இருதயநாதன் என்றொரு தற்காலிக தலைமையாசிரியர்-போட்டி கதை எண் – 40

5
(1)

‘இருதயநாதன் என்றொரு தற்காலிக தலைமையாசிரியர்’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு கயப்பாக்கம்.இரா.இரமேஷ்.

இருதயநாதன் என்றொரு தற்காலிக தலைமையாசிரியர்

பகல் 12-மணி இருக்கும். உச்சிவெயில். நீண்ட நடை பயணம். தாகம் எடுத்தது.தண்ணி குடிக்கனும்போல இருந்தது.  அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. நடக்கும் பாதையில் மனித நடமாட்டமும் இல்லை. முகத்தில் வியர்வைத் துளிகள்.உடல் முழுவதும் கசகசப்பு.என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெரிய பண்ணை. அந்த மண்ணையின் முகப்பில்”ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் பள்ளி” என்று பெரிய பதாகை மாட்டியிருந்தது.பண்ணையின் முகத்துவாரத்தில் பெரிய இரும்பு கேட். அங்கிருந்து ஒரு வாட்ச்மேன் வெளியே வந்தார்.அவரிடம் நான் கொண்டுவந்த கடிதத்தை காட்டினேன். பெற்றுக்கொண்டவர் ஒரு மைல் தூரத்திற்கு நடக்கச் சொன்னார்.

சரியான இடத்தை அடைந்த மகிழ்ச்சி. உடல் சோர்வோடு மனச்சோர்வும் குறைந்தது..நடந்து செல்லும் இருபக்கங்களிலும், குளிர்ச்சியான மாமரங்கள். பூ பூத்து,காய் காய்த்திருந்தது.முன்னோக்கி நடக்க நடக்க,வெள்ளை நிறத்தில் பெரிய கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது.மகிழ்ச்சியில் நடையின் வேகத்தை கூட்டினேன்.

பள்ளியின் வாசற்படியை அடைந்ததும், மதிய உணவு சாப்பிட மாணவர்கள் வகுப்பறையிலிருந்து வெளியே வந்தனர். சலசலப்பு, கூச்சல், வரிசையில்லை, அசதியான எனக்கு அவர்களின் சத்தம் எரிச்சலாகத்தான் இருந்தது. உள்ளே நுழைந்து பார்வையாளர் இருக்கையில் உட்கார்ந்தேன். இரண்டு ஆசிரியர்கள் மாணவர்கள் வரிசையாக செல்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்கள். என்னதான் நாம் மேற்பார்வையிட்டாலும், மாணவர்கள் மாணவர்கள் தான். எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டால், எப்படிப்பட்ட விதியையும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்… இதுதான் குழந்தைகளின் இயல்பு.

தலைமை ஆசிரியரின் அறைக்கு முன்னால், கையில் ஒரு ஃப்பைலோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். சரியாக ஒன்னு முப்பது மணிக்கு, சிகப்பாய், உயரமாய், ஒல்லியாய், ஒருத்தர் வேகமாக நடந்து உள்ளே நுழைந்தார். ”வாங்க நீங்கதான் நீலனா.? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணாங்க.” என்று பேசிக்கொண்டே தலைமை ஆசிரியரின் அறையை திறந்து, உள்ளே சென்றார். ” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, சார் வந்திடுவாரு.” என்னை வெளியே உட்கார வைத்தார். என்னிடம் இருந்த அந்த கடிதத்தை வாங்கி படித்து பார்த்துவிட்டு என்னைப் பற்றிய தகவல்களை கேட்டு பெற தொடங்கினார். கொஞ்சம் நேரம் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் பேசிய பேச்சில் இருந்து அவருடைய பங்களிப்பு இந்த பள்ளியில் எவ்வளவு இருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாக புரிந்துகொண்டேன்.

குழந்தைகளின் சத்தம் மீண்டும் கேட்டது. அதே இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களை அதட்டி “டேய் வரிசையா நடந்து வா. சத்தம் போடாத, பின்னாடி கைய்ய கட்டு.ரெஸ்ட்ரூம் போயிட்டு, நேரா வகுப்புக்கு போயிடு” என்று சொன்னவரின் குரலில் ஒரு கம்பீரம் இருந்தது.

கருப்பாய்,குள்ளமாய்,வழுக்கைத்தலை,முகத்தில் ஒரு இறுக்கத்தோடு. தோலில் துணிப்பையை மாட்டிக்கொண்டு, படியேரி உள்ளே வந்தவரை பார்த்தவுடன் “வணக்கம் சார்” என்றேன்.

சின்ன சிரிப்போடு என்னைப் பார்த்து தலையசைத்து, தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவர்“வாங்க சார் உட்காருங்க.” என்று சொல்லிவிட்டு,“ நீங்க ஏன் அங்கிருந்து சொல்லாம வந்திட்டிங்க ”? என்றவரின் முதல் கேள்வியே என்னை நிலைகுலைய வைத்தது.

இவரும். பழைய பள்ளி முதல்வரும் நண்பர்கள் என்று உணர்ந்துகொண்டேன்.

கொஞ்சம் அமைதியாக…

”ரெண்டு பசங்க சார், குறைந்த சம்பளம்,எனக்கு பணம்தான் சார் முக்கியம்.நான் முறைப்படி சொல்லிட்டுதான் சார் வந்தேன் ” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய சான்றிதழ்களை அவரிடம் நீட்டினேன்.சரிபார்த்துவிட்டு,”…சார் கூட்டிகிட்டுபோய்  மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்க”என்று அருகில் இருந்த ஆசிரியரியர் ராமுவிடம் கட்டளையிட்டார்.

அவர் எழுந்து நடக்க,நான் அவரை பின்தொடர்ந்தேன். என்னிடம் பேசிக்கொண்டே” சார், இவரோட பேரு இருதயநாதன்.இவரு தற்காலிக தலைமை ஆசிரியர்தான். இவரு ரிட்டையர்டு ஐ.எம்..எஸ் ஆஃபிஸ்ர். புதுசா ஒருத்தர் வரும் வரை தலைமை ஆசிரியரா இருப்பார்.இங்க வரவங்க யாரும் நிலைச்சு நிக்கமாட்டிங்கிறாங்க.அதான் இவர போட்டிருக்காங்க. இவரும், இந்த பள்ளியோட டைரக்ட்டரும் நல்ல ஃபிரண்டு. உங்களுக்கு இந்த ஸ்க்கூல பத்தி எப்படி தெரியும்? யார் சொன்னது?.” என்று விளக்கமும் கொடுத்து ,கேள்வியும் கேட்டுக்கொண்டே வேகமாக நடந்தார்.” என் பேரு,ராமன்….நான் இங்க பத்து வருடமா வேல பாக்குறேன்,” சுய அறிமுகத்தோடு சுறுசுறுப்பாக நடந்தார்.

சட்டென நின்று, என்னை திரும்பி பார்த்து. “சார் கொஞ்சம் கவனமா இருக்கனும். இங்க உள்ள பசங்க மோசம்” என்று சொன்னவுடன் அவரைப்பற்றி முழுவதும் புரிந்துகொண்டேன்.இவரிடம்தான் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று.

சேர்ந்த ஒரு வாரத்தில் பள்ளியைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், பணிபுரியும் ஆசிரியர்களை பற்றியும் புரிந்து கொண்டேன். அடுத்த கணம் இந்த சூழலில் நம்மை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது என்ற எண்ணம் மட்டுமே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இங்கு எல்லாமே அரசியல். சுயநலவாதிகள். சந்தர்ப்பவாதிகள். இடத்திற்கு தகுந்தார் போல் பேசும் சுபாவம் உள்ளவர்கள். நடிக்கக் கூடியவர்கள்.புதியதாய் வந்திருக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியரைத் தவிர. இதைவிட விளக்கமாக இங்குள்ள சூழ்நிலை பற்றி சொல்ல முடியாது.

நாட்கள் கடந்தது. வகுப்பறைக்குள் மாணவர்களுடன் கலந்துரையாடவும். சக ஆசிரியர்களுடன் பேசி பழகவும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது.

ஒரு தலைமை ஆசிரியராய் ஒவ்வொரு வகுப்பிலும் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்தார். பத்து நாட்கள் நகர்ந்தன.

வியாழக்கிழமை அன்று.

கார் வந்தது.காரில் இருப்பவர்களை பார்த்ததும்,நேற்று இருந்த சூழல் இன்று இல்லை.

எல்லோரும் நடித்தார்கள். குழந்தைகளும் சேர்ந்து நடித்தார்கள். இன்றய சூழல் ஒட்டுமொத்தமாய் மாறி இறுந்தது.. ஆம் ஒவ்வொறு வியாழக்கிழமையும் அந்த பள்ளியை நிறுவகிக்கும் தலைமைப் பொறுப்பு அதிகாரி வந்து செல்லும் நாள்.

காரிலிருந்து இறங்கி வந்தவர்கள் நேரடியாக தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று தலைமையாசிரியரிடம் அந்த வாரத்தில் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்தனர். எப்பொழுதுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் உழைப்பவர்களின் நேரத்தை பற்றி அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. நான்கு இருபதுக்கு முடிய வேண்டிய பள்ளியின் வேளை நேரம். அன்று ஆறு மணிக்கு முடிந்தது. அன்றைய ஆலோசனை கூட்டம் குறை சொல்லும் கூட்டமாகவே முடிந்தது.

புதியதாய் வேலைக்கு சேர்ந்த தலைமை ஆசிரியர் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

ராமன்தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

நிர்வாகத்தில் சாதகமாக இங்கு நடப்பதை சொல்பவர்கள் எப்பொழுதுமே இருப்பார்கள். அவர்ககள் இங்கு நடக்கும் அத்தனை தகவல்களையும் திரட்டி தலைமைக்கு சொல்லிவிடுவார்கள்.  வாரத்தில் ஒருநாள் கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு, கேள்வி கேட்டு துளைத்து எடுத்து விடுவார்கள். அந்த ஒரு நாள் மட்டும், இங்கு பணிபுரியும் அத்தனை பேருக்கும் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். அன்றும் அது போல் தான் பெரிய தலைவலியாக இருந்தது. எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், நான் அந்த இடத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்ந்தவன்.

ராமன் ஒற்றனா? ஆசிரியரா? தலைமை ஆசிரியரா? என்ற கேள்விக்கு எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

மறுநாள் வழக்கமான சூழல். நேற்று போல் இன்று இல்லை.கட்டுப்பாடு, விதிமுறை கற்றில் பறந்தது. ஒவ்வொறுவரும் வியாழக்கிழமை தவிர்த்து எல்லா நாட்களிலும் முழு சுதந்திரம் படைத்தவர்கள்.

குழந்தைகளும், நடிப்பவர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டு, இங்குள்ள சூழலுக்கு தகுந்தாற்போல் வாழப் பழகிக் கொண்டனர்.இந்த குழந்தைகளைப் பற்றி நாம் நிறைய பேசவேண்டும்.இங்குள்ள குழந்தைகள் சாதாரண குழந்தைகள் இல்லை. சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவர்கள்.

ஒவ்வொரு குழந்தையை பற்றியும் சொல்ல வேண்டுமானால் பெரிய தொடர்கதை எழுதிவிடலாம். அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் இன்னும் அப்படியே என் மனதில் பதிந்து கிடக்கிறது. பத்து நாட்களுக்குள் ஒவ்வொறுவருடைய குடும்ப சூழல் பற்றி விசாரித்தபோது, ஒவ்வொருவரின் வாழ்விலும் ”வறுமை, அறியாமை, ஏழ்மை, தாய் தந்தை உறவுவில் இலக்கணம் மீறிய வாழ்வியல் முறை” இவைதான் அந்த குழந்தைகள் இங்கு வந்து தங்கிபடிக்க காரணங்களாகும்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராக இருக்க வேண்டுமானால், நிச்சயமாக அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவனாக இருக்க வேண்டும், மாறுபட்டு இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இந்த குழந்தைகள் நலனுக்காகவே பணியாற்ற முடிவு செய்தேன்.

வேலைக்கு சேர்ந்து பத்து நாட்கள் கடந்தது.ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கதைகளோடு வீட்டுக்குச் செல்வேன்.அந்த கதையோடும்  கதாப்பாத்திரத்தின் வலியோடும் அன்று முழுவதும் வாழ்ந்து கொண்டிருப்பேன்.பக்குவப்பட்டவர்களின் வாழ்வில் இப்படிப்பட்ட வலிகள் ஏற்பட்டிருந்தால், அதை எளிதில் கதையாய் கேட்டுவிட்டு கடந்து போயிருப்பார்கள். ஆனால் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை கேட்டுவிட்டு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு காயமாகவும், தழும்பாகவும், வடுவாகவும் அப்படியே மனதுக்குள் படிந்துபோனது.

ஒரு நாள் வகுப்பறையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியையின் காலை பிடித்து இழுத்துவிட்டு கத்தி ஆரவாரம் செய்துவிட்டான்.உடனே அந்த ஆசிரியை குழந்தையின் செயலை மிகைப்படுத்தி பொல்லாதவன் போலவும்,ஒழுக்கமற்றவன் போலவும், எல்லோரிடத்திலும் முறையிட ஆரம்பித்துவிட்டார்.

” என்ன எங்க அப்பனபோல மாத்திடாத” உண்மையிலேயே குழந்தை செய்த செயலில் அறியாமையே இருந்தது..அது தற்பாதுகாப்பு.ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் அளவுக்கு மீறீயதுதான். குழந்தை எதை பார்த்ததோ, அதைதான் தனக்கு ஆபத்து வரும்பொழுது திருப்பி செய்கிறது. அது குழந்தையின் தவறல்ல. சமூகத்தின் தவறு. அவன் ஒன்றும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அவன் சொன்ன எந்த வார்த்தையும் அவனுக்கு சொந்தமானது இல்லை. அதைப்பற்றி அவனுக்கு சரியான புரிதலும் இல்லை.

இப்படிப்பட்ட குழந்தைகள்தான் இங்கு படிக்கின்றனர் என்பதைவிட பாதுகாப்பாக வாழ்கின்றனர் என சொல்லலாம்..ஒரு மணிக்கு மதிய உணவு உண்டுவிட்டு குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவார்கள். அந்த நேரத்தில் ஆசிரியர்கள் எல்லோரும் மைதானத்தில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து கண்காணிப்பார்கள். நானும் ஒரு ஓரமாக உட்கார்ந்து கண்காணித்தேன். எனக்கு நேரெதிரே இரண்டு எட்டாம் வகுப்பு பெண் குழந்தைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என ஒட்டு கேட்பது என் வழக்கம் இல்லை. ஆனால் அவர் பேசுகின்ற பேச்சும்,வார்த்தைகளும், வலியும், வேதனையும், அழுகுரலும் என்னை கவனிக்க வைத்தது. அப்பொழுதுதான் ஒரு குழந்தை சொன்னது” எங்க அம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். எனக்கு இரண்டாவது அப்பா பிடிக்கல. எங்க அம்மா ஏத்துக்க மாட்டேங்குறாங்க. ரெண்டாவது அப்பாகிட்ட கார் …, பணம் இருக்கு. வசதியானவருன்னு சொல்றாங்க. பாவம்டி என் மொத அப்பா” என்று சொல்லிவிட்டு தன் கண்ணிலிருந்து வரும் கண்ணீரை விரல் கொண்டு துடைத்து தேம்பித் தேம்பி அழுதாள். அன்று முழுவதும் இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதைவிடகொடுமை இதையெல்லாம் கேட்டுவிட்டு ஆறுதல் சொன்ன குழந்தையின் வார்த்தை என்னை நெருடவைத்தது. ”விடுடி, உனக்குன்னா ரெண்டு அப்பா.எனக்கு, அப்பாவே இல்லடி. நான் எவ்வளவு பாவம்? விட்டுட்டு போடி.” என்று ஆறுதல் சொன்ன குழந்தையின் அறியாமையை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்த இரண்டு கதைகள் தான் என்னால் சொல்ல முடிந்தது. நிறைய சொல்ல வேண்டுமானால் ஒரு தொடர் எழுதினால்தன். அந்த அளவுக்கு குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு கதையாகவும், மறக்க முடியாத கதாபாத்திரமாகவும், வலியாகவும், வேதனையாகவும் எனக்குள் கலந்து இருக்கிறார்கள். இப்படிபட்ட இடத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் எப்படிப்பட்ட பொறுப்பு உடையவர்களாக இருக்க வேண்டும்.என்று சிந்தித்து என்னை நானே சீர்தூக்கி செதுக்கிக்கொண்டேன்.

இதைவிட பாடம் எடுக்கும் வகுப்பு அறை ஆசிரியருக்கும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எல்லா குழந்தைகளும் ஒரே நிலையில், ஒரே சூழலில், ஒரே வாழ்க்கை முறையில் இருந்து இங்கு வரவில்லை. அனைத்து ஆசிரியருக்கும் தெரியும்.. பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே”எனக்கு தலைவலி” என்று ஒரு குழந்தை மேசையின் மீது படுத்துக் கொள்ளும். ஒன்று திடீரென்று அனுமதியில்லாமல் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்.. இப்படி சவால்கள் நிறைந்த வகுப்பறைகள். இருந்தும் பணியை செய்ய வேண்டும் என்ற விதியோடு விருப்பத்தையும் வளர்த்துக்கொண்டேன்.

மாலை 3 மணி. தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் “இன்று மாலை சரியாக மூன்று முப்பதுக்கு, பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் தனக்கு கீழ் வகுப்பில் படிக்கக்கூடிய மாணவர்களை அமைதியாக அழைத்துக்கொண்டு ஆடிட்டோரியம் அறைக்கு வர வேண்டும். மாணவத் தலைவர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு கூட்டம் இருக்கிறது” என்ற அறிவிப்பு தான்.

சுற்றறிக்கையின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கு சென்று மாணவர்களை வரிசைப்படுத்தி அழைத்துச் சென்றனர்.அறையின் உள்தாழ் போடப்பட்டது. தலைமையாசிரியர் உள்ளே இருந்தார். அறைமுழுவதும் அமைதி நிலவியது.ஒட்டுமொத்த அமைதியும் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.என்ன நடந்தது, என்ன பேசினார், எதுவும் ஆசிரியர்களுக்கு தெரியாது.

நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.ஒரு மணி நேரம் எங்களுக்கு கிடைத்த ஓய்வு போல கருதினோம். ஒரு அறையில் உட்கார்ந்து எங்களுக்குள் பேசிக்கொண்டோம். ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. ஆனால், ஒரு மணி நேரக் கூட்டத்தில் தலைமை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மிகப் பெரிய புரிதல் உருவாகியிருப்பதை காலம் கடந்து புரிந்துகொண்டோம்.

இன்று மாலை நாங்கள் தலைமை ஆசிரியரின் வருகைக்காக காத்திருக்கவில்லை.வேன் புறப்பட்டது.நாங்கள் சரியான நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டோம்.

மறுநாள் காலை வழக்கமான நேரத்தில் வேனுக்காக காத்திருந்தோம்.வேன் காலதாமதமாக வந்தது.தலைமை ஆசிரியர் வரவில்லை.

வழிபாட்டுக் கூட்டம் முடிந்துவிட்டது.

ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.வியப்பாக இருந்தது எனக்கு.நேற்றய கூட்டத்தின் விளைவை அமைதியான வகுப்பறைகளை வைத்தே தீர்மாணித்துவிட்டேன்.

எவ்வளவு நேரம் கூட்டம் நடந்தது? ராமனுக்குத்தான் தெரியும்.மறுநாள் ராமன் ராமனாகவே இருந்தார்.அன்றும் அவர் காலதாமதமாகவே பள்ளிக்கு வந்தார்.அவரிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.முதல் இடைவேளையின் முடிவில் உள்ளே நுழைந்த தலைமை ஆசிரியர், ஒட்டுமொத்த வகுப்பறையையும் நோட்டமிட்டார்.குழைந்தைகள் மாறியிருந்தார்கள்.ஆசிரியர்கள் அணி அணியாய் கூடிப்பேசி, அவர்கள் அவர்களாகவே இருந்தார்கள்.

மாணவர்கள் கையை பின்னால் கட்டிக்கொண்டு வரிசையில் சென்றனர்.அரட்டை இல்லை.ஆரவாரம் இல்லை.சலசலப்பு இல்லை.கூச்சல் இல்லை.குழப்பம் இல்லை.குழைந்தகள் குழைந்தைகளாகவே இருந்தனர். சூழல் மாற்றம் மனதுக்கு சுகமாக இருந்தது.

ராமன் சுற்றறிக்கையோடு சுழண்டுகொண்டிருந்தார். “இன்று மதியம் சரியாக பன்னிரெண்டு மணிக்கு,ஆடிட்டோரியம் அறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்” என்று எழுதி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டிருந்தார்.

நாங்கள் முனுமுனுத்துக் கொண்டே கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஆடிட்டோரியம் சென்றோம். ”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடத்தினால் என்ன.” சரியா சாப்பட்டு நேரத்திலதான் நடத்தனுமா? கூட்டத்துக்காக ஒரு மணி நேரம் போயிடும். அதுக்கப்புறம் நாங்க எப்ப சாப்பிடரது?” என்று முனுமுனுத்த ஆசிரியர்கள்தான் அதிகம். எனக்கு ஒன்னும் புதியதாய் தோன்றவில்லை. ஏனெனில் பழைய அனுபவங்கள் இதைவிட கொடுமையானது. எனவே அதை தாங்கிக் கொண்டு, ஆர்வமாக கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளே சென்றேன். குழந்தைகள் சென்றவுடன் எப்படி கதவுகள் தாழிடப்பட்டதோ அப்படியே நாங்கள் உள்ளே சென்றவுடன் ஆடிட்டோரியத்தின் கதவுகள் மூடப்பட்டது.

வகுப்பறைகளோடு.கூட்டம் நடக்கும் அறையும் அமைதியாக இருந்தது.

எனக்கு வியப்பு. “எத்தனை நாளுக்கு? “என்ற கேளிக்கையான விமர்சனமும் அங்கே நிலவியது.

தலைமையாசிரியர் உள்ளே நுழைந்தார். நாங்கள் எல்லோரும் எழுந்து நின்றோம். உட்காரச் சொன்னார்.

கூட்டம் தொடங்கியது. மெல்ல பேச ஆரம்பித்தார் “நீங்க மத்த ஆசிரியர் மாதிரி கிடையாது. இங்கே இருக்கிற குழந்தைகள் மற்ற குழந்தைகள் மாதிரி, அப்பா அம்மாவோடு வளர குழந்தைகள் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் மனவலி, வேதனை, உள்காயம் இருக்கும். அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு,அவங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாம,அவங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியை செய்ற மிக சிறப்பான ஆசிரியர்கள் நீங்க.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.”என்று மென்மையாக புகழ்ந்து,வாழ்த்தி பேசத் தொடங்கினார் தலைமை ஆசிரியர்.

மெல்ல வார்த்தையி சூட்சமத்தை வெளிப்படுத்தினார் தலைமை ஆசிரியர்.கூட்டத்தில் ஆசிரியரின் பலவீனங்கள்,பிழைகள்,தவறுகள்,விதிமீறல்கள்,ஒன்றன் பின் ஒன்றாக,ஒருவரையும் நேரடியாக குற்றம் சுமத்தாமல்,பொதுவான அபிப்பிராயத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மத்தியில் பதிவு செய்தார்.

நாம் சிறந்த ஆசிரியர் என்ற உயரிய சிந்தனை,ஆசிரியர்கள் மத்தியில் சுய பரிசோதனைக்கு உட்படுத்தினார்.இதயம் கனத்தது,கண்கள் நேர்கொண்ட பார்வையை இழந்தன.பொதுவான சொல்லாடல் புரியவேண்டியவர்களுக்கு புரிந்தது. ” நமக்கு கொடுக்கும் சம்பளம் கம்மிதான். இருந்தாலும் நீங்க செய்ற சேவை பெருசு. ஆரம்பத்திலேயே சொன்னேன். நீங்க மற்ற ஆசிரியர் மாதிரி கிடையாது. இது மற்ற பள்ளி மாதிரி கிடையாது. இங்க இருக்கிற குழந்தைகள் மற்ற பள்ளியில் படிக்கிற குழந்தைகள் போல இல்ல. இவங்க சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். வஞ்சிக்கப்பட்டவர்கள். நிராகரிக்கப்பட்டவர்கள்.ஆதரவற்றவர்கள், இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் எப்படிப்பட்ட ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். நீங்கள் எல்லோரும் படித்தவர்கள். நான் உங்களுக்கு இப்படி செய் என்று சொல்லுகின்ற இடத்தில் நீங்கள் இருக்கக்கூடாது. இங்கு வேலைக்கு சேர்ந்து பதினைந்து நாட்களில், நான் உங்க ஒவ்வொருவருடைய செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தேன். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.அதனால்தான் இந்த கூட்டத்தை கூட்டினேன். நமக்கு எல்லாம் கிடைக்கிறது.நம் குழந்தைகளை நல்ல சூழலில் படிக்க வைக்கிறோம். இந்த குழந்தைகளுக்கு எதுவுமே கிடைக்கல. நம்மை நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். நம்மை நம்பி ஒப்படைத்தவர்களுக்கு நாம் எப்படிப்பட்டவர்களாக கடமையாற்றவேண்டும் என்பதை நீங்களே சிந்தியுங்கள்.” என்று சொல்லி முடித்தவரின் முகம் இறுக்கமாக இருந்தது. அறைமுழுவதும் அமைதி நிலவியது. அனைவரும் பேச்சற்றவர்களாய் மொளனித்து உட்கார்ந்திருந்தனர்.

கூட்டத்தை சிரிப்போடு தொடங்கியவர், அனைவரும் சிந்திக்கும்படி முடித்தார்.

மணி மதியம் பன்னிரெண்டு முப்பது.குழந்தைகளுக்கான சாப்பாட்டு நேரம்.பெல் அடித்தது.மற்ற நாட்களை போன்று இன்று இல்லை.

அமைதி. வரிசை. அணிவகுப்பு. இந்த அழகை கண்ணாடி அறைக்குள்ளிருந்து பார்த்தேன்.

என்றும் இல்லாததுபோல், இன்று குழந்தைகள் பின்னால் கைகட்டி நடந்து செல்லும் அழகை.

அவர் மீண்டும் பேசத் தொடங்கினார் “நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.வேல செய்யனும்ன்னு அவசியமில்லை.உட்கார்ந்து சாப்பிடலாம். உங்ககூட வேலை செய்றேன். ஆரம்பத்துல நான் வரலைன்னு சொன்னேன்.இந்த குழந்தைகளுடைய நிலைமையை பார்த்துட்டு, அவங்க கோரிக்கை ஏத்துகிட்டு வந்தேன். நானும் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். எங்க அப்பா ஒரு அரசாங்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளர். நானும் கிராமத்து பள்ளியில் படிச்சவந்தான். நல்லா படிச்சு வேலைக்கு போனேன். எங்க அப்பா வேலை செய்த பள்ளிக்கு நானே ஆய்வாளராக போனேன், எங்க அப்பாவோட ஆய்வேட்டுல பச்சை மைய்யில கையெழுத்து போட்டேன். அதுதான் என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரிய செயல்.”என்று தனது கண்ணாடியை கழட்டி, கண்ணிலிருந்து கசிந்து கொண்டிருக்கும் ஆனந்த கண்ணீரை மென்மையாக துடைத்தார். ”உங்களுக்கும் ஒரு நல்ல நேரம் வரும்.அதுவரை சிறப்பா இந்த குழந்தைகளுக்காக சேவை செய்யுங்க. சம்பளம் கம்மியா இருக்குன்னு உங்களுடைய வேலைய குறச்சிக்காதீங்க.எங்க போனாலும் வாத்தியார் வாத்தியார் தான்.இந்த சமூகம் ஆசிரியர் மேல வச்சிருக்குற நல்ல அபிப்ராயத்தை,நம்ம செயல் மூலமா, இந்த சமூகத்துக்கு காட்டனும். நீங்க எல்லோரு ஒன்னுசேர்ந்து சிறப்பா செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”என்று சொல்லி முடித்தார்.

சரியாக ஒன்று முப்பது. சாப்பிட்டுவிட்டு வரிசையாக வகுப்பறை நோக்கி குழந்தைகள் வந்துகொண்டிருந்தனர்.

கண்ணீரோடு முடித்தார்.கணத்த இதயத்தோடு கலைந்தோம்.ஆசிரியர்கள் இல்லாத அமைதியான வகுப்பறை.கட்டுக்கோப்புடன் மாணவர்கள்.கம்பீரத்துடன் வகுப்புத் தலைவர்கள்.நேர்கொண்ட பார்வையில் பள்ளித் தலைவன்.

அவரவர் அமைதியாக சாப்பிட்டோம்.பசிக்காக சாப்பிடவில்லை, சாப்பிட்டது ருசிக்கவுமில்லை.மாற்றம் எங்களிடமிறுந்து தொடங்கியது.

மதியம். முதல் இடைவேளைக்காக மணி அடித்தது. ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் மாணவர் தலைவன் முதலில் வந்து நின்றான். அவர்களை பின் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் வந்து வெளியே நின்றார்கள்.மாணவர் தலைவன் அவர்களை அழைத்துக்கொண்டு முன்னோக்கி சென்றான்.மற்றவர்கள் அமைதியாக பின் தொடர்ந்தனர்,கையை பின்னால் கட்டிக்கொண்டு,ஆரவாரமில்லாமல்,கூச்சலில்லாமல்,குழப்பமில்லாமல்,சலசலப்பில்லாமல்,  சண்டை சச்சரவுகள் இல்லாமல்,குழந்தைகள் குழந்தைகளாக நடந்து சென்றனர்.இந்த அதிசய காட்சியை இங்கு பணியில் சேர்ந்து 15-நாட்களில் ஒரு நாள் கூட பார்த்ததில்லை. நான் பார்த்த முதல் அற்புதமான காட்சி இதுதான், இன்றுதான்.

இந்த மாற்றம், தலைமையாசிரியராக குழந்தைகளோடும், எங்களோடும் உட்கார்ந்து ,உணர்வுப்பூர்வமாய் உரையாடி, மோசமான சூழலை எங்கள் கண்முன் காட்சிப்படுத்தி.உணரவைத்து,அழகான சூழலை நோக்கி அழைத்துச் சென்ற. அந்த அற்புதமான மனிதரை ,அந்த அழகான நாளை இன்று நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது.

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 comments

  1. பழனி - Reply

    ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் எப்படி அவர்களின் சூழலுக்கு ஏற்றவாறும் ,அவர்களின் மன நிலையே புரிந்து கொண்டும் ,அவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதனையும் இக்கதையில் சிறப்பாக கூறியுள்ளனர்….. மீண்டும் இதேபோல் நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயா….

  2. திருநாவுக்கரசு - Reply

    தங்களின் கதைக்ளம் நன்று
    தலைமை ஆசிரியரின் எந்தவிதமான செயல்மாணக்கர்ளின் மனதில் மாற்றத்தை கொண்டுவந்தது.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!