் சரக்கு அடிப்பவன் அன்று பொழுது விடிந்ததும் ஒரு பாட்டில் சரக்கு வயிற்றில் போனது.
‘கோமதி அம்மா காதுல மின்னுதே, வைரத்தோடு அது ஒரு 500 ரூபாய் பெறுமா? அது மட்டும் என் கையில கிடைச்சுட்டா கடனும் அடஞ்சுடும். பொன்மணிக்கும் கண்ணாலத்துக்கு கொஞ்சம் நகை வாங்கலாம். எங்கம்மா சத்தியமா இனிமே சரக்கு அடிக்கறதை மறந்துடணும். கோமதி அம்மாவின் மகாலட்சுமி முகம் தோன்றி செய்யப் போகும் காரியம் உறுத்தினாலும் கண்ணாயிரம் பொன்மணியிடம் பச்சை குடிகாரன்ங்கற விஷயத்தை சொல்லிவிட்டால் என்ன ஆகும்?’
எவ்வளவு பெரிய பாதகமான காரியத்தை செய்ய நினைக்கிறேன் என்று அவனுக்கு தோன்றவே இல்லை.
வழக்கம் போல கோமதி அம்மாவின் வீட்டில் வெளியே நின்று “அம்மா” என்று குரல் கொடுத்தான்.
“வா, பச்சை இன்னிக்கு ஏன் லேட்? ஐயா உன்னைப் பார்க்கணும்னு சொன்னார். நீ வராததால இப்பதான் ஏதோ அவசர காரியமா வெளில போனார். இரு காஃபி கொண்டு வரேன்” என்று உள்ளே போனவளை தொடர்ந்து போய் சட்டைக்குள் ஒளித்து வைத்து இருந்த அரிவாளால் தலையை ஒரே சீவு. தலை வேறு உடல் வேறானது.
பீறிட்ட ரத்தம் அவன் முகத்தில் தெறிக்க, செய்த காரியம் எவ்வளவு கொடூரமானது என்பது புரிந்தது. ‘ஓ’வென்று கீழே விழுந்து அலறினான்.
அரிவாளால் தன் தலையையும் சீவிக்கொண்டு விடலாம் என்று நினைத்து அரிவாளை உயர்த்திய தருணம் ஒரு கை, அவன் கையை இறுகப் பற்றியது.
நிமிர்ந்தால் வக்கீல் ஐயா.
“ஐயா எவ்வளவு பெரிய பாதகம் செய்து விட்டேன். குடி வெறியில் நான் தினமும் வணங்கிய தெய்வத்தையே கொன்று விட்டேனே. என்னை சாக விடுங்க ஐயா.”
அடுத்த நிமிடம், “இல்லை ஐயா நான் சாகக்கூடாது. கடுங்காவல் தண்டனை வாங்கிக்கொடுங்க. நான் செய்த பாவத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் புழுவா துடிக்கணும்.நான் துடிக்கறது பார்த்து மற்றவர்கள் என்மேல் காறி உமிழணும். எனக்கு மன்னிப்பே கூடாது” என்று கதறினான்.
“எழுந்திருரு பச்சை. சட்டம் தன் வேலையை செய்யும்” என்று சொல்லி விட்டு மாடியில் இருந்த பச்சையின் உதவியாளை கூப்பிட்டு ஒரு குதிரை வண்டி கொண்டு வரச்சொன்னார்.
வண்டி வந்ததும் அவனிடம் சீவிய தலையை ஒரு சாக்கில் போடச் சொல்லி அந்த சாக்குப் பையுடன் அவனை வண்டியில் ஏற்றி விட்டு
வண்டியை அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு விடும்படி வண்டிக்காரனிடம் சொல்லி விட்டு, இன்னொரு குதிரை வண்டியில் முன் சென்ற வண்டி பின் சென்றார் காவல் நிலையத்திற்கு
(இது ஓர் உண்மைச் சம்பவம். சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் என் பெற்றோர் திருச்சியில் வசித்தபோது நடந்தது. என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
குடி குடித்தவர் குடும்பத்திற்கு மட்டும் இல்லை. அடுத்தவர் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக இந்தச் சம்பவத்தை எழுதி உள்ளேன்.)
நிறைவு பெற்றது.
17 comments