இஸ்திரி வண்டி அப்பா – போட்டி கதை எண் – 43

0
(0)

‘இஸ்திரி வண்டி அப்பா’ என்ற சிறுகதையை எழுதியவர் Dr.P.R லட்சுமி

                                       இஸ்திரி வண்டி அப்பா

நீ நீலக்கட்சிக்காரன்னு எனக்குத் தெரியும். உன் பிள்ளைக்கு இந்தப் பள்ளியில் இடம் இல்லை.

ஐயா! நான் எந்தக் கட்சியைச் சார்ந்தவனும் கிடையாது. அந்த நீலக்கட்சிக்காரர் தலைவர் வீட்டில் இளநீர் வெட்ட ஆளில்லை! வெட்டித் தந்தால் ஆளுக்கு ஐநூறு தர்றேன்னு சொன்னாங்க! அதான் போனோம்…

நாளைக்கு இங்க பள்ளியில் வந்து கயிறைக் கட்டிக்கிட்டு கொடி பிடிப்பீங்க!

ஐயா! நான் இஸ்திரி வண்டியால் பிழைக்கிற ஆளுங்க! என் பிள்ளை படிச்சுத்தான் என் குடும்பம் கரையேறணும்!

உன் முதல் பையன் படிச்சுட்டு வெளிநாட்டுல வேலை செய்யறான். அவன்கிட்ட கேட்டு வாங்கவேண்டியதுதானே!

ஐயா! அந்தப் பிள்ளைக்கு மூணுவேளைகூட என்னால் சத்தாக சாப்பாடு பொங்கிப் போடலை!

காலேஜூ போய்ட்டு துணி அயர்ன் பண்ணி வச்சதை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு ஊரா போய்க் கொடுத்திட்டு வந்திருக்கான். நியாயமா ஒரு கூலிக்குக் கொடுக்கிற அளவு அவனுக்கு ஒரு இடம் வாங்கி வச்சிருக்கேன்.

அவன் அதெல்லாம் வேணாம்னுட்டு சொந்தமா கார் வாங்கி உட்காருங்கன்னு என்னைச் சொல்றான்.

இந்த பையனையும் படிச்சு ஆளாக்கினால்தானேங்க உட்கார முடியும். இரண்டு பிள்ளைகளுக்கும் ஐந்து வயது வித்தியாசம்.

பிள்ளைங்ககிட்ட வேறுபாடு பார்க்க முடியுமா?

நீங்க பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு சொல்லிட்டீங்கன்னா நான் என்ன

பண்றது சாமி! என பிரின்சிபால் அறையிலேயே உட்கார்ந்து அழத் தொடங்கினார் குப்புசாமி.

சரி! சரி! உன் பையன் எடுத்த மதிப்பெண் அதிகம்தான். அவன் கேட்ட கணினித்துறையே தருகிறேன். சாதிக்குக் கொடி பிடிக்கமாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டு வரணும்!

பிரின்சிபால் கேட்டவாறு ஒரு தாளில் எழுதி கையெழுத்திட்டு மகன் முத்துக்குமாரசாமியையும் கையெழுத்திடக் கேட்டார்.

எலே முத்து! பிரின்சிபால் சாதி விவகாரத்தில் தலையிடமாட்டோம்னு எழுதி கையெழுத்து கேட்டாங்க! நானும் போட்டுட்டேன். நீயும் போடுடா!

அப்பா! என் முப்பாட்டன் காலத்திலிருந்து அடிமை வேலைதான் செஞ்சிக்கிட்டு வர்றோம்.

எங்கே போனாலும் சாதி பேரைச் சொல்லி ஒண்ணாங்கிளாசிலிருந்து கடைசி பெஞ்சில் உட்கார வைக்கிறாங்க!

அதையும் மீறி பத்தாம் வகுப்பு 95 சதவிகிதம் எடுத்திருக்கேன். நம்ம எதிர்வீட்டு பெரியப்பா பொண்ணு இருக்கில்லை! அவ இதே பள்ளியில் தாம்பா 12 படிச்சா!

உசந்த சாதி பையன் நாசம் பண்ணிட்டாம்பா! ஆனால் அவங்க அப்பா சாமர்த்தியமா அந்த பொண்ணை திசை திருப்பி விபசாரம் செய்தாள்னு எழுதி வாங்கிட்டாருப்பா! அவங்க அம்மா அந்த பிள்ளைக்கு விஷம் கொடுத்துட்டாங்கப்பா! அவனால வந்த குழந்தை இப்ப அனாதை விடுதியில் இருக்குப்பா!

கிராமத்தில் நீ இதெல்லாம் பேச முடியாது. இந்த பள்ளி நடத்துபவரே பக்கா கிரிமினல்தான். வகுப்புல வந்து நிற்பானாம்! யார் கையைக் காட்டுகிறாரோ அந்த பெண் போகணுமாம். பெண் ஜென்மத் தலையெழுத்து இது! அரசியல் செல்வாக்கு பெற்ற இவங்களை ஒண்ணும் செய்ய முடியாது. துணிஞ்சு போலிசுல புகார் கொடுங்கன்னுதான் சொல்றாங்க! ஆனால் குடும்பத்தைப் பிழைக்க விடாமல் செஞ்சிருவாங்க தம்பி!

கையெழுத்தைப் போடு முத்து!

உனக்குப் பிடிக்காட்டி நீயும் அண்ணனைமாதிரி வெளிநாட்டிற்குப் போய் படிப்பைத் தொடர்ந்து படி! ஆனால் ஒண்ணு புரிஞ்சுக்கோ! எல்லா நாட்டிலும் தடைகள் இருக்கத்தான் செய்யும். அதையும்தாண்டித்தான் வெளியே வரணும். இந்த சாதி, பெண் விவகாரம் இதிலெல்லாம் மாட்டாமல் நீ தப்பித்தால் போதும்.

அப்ப அநியாயத்திற்குத் துணை போகச் சொல்றீங்களா அப்பா!

பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா! அப்படின்னு பாரதி பாடியது பொய்யா அப்பா?

அதே பாரதி இன்னைக்கு இருந்திருந்தால் இந்தியாவே மாறியிருக்கும்.

நம்ம அப்துல்கலாமாலேயே ஒண்ணும் செய்ய முடியலை! காந்தியை கோட்சே சுட்டுக் கொன்னுட்டானே! அதுவும் மதப்பிரச்னைதான்…

அதனால் சாதி,மதம் இது தொடர்பான இடங்களில் எல்லாம் நீ தலையிடாதே!

சாரிப்பா! இந்த பள்ளி எனக்கு வேண்டாம். சாதி,மதம் எதிலும் தலையிடக்கூடாதுன்னு நான் வேணும்னா உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எழுதித் தர்றேன். எனக்கு அரசுப் பள்ளியே போதும்!

அன்னைக்கு காமராசர், நேரு, காந்தி, வல்லபாய், அம்பேத்கர் என்ன சாதி,மதம்னு பார்த்து நாங்க படிக்கலைப்பா!

பெண்ணைத் தாயாகத்தான் பார்க்கணும்னு சொல்லிட்டு பிரின்சிபாலே இப்படி அராஜகம் பண்ணா எப்படிப்பா? அந்தக் குழந்தை ஏன்பா அனாதை ஆசிரமம் போகணும்?

ஏண்டா எழுதித் தந்துட்டு மேலே கலெக்டர் படிக்கிற வழியைப்பார்! அது யார் பிள்ளையாய் இருந்தால் உனக்கென்னடா?

அப்பா! எதிர்த்துப் பேசுகிறேன்னு நினைக்காதீங்க! என்கூட வண்ணான் பையனும் படிக்கிறான். அந்தப் பெண்ணுடைய துணியை அவன்தான் வெளுத்துக் கொடுப்பான். அந்த பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

மகனே! உன்னைவிட அதிகமாக எனக்குத் தெரியும்டா…எனக் கண் கலங்கினார்.

உள்ளே இருந்து முத்துவின் அம்மா வேகமாக ஓடி வந்தார்.

சொல்லிடாதீங்க! என் பிள்ளைகிட்டே எதையும் சொல்லிடாதீங்க என அழ ஆரம்பித்த அம்மாவை முத்து அதிசயமாகப் பார்த்தான்.

எலேய்! நீ அந்த பிரின்சிபால் மாதிரி இருக்கடா! என சக மாணவர்கள் பேசக் கேட்டிருக்கிறான். ஆனால் உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என ஆசிரியர் கூறியதால் சிரித்துக் கொள்வான்.

ஆனால் இன்று அவன் அம்மா அழ ஆரம்பித்தவுடன் அவனுக்குள் சந்தேகப் பொறி தட்டியது.

அப்பா என்று மெல்லிய குரலில் கூப்பிட்டான்.

என்ன முத்து? அப்பா சொன்னபடி கையெழுத்து போடறியா?

நான் சொன்னபடி அரசு பள்ள்யில் படிக்கறேம்பா! நீங்க சொன்ன காரணம் புரியுது! எதிர்வீட்டுப் பெண்ணுக்கு அவங்க அம்மா விஷம் கொடுத்தது தப்புதான்! எவனோ செஞ்ச தப்புகளுக்காக பெண்கள் சாகணும்னு விதி இல்லை….இல்லையாம்மா!

அம்மா மௌனமாக தலைகுனிந்தபடி அப்பாவைப் பார்த்தாள்.

தனியாக ஒரு தாளில் அப்பாவிற்காக என தலைப்பிட்டு நான் சாதி,மதம் விஷயங்களில் தலையிடமாட்டேன் என எழுதி கையெழுத்திட்டான்.

நீ அரசு பள்ளியில் படிக்கப் போகிறதா சொல்றியேப்பா! நீயும் எங்களை விட்டுட்டு போய்டுவியாப்பா! இல்லைம்மா! நான் படிச்சு வக்கீலாகப் போகிறேன். நல்ல சட்டங்களைக் கொண்டு வரப்போறேன்மா!

சாதி,மதம் இல்லாத சமுதாயத்தை உன் காலத்திலேயாவது பார்க்கிறோம்பா! இப்ப வா! என்றபடி குப்புசாமி இஸ்திரி வண்டியைத் தள்ளத் தொடங்கினார்.

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!