இன்னைக்கி போலாம்..! என்ற சிறுகதையை எழுதியவர் திரு சந்துரு மாணிக்கவாசகம்
இன்னைக்கி போலாம்..!
பிரம்மாண்டமான அந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்த வாகன நிறுத்தத்தை வந்தடைந்திருந்த மோகன், தனது காரை நிறுத்திய இடம் பிடிபடாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் அருவியாய் வழிந்துகொண்டிருக்கும் வியர்வை பற்றிய உணர்வு சுத்தமாக அவனிடம் தென்படவில்லை.
வெளிநாட்டு மதுபாட்டில்களை உள்ளடக்கிய வலுவான பிளாஸ்டிக் பை ஒன்று அவனது கையிலிருந்தது. தூரத்திலிருந்து மோகனை கவனித்த காவலாளிக்கு அநேகமாக அவனது நிலை புரிந்திருக்கவேண்டும். அருகில் வந்து பவ்யமாக நின்றார்.
“வண்டி நம்பர் சொல்லுங்க சார். எடுத்துட்டு வர்றேன்”
”ம்.. முப்பத்தி.. ம்.. முப்பத்தாறு எழுவத்தஞ்சு”
தடுமாறியும் குழறியபடியேயும் வண்டி எண்ணை சொல்லிவிட்டு சாவியை நீட்டினான். காவலாளி அங்கிருந்து அகன்றதும், நிற்க திராணியின்றி அருகிலிருந்த பிரம்மாண்ட கான்கிரீட் தூண் ஒன்றின்மீது சாய்ந்துகொண்டான்.
சிரமமின்றி ஏறிக்கொள்ளும் விதத்தில் வண்டியைக் கொண்டு வந்து அவனருகே நிறுத்தி, கதவை திறந்துவைத்தார் காவலாளி. அளவுக்கு அதிகமான புன்னகையுடனே ஏறியமர்ந்தவன், கையில் கிடைத்த பத்து, இருபது ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்க்காமலே நீட்ட, மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு வணக்கம் வைத்தார் அவர்.
வெளியே வந்தவன் காரின் விசையை வரைமுறையின்றி அழுத்தத் துவங்கினான். வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ செல்லப் பிடிக்காமல், ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் மனம் போன போக்கில் இலக்கின்றி திசையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தான்.
தெருமூலைக்கு வந்து ஒலியெழுப்பத் துவங்கிய குட்டியானை இந்திராணிக்குள் பரபரப்பை உண்டாக்கியது. மதிய உணவையும் சும்மாட்டுக்கான குளியல் துண்டையும் சிறிய ஒயர் கூடையில் திணித்துக்கொண்டு அவசரகதியில் தெருவை நோக்கி ஓட, கண்விழித்து ஓடி வந்த தனலெட்சுமி, ‘அம்மா.. எப்பம்மா சர்டிபிகேட்டு வாங்கறது’ என நீண்ட குரல் கொடுத்து சிணுங்கினாள்.
”இன்னைக்கி சாயந்தரம் மூணு நாலுக்கெல்லாம் கெளம்பறமாதிரி சூப்பர்வைசர்கிட்ட கேக்கறேன் செல்லம். ஆபிஸ் மூடுறதுக்குள்ள போயிருவோம். எதுக்கும் ரெண்டு மணிவாக்குல பொன்னி நம்பருக்கு கூப்புடு, சொல்றேன்”.
நின்று பதில் சொல்ல நேரமின்றி குட்டியானையை நோக்கி பறந்துகொண்டிருந்தாள் அவள்.
பக்கவாட்டு கண்ணாடியில் இந்திராணியை கவனித்த டிரைவர் வண்டியைக் கிளப்பத் தயாராக, ஓடிவந்து ஒற்றைக் காலை மேலே வைத்து ஏறி, கதவுக்கு மறுபுறம் மறு காலை இறக்கி அனைவருக்கும் நடுவே அமர்ந்துகொண்டாள்.
மூத்த மகளான தனலெட்சுமி, இந்த வருடம் பத்தாம் வகுப்பை முடிக்கவிருக்கும் நிலையில், பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்பதாகச் சொல்லி தினமும் நச்சரித்தபடியே இருந்தாள். இன்றோ நாளையோ வாங்கியாகவேண்டிய கட்டாய நிலை. கணவன் கருப்பசாமியிடம் சொன்னபொழுது, ’அய்யய்ய.. அந்த நச்சு வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராது. நீயே போயி வாங்கிக்க’ என்றுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டான்.
பெரும்பாலான அடிமட்ட பெண்களின் எழுதப்படாத விதியைப் போலவே, பிள்ளைகளுக்கான உணவு, படிப்பு, உடை என அனைத்து வாழ்க்கைப் பிரச்சனைகளும் இந்திராணியின் தலையிலேயே விழுந்திருந்தது. கருப்பசாமி, தன் வருமானத்தில் தனது ’குடி’க்கான செலவு வரை மட்டுமே பார்ப்பது என்பதில் உறுதியாக இருந்தான்.
பன்னிரெண்டு வயதிலிருக்கும் சிறப்புக்குழந்தையான இரண்டாவது மகள் சித்ராதான் இந்திராணிக்கான பெரும்கவலை. எங்கு வேலைக்குச் சென்றாலும் இவளைப் பற்றிய எண்ணமே அவளுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும். ’என்ன செய்கிறாளோ, ஏது செய்கிறாளோ’ என்றெண்ணியபடியே வேலையில் இருப்பாள். மாலை வீடு திரும்பியதும் அவளால் அலங்கோலமாகியிருக்கும் வீட்டை சரிசெய்யவும், நனைந்து காய்ந்து போன பாவாடை சட்டையைக் கழற்றி, குளிப்பாட்டி அலங்காரம் செய்வதற்குமே பெரும் நேரமெடுத்துவிடும் அவளுக்கு.
கருப்பசாமி மீது இந்திராணிக்கு விவரிக்கமுடியாத அளவுக்கு கோபமும் வெறுப்பும் உண்டு. ஆனாலும், தினமும் உணவு நேரத்தில் தவறாமல் வீட்டிற்கு வந்து சித்ராவுக்கு சாப்பாடு எடுத்து வைக்கும் அவனது செயல், ‘பெத்தவனா இது ஒண்ணையாச்சும் ஒழுங்கா செய்றியே..’ என்ற முணுமுணுப்புடன் சில சதவீத மரியாதையை அவளிடம் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அவ்வாறே, தொண்ணூறைக் கடந்துவிட்ட மாமியார் அம்சம்மாள், உப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் திண்ணையில் கனத்த குச்சி ஒன்றுடன் சித்ராவுக்கு பாதுகாப்பாக படுத்துக் கிடப்பது ஆறுதலை தந்தது. அதற்காகவேனும் அவளது பச்சையான வசவு வார்த்தைகளை பொறுத்துக்கொண்டு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவளையும் குளிப்பாட்டிவிட்டு சேலை மாற்றிவிட்டுக் கொண்டிருந்தாள். ’இவள் இல்லையெனில் எந்த தைரியத்தில் குழந்தையை வீட்டில் விட்டுச் செல்வது?’
நூறுநாள் வேலைத்திட்டத்தில் சென்றுகொண்டிருந்த இந்திராணி, அதைவிட்டு வெளியே வந்து வேறு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தவேளையில், அண்மையில்தான் தோழி ஒருத்தியின் மூலமாக சாலைப்பணி கிடைத்திருந்தது. மழையிலும் வெயிலிலும் வேலையென்றாலும் குடும்பத்தை ஓரளவிற்கு சமாளித்துக் கொள்ளுமளவிற்கு சம்பளம் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டிருந்தாள்.
மாநகரத்தின் சாலைகள் பலவற்றிலும் மணிக்கணக்கில் சுற்றி முடித்திருந்த மோகன், நகரத்தின் கட்டிடங்களை வெறுத்து, இரண்டு பக்கமும் பொட்டல் வெளிகளுடன் நீண்டு விரிந்திருந்த வெளிவட்டச் சாலைக்கு வந்திருந்தான்.
லாரிகளுக்கான ஓய்வுப் பகுதியை கண்டவன், வண்டியைத் திருப்பி உள்ளே நுழைந்தான். அந்த சதுர வடிவான மைதானத்தின் மூலையை நோக்கிச் சென்று காரை தாறுமாறாக நிறுத்திவிட்டு, இருக்கையிலிருந்த பையைப் பார்த்தான். அதிலிருந்த பாட்டில்கள் அடுத்த சில நிமிடங்களில் மொத்தமும் காலியாகிப் போனது.
இருக்கையை கரடுமுரடாக பின்னால் சாய்த்து படுக்கையாக்கி கண்களை மூடினான். மனம் முழுவதையும் ஆக்கிரமிருந்த வெறுப்பு, இயலாமை, கோபம் இன்னபிற அவனை அமைதிகொள்ளவிடாமல் செய்துகொண்டிருந்தன. தகாத வார்த்தைகளால் யாரையோ திட்டினான். ஸ்டியரிங்கை ஓங்கி அடித்தான். என்ன பிரச்சனையோ..?
இந்த மனப்பிறழ்விற்கெல்லாம் மதுதான் தீர்வு என எவர் சொல்லிச் சென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. காலி பாட்டில்களோடு வண்டியை விட்டிறங்கி, தன் பலம் கொண்டமட்டும் அவற்றை வெகுதூரத்திற்கு தூக்கியெறிய முயற்சித்தான். அவனது சக்தி போதையால் கட்டிப் போடப்பட்டிருக்க, சில அடி தூரங்களுக்குள்ளாகவே அவை அனைத்தும் விழுந்து நொறுங்கின.
மீண்டும் வண்டியைக் கிளப்பி விரட்டத் துவங்கினான்.
அந்தக் காருக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வேகத்தில் முக்கால்வாசியைக் கடந்திருந்தான். அகலமான அந்த சாலையின் வலதுபக்கம் வாகனங்கள் செல்லமுடியாதவாறு ஆங்காங்கே சிவப்பு கூம்புகள் வரிசை கட்டப்பட்டிருக்க, அலங்காரம் செய்யப்பட்ட திருமண பெண்களைப் போலிருந்த வடநாட்டு லாரிகள் மீதமிருந்த சாலைப்பகுதியை அடைத்தபடி சென்றுகொண்டிருந்தன.
தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை வழிவிடக் கேட்டு அடம்பிடித்து ஒலியெழுப்பியபடியே பறந்துகொண்டிருந்தான் மோகன். ஒதுங்க நினைத்தாலும் முடியாதநிலையில் லாரிகள் அமைதியாய் சென்றுகொண்டிருக்க, போதையோடு சேர்ந்து தலைக்கனமும் கோபமும் எல்லையைக் கடந்தது அவனுக்குள். லாரியின் பின்பக்கத்தை மயிரிழை தூரத்தில் ஒட்டிக்கொண்டு, அலறியபடியே காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
சாலையோரம் குவிந்திருந்த மண்ணை பாண்டுகளில் வாரி எடுத்துக் கொண்டுபோய் குட்டியானையிலிருந்த சாக்குப் பைகளில் நிரப்பிக் கொண்டிருந்த இந்திராணியின் எண்ணமெல்லாம் சித்ராவைப் பற்றியும், தனலெட்சுமிக்காக சூப்பர்வைசரிடம் அனுமதி கேட்பதிலுமே இருந்தது. மண்ணைக் கொட்டிவிட்டுத் திரும்பி வந்தவள், குட்டியானையின் முன்புறம் சாய்ந்தவாறே ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த சூப்பர்வைசரை நோக்கி தயக்கத்துடன் வந்து நின்றாள்.
“சார்.. வந்து.. இன்னைக்கி நாலு மணிக்குள்ள கவர்மெண்ட் ஆபிஸ் போயி என் புள்ளைக்கி ஜாதி சர்டிஃபிகேட் வாங்கணும் சார். தெனமும் சீக்கிரமே வேலைக்கி வந்துர்றேன். வாங்க முடியாம போவுது சார். நாளைக்கி கட்டாயம் ஸ்கூல்ல குடுக்கணுமாம் சார்”
”தெனம் யாராச்சும் ஒருத்தர் இப்புடி கெளம்பி போயிட்றீங்க. நாலுநாள்ல முடிக்க வேண்டிய வேலையெல்லாம் ஒரு வாரம் பத்து நாளுன்னு போவுது. சொல்ற காரணத்தையெல்லாம் பாத்தா முடியாதுன்னும் சொல்ல முடியல. என்னமோ பண்ணுங்க போங்க..” சலிப்புடனே அவன் அனுமதி கொடுக்க, மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகரத் துவங்கினாள் இந்திராணி.
அதே நேரம்..
முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி லேசாக இடதுபக்கம் திரும்ப, கிடைத்த இடைவெளியில் மேலும் வேகத்துடன் முந்தத் துவங்கினான் மோகன். லாரி டிரைவருக்கு நேராக வந்து, ’எனக்கு வழி விடாத அளவுக்கு நீ என்ன அவ்ளோ பெரிய …….வனா?’ கேவலமான வார்த்தைகளோடு அலறினான்.
லாரி டிரைவரோ, அவன் கத்துவதை பொருட்படுத்தாமல், ‘யோவ்.. முன்னால பாத்து போய்யா’ என முன் நோக்கி கையை நீட்டியபடியே இருந்தான். ஆனால் அவனது வார்த்தைகள் மோகனை வந்தடையவே இல்லை.
திட்டி முடித்து சாலையை நோக்கித் திரும்ப நினைத்தான்..
அதற்குள் அனைத்தும் முடிந்து போயிருந்தது.
ஆம்.. சாலையின் வலப்புறம், கூம்புகளுக்குப் பின்னால் நின்றிருந்த குட்டியானையும் மோகனின் காரும் கசக்கிப் போடப்பட்ட பேப்பர்களாய் சாலையில் கிடந்தன. இந்திராணியும் சூப்பர்வைசரும் சாலையின் ஓரத்தில் சதைக்குவியலாய்க் கிடந்தார்கள். சிலர் லேசான முனகலோடும், சிலர் சுயநினைவற்றும் ஆளுக்கொருபுறமாகக் கிடந்தனர்.
எவனோ ஒருவனின் தனிப்பட்ட பழக்கவழக்கங்களும், தவறான செய்கைகளும் சம்பந்தமில்லாமல் தனது தாயைக் கொன்று கூழாக்கி, தங்களது வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டிருப்பது தெரியாமல்.. ’சான்றிதழ் வாங்க போலாமா..?’ எனக் கேட்கும் ஆவலில் பொன்னியின் எண்ணை டயல் செய்யத் துவங்கியிருந்தாள் மகள் தனலெட்சுமி.
நிறைவு பெற்றது.
15 comments