‘போதும் என்ற மனம்’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு கே.என்.சுவாமிநாதன்
போதும் என்ற மனம்
மாலை நேர பெங்களூர் சென்னை சதாப்தி விரைவு வண்டியில் சென்னை வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.
அவனுடைய மனமெல்லாம் அடுத்த நாள் அவன் பங்கேற்க இருக்கும் நேர்காணலைப் பற்றி இருந்தது. என்ன கேட்பார்கள், அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நண்பர்கள் சொன்னதை நினைவு கூர்ந்தான் கார்த்திக். ஆவணங்கள் எல்லாம் சரியாக எடுத்துக் கொண்டோமா என்று சரி பார்த்துக் கொண்டான். நேர்காணலில் வெற்றி பெறுவோம் என்று அவனுக்கு அபார நம்பிக்கை. தன்னுடைய் நெடு நாள் கனவு பலிக்கப் போகிறது என்பதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
சதாப்தியில் வழக்கம் போலக் கூட்டம். அவனுக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். வயது அறுபத்து ஐந்துக்கு மேல் இருக்கும். சிறிது தூங்குவதும், சற்று நேரம் கையிலுள்ள கிண்டில் படிப்பதுமாக இருந்தார். சற்றே அமைதி அற்றவராகக் காணப்பட்டார்.
வண்டியில் கொடுத்த காபி, பிஸ்கட் சாப்பிட்டார். இரவு விருந்து எடுத்துக் கொள்ளவில்லை. கார்த்திக்கிடம் தலைவலி மாத்திரை இருக்கிறதா என்று கேட்டு, மாத்திரை போட்டுக் கொண்டார். தன்னுடைய பெயர் சிவராமன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“எக்ஸ்கியூஸ் மீ, இந்த வண்டி எத்தனை மணிக்கு சென்னை சென்றடையும்” என்று கேட்டார்.
“இரவு 9:45க்குப் போக வேண்டும். ஆனால், தாமதமாக சென்னை சேர வாய்ப்புகள் அதிகம்” என்றான் கார்த்திக்.
“நான் திருவான்மீயூர் போக வேண்டும். வண்டி தாமதமாகப் போனால் ஆட்டோ, டாக்ஸி கிடைப்பது கஷ்டம்” என்றார் சிவராமன்.
“நானும் திருவான்மீயூர் போகிறேன். நாம் ஒன்றாகச் செல்லலாம். கவலைப்படாதீர்கள்” என்றான் கார்த்திக்.
சதாப்தி சென்னை சேரும் போது இரவு பத்து மணி, பதினைந்து நிமிடம். செயலியின் மூலம் ஓலா டாக்ஸி ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திக்.
வண்டியில் இருந்து இறங்கும் போது சிவராமன் நடையில் தள்ளாடல் இருந்தது. விழுந்து விடாமல் இருக்க அவரது கையைப் பற்றிய போது, கை மிகவும் சூடாக இருந்தது. அதிர்ந்து போனான் கார்த்திக். சிவராமனுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும் என்று அவனது மனதில் தோன்றியது. அவரது வீட்டில் அவரை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டான்.
சிவராமன் இருந்தது அடுக்கு மாடிக் குடியிருப்பில். முதல் மாடியில் அவருடைய வீடு. குடியிருப்பின் காவலாளி மூலம் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டான். சிவராமனால் சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க முடியவில்லை. குளிர் காய்ச்சல் வந்தவர் போல உடம்பு முழுவதும் நடுக்கம். கதவைத் திறந்து மெதுவாக அவரை உள்ளே நடத்திச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான் கார்த்திக்.
சிவராமனின் பார்வையில் இயலாமை, பயம் தெரிந்தது. என்னைத் தனியாக விட்டுச் செல்லாதே என்று அவர் பார்வை இறைஞ்சுவது போலத் தோன்றியது கார்த்திக் மனதில்.
கார்த்திக் அவனுடைய நண்பன் திவாகர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. கைபேசியில் திவாகரைக் கூப்பிட்டு நடந்தவற்றை விளக்கினான். சிறிது நேரத்தில் திவாகர் டாக்டருடன் வந்தான். டாக்டர் இது வைரஸ் காய்ச்சல் என்றும், காய்ச்சல் காலையில் குறைந்து விடும், ஆனால் மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மூண்று நாட்களுக்கு மருந்து கொடுத்த டாக்டர் சிவராமனுக்கு காய்ச்சல் குறைய ஊசியும் போட்டார். இரவு நன்றாகத் தூங்கட்டும். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார்.
உடல் நிலை சரியாக இல்லாத சிவராமனைத் தனியாக விட்டுச் செல்ல இருவரும் விரும்பவில்லை. சென்னையில் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் ஒப்படைத்துச் செல்லலாம். அப்போது தான் கார்த்திக் மற்றும் திவாகர் அவர்களுடைய வேலைக்குச் செல்ல முடியும். யாரைக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
சிவராமன் பெங்களூரில் வண்டியில் ஏறி அமர்ந்ததும் யாருடனோ பேசியது கார்த்திக்கிற்கு நினைவு வந்தது. சிவராமன் கைபேசி எடுத்து அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டான்.
அந்தப் பக்கம் பேசியது சிவராமனின் சகோதரி. விஷயத்தை அறிந்த அவள் பதட்டமடைந்தாள். சிவராமனின் மனைவி தவறிப் போய் ஒரு வருடம் ஆகிறது. ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறான். சிவராமன் ஒரு வாரம் முன்னால் தான் அமெரிக்காவிலிருந்து வந்தார். தனியாக வசிக்கிறார். என்று விவரங்கள் கூறினாள்.
இன்னும் ஒரு சகோதரர் அண்ணா நகரில் வசிப்பதாகவும், அவரிடம் சொல்லி, காலையில் மகனுடன் வந்து கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்வதாகக் கூறினாள். கார்த்திக் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் கூப்பிட்ட சிவராமனின் சகோதரர் காலை ஏழு மணியளவில் மகனுடன் வருவதாகக் கூறினார். வாய் ஓயாமல் கார்த்திக்கிற்கு நன்றி கூறினார்.
சிவராமனின் மகன் சுந்தர் அமெரிக்காவிலிருந்து பேசினான். மிகவும் வருத்தப்பட்டு அவன் பேசியது கார்த்திக்கை மிகவும் யோசிக்க வைத்தது.
கார்த்திக் சொன்னான். “ நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்று அன்னிய நாட்டிற்கு வருகிறோம். ஆனால் அப்பா, அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றால், என்ன ஆயிற்றோ, இப்போது அவர்கள் உதவிக்கு நாம் அருகில் இல்லையே என்று மனம் பதைக்கிறது. ஆறு மாதம் வரை தான் கூட வைத்துக் கொள்ள முடிகிறது. நிரந்தரமாக வைத்துக் கொள்ள, கிரீன் கார்ட வேண்டும். அது கிடைக்க சில வருடங்கள் ஆகின்றன. இந்தியா திரும்பிச் சென்று விடலாம் என்றால், அதுவும் எளிதாக இல்லை. குழந்தைகள் பள்ளி வாழ்க்கை ஆரம்பித்து இந்த சூழ்நிலை பிடித்து விட்டால் அவர்களால் இந்திய சூழ்நிலைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில் எங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.”
நன்கு தூங்கிய சிவராமன் காலையில் தெம்பாக எழுந்து கொண்டார். காய்ச்சல், தலைவலி இல்லை சோர்வு இருந்தது. முன்பின் பழக்கம் இல்லாத இருவர் கண் விழித்துப் பார்த்துக் கொண்டது அவரை நெகிழ வைத்தது.
காலை ஏழு மணியளவில் சிவராமனின் சகோதரர் அவர் மகனுடன் வந்து சிவராமனை கூட்டிச் சென்றார்.
கார்த்திக், திவாகருடன் அவனுடைய வீட்டிற்குச் சென்றான். “கார்த்திக், உன்னுடைய இன்டர்வியூ இரண்டு மணிக்குத் தானே. சிறிது ஒய்வு எடுத்துக் கொள்” என்றான் திவாகர்.
“திவாகர், நான் இன்டர்வியூவிற்குப் போகப் போவதில்லை. இன்றைய இரவு பஸ்ஸில் பெங்களூர் திரும்பலாம் என்றிருக்கிறேன்” என்றான் கார்த்திக்.
திவாகர் அதிர்ச்சியடைந்தான்.
“என்ன சொல்றே, கார்த்திக், நீ இன்டர்வியூ போக வேண்டிய இடம், அமெரிக்கத் தூதரகம். அமெரிக்காவில் வேலை செய்ய “எச் 1 விசா” இன்டர்வியூ. அமெரிக்காவில் பன்னாட்டுக் கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய லட்சியம் என்று பலமுறை சொல்லி இருக்கிறாய். பல சுற்றுக்கள் நடந்த கஷ்டமான தொலை பேசிப் பேட்டியில் நீ முதல் இடம் பிடித்து, உனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. நல்ல சம்பளம். உன் திறமைக்கேற்ப கம்பெனியின் பங்குகள் கொடுக்கிறார்கள். அவர்களே உனக்கு இந்த விசா இன்டர்வியூ ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த வேலையை வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறாயா? நன்றாக யோசித்து முடிவு செய் கார்த்திக். வாழ்வில் முன்னேறுவதற்கு நீயே உனக்குத் தடைக் கல்லாக இருக்காதே.” என்றான்.
“நேற்றைய அனுபவம் என்னுடைய மனதை மாற்றிவிட்டது திவாகர். சிவராமன் அவர்களுக்கு வந்தது சாதாரணமான காய்ச்சல். மூன்று நாளில் சரியாகி விடும். ஆனால் அவருக்குக் காய்ச்சல் என்றவுடன் அதனால் எத்தனை பேருக்குப் பதட்டம். காரணம் என்ன? வயதான காலத்தில் அவர் தனியாக இருப்பதால்.”
“காய்ச்சல் என்றதும் சிவராமன் முகத்தில் தனியாக இருக்கிறேன் என்ற பயம். அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. தொலை தூரத்தில் இருக்கும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற இயலாமை அவர் மகனுக்கு. காய்ச்சல் வந்த சகோதரர் ஆதரவற்றவர் போல இருக்கிறாரே என்ற கவலை உடன் பிறந்தவர்களுக்கு. நாம் இத்தனை பேர் இருந்தும் சற்றும் அறிமுகமில்லாதவர் அவரைப் பார்த்துக் கொள்ள நேரிட்டதே என்ற ஆற்றாமை. இந்த நிலை என்னுடைய அப்பா, அம்மாவிற்கு ஏற்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.”
“நான் பெங்களூரில் நல்ல வேலையில் இருக்கிறேன். நல்ல சம்பளம் கூட. என் மனைவியும் நல்ல வேலையில் இருக்கிறாள். வசதியாகத் தான் வாழ்கிறோம். இதை விட்டு விட்டு அமெரிக்கா சென்று அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டு வாழ்கிற வாழ்க்கைத் தேவையா என்று நினைத்துப் பார்த்ததில், வேண்டாம் என்று என் மனது சொல்கிறது. மரத்தில் இருக்கும் பலாப் பழத்தை விடக் கையில் இருக்கும் கலாக்காய் சிறந்தது அல்லவா.”
“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.”
நிறைவு பெற்றது.
4 comments