‘கரப்பான் பூச்சி’ என்ற சிறுகதையை எழுதியவர் கிசா.கவிதா இராசேந்திரன்
கரப்பான் பூச்சி
குளியல் அறையில் இருந்து வெளியே வந்த அபிராமி, “ஏய் கயல் நீ இப்ப எழுந்திருக்க போறியா… இல்ல மூஞ்சில தண்ணிய எடுத்து வந்து ஊத்தட்டுமா…?” என்று திட்டிக்கொண்டே அடுக்களைக்கு வந்தாள் அபிராமி.
அதே கோபமாக தன் கணவரிடம்,” ஏங்க மூணு நாளா சொல்லிட்டு இருக்கேன்… எறும்பு மருந்து வாங்கிட்டு வாங்கன்னு அதைவிட இந்த கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியல… ஒவ்வொரு முறையும் கடைக்கு பொருள் வாங்க போகும் போது ஏதாவது ஒரு பொருளை மறந்துடுறீங்க….. பத்து பொருளைக் கொடுத்தால் நாலு பொருளை மறந்துட்டு வந்துருங்க…. ஒவ்வொன்றுக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா…? ஏதாவது ஒரு உதவி பண்றீங்களா..?” கடுகை பொறித்துக்கொண்டே கதிரவனை தாளித்தாள் அபிராமி.
அதற்கு கதிரவன்,” ஏன்மா உடனே வேணும்னா உள்ள உன் மவன் தூங்கறானே, அவனை எழுப்பி போய் வாங்கிட்டு வர சொல்ல வேண்டியதுதானே… இல்லைன்னா விடு நாளைக்கு போகையில வாங்கிட்டு வரேன்….” என கதிரவனும் பதிலுக்கு சலித்துக் கொண்டார்.” ஆமா உங்க அம்மா வீட்டுக்கு போகணும் சொன்னயே…. நீ எத்தனை மணிக்கு கிளம்புற…”
“எங்க இன்னும் சமையல் முடியல… உங்க செல்ல மகாராணி, இளவரசி இன்னும் கண்ணை முழிச்ச பாடில்ல எரும மாடு மாதிரி எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு இருக்கா…. லீவு விட்டா போதும் பத்து பன்னெண்டு மணி ஆகாம எழுதிருக்கிறதில்லை….” என்றாள்.
அதற்கு கதிரவன்,” எப்ப பார்த்தாலும் என் மகளயே குறை சொல்லு… உன் பையனும் தான் தூங்குறான் அவனை பற்றி ஒன்றும் பேசவில்ல என் மகளை மட்டும் குறை சொல்வது என்றால் உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி இனிக்கும்..”.
“என்ன இருந்தாலும் அவ அடுத்த வீட்டில் போய் குடும்ப நடுத்தர வ இந்தா… இந்தானு… இன்னும் நாலு வருடம் ஆனதும் கல்யாண வயசுல வந்து நிப்பா… அதுக்கு இப்ப இருந்தே பழகினால் தான் ஆச்சு….. ஒரு வேலை செய்யறது கிடையாது கல்லூரிக்கு போனே… படிச்சேனு… கையில கைபேசினு இப்படியே காலத்த ஓட்டிகிட்டு இருக்கா… இது நல்லா வா இருக்கு…”என்றாள்.
” உன் மவன் கதையை பத்தி சொல்லவே இல்லையே…?” என்றார்.
கதிரவன்.
“அவன் வேலைக்கு போயிட்டு வந்து தூங்குகிறான்… அதெல்லாம் சரி பேசிகிட்டு இருக்காமா…. சீக்கிரம் போய் கிளம்புற வேலையை பாருங்க…” என்றாள் அபிராமி.
மவனை பத்தி பேசினா எதையாவது சொல்லி வாயை அடைத்து விடுவாள்…” என்று முணுமுணுத்துக்கொண்டே கதிரவன்,” சரி பசங்களை எழுப்பி சீக்கிரம் கிளம்பி போனா தா நேரத்தோடு போயிட்டு வர முடியும்.இப்பவேஇவ்வளவு வெயில், தாமதமானா இன்னும்வெயில் அதிகமாகிவிடும் அப்பெல்லாம் வண்டி ஓட்டிட்டு போறது ரொம்ப கஷ்டமா இருக்கும்….”
திரும்பவும் வந்து கயலை எழுப்பினாள் அம்மா போர்வையை பிடித்து இழுக்க, அவள் மீண்டும்,” அம்மா விடுமா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்..” என்று கழுத்துவரை இருந்த போர்வையை தலை முழுக்க மூடி இழுத்துப் போர்த்தி படுத்தாள். “கொஞ்ச நேரம்..அம்மா விடுமா….”என்றாள் கயல்
“எத்தனை கொஞ்ச நேரம்… எருமை… சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பு… சீக்கிரம் போகணும்னு சொல்லிட்டு இருக்காரு இல்ல…..
“சரி வரேன் போம்மா….”கண்களை திறக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கயல்
“இப்ப நீ எழுந்திரிக்கல என்ன பண்ண போறேன் பாரு..” என்றாள்.
” சரி விடுங்க எழுந்திருச்சு தொலைக்கிறேன்..” என்றவாறு அரைத் தூக்கத்துடன் எழா முயன்றாள் கயல்.
அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தாள் அவளின் அம்மா,” எந்திரி டி எரும நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு…”
அவள் படுக்கையில் இருந்து கொண்டே,”ம்…ம்மம” என்று முனங்கிக் கொண்டே படுத்திருந்தாள். மீண்டும் அவள் அம்மா,” இப்ப நீ எழுந்திருக்கல மூஞ்சில தண்ணியை கொண்டு வந்து கொட்ட போறேன் பாரு…” என்றாள்.
“இன்னிக்கு லீவு தானே கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டியாம்மா இப்படி படுத்துற…”
“ஆமாண்டி உனக்கு காலையில் எழுந்திருக்கும்போது எல்லா நாளும் லீவு நாளாத்தா…. இருக்கும் இன்னிக்கு லீவு தான் குளிச்சிட்டு கிளம்பு அம்மம்மா வீட்டுக்கு போகணும்…”
” சரி மா கொஞ்சம் லேட்டா போக கூடாதா…? ஏன் இவ்வளவு காலையிலேயே எழுப்பி என்னை தொந்தரவு பண்ற…?” என்றாள்.
அவள் அரைத் தூக்க மயக்கத்திலேயே கண்களை விழிக்காமல் குளியலறைக்குள் சென்றாள். அவள் பல்துலக்கியை எடுக்க முற்படும்போது கையில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.
நன்றாக கண்களை விழித்து பார்த்தாள் கையில் அது மீசையை முறுக்கிக்கொண்டு அவளைப் பார்த்தது.”ஆ… ஐய்யோ… அம்மா…” என்று அலறி கத்திக் கூப்பாடு போட்டாள். அவள் கத்தலை கேட்டு பயந்து கரப்பான்பூச்சி துள்ளி மீண்டும் அவள் மீது விழுந்தது. அதை கண்டு பயந்து தட்டிவிட கால்களுக்கு அடியில் விழுந்தது.
அதை சிறிதும் எதிர்பார்க்காத அவள் துள்ளி குதிக்கும் போது அவளையுமறியாமல் அதை மிதித்து விட்டாள்.அந்த இடத்தில் அந்த சம்பவம் மிக சோகமாகவே நடந்து முடிந்தது. எறும்பைக் கூட கொல்லத் துணியாத அவள் இன்று ஒரு கரப்பான் பூச்சிக்கு தன்னால் இப்படி நிகழ்ந்ததை நினைத்து மிகவும் வருந்தி அதை உற்றுப் பார்த்தாள். அது முழுவதுமாக சாகவில்லை இன்னும் சிறிது உயிரோட்டம் இருப்பதுபோல் இருந்தது.
அதை பார்த்து அவள் உடனே,” கடவுளே எப்படியாவது காப்பாத்துங்க இந்த பாவத்திலிருந்து என்னை விடுவியுங்க…”என்று வேண்டிக் கொண்டாள். அதற்குள் குளியலறையின் ஓரத்திலிருந்த செவ்வெறும்பு படை தன் உணவுக்கான வேலையை செவ்வனே செயலாற்றத்துவங்கியது.
எறும்புகள் சிறிது நேரத்திலே, சில வினாடி பொழுதுக்குள்ளேயே கரப்பான் பூச்சியை கவர நினைத்து வேகவேகமாக தன் படையை திரட்டிக் கொண்டு வந்தது.
அவள்,” ஏய்…..அது இன்னும் சாகல… செத்ததுக்கு அப்புறம் தான் உனக்கு அது சாப்பாடு ஆகும்…. அது இன்னும் உயிரோட இருக்கு…. அத விடு…. அது பாவம்…” என்று எறும்பிடம் வாதாடினாள் கரப்பான்பூச்சிக்காக.
ஆனால் அவை,” எங்க கொலபசி உனக்கு தெரியாது பேசாம விட்டுட்டு இங்கிருந்து போயிரு…” என்பதுபோல் அவள் கூறியதை சிறிதும் சட்டை செய்யாமல் தன் உணவு வேட்டைக்கு தயார் ஆனது குறைந்தது 10 எறும்புகளாவது இருக்கும் கரப்பான் பூச்சியை சுற்றி இழுத்தது.
இவளுக்கு கரப்பான் பூச்சி என்றால் மிக பயம்தான். ஆனால் அதை காப்பாற்ற எண்ணி மனதுக்குள் மலையளவு தைரியத்தை வரவழைத்து எறும்பிடம் இருந்து அதை காப்பாற்ற முயன்றாள்.
தன்னிரு கட்டை விரல், ஆள்காட்டி விரல் இரண்டின், நகங்களின் நுனியில் கரப்பான் பூச்சியின் ஒரு காலை பிடித்து மெதுவாக இழுக்க முயன்றாள்.
ஆனால் எறும்பு ஒரு பக்கம் அவற்றின் முழு பலத்தையும் கொண்டு அதை இழுக்க முயன்றது. இந்த கரப்பான் பூச்சியின் கால்களுக்கு மிகப்பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
இவள் மிகவும் கெஞ்சி கேட்டாள்,” தயவுசெய்து விட்டுவிடு…. தயவுசெய்து விட்டுவிடு….” என்று. ஆனால் பலனில்லை அங்கு மீண்டும் கால்கள் இழுக்கப்பட்டது.
இப்போது அவள் மீண்டும் கண்விழித்தாள் அவள் எதிரில் அவள் காலை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள் அவளின் அம்மா,” ஏண்டி எரும மாடு …நா கத்திக்கிட்டே கிடக்கிறேன்…..எழுந்திருக்கிறாளா பாரு…” என்று கண்கள் மலங்கமலங்க விழித்த கயலைப்பார்த்து.
“நேரமாகுது… சீக்கிரம் கெளம்பு…” என்று சொல்லி திட்டிக்கொண்டே போனாள். இப்போதுதான் அவள் முழுமையாகவே தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தாள். “அப்பாடா…. அந்த கரப்பான் பூச்சி கனவுல வந்து தா செத்துப்போச்சா..” என்று பெருமூச்சு விட்டாள்.
” கடவுளே ரொம்ப ரொம்ப நன்றி…. நான் அந்த கனவில் அதை மிதிக்கலைனா அது எங்கேயாவது ஒரு மூலையில் இன்னும் உயிரோடதான் வாழ்ந்துகிட்டு இருக்கும்…” என்று மகிழ்ந்தாள். வேகமாக ஓடிச்சென்று அடுக்களையில் உள்ள அம்மாவின் கன்னத்தில் கட்டிப்பிடித்து ஊத்த வாயுடன் முத்தம் வைத்து மிகவும் குதூகலமாக ஒரு உயிரை கொல்லவில்லை என்ற மகிழ்ச்சியில்.
“சரி…சரி.. உன் கொஞ்சல் போதும் போய் முதல பல்ல விலக்கிட்டு, குளிச்சுட்டு கிளம்பு…” என்றாள் அபிராமி.