‘என்னைக் கவனிப்பாயா?’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு இர.எழில்நிலவன்
என்னைக் கவனிப்பாயா?
வழக்கம்போல கல்லூரி வகுப்பு முடிந்து வீட்டிற்குச் சென்றேன்.
பின்னர், இரவு 7மணியளவில் நண்பர்களோட கால் பண்ணி பேசிகிட்டு இருந்தேன். அப்போது ராம், “நம்ம எல்லாரும் ஒரு நாள் லஞ்சுக்கு வெளியே போகலாம்” என்று கூறினான். அதற்கு அனைவரும் மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தனர். “எப்போது செல்லலாம்?” என்று யோசித்தபோது, கதிருக்குப் பிறந்தநாள் வர இரண்டு நாட்கள் இருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது செல்லலாம் என்று முடிவு செய்தோம்.
அந்த நாளும் வந்தது.
அன்று, காலை கல்லூரிக்குச் சென்று வகுப்பில் அமர்ந்தோம். இடைவேளையில் கதிரிடம் இன்று உன் பிறந்தநாள்! அதைக் கொண்டாடும் வகையில் நீ தான் இன்று மதிய உணவு எல்லாருக்கும் வாங்கித் தரவேண்டும் என்று கூற… அவனும் “சரி” என்று கூறினான்.
வகுப்பு முடிந்ததும் அனைவரும் வலதுபுறமாக வெளியே சென்றனர்.
நாங்கள் ஆறு பேர் மட்டும் இடதுபுறமாக கேன்டீனுக்குச் சென்றோம். செல்லும் வழியில் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து கொண்டே சென்றோம். அப்போது சந்தோஷ், கதிரிடம் “உன்கிட்ட பணம் இருக்காடா..? பணம் இல்லனா மாவுதான் ஆட்டணும்” என்று சொன்னான். அதற்கு விக்னேஷ், “இரண்டு நாட்களுக்கு முன்புதான் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று மூவாயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்று வந்தான். அதை வைத்துத்தான் நமக்கு இன்று செலவுசெய்யப் போகிறான்” என்றான்.
கதிர்வேலும் “என்னிடம் பணம் உள்ளது. இதோ பார்!” என்று பணத்தையும் எடுத்துக் காட்டினான். அப்போது ரவி, மூவாயிரம் பரிசு பெற்றாயே, ஐந்நூறு ரூபாய் தான் எடுத்து வந்துள்ளாய்! மீதமுள்ள பணம் எங்கே? என்று கேட்டான்.
அதற்கு “அந்த பணத்தை வீட்டு வாடகைக்காகவும், தம்பியின் படிப்புச் செலவிற்காகவும் கொடுத்துவிட்டேன்டா” என்று சொன்னான்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு சென்றோம். அப்போது கதிரை ஒருதலையாகக் காதலிக்கும் அவன் வகுப்பைச் சேர்ந்த கயல் என்னும் பெண் எதிர்ப்புறமாக நடந்து வருகிறாள். அவளைப் பார்த்தும் பார்க்காததுபோல் தலையைத் தாழ்த்திச் செல்கிறான் கதிர். அருகில் அவனைப் பற்றி நன்கு அறிந்த நண்பன் பாரத், அவனிடம் “டேய் கதிரு! நம்ம கிளாஸ் கயல் எதிரில் வருகிறாள். அவளையும் கேன்டீனுக்கு கூப்பிடுடா!” என்றான்.
அதற்கு கதிர் “நானும் அவளைப் பார்த்தேன்டா. ஆனால் அவள் வேண்டாம்! நாம் மட்டும் செல்லலாம்டா” என்று கூறிச் செல்கிறான்.
“ஏன்டா அவள் வந்தாள் என்ன…? அவளும் நம்ம ஃபிரண்டு தானே, நாம பார்த்தும் பார்க்காமல் போனால் அவள் ஏதாவது நினைத்துக்கொள்வாள்டா!” என்றான்.
“இல்லடா நம்ம ஃபிரண்டு நந்தினி என்னிடம், கயல் என்னை லவ் பண்ணுவதாகக் கூறினாள். ஆனால் அதை நான் நம்பவில்லை. சில நாட்கள் கழித்து அவள் என்னிடம் பேசுவது, பழகுவது எல்லாம் அப்படியே இருந்தது. வகுப்புல நம்ம கிளாஸ் சார் பாடம் நடத்துறப்போ கயல் என்னை ஓரக்கண்ணால பார்ப்பாடா! நானும் அவளை பார்ப்பேன்டா! அதை நம்ம கிளாஸ் சாரும் இரண்டு, மூன்று முறை பார்த்து எங்களைத் தனித்தனியா கூப்பிட்டு, இப்போதைக்கி படிக்கிற வேலைய மட்டும் கவனமா பாருங்கப்பானு அட்வைஸ் பண்ணுனாரு… அதனால கயல் நம்மகூட வந்தா எனக்குத்தான்டா பிரச்சனை வரும்! அவ வேண்டாம். நம்ம மட்டும் போகலாம்டா” என்று சொன்னான்.
இதெல்லாம் எப்படா நடந்துச்சு? என்கிட்ட சொல்லவே இல்ல…” என்று பாரத் கேட்கிறான்.
“இப்போதான்டா 2 வாரங்களுக்கு முன்னாடி தான் நடந்தது.”
“ஏன்டா எங்ககிட்ட சொல்லல?” என்றான்.
அதற்கு “சொல்லலாம்னு தான் பார்த்தேன். ஆனால் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சா கிண்டல் பன்னுவான்னுங்கனுதான் சொல்லல” என்றான்.
“சரி! வாடா பாத்துக்கலாம்” என்று கூறி அனைவரும் கேன்டீன் சென்றனர்.
அப்போது, கயல் அவனை நெருங்கி வர, அவனுக்கு நெஞ்சம் படபடப்பாகவும், முகத்தில் வேர்வை சொட்டவும் செய்தது. தனது பேண்ட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான் கதிர்.
அவனிடம் கயல் நெருங்கி வர… இவன் அவளை விட்டு விலகிச் செல்கிறான். அவளும் அவனைத் தொடர்ந்து பின்செல்கிறாள்.
நாங்கள் அனைவரும் கேன்டீனை நெருங்கி உள்ளே சென்றோம். உள்ளே சென்று ஒரு பெரிய மேசையில் அமர்ந்தோம். நாங்கள் அனைவரும் எங்களுக்குள்ளே பேசிச் சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது சப்ளையர் வந்து, “என்ன சாப்பிடுறீங்கப்பா? என்று கேட்டார்.
அதற்கு பாரத், “மெனு கார்டு கொடுங்கள். சொல்லுகிறோம்” என்றான்.
அவரும் எடுத்து வந்து எங்களிடம் கொடுத்தார். நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டு அவரிடம் ஆர்டர் சொல்ல… அவரும் அதனை எடுத்து வந்தார்.
வந்ததும் அதை உண்ணாமல் ஒன்றாகச் சேர்த்து வைத்து முதலில் செல்ஃபி எடுத்துக் கொண்டோம். அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டோம். அதனைப் பார்த்த மற்ற வகுப்பு நண்பர்கள் எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு திட்டினார்கள். “டேய் படவா!, ஏன்டா என்னை கூப்புடல?” என்று கேட்டனர்.
அதற்கு நாங்கள் “கூப்பிடலாம்னு தான் பார்த்தோம். ஆனால் அதற்குள் நீ கல்லூரியை விட்டு வெளியே சென்றுவிட்டாய்” என்று சமாளிப்புடன் கூறினோம்.
பின்னர் அனைவரும் உணவு உண்ணத் தொடங்கினோம். ஒருவருக்கொருவர் உணவினை ஊட்டிவிட்டு மகிழ்ந்தோம். அனைவரும் கதிர்வேலுக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை கூறினோம். அவனும் நன்றி கூறி மகிழ்ந்தான்.
அப்போது கயல், கதிரின் அருகில் வந்தாள். அவளைப் பார்த்த கதிர் ஒருவித படபடப்புடன் திகழ்ந்தான். சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கதிர் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் சிறிதுதூரம் காலை நகர்த்திச் சென்றான். அப்போது விக்னேஷ், ரவியிடம் இவன் போகிறானே காசு யார்டா கொடுப்பா? நம்ம யாரிடமும் பணம் இல்லையே! நம்ம வேற இவன நம்பி வந்துட்டோமே! இப்ப என்னடா பன்னுறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தான். சட்டென்று கயல், கதிரின் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவன் முகத்தைத் தன் கையால் திருப்பி அவனைப் பார்த்தாள். அவனுக்கு மேலும் ஒருவித படபடப்பாக இருந்தது. அவனது கையைப் பிடித்துக் குலுக்கி அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை அவள் கூறினாள். அவனும் “தேங்க்ஸ்” என்று கூறி அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான். அவள் கதிரைக் கூப்பிட்டு “ஏன் என்னிடம் பேச மாட்டாயா?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கயல்” என்று சொல்லி அவளையும், “வா சாப்பிடலாம்!” என்று கூப்பிட்டான்.
அவனுடனே அவளும் அமர்ந்து அனைவரும் மகிழ்வுடன் உணவு உண்டனர். அப்போது கதிரிடம், “கடந்த ஆண்டு என் பிறந்தநாளின் போது ஒரு சம்பவம் நடந்ததே! அது உனக்கு ஞாபகம் உள்ளதா?” என்றாள்.
அதற்கு அவனும் “ஞாபகம் உள்ளது. அன்று நாம் இதேபோல் சாப்பிட வந்தோம். அப்போகூட உன்னோட பர்ஸைத் தொலைத்து விட்டாயே! அதுதானே…? என்றான்.
அவளும் “ஆமாம் ஆமாம்… அதேதான் என்று பேசிச் சிரித்துக்கொண்டே கைகளைக் கழுவச் சென்றனர். கைகளைக் கழுவிவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தனர்.
சப்ளையர் பில்லைக் கொண்டு வந்தார். கதிர் பில்லைப் பார்த்தான், பார்த்துவிட்டு பணத்தை எடுப்பதற்கு பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டான். உள்ளே பணம் இல்லை என்று அறிந்து திடுக்கிட்டான். பதறிப் போனான்.
மறுபக்கம் உள்ள பாக்கெட்டில் பார்க்கிறான் அங்கேயும் பணம் இல்லை. பணத்தைக் காணவில்லை என்று நண்பர்களிடம் கூறுகிறான்.
அதற்கு அவர்கள் “டேய்! விளையாடாதடா’ சீக்கிரம் பில்லைக் கட்டிட்டு வாடா போலாம்! நேரம் ஆகுது! என்று சொல்கிறார்கள்.
“உண்மையாவே பணத்தைக் காணோம்டா” என்று சொல்கிறான்.
நண்பர்களும் “டேய்! எங்கடா போட்ட? கொஞ்சம் யோசிச்சுப் பாரு!” என்றனர்.
ஆனால் கதிரால் சிறிதும் யோசிக்க முடியவில்லை. மீண்டும் யோசிக்கிறான் ஆனால், அப்போதெல்லாம் அவன் நினைவுக்கு வருவது எல்லாம் கயலின் முகம் மட்டுமே! மீண்டும் யோசிக்கிறான். அப்போது நினைவிற்கு வருகிறது. “அந்தப் பணம் ஒருவேளை கைக்குட்டையை எடுத்தபோது கீழே விழுந்திருக்கலாமோ…? என்று நண்பர்களிடம் கூறுகிறான்.
அருகே விக்னேஷ், சந்தோஷ் சொன்னதுபோல இன்னைக்கி மாவு தான்டா ஆட்டப் போறோம்…? என்று புலம்பிக் கொண்டிருந்தான். இவர்கள் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கயல் பார்த்துக் கொண்டிருந்தாள். கதிரைக் கூப்பிட்டாள்.
“என்னாச்சு கதிரு? ஏன் தனித்தனியாப் பேசிக் கொண்டுள்ளீர்கள்? என்று கேட்டாள்.
அதற்கு, “ஒன்றுமில்லை” என்று கூறினான் கதிர்.
மீண்டும் அவள், “என்னவென்று சொல்லு…” எனக் கேட்டாள்.
அதற்கு அவன், “பணத்தைக் காணவில்லை” என்று கூறுகிறான்.
அதற்கு இதுக்குத்தானா இவ்வளவு கலக்கம்! சரி…. உன் பிறந்தநாள் அன்னைக்கி நீ கவலைப்படாதே! கவனமா இருந்திருக்கணும். பணத்தை நான் தருகிறேன். பில் எவ்வளவு…? என்று கேட்டு பணத்தை அவனிடம் நீட்டினாள்.
ஆனால் அவன் சற்றுத் தயங்கினான்.
அதற்கு அவள், “என்னிடம் உனக்கு என்ன தயக்கம்…?” என்று கூறிப் பணத்தை அவன் கையில் திணித்தாள். அவன் சிறிய தயக்கத்துடன் பணத்தை வாங்கிக்கொண்டு பில்லைக் கட்டிவிட்டு அவளை நோக்கி வந்து நன்றி கூறினான்.
அவள் “அதெல்லாம் விடு. நமக்குள்ள என்ன இதெல்லாம்..!” என்றாள். தொடர்ந்து, “சரி! கொஞ்சநேரம் என்னுடன் வா” என்று தனியாக அழைத்தாள்.
கதிர் சற்றுக் குழப்பத்தோடு… “எங்கே, எதற்கு என்று கேட்டான்.
“நீ வா… சொல்றேன்” என்று அழைத்துச் சென்றாள் அவள்.
அவனும் “சரி… வரேன்!” என்று அவளைப் பின்தொடர்ந்து சென்றான். ஒரு ஓரத்தில் நின்றனர்.
“சரி இப்ப சொல்லு…” என்றான் கதிர்.
அதற்கு அவள், “சொல்வதற்கு ஒன்றுமில்லை. உன் கண்களை மூடு!” என்றாள்.
அவனும் கண்களை மூடினான் அதே தயக்கத்துடன். அவள் பையிலிருந்து அவனுக்குப் பிடித்த நீல நிறத் தாளால் சுற்றப்பட்ட கிஃப்டை எடுத்து, கண்ணைத் திறக்கச்சொல்லி அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்து அவன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் “நன்றி” என்று மட்டும் கூறினான்.
கயல், கதிரை நோக்கி தயக்கத்தோடு “நாம் அன்றைக்கு ஒருநாள் சென்ற தேநீர்க் கடைக்கு இன்று செல்லலாமா?” என்றாள்.
“சரி! போகலாம். ஒரு நிமிடம் இரு… நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி விட்டு வருகிறேன்!” என்று கூறிச் சென்றான்.
கதிர், நண்பர்களிடம், நீங்க வீட்டிற்கு போங்கடா! நான் கயலோடு வெளியே செல்கிறேன்!” என்று கூறினான். அதற்கு அவர்களும் சரி என்று கூறிவிட்டுச் சென்றனர்.
கதிர், கயலை அழைத்துக்கொண்டு… இருவரும் மௌனமாக தேநீர்க்கடையை நோக்கி நடந்து சென்றனர். பின்னர் தேநீர் கடையினுள் சென்று அமர்ந்து தேநீர் அருந்தினர்.
அப்போது கயல், கதிரைப் பார்த்து “உனக்கு நான் கொடுத்த கிஃப்டில் என்ன இருக்குன்னு உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள்.
அதற்கு கதிர், “அதில் என்ன இருக்கு என்று எனக்குத் தெரியாது. அதை நான் வீட்டுக்குச் சென்று பார்க்கிறேன்” என்றான்.
அதற்கு கயல், “வேண்டாம்! இப்போதே பிரித்துப் பார்!” என்றாள்.
“சரி” என்று கூறி அந்த கிஃப்டைப் பிரித்துப் பார்க்கிறான். அதில் ஊதா நிறப் பேனாவும், ஊதாநிற அட்டையுடன் கூடிய ஒரு டைரியும் இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, “எனக்குப் பிடித்த கலர். நன்றி!” கூறினான்.
“நான் ஏன் இந்தப் பரிசை உனக்குக் கொடுத்தேன் என்று தெரியுமா?” என்றாள் கயல்.
“தெரியவில்லை!” என்றான்.
இதில் தினந்மோறும் உன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை விரிவாக ஒவ்வொரு பக்கத்தில் எழுதி வை. ஒரு வருடம் முழுதும் எழுது. டைரியின் எல்லாப் பக்கங்களும் எழுதி முடித்தபின், என்றாவது ஒருநாள் இயல்பான மனநிலையுடன், தனிமையில் இதமான சூழலில் அவற்றை ஒவ்வொரு பக்கமாகப் படித்துப் பார்! அதில் என்னைப் பற்றிய நிகழ்வுகளே உனது டைரியில் அதிகம் இடம்பெறும் என்று நான் நினைக்கிறேன். உன் அடுத்த ஆண்டு பிறந்தநாளின் போது என்னிடம் இந்த டைரியை நீ கொடுக்க வேண்டும். உனது மனதைத்தான் என்னால் ஆக்கிரமிக்க முடியவில்லை. நீ எழுதும் டைரியின் பக்கங்களையாவது என்னால் ஆக்கிரமிக்க முடிந்ததே எனும் மனநிறைவை நான் அப்போது பெறுவேன்” என்றாள் கலங்கிய விழிகளுடன்.
பின் இருவரும் மௌனத்துடன் விடைபெற்றுக்கொண்டு, அந்த இருவழிச்சாலையில் ஒரு வழியில் அவனும் மற்றொரு வழியில் அவளும் ஒருவரையொருவர் விழிகளால் நோக்கிக்கொண்டு தனித்தனியே சென்றனர்.
இந்த இருவழிப்பாதை ஒருவழியாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை! என்னும் ஒருதலை நம்பிக்கையுடன் நடந்து சென்றாள் கயல்!
40 comments