‘கட்டணக் கழிப்பறை’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு செ. பாரத் ராஜ்
கட்டணக் கழிப்பறை
எண்பதுகளில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மாடி வீடு அது. அதில் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் வீட்டு உரிமையாளர் குடும்பத்தினரும் மற்றொரு பகுதியில் வாடகைக்கு ஒரு குடும்பத்தினரும் வசித்து வந்தனர். முதல் தளத்தில் ஒரு பகுதியில் வாடகைக்கு தனிநபர் ஒருவரும், மற்றோர் பகுதியில் உரிமையாளரின் மகன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இரண்டாவது தளத்தில் ஒரு பகுதியில் ஒரு குடும்பத்தினரும், மற்றொரு பகுதி காலியாகவும் இருந்தது.
முதல் தளத்திலிருக்கும் தனிநபர் வசிக்கும் பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்திற்கும் குளியலறையும், கழிப்பறையும் வீட்டினுள்ளே கட்டப்பட்டிருந்தது. தனிநபர் வாழும் அப்பகுதி வீட்டின் வாசலுக்கு இடப்புறம் அவருக்கான குளியலறையும், எதிர்பகுதி வீட்டின் வாசலுக்கு இடப்புறம் அவருக்கான கழிவறையும் இருந்தது.
கீழ் தளத்திலிருந்து முதல் தளத்திற்கு செல்லும் படி முடியும் இடத்திலிருந்து ஓரடி பின்சென்று மூன்றுக்கு மூன்றடி என்ற அளவில் வலது புறமாக கழிவறை. முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்திற்கு செல்லும படி துவக்கத்தில் துவங்கி நான்குக்கு ஆறடி என்ற கணக்கில் குளியலறை. அக்கழிவறையை ஒட்டி வலது புறமாக குளியலறை ஒன்று இருந்தது. அதற்கு கதவு இல்லை. கதவு இல்லா அக்குளியல் அறையில் கண் மூடாமல் படுத்திருக்கும் ராஜபாளையம் நாய் ஒன்று. அதன் பெயர் மணி. அதனை வீட்டு உரிமையாளரும் உரிமையாளரின் மகன் குடும்பத்தினரும் வளர்த்து வந்தனர்.
இரவில் தான் மணிக்கு விடுதலை, பகல் பொழுதில் அங்கேயே தான் கட்டி கிடக்கும். அங்கிருந்து கொண்டு படியில் தெரியாதோர் யாரேனும் ஏறி வருவதை அது உணர்ந்து விட்டால் தான் கட்டப்பட்டிருக்கும் சங்கிலி பிய்ந்துகொண்டு வருமளவு படியில் ஏறி வருபவரை நோக்கி ஓடி, தன் பற்கள் வெளியே தெரியுமளவு குறைக்கும். அதன் குரலுக்கு ஆரம்பத்தில் அச்சம்கொண்ட பலர், பின் நாட்களிலில் சங்கிலியின் மீது நம்பிக்கைகொண்டு கவலையின்றி படியில் கால் பதித்துகொண்டு இருந்தனர்.
கவலை விலகாமல் அங்கு வாடகைக்கு குடியேறிய தனிநபரான, இருபத்தியோரு வயதான அருணிற்கு அந்த வீட்டில் அன்றோடு ஒருவாரம் முடிய போகிறது. இருந்தும் அவனால் அக்கழிவறையை பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில் மணிக்கு அருண்மீது நம்பிக்கை இல்லாததுபோல் அருணிற்கும் மணிமீது நம்பிக்கை இல்லை.
என்றும் இல்லாமல் அன்று வீட்டு உரிமையாளரின் வீட்டுமணியை அருண் அடித்தான். கதவை திறந்து வந்த எழுபது வயது முதியவர் ஒருவர்,
“என்ன பா?”, என்று வினவினார்.
“பாத் ரூம் போகனும்… மணி… குலச்சுட்டே இருக்கான்”, என்று கூறினான் அருண்.
அன்று அவன் வேலை செய்யும், கட்டிடங்களுக்கு வரைப்படம் தயாரிக்கும் அலுவலகத்திற்கு விடுமுறை. அலுவலகத்திலிருக்கும் கழிவறையை தான் அருண் வீட்டிற்கு வந்த அவ்வார நாட்களில் மலம் கழிக்க உபயோகித்தான். சிறுநீர் கழிக்க குளியலறையே போதுவானதாக இருந்தது.
நான்காயிரம் ரூபாய் வாடகைக்கு விருகம்பாக்கம் மெயின் ரோட்டிலிருந்து நூறு மீட்டர் இடைவேளையில், இரண்டாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டில், அவனுக்கு கிடைத்த வீட்டில் குறைக்கின்ற நாய் இருக்கும் அது சில நாட்களில் பழகிவிடும் என்று உரிமையாளர் கூறியிருந்தார். அவனுக்கு அப்போது வேறிடம் கிடைக்காமல் இருந்ததாலும் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அருகருகே இருப்பதாலும் அவன் சம்மதித்து அங்கேயே தங்கி கொண்டான்.
மணியோடு அவன் இன்னும் பழகவில்லை என்பது அவன் அங்கு
நின்ற நிலையினிலே அவர் உணர்ந்து கொண்டார். அவனை வினாக்களுக்கு உள்ளாக்காமல்
“வா பா”, என்று அருணை முன்னே முதல் தளத்திற்கு போக சொல்லி அவர் பின்னே சென்றார்.
மணி அருண் படியில் ஏறும்போதே குறைக்க ஆரம்பித்துவிட்டது. முதலில் சென்ற அருண் பின் நிற்க, பின் சென்ற வீட்டு உரிமையாளர் முன் சென்று மணியின் கழுத்து சங்கிலியை பிடித்துகொண்டார்.
“போ பா. நான் பிடிச்சுக்குற”, என்று அவர் கூறிய பிறகும் மணி குறைப்பதை குறைக்காமல் கூட்டி கொண்டே சென்றது.
அருணிற்கு உள்ளிருக்கும் அச்சம் வெளி போனதாய் தெரியவில்லை.
“நான்தான் பிடிச்சுருக்குல பா. அது ஒன்னும் பண்ணாது போ”, என்று மணியை தன்பக்கம் இறுக்க பிடித்து வைத்துகொண்டார் உரிமையாளர்.
அருண் சரிங்க என்று தலையசைத்து விரைந்து கழிவறைக்குள் புகுந்து கதவடைத்து கொண்டான். குழாயைத் திறந்து உள்ளிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பிவிட்டு தனது மாலைக்கடனை செலுத்தி முடித்தான். எவ்வாறு அவரை அழைப்பது இப்போது என்று கூச்சம் கொண்டான் அருண். மணியின் குறைக்கும் ஒலி அடங்காமலிருக்க வேறுவழி இல்லாததை உணர்ந்து,
“முடிஞ்சுருச்சுங்க..நான் வெளிய வரலாமா?”, என்று கேட்டான் அருண்.
“வா பா”, என்று அவர் அழைத்தார்.
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் அருண். அவர் உள்ளே செல்லும் போது பிடித்திருந்தது போலவே வெளியே வந்த போதும் மணியை பிடித்திருந்தார். அருண் முகத்தில் ஓர்வித நிம்மதி இருந்தது, அத்தோடு சிறிதளவு அச்சமும். அருண் தன் பகுதி வீட்டின் வாசலை நோக்கி செல்லும் போது,
“நில்லு பா”, என்று உரிமையாளர் கூறினார். அவன் நின்று திரும்பி பார்த்தான். அவர் கையில் பிரிக்கபட்டு மேரி கோல்ட் ரொட்டி பொட்டலம் ஒன்று இருந்தது. அதிலிருந்து இரண்டு மேரி கோல்ட் ரொட்டியை எடுத்து அருணிடம் கொடுத்தார்.
“இத மணிக்கு கொடு பா”, என்று கூறினார்.
அருணும் கொடுக்க முற்பட்டான். மணி குறைத்தது. மணியின் முன் கால்கள் இருக்கும் இடத்தில் ரொட்டியைப் போட்டான். மணி அவனை பார்த்து குறைப்பதை நிறுத்தி விட்டு ரொட்டியை சில விநாடிகள் பார்த்தது. பின் அருணை பார்த்தது. மீண்டும் ரொட்டியைப் பார்த்துவிட்டு அருணை பார்த்து குறைத்தது.
“இந்த பாக்கெட்ட வச்சுக்கோ பா. வேலைக்கு போகிட்டு வரும்போது ஒரு ஒரு பிஸ்கெட் மணிக்கு கொடு. உன்கிட்ட நல்லா பழகிடுவான். பிஸ்கெட் காலி ஆகிடுச்சுன்னா சொல்லு.. தரேன்”, என்று உரிமையாளர் கூறிவிட்டு சென்றார். அருணும் தன் அறைக்குள் சென்றான்.
அவன் உள் தாழ்ப்பாளை போடும் வரை மணி குறைத்துகொண்டே இருந்தது. அறையுள் இருந்த அருண் ஜன்னல் வழியாக மணியை பார்த்தான். அது அவன் போட்ட ரொட்டியை உண்டது.
அன்றிரவு உணவு அருந்திவிட்டு சிறுநீர் கழிக்க குளியலறைக்கு சென்றான் அருண். அவன் வெளிவந்ததிலிருந்து மீண்டும் உள்ளே செல்லும்வரை குறைத்தது மணி. உள் சென்றவன் இரு ரொட்டி துண்டை எடுத்து வந்து மணிக்கு கொடுக்க முயற்சித்தான். அது குறைப்பதை நிறுத்தாமல் இருக்க முன்புபோலவே அதன் காலடியில் ரொட்டியை போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று தாழிட்டான். பின் அவன் ஜன்னல் வழியாக மணி ரொட்டி துண்டை கடித்து உண்பதை கண்டான். அருணின் அறை விலக்கு அணைந்த பிறகு மணியை வீட்டு உரிமையாளரின் மருமகள் அவிழ்த்து விட்டாள்.
மணி இரவு நேரங்களில் குறைப்பது குறைவு அல்லது அது குறைக்கவே மறந்து போகிவிடுகிறது என்று அவனுக்கு வந்த சில நாட்களிலே தோன்றியது.
கீழ் தளத்திற்கும் மேல் தளத்திற்கும் தன்னுடல் சோர்வு அடையும் வரை ஏறி இறங்கும் மணி. சோர்வடைந்த மணி தன் இடத்திலே படுத்துகொள்ளும். மறுநாள் காலை தன் வாசலில் கோலம் போட எழுந்து வரும் உரிமையாளர் மருமகள், மணியை கட்டிவைத்துவிட்டு அவன் செய்த அசுத்தங்களை சுத்தம் செய்துவிட்டு கோலம் போடுவாள்.
அருண் அலுவலகம் செல்ல அவன் வீட்டு கதவை பூட்டிவிட்டு படியிறங்கும் போதுதான் மணி எழும். அவன் கீழிறங்கி வீட்டு வாயிற்கதவை கடக்கும்வரை குறைத்து கொண்டே இருக்கும். அன்றும் அது அவ்வண்ணமே குறைத்தது.
மணி குறைப்பதை நிறுத்த போவதே இல்லை என்று அலுவலகத்தில் கழிவறையில் இருந்தபோது அருணிற்கு தோன்றியது. அவனுக்கு தோன்றியது சரியென நிரூபிக்கும் விதமாக மாலை வேலைமுடிந்து வாயிற்கதவை திறந்து கொண்டு படியேறி வந்த அருணை நோக்கி மணி குறைத்து கொண்டே இருந்தது.
ஞாயிறு வரும் வரை கவலையில்லை. அலுவலகம் போதும் இல்லையேல் அருகே ஒரு கட்டணக்கழிப்பிடம் கூட இருக்கிறது. இரவில் அவசரம் என்றால் மட்டும்தான் கஷ்டம் என்று எண்ணினான் அருண்.
அந்த அவசரம் அவனை அவ்வாரத்தில் புதன் கிழமை வருவதற்குள் வீட்டை மாற்றிவிடலாமா என்று சிந்திக்க வைத்தது. ஆனால் இந்த மாதம் கண்டிப்பாக முடியாது. ஏனெனில் ஒரு மாத வாடகையை வீடுமாறினால் கட்டாயம் முன்பணத்தில் பிடித்து விடுவார்கள். எப்படியாவது மணியைப் பழக்கப்படுத்த வேண்டும். இல்லை தன்னுடலை பழக்க படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான் அருண்.
உடலை இவ்விடயத்திற்கு பழக்க படுத்தினால் உடல்கேடு வருமென்று ஒருவாரத்திலே அறிந்த அருண், மணியை பழக்க படுத்தவதுதான் சரி என்று உணர்ந்தான்.
இரண்டு நாட்களில் இரண்டு ரொட்டி பொட்டலம் அருண் செலவில் மணிக்கு கொடுக்கப்பட்டது. காலை அலுவலகம் செல்லும் போது இரண்டு, மாலை அலுவலகம் முடிந்துவரும் போது இரண்டு, இரவு உணவு உண்பதற்கு முன் மூன்று, அறை விலக்கை அணைத்து கண் மூடுவதற்கு முன் மூன்று என்ற கணக்கில்.
சனிக்கிழமை காலை அருண் வீட்டு கதவைத் தாழிடும் போது மணி கண் விழித்து அருணைப் பார்த்தது. அவன் அதன் அருகே சென்று இரு ரொட்டி துண்டை போட்டுவிட்டு படியிறங்கினான். நேற்று எழுந்து வந்து குறைத்த மணி, இன்று எழுந்து நிதானமாக அமர்ந்து ரொட்டியை உண்டது. அன்று மாலை அருண் வீட்டிற்கு வரும்போது அது குறைக்கவே இல்லை.
அன்றிரவு கழிவறையை யாருடைய உதவியும் இல்லாமல் உபயோகிக்க ஆயத்தம் ஆனான் அருண். நான்கு ரொட்டி துண்டுகளை தனது மேல்சட்டை பையில் வைத்துக் கொண்டு கழிவறையை நோக்கி சென்றான்.
மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படுத்திருந்த மணியைக் கடக்க முற்பட்டான். அது எழுந்து அவன்முன் நின்றது. சட்டைப் பையில் இருந்த ரொட்டி துண்டு ஒன்றை எடுத்து கீழே போடாமல் அதன் வாயிடம் கொண்டு சென்றான். அது ரொட்டியை வாங்கி கீழே போட்டுவிட்டு அவனை பார்த்தது. மற்றொரு ரொட்டி துண்டை அதன் வாயிடம் கொண்டு செல்ல முன்பு செய்தது போலவே செய்தது.
கீழிருந்த ரொட்டியை உண்ண மணி முற்பட்டபோது அருண் மணியை கடந்து கழிவறைக்குள் சென்றான். உள்ளே தன் கடனை செலுத்திவிட்டு வெளிவரும் போது மணி கழிவறை வாசலிலே நின்றது. அதனை கடந்து உள்ளே சென்றபோது ரொட்டி கொடுத்ததுபோல் போகும்போது அதற்கு இரண்டு ரொட்டி துண்டை கொடுத்தான் அருண்.
அன்று முதல் அவ்வீட்டில் அருண் வசித்த அனைத்து நாட்களிலும், அவ்வாறு கழிவறையை உபயோகிப்படுத்த கட்டணமாக ரொட்டி துண்டுகளை கொடுத்து கொண்டிருந்தான்.
1 comment