‘நேசமிகு தேசம்’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு க.வெள்ளிங்கிரி.
நேசமிகு தேசம்
வெயில் அனலா வீசிட்டு இருக்கு… ஊர்க்காரங்க ஐம்பது, அறுபது பேர் அரச மரத்துக்கடியில கூடி இருக்காங்க… அருகம் புல்லாேடையும், அரளிப் பூவோடையும் பிள்ளையாரு கூட்டத்துக்கு பக்கத்துல அமர்ந்து இருக்காரு.
“ஆளுங்க முழுசும் வெரசா வந்துட்டாங்க போலிருக்கு… கோட்டை கோயில் போனேன். சாமி கும்பிட்டேன், முடிவு நல்லா வரனும்னு நீரு வாங்கினேன். இந்தாங்க… எல்லாரும் இட்டுக்குங்க…” கையில வெச்சிருந்த சொப்பை பாரி கூட்டத்துக்குள்ள கொடுத்தாரு. அது ஒவ்வாெரு கையா மாறிப் போய்டு இருந்துச்சு.
“உம் மகனுக்கா சாமி கும்பிட்ட பாரி…?”
“எல்லா மக்களுக்குந்தான்… நம்ம பொடிசுக யார் வைத்தியர் படிப்புக்கு வந்தாலும், எனக்கு செந்தோசம்தான்!” பெருமையா சொன்னாரு.
“சிலதுக்கு வாய்ப்பு இருக்கு… எது முந்திக்கிடும்னு தெரியல. கொசுறு நேரம் முடியட்டும், விடை வந்திடும்.”
“செவ்வேலா… முந்தி வரணும். அதே கணம் வெகுவா மதிப்பெண் கிடைக்கணும். காலேசு இடம் லேசுப்பட்டது இல்லை…!” கோடன் சொன்னாரு.
அந்த நேரம் பள்ளிக்கூட பியூன் சாமிக்கண்ணும், ஒரு சில பள்ளிக்கூடப் பிள்ளைகளும் நெற்றி வியர்வையைத் துடைச்சுட்டு அங்கே வந்தாங்க. சில பசங்களுக்கு வியர்வையால சட்டையெல்லாம் நனைஞ்சு போச்சு.
“வாங்க பிள்ளைகளா… அட… இப்படி முன்னாடி வாங்க…” ஓரமா கை கட்டி நின்ன பசங்களை கூப்பிட்டாரு மீசை.
“உன்னோட சேதிக்குத்தான் நாங்க காத்து கிடக்காேம் சாமிக்கண்ணு. பசங்கள பார்த்து காகிதத்தை வாங்கி வர நீ தான் சரி. படிப்பு எப்படி? எல்லாரும் கரையேறிட்டாங்களா? யாரு ஜாஸ்தி வாங்கி இருக்காங்க?”
“நம்ம சின்ன காளை மவன் மணிவாசு, மொத மதிப்பெண் வாங்கி இருக்கான்…! பய முகத்தைப் பார்க்கணுமே… ஒரு அலட்டல் கெடையாது. சாதாரணமாய் இருக்கான்!”
“என்னப்பா சின்னக்காளை மகனா…?”
கோடனுக்கு ஏமாத்தமா போச்சு.கோடனுக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு இத நம்ப முடியல!
“என்ன ஆச்சு…? பாதி பேரு மாெகம் மாறிப்போச்சு. ஏன் மணி வாசும் நம்ம புள்ள தானே?” சாமிக்கண்ணு ஆதங்கமா கேட்டாரு.
“அந்தப் பையனுக்கு அம்புட்டு காசை எறச்சு படிக்க வைச்சு, பிறவு படிப்பு சரியா வராம இடையில ஒதுங்கிட்டா, நம்ம ஆசையும் போச்சு. சாமி பணமும் போச்சு!”
கோடனோட பேச்சுக்கு கோபம் வந்துருச்சு சாமிக்கண்ணுக்கு.
“என்ன நெலை கெட்ட பேச்சு இது… போன வாரம் முதல் மதிப்பெண் எடுக்கிற புள்ளைய கோயல் கட்ட வாங்கின வசூல் பணத்துல படிக்க வைக்கிறதா ஊரு கூடி முடிவு எடுத்துட்டு இப்ப மாெகம் யார்னு தெரிஞ்ச பிறகு மறுப்பு சொல்றது தப்பு…” சாமிக்கண்ணு சத்தமா கேட்டாரு.
“தம்பி… அந்தப் பையன் படிப்பாளி தான். ஆனா அவன் அப்பனைப் பாருங்க. பொண்டாட்டி சாகக்கிடக்க இருந்தா… அவ உசுரு பொழைக்க, கல்லுக்குழி காட்டுச்சாலைக்காரர்கிட்ட கடம் பட்டு, அதை அடைக்க தன்னை அடிமையா எழுதிக் கொடுத்து கால்கஞ்சி குடிக்கிறவன்… இப்படியிருக்க நாம எப்படி…?”
“நம்மை விட அந்த மனுசன் நாதியத்து கெடக்கறான்… அதுதானே…! அதுதானே உன் கூப்பாடு…?”
“அதுக்காக மட்டுமில்ல… கோயல் வசூல் நன்கொடையா காெறசா நாம வச்ச காசக்கூட கொடுக்கல… அது கூட பாதிக்காசு தான் வந்திருக்கு அவன்கிட்ட…”
“நன்கொடை காெறசா இருந்தா… மனுசனா மதிக்க மாட்டிங்க…?”
“நம்ம ஊரு காசு உருப்படியாகணும். அதுதான் எங்க கவலை.”
“வாங்கின காசுக்கு தன்னையே அடுத்தவனுக்கு சாசனம் எழுதிக் கொடுத்தவன் அப்படித்தான் இருப்பான். வெள்ளையும், சொள்ளையுமா வீதி வலமா வருவான்?” ஒவ்வொருத்தருக்கும் விடாம பதில் கொடுத்தாரு சாமிக்கண்ணு.
“சரி… சரி… பேச்சை மட்டுப்படுத்துங்க…அதோ காட்டுப்பாதை வழியா சின்ன காளையும், அவன் மவனும் வர்றாங்க!” தூரத்தில வர்ற முகங்களை பார்த்து கூட்டத்தில ஒருத்தரு கூட்டத்துக்கு அத சொன்னாரு. பேச்சு சத்தத்தை குறைச்சுட்டு அவுங்கள கூட்டமே பார்த்துச்சு.
‘கூட யாரு? உசரமா, துணிமணி சுத்தமா…?”
“ஏம்பா! அது எம்மவன் எலட்சியப்பா…!” மீசைக்கு பதில் தந்தாரு கோடன்.
“காேடனுக்கு ஆச்சரியம்! டவுன்ல வேலை செய்ற தன் பையன் எப்படி இந்த நேரத்துல கிராமத்துக்கு வர்றான்னு…! அவுங்க கூட்டத்துக்கு வந்து சேரும் வரை அமைதியா இருந்த கோடன், தன் மகனைப் பார்த்து கேட்டாரு. “தைநோம்பி, ஊர் நோம்பிக்கு தானடா வருவே எலச்சி… இப்படி திடீர்னு வந்திருக்க… துணிமணி புதுசாட்டம் இருக்கு. வேலை பார்க்குற எடத்தில கொடுத்தாங்களா…?”
“இல்லை ஐயா… காசுக்குத்தான் எடுத்தேன்.” அமைதியா பதில் வந்துச்சு எலச்சிகிட்ட…
“எலச்சி எப்படி உங்கூட வந்தான் காளை?”
“பஸ்சு வரல போலிருக்கு… வெயக்காஞ்சு நடந்தே வந்தான். ஊட்டு சாலைக்கு போக இருந்தான். அரச மரத்திண்ணையில ஊரு கூடி இருக்குன்னு சொன்னேன். அதான் என்னோட வந்துட்டான்.”
‘காளை… உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தோம். பையன நல்லா படிக்க வெச்சுட்ட… ஊருக்கு சந்தோசம்தான். ஆனா… இந்த டவுனு படிப்புதான் இப்ப விவகாரமாயிருக்கு. இது சாமி பணம். அதான் பயப்படுறோம்.” சின்ன காளைகிட்ட மீசை சொன்னாரு.
“எம்மவமனுக்கு அது வேணாம் மீசை. வேறு ஏதாவது புள்ளைய படிக்க வையுங்க. ஏதாே என் ஆசைக்கு இவன் இம்புட்டு படிச்சுட்டான். அதுவே எனக்கு போதும்.”
“ஐயா… மணிவாசு நல்லா படிச்சு வந்திருக்கான். அவனை நம்ம ஊரு படிக்க வைக்கணும்.” எலச்சி தன் அப்பா கிட்ட பயந்துட்டே சொன்னான்.
“டேய் தம்பி… கிராமத்துக்காரங்க கூடி பேசிட்டு இருக்கோம். குறுக்கால நீ பேசாத…!”
கோடன் அதட்டினாரு தன் பையனை.
“என்னய்யா பேசுறீங்க…? சின்னக்காளை அண்ணன் எவ்வளவு நொடிஞ்சு கிடைக்காரு. அவரு பையன படிக்க வைக்கணும். அது, இதுன்னு காரணம் காட்டி அதை தட்டி பறிக்காதீங்க!”
“ஊரு விட்டு வெளியே பொழப்புக்கு போனதிலிருந்து, உன்னோட பேச்சும், நடைமுறையும் மாறி கெட்டுப்போச்சு. என்ன ஆச்சு உனக்கு? வேலை பார்க்குற இடத்தில பள்ளிக்கூடம் வைச்சு இதெல்லாம் உனக்கு சொல்லிக் கொடுக்கறாங்களா…?”
“அது இல்லையா…”
“பேச்சை நிறுத்து முதல்ல… நீ ஊட்டு சாலைக்குப் பாே. அங்க பேசிக்குவோம்.”
“இல்லையா… நான் பேசணும். அப்பதான் வழி கெடைக்கும். நம்ம ஊர்ல ஒரு பையனாவது படிக்கணும்னு, எல்லாரும் நினைச்சுருக்கீங்க. நல்ல விசயம். உங்க குடும்பத்துல இந்த வருசம் பன்னென்டாவது படிக்கிற பசங்க இருந்தாலும், இல்லாட்டியும் ஊர்ல ஒருத்தராவது படிக்கணும்னு ஒத்துமையா, பெருந்தன்மையா முடிவெடுத்திருக்கீங்க…. மனசார பாராட்டலாம்…! ஆனா…ஊருக்குள்ள ஒருத்தருக்கு இப்படி ஒரு காரியம் செய்யுறீங்க…! இந்த வருஷம் தான் உங்களுக்கு ஒரு ஊர் பையனை படிக்க வைக்கணும்னு நெனப்பு வந்திருக்கு. ஆனா அஞ்சு வருசம் முன்னாடியே, அதை இந்த சின்ன காளை அண்ணன் நினைச்சுட்டாரு! அவரு எதையும் எதிர்பார்க்காம, என்னை படிக்க வைச்சாரு. நாலு வருசம் முன்னாடி நானும் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தேன். மருத்துவம் படிக்க எல்லா பெரிய மனுசங்களையும் போய் பார்த்தாரு எங்கய்யா. எந்த பண உதவியும் யாரும் செய்யல. அப்பதான் சின்ன காளை அண்ணன் என்னை படிக்க வைக்க, ஆசைப்பட்டாரு. முழுப் பணத்தையும் தானே கொடுக்கறதா சொன்னாரு. பணத்துக்கு கல்லுக்குழி முதலாளி கிட்ட பணம் கடனாகக் கேட்டாரு. பணத்துக்கு அவர் முதலாளி ஏழு வருச அடிமைக் கூலிக்கு பத்திரத்தில கைநாட்டு வாங்கிட்டாரு. இந்த அஞ்சு வருசமா இதை நாங்க வெளிக்காட்டிக்கல. இவரு இது யாருக்கும் வெளிய தெரிய வேண்டான்னு சொல்லிட்டாரு. எங்க ஆத்தா, அய்யா கிட்ட கூட ஊர்ல வேலை பார்க்கிறேன்னு தான் சொல்லி இருக்கேன். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டு போனேன். அய்யா சம்பளம் கேட்பாரேன்னு, சாயங்காலத்துக்கு மேல ராத்திரி வரை பல பொழப்பு பார்த்து இருக்கேன். அந்த சம்பளம் கூட, இவர் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அரசு மருத்துவக் கல்லூரியில படிப்பு இந்த வருசம் முடிஞ்சிடுச்சு. பயிற்சி மருத்துவரா எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இனி அதுக்கு சம்பளமும் வாங்க போறேன். இனி இவரு கல் உடைக்கிற வேலை செய்யக்கூடாது. போன மாசம் இவருக்கு வயிற்று வலின்னு நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போனேன். வயித்துல கட்டி இருக்கு, கடினமான வேலை செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கடனா வாங்கியும், கொஞ்சம் காசு சேர்த்தும் கல்லுக்குழி முதலாளி கிட்ட கொடுத்துட்டு, கைநாட்டு வெச்ச பத்திரத்தையும், அவரையும் மீட்டுக்கொண்டு வந்து இருக்கேன். இப்ப என்னோட கடமையும், நன்றியும் முதல்ல அவரை குணப்படுத்தணும். மணிவாசுவை என்னைப் போல ஒரு மருத்துவரா படிக்க வைக்கணும். சின்ன காளை அண்ணனோட சேவைக்கு உபகாரம் இதுதான். மருத்துவப் பயிற்சி முடித்த பிறகு நம்ம ஊர்ல வந்து நம்ம மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன். நம்ம கோயில் வேலையும் தவறாம செஞ்சுடுவோம்…”
எலச்சி பேசுன இத்தனை நேரம் யாரும் குறுக்க பேசுல. எல்லாரும் அதை கவனமா கேட்டாங்க.எலச்சியும், சின்னக்காளையும் ஊர்காரங்க முன்னாடி கை எடுத்து கும்பிட்டு விட்டு, அங்கிருந்து கிளம்பினாங்க. கூட்டம் அமைதியாக அப்படியே உட்கார்ந்து இருந்துச்சு.பல பேருக்கு எலச்சி பேசுனது சரின்னு பட்டுச்சு.தன் மகனுக்காக சின்ன காளை செய்த இந்த தியாகத்தையும், அவரோட பெரிய மனசையும் கோடன் உணர ஆரம்பிச்சாரு. அவரு மனசு முழுசும் மாற நிறைய நேரம் ஆகல. கூட்டத்துக்கு முன்னாடி வந்தாரு.
“என்னோட நெனைப்பு தப்புன்னு புரிஞ்சிருச்சு… மணிவாசுவை நாம படிக்க வைப்போம்… இதுக்கு நீங்க எல்லாரும் சம்மதிக்கணும்…” கோடனுக்கு ஊர்காரங்களாேட சிரித்த முகங்கள் பதிலாக வந்து விழுந்தது. இப்போது கூட்டம் கலைய, தனிமையானாரு பிள்ளையாரு.
நிறைவு பெற்றது.
1 comment