தேர்! – போட்டி கதை எண் – 45

5
(2)

‘ தேர்!’  என்ற சிறுகதையை எழுதியவர்  தே.ச.மங்கை

தேர்!

புயலுக்கு முன் அமைதி போல இருந்தது எங்கள் தெரு. இன்று தேர்த்திருவிழா இல்லையா! ஊர் கூடித் தேர் இழுக்கச் சென்றிருந்தனர்.

எங்கள் தெரு தேர் உலா வரும் தெரு அல்ல. நல்லவேளையாக ரத வீதிகள் என்று குறிப்பிட்ட நான்கு தெருக்களைச் சுற்றி மட்டுமே தேர் இழுக்கப் பழகியிருந்தார்களே! இல்லையென்றால் தேர் இழுக்க ஒரு ஊரெல்லாம் போதாது , ஒரு வட்டமே வரவேண்டி இருக்கும்.

 

‘டப்… டப்’ என்று வேட்டுச் சத்தம் அதிர, வடம் பிடிக்கத் தயாரானோம். எனக்கு நேற்றுத்தான் கல்லில் இடித்து கால் சுண்டுவிரல் பொதியாக வீங்கி இருக்கிறது. இருந்தாலும் இந்த வருஷம் தேர் இழுத்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து வடம் பிடிக்க வந்திருக்கிறேன். தேருக்குள் சாமி இருப்பதால் செருப்புக் கூட போடாமல் வந்தேன்.‌ என்னதான் பக்திப் பரவசத்தில் வெறும்காலில் கிளம்பி வந்தாலும் கல்லும் கண்ணாடியும் காலுக்கு மெத்தையாகத் தோன்றவில்லை. தைப்பூசத்திற்கு முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை கவனித்திருக்கிறேன்.‌ அவர்கள் கால்கள் பூரி போல உப்பி இருக்கும். இப்போதெல்லாம் சிலர் பீடி சிகரெட் புகைத்தபடி பாதயாத்திரை செய்வதை கவனிக்கிறேன். இதற்கு இவர்கள் செருப்பே அணியலாமே என்று தோணும். காலம் மெல்ல, இல்லை.. இல்லை.. வேகமாகவே மாறி வருகிறது.

 

நட்சத்திரங்களால் நிரம்பிய, சற்றே வெளுத்த காக்கிச் சட்டை அணிந்த காவல்துறை அதிகாரி கையில் வைத்திருந்த ஒலிபெருக்கியில் கோவிந்தா !கோபாலா! என்று பகவான் நாமங்களை உச்சரிக்க கவனித்தேன். சட்டையே போடாமல் தேருக்கு வந்த சுந்தரத்துக்கும் இவருக்கும் பக்தியில் என்ன வேறுபாடு? மனம் தானே எல்லாம்! அது முதல் நானும் கோவிந்தா கோபாலா என்று சொல்லியபடியே வடம் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன். கூட்டத்தில் என் காலை மிதித்து நகட்டி சுண்டுவிரலை மேலும் வலிக்க வைத்தது ஒரு செருப்பணிந்த கால். அப்போதுதான் கவனித்தேன், பலரும் காலணியோடு வந்திருப்பதை. ஒரு அரை மணி நேரம் போயிருக்கும். ‘பக்தர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஒரு பர்ஸ் கிடைத்திருக்கிறது. தொலைத்தவர் தக்க அடையாளம் சொல்லி வந்து பெற்றுக்கொள்ளலாம்’ என்று காவல்துறை அறிவித்துக் கொண்டிருந்தது. சில நேர சலசலப்புக்குப் பின் சகஜ நிலைக்கு வந்தது கூட்டம். சுளீரென்று முதுகில் சுட்டதில் சூரியன் அவரது ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்  வானவீீதியில் வேகமாக  உலா வர ஆரம்பித்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். கட் ஷூ, கைக்கடிகாரம் சகிதம் தேர் இழுக்க வந்திருந்த மடந்தையிடம் மணி என்ன என்று கேட்டுக் கொண்டேன். இப்போதுதான் 9 மணி ஆகிறது. காலையில் சாப்பிடவில்லை. தேர் கூட்டத்தில் இடிபட்டு, காலில் மிதிபட்டு, சூரியக்கதிர்களால் சுடப்பட்டதில் களைப்படைந்தேன். கண்கள் செருகின. ஆபத்பாந்தவர்களை அவ்வப்போது ஆண்டவன் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறான். ஆம், அப்போது தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்த இளைஞன் எனக்கு அப்படித்தான் தெரிந்தான். ஒரு பாட்டில் தண்ணீரில் முக்கால்வாசி குடித்துவிட்டு கொஞ்சம் முகத்திலும் தெளித்துக் கொண்டேன், மயக்கம் வராமல் இருக்க.

‘இப்படிக் கஷ்டப்பட்டு நீ எதுக்கு தேர் இழுக்கணும்?’ மூளை உருவெடுத்து வந்து கேட்டது. ‘அவசியம் இல்லை தான். நான் இழுக்காமலே தேர் நிலைக்கு வரத்தான் போகிறது. இந்த லாஜிக் எல்லாம் என்னைத் தேரிழுக்கத் தூண்டுகிற சாமியிடம் எடுபடவில்லையே! தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நான் செய்த பிழைகளுக்கு எனக்கு நானே கொடுக்கும் தண்டனையாகக் கூட இது இருந்துவிட்டுப் போகட்டும்’ மனசு பதில் சொல்லி அனுப்பியது.

 

மீண்டும் ஒரு அறிவிப்பு!

பையன் பெயர் அகிலன், வயது 6.

கூட்டத்தில் தொலைந்துவிட்டான் என்று அவனுடைய பெற்றோர்கள் ரவி- மஞ்சு எழுதிக்கொடுத்துள்ளதாக வாசிக்கப்பட்டது. அவனது நிறம் சிவப்பு, அவன் அணிந்திருந்த சட்டையின் நிறம் நீலம் என்று கூடுதல் தகவல்களும் ஒலித்தது.  அகிலன் எங்கிருந்தாலும் வரவும். பையனை யார் பார்த்தாலும் விசாரித்து தேரின் பின்புறம் நிற்கும் பெற்றோரிடம் ஒப்படைக்கவும் என்ற  அறிவிப்பைக் கேட்டது முதல் கண்கள் 6 வயது ஆண்பிள்ளைகளாக ஜல்லடை போட்டு ஜலிக்கத் தொடங்கியது எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற சமூக அக்கறை உள்ள எல்லோருக்கும் தான். சிறிது நேரம் தேர் அசைவதை நிறுத்திக் கொண்டது.  அட!

இவ்வளவு நேரம் தேரில் இருந்து நம்மை கவனிக்கும் ஸ்வாமியை நாம் நன்கு கவனிக்கலையே!

கடவுளே! யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்று! என்று தன்னையறியாமல் கும்பிட்டுக் கொண்டன எனது கைகள்.

 

மரத்தாலான தேர். நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. மினியேச்சர் சிற்பங்கள் எல்லாம் அந்தக்காலத்திலேயே அசாதாரணமாகச் செய்திருக்கிறார்கள். அலங்காரத் தோரணங்கள் அசைந்து வரும் தேருக்கு அழகுதான்! என்றாலும் பாதி வேலைப்பாடுகளை மறைத்து விட்டதால் ரசிக்க முடியாமல் போனது. இரண்டு குதிரை பொம்மைகள் நாலுகால் பாய்ச்சலில்  தேரின் முகப்பில் ஒட்டிக் கொண்டிருந்தன.  திருஆபரணங்கள் ஸ்வாமியை நிறைத்திருந்தன.. பச்சைப்பட்டும், மல்லிகைப்பூ மாலையும் மனதைக் கவர்ந்தன!

கொரோனா ஊரடங்கால் திருவிழா இரண்டு வருடம்  தடைப்பட்டுப் போனதில் இப்போது ஊரைச்சுற்றிப் பார்க்கும் அதீத ஆவலோடு சிரித்த முகத்துடன் எழுந்தருளி இருந்தார் ஸ்வாமி.

 

அடுத்த தெரு வளைவதற்கு முன் நல்லவேளை குளிர்பானம் தந்தார்கள். பாதிப்பேர் என்னைப்போல் காலையில் சாப்பிடாமல் வந்திருந்ததை அவர்களின் களைப்பு மேலிட்ட கண்களே உணர்த்தின. இருண்டிருந்த எங்கள் பார்வை பானம் பருகியதும்  பிரகாசிக்கத் தொடங்கியது. மணி பத்து ஆகியிருந்ததால் கூட்டம் இன்னும் சேர்ந்திருந்தது. மெல்ல நகர்ந்து கொண்டிருந்த தேர் இப்போது கடகடவென்று வந்தது. தடி போடவும் தக்க ஆட்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வரத்தொடங்கினாள் தேர் மகள்.  அந்த வீதி முந்தைய வீதியைப் போல குண்டும் குழியுமாக இல்லாமல் வழுவழுப்பான சமதளமாக இருந்தது. நான் நடுவில் கட்டப்பட்டிருந்த வடத்தில் நடுவாக நின்று இழுத்துக் கொண்டிருந்தேன். இளைஞர்கள் கூட்டத்தின் அதிரடியில் திடீடென்று ரதத்தின் வேகம்  அதிகரித்தது. இதைச் சற்றும் எதிர்பாராத பெரியவர்கள் இதற்கு ஈடுகொடுத்து இழுக்க முடியாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தார்கள். எனக்குத் தலையே சுற்றியது. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால்…  தேர் என் பக்கத்தில். ஏதும் அறியாதவர் போல் தேருக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஸ்வாமி.  கீழேவிழுந்தவர்களுக்கு  தொண்டுள்ளத்தோடு  உரிய உதவிகளைச் செய்த காவல் மற்றும் தீயணைப்புத்துறை நண்பர்களைப் பார்த்தபோது காக்கிச்சட்டை மீது தனி மரியாதை வந்தது. தேருக்குள் இருக்கும் கொட்டு மேளம் வாசிக்கும் கலைஞர்கள், ஒலி பெருக்கியில் தகவல் தரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, பாதுகாவலுக்கு நிற்கும் காவலர்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், அர்ச்சகர்கள் என எல்லாரும் கீழே விழாமல் பத்திரமாக இருக்கிறார்களா என்று ஒருமுறை கவனித்துக் கொண்டேன். பல வருடங்களுக்கு முன்னால் ஒருவர் தேரிலிருந்து கீழே விழுந்து இறந்து போனதை

கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்த ஞாபகத்தில் தான் இந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து நின்றது தேர். சமீபத்துல தஞ்சாவூர் சுவாமி சப்பரத்தில் மின்கம்பி உராய்ந்து விபத்து ஏற்பட்டதில் 10 பேருக்கு மேல இறந்து போயிருக்காங்க. இங்கு நமக்கு மரத்தேர் தான் என்றாலும் கொஞ்சம் பாதுகாப்பாக மின் இணைப்புகளை முழுவதும் துண்டித்து விட்டு மின்கம்பிகளை எல்லாம் கழட்டி விட்டார்கள். வீடுகளில் இன்வெர்ட்டர்களைக்கூட தற்சமயம் நிறுத்திவைக்கவும் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தது கோவில் நிர்வாகம்.

 

10.30 மணி இருக்கும். சூரியன் சுட்டெரித்தது. காலணி இல்லா கால்கள் கற்களையும் கால் மிதிகளையும் இந்த‌அளவுக்கு தாங்கிக் கொண்டதில் வலியோடு வெய்யில் சூட்டையும் தாங்குவதில் சிரமம் தெரிந்தது.

 

சிறிதுநேரம் தேருக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ரசித்துக் கொண்டு நின்றேன்.  மீண்டும் தெம்பு வந்தது போல் வடம் பிடித்தேன். கொஞ்ச தூரத்தில் பிரபல பழச்சாறு கடையின் முன் தேர் நின்றது. பக்தர்கள் எல்லாருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டது. அதை வாங்கச் செல்லும் போது தான் கவனித்தேன்,  அந்த கூட்டத்தையும் சாதகமாக்கி பெண்களை இடித்து உரசும் இடி ராஜாக்களை ! அடுத்து யாரோ கைபேசியைத் தவறவிட்ட அறிவிப்பு வேறு! பலநாட்களுக்கு இருப்புவைத்துக் கொள்ளும் நோக்கில் ஆறேழு காலி தண்ணீர் பாட்டில்களை கூடையில் போட்டு எடுத்து வந்து ஆங்காங்கே வழங்கப்பட்ட குளிர்பானங்களால் அவற்றை நிரப்பிக்கொண்டிருந்தாள் தலைவெளுத்த பெண்மணி ஒருவர்.

 

என் கால்கள் தளர்வதை உணர்ந்தேன். இனிமேல் தொடர முடியாது என்று புரிந்தது. வெறுங்காலோடு நடந்த என் கைகளில் இரண்டு வாழைப்பழங்கள் திணிக்கப்பட்டன. இருக்கிற பசியில் அவற்றை கபளீகரம் பண்ணி விட்டு தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தேன்.

 

கீழ விழுந்திட்டியா? ஏன் இப்படி நடக்கற? என்று கேட்ட அன்னையிடம் இல்லை என்று திண்ணமாகச் சொல்லிவிட்டு மூன்று இட்லிகளை விழுங்கினேன். பிறகு புத்தகம் படித்தபடியே சற்று கண்ணயர்ந்து விட்டேன்.

 

இதுபோல் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அழகான மினி தேர் ஒன்று மோட்டார் பொருத்தப்பட்டு இயங்கிக் கொண்டிருக்க பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். யாரையும் பலி வாங்கிக்கொள்ளாமல் அரைமணி நேரத்தில் அழகாக நிலையை அடைந்தது அந்தக் குட்டித்தேர். உள்ளே அதே ஸ்வாமிதான் அருள்பாலித்தபடி நின்று கொண்டிருந்தார்.

 

வாசலில் ப்பீ…ப்பீ என்று திருவிழாவில் வாங்கிய ஊதல்களை வாண்டுகள் தொடர்ந்து ஒலித்ததில் தூக்கம் கலைந்தது.

 

மின்சாரம் இல்லாமல் வியர்வை வழிய எழுந்து அமர்ந்தபடி அந்த குட்டித் தேரைப்பற்றிய கனவை முகநூலில்  பதிவிடத்தொடங்கினேன்.

 

வெளியே வந்து நின்றேன். ஒரு நீலச்சட்டை போட்ட 6 வயது இருக்கும் நல்ல சிவப்புநிறப் பையனை அவனது அப்பா தூக்கி உச்சிமுகர்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் நின்ற தாயின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டது அந்த குட்டிக்கை.

–நின்றது—

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

8 comments

  1. நா. கருணா மூர்த்தி - Reply

    அடுத்து என்ன என்று எதிர்பார்க்கும் நிலையும்,அந்த எதிர்பார்ப்பில் ஒரு ட்விஸ்ட் வைத்த விதமும் தனித்தமிழ் அழகும் சிறப்பும்

  2. T. RAVI - Reply

    இலகுவான எழுத்தோட்டத்தில் பயணித்திருக்கிறது தேரோட்டம். கூடவே நாமும் தேரோட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டு, தேரின் வடம் பிடித்து இழுத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது கதாசிரியரின் கைவண்ணம்.
    ” நச் ” சென்ற சிறப்பான சிறு கதை!

  3. இரா. இரவிக்குமார. - Reply

    எழுத்தாள்மையுடன் பழமையான பழக்க வழக்கங்களில் எடுக்க வேண்டிய மாற்றங்களைத் திறம்பட எடுத்துக் கூறியிருக்கிறார் அருமை

  4. பாலமுருகன் - Reply

    நல்லா இருக்கு.. தேரோட்டத்தை நேரில் பார்த்த உணர்வு..

  5. Geetha - Reply

    கதையோட்டம் தேரோட்டம் போலவே அருமை! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  6. பாலா - Reply

    எழுத்து வடிவம் காட்சியைக் கண் முன் கொண்டு வருகிறது. நல்லதொரு அனுபவம். ஆசிரியருக்கு இனிய வாழ்த்துகள். அன்பும் நன்றியும்.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!