யார் கொலைகாரன்?- போட்டி கதை எண் – 19

5
(10)

‘யார் கொலைகாரன்?’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ரக்ஷன் கிருத்திக்

 

                                          யார் கொலைகாரன்?

ராஜாவை தான் எப்படி அழைப்பது என்று தனது அம்மாவை கேட்டான் முகில். “ப்ரெண்ட்” என்று அழைக்க சொன்னாள் கீதா.

“ஃப்ரண்டுன்னா என்னை போல சின்ன பையனா இருக்கணும். இவர் பெரிய ஆளா இருக்கறாரே, அங்கிள்னு கூப்பிடட்டும்மா…ம்மா?”என்றான் முகில்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஃப்ரண்டுன்னே கூப்பிடு.” என்றாள்.

“நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற அருணுக்கும் என் வயசுதான? அவன், அவர அங்கிள்னுதான கூப்பிடுறான். என்னை மட்டும் ஏம்மா அப்படி கூப்பிட வேணான்னு சொல்ற?” என்றான் முகில்.

“அருணோட அப்பாவ, நீ எப்படி கூப்பிடுற?”

“அங்கிள்னு.”

“நீ அருணோட அப்பாவ அங்கிள்னு கூப்பிடுற. அவன், அவர அப்பானு கூப்பிடறான். அது போலதான் யார் யார எப்படி கூப்பிடனுமோ! அப்படிதான் கூப்பிடனும். நம்ம இஷ்டபடியெல்லாம்  கூப்பிட முடியாது. அதிக பிரசங்கி மாதிரி கேள்வி கேட்டுகிட்டே இருக்க கூடாது.” என்றாள் கண்டிப்புடன்.

கீதாவுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன்தான் முகில். கீதாவ விட்டுட்டு அவள் கணவன் சண்முகம் பிரிந்து சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே கீதாவும் சண்முகமும் சேர்ந்து வாழ்ந்தார்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். சட்டப்படி இருவரும் இன்னும் கணவன் மனைவிதான். கீதா பட்டாசு கம்பெனியில் வேலை செய்கிறாள். ராஜா ஆரம்பத்தில் பட்டாசு கம்பெனியில் வேலை செய்தான். அதன் பிறகு அவனது அண்ணன் துபாயில் வேலை செய்து வந்ததால் ராஜாவையும் அழைத்து சென்று ஏதாவது வேலை வாங்கி கொடுக்கலாம். என்ற நம்பிக்கையில் துபாய்க்கு பார்வையாளர் விசாவில் அழைத்து சென்றான். ஓர் ஆண்டுவரை விசாவை சட்டத்திற்கு புறம்பான முறையில் புதுப்பித்து, புதுப்பித்து வேலை செய்தான். அதன் பிறகும் நிரந்தர விசா கிடைக்காததால் ஊருக்கே திரும்பி வந்தான். மீண்டும் பட்டாசு கம்பெனிக்கே வேலைக்கு சென்றான். இந்த முறை கீதா வேலை செய்து வந்த அதே கம்பெனிக்கு ராஜாவும் வேலைக்கு சென்றான். வேலையில் சேரும்வரை கீதாவும் அங்கேதான் வேலை செய்கிறாள் என்பது ராஜாவுக்கு தெரியாது. ராஜாவும் கீதாவும் பள்ளி நண்பர்கள். பள்ளியில் படிக்கும்போதே ராஜாவுக்கு கீதாவின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஒரே கம்பெனியில் வேலை செய்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து நண்பர்கள் என்ற முறையில் பேசிக் கொண்டார்கள். கணவனை பிரிந்து வாழும் கீதா தனது சுக துக்கங்களை ராஜாவுடன் நண்பன் என்ற முறையில் பகிர்ந்து கொண்டாள். ராஜாவும் நம்பிக்கை தரும் விதமாக ஆறுதல் சொல்ல இருவரும் நெருக்கம் ஆனார்கள். அது நாளடைவில் ராஜாவுக்கும் கீதாவுக்கும் காதல் ஆனது. இருவரும் திருமணம் செய்யாமலே தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டார்கள். அந்த தாம்பத்தியத்தின் பலனாக கீதா கர்ப்பமானாள். கீதாவின் கர்ப்பம் குறித்து யாருக்கும் சந்தேகம் எழவில்லை. சண்முகத்திற்குதான் அவள் கருத்தரித்து உள்ளாள் என்று கீதாவின் தாய், தந்தை உட்பட எல்லோரும் நம்பினார்கள். குழந்தை பிறந்தால் அதை காட்டி சண்முகத்தின் மனதை கரைத்து அவனோடு சேர்த்து வைத்து விடலாம் என்று சந்தோசப்பட்டு கொண்டனர். ஆனால் கீதா, சண்முகத்தின் பேச்சை எடுத்தாலே  கோபித்து கொண்டாள். குழந்தையும் நல்லபடி பிறந்தது. இனிமேல தாய், தகப்பனோடு இருந்தால் ஏதாவது சொல்லி சண்முகத்தோடு சேர்த்து வைத்து விடுவார்கள் என்றும், ராஜா வந்து செல்வதற்கும் வசதி இருக்காது என்றும், நினைத்த கீதா வாடகைக்கு வீடு பார்த்து கொண்டு குழந்தையோடு தனிக்குடித்தனம் சென்றாள்.  அவ்வப்போது அவளது தந்தையும் வந்து அவளோடு தங்கி கொண்டார். ராஜாவின் ஜாதி வேறு கீதாவின் ஜாதி வேறு. எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த பெற்றோர்தான் தன் மகன் யாருக்கோ பிறந்த கை குழந்தையோடு, வாழா வெட்டியாக இருக்கற ஒரு பெண்ணை கட்டிக் கொண்டு வர சம்மதிப்பார்கள். குழந்தை ராஜாவுக்கு பிறந்திருந்தாலும் அது ஊரை பொறுத்த வரைக்கும் சண்முகத்திற்கு பிறந்தது தானே. சோற்றுக்கு வழியில்லாத அன்றாடம் காய்ச்சியாக இருக்கற குடும்பமே இதற்கு ஒத்துக்காது. ராஜாவின் குடும்பம் நல்ல வசதியான குடும்பம். இதற்கு ராஜாவின் வீட்டில் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பும் என்பதால் இந்த விஷயம் தெரியும் போது பார்த்துக்கலாம் என்று ஆர போட்டுவிட்டான். கீதா வீட்டில் ஜாதிக்கு எதிர்ப்பு இருந்தாலும் கணவனை பிரிந்து வாழும் தனது மகளுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும் என்ற நினைப்பு உள்ளவர்கள்தான் அவர்கள்.

ராஜாவிற்கு உடன் பிறந்தவர்களாக ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருந்தார்கள். அக்காவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தையும் இருந்தது. தனது மகள் வழி பேத்தியை ராஜாவுக்கு கட்டி வைத்து விடவேண்டும் என்பது ராஜாவினுடைய, அம்மாவின் ஆசை. ராஜாவிற்கும் அக்கா மகளுக்கும் பத்து வயது வித்தியாசம் இருந்தது. ராஜா ஒரு போதும் அக்கா மகளை வருங்கால மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தது கிடையாது. அக்காவிற்கும் தனது மகளை தம்பிக்குதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மகளை பொத்தி பாதுகாப்பாக வளர்த்து வந்தாள்.

ராஜாவின் குடும்பத்திற்கு அவர்கள் குடியிருந்தது போக பத்து வீடுகள் இருந்தது. அவற்றை வாடகைக்கு விட்டிருந்தார்கள். வாடகை பணத்தை வசூலிக்கும் பொறுப்பை ராஜாவின் அம்மாவே கவனித்து வந்தார். குடும்ப செலவு போக மிதமிஞ்சிய பணத்தை வட்டிக்கு விட்டு வந்தார். இதனால் ராஜாவின் அம்மாவிடம் பணம் எக்க செக்கமாக புரண்டது. ஆனால் ஒருபோதும் தன்னிடம் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார். தன்னிடம் பணம் வாங்கி விட்டு சரியாக வட்டி காட்டாதவர்களை கசக்கி பிழிந்து வசூலித்து விடுவார். ராஜாவின் அப்பா சற்று உடல் நலம் குன்றியவர். அதனால் அவர் குடும்பத்தில் பெயரளவில் மட்டும் இருந்து வந்தார். ராஜாவின் அம்மா பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பானவர். மாதம் பிறந்துவிட்டால் சம்பளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை ராஜாவும் அவனது அண்ணனும், அம்மாவின் வசம் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் ஒரு பிரளயமே உண்டாகிவிடும். ராஜா பட்டாசு கம்பெனி வேலையை நிறுத்திவிட்டு பிராய்லர் கறிக்கோழி கடை ஆரம்பித்தான். கோழி கடையில் இரண்டு பங்குதாரர்களையும் சேர்த்திருந்தான். அவர்கள் முதலீடு எதுவும் போடவில்லை. வேலை செய்யும் பங்குதாரர்களாக மட்டும் இருந்தனர். கோழி கடையில் போதிய அளவுக்கு வருமானம் இல்ல. ராஜா வீட்டிற்கு பணம் கொடுப்பதற்காக கீதாவின் நகைகளை வாங்கி அடகு வைத்து மாதா மாதம் வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுத்து வந்தான்.

வேறு வீட்டில் வாடகைக்கு இருந்த கீதாவை ராஜா தனது வீட்டிற்கே அழைத்து வந்து வாடகைக்கு  குடியமர்த்தி தனது தாய்க்குத் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தான். முகிலை பள்ளிக்கு அழைத்து செல்வது, பள்ளி முடிந்ததும் அழைத்து வருவது போன்ற உதவிகளை அம்மாவிற்கு தெரியாமலே செய்து வந்தான். ராஜாவுக்கும் கீதாவிற்கும் ரகசிய தொடர்பு இருப்பது ராஜாவின் வீட்டில்  குடியிருக்கும் மற்றொரு வாடகைதாரர் மூலம் அம்மாவிற்கு தெரியவந்தது. ராஜாவின் அம்மா கீதாவை அடித்து அவமான படுத்தி வீட்டிலிருந்தே விரட்டி விட்டார். ராஜாவின் அக்காவிற்கு இது பற்றி எதுவும் தெரியாது. அவள் தனது தம்பியை முழு மனதாக நம்பி இருந்தாள். அம்மாவுக்கு விஷயம் தெரிந்து விட்டதால், அம்மாவிற்கும் ராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் அம்மாவிடம் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தான். அப்போது ராஜா, கீதாவை அழைத்து சென்று தனது குடும்பத்திற்கு தெரியாமல் தனது கிராமத்தை ஒட்டிய நகரத்துக்குள் வீடு வாடகைக்கு எடுத்து குடி அமர்த்தினான். கீதாவுக்கு எடுத்துக் கொடுத்த வீட்டிலேயே அவனும் தங்கினான். அப்போது கீதா, ராஜா, முகில் இருவரும் ஒரே வீட்டில் முதன் முறையாக தங்க நேர்ந்தது. முகிலிடம் கீதா, ராஜாவை“ அப்பா” என்று அழைக்க சொன்னாள். “ஏன்மா?அப்பான்னு கூப்பிட சொல்ற? இவ்வளவு நாளும் பிரண்டுன்னு தான கூப்பிடச் சொன்ன?” என்றான் முகில். அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தாள். முகிலுக்கு இவ்வளவு நாளும் தன்னிடம் அன்பையும் பாசத்தையும் காட்டிய நண்பனே தந்தையாக வந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஒரு சில நாட்களில் ராஜா கோழி கடையை பங்குதாரர்களிடமே ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டான். அவனுக்கு தெரிந்தது பட்டாசு உற்பத்தியும் சில மாதங்கள் கோழி கடை நடத்தியதால் கோழி வெட்டி கொடுக்கும் வேலையும்தான் தெரியும். இதனால் சென்னையில் கோழி கடையில் கோழிக்கறி வெட்டி எடை போட்டு கொடுக்கும் வேலையை செய்து வந்தான். சில மாதங்கள் சென்று கீதாவையும் அவளது மகனையும் அழைத்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து தனது வீட்டுக்கு தெரியாமலே குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான். தம்பிக்காகவே வளர்த்து வந்த மகள் திருமண வயதை நெருங்கிக்கொண்டிருப்பதை நினைத்து அக்கா சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் தனது அம்மாவின் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் தம்பிக்கும் தனது மகளுக்கும் எப்போது திருமணம் வைத்து கொள்ளலாம் என கேட்க வரவேண்டும் என்று நினைத்தவள். ஜோசியரிடம் சென்று ஒரு நல்ல நாளையும் குறித்து கொண்டு வந்து தான் மகளுக்கும் தம்பிக்கும் திருமணம் குறித்து பேச போகும் நாட்களை எதிர்பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள். அந்த நல்ல நாள் வருவதற்கு முன்பாக  திடீரென்று தனது மகள் ஒருவனோடு ஓடிவிட்டாள். தனது தம்பிக்காக வளர்த்த மகள் ஓடிவிட்டாள் என்று தெரிந்ததும் மனமுடைந்து விட்டாள். தம்பி வந்து கேட்டாள் என்ன பதில் சொல்வேன் என நினைத்து தற்கொலை செய்து கொண்டாள் அக்கா. அக்கா இறந்து போனதால் அக்காவின் கணவர் தனது மகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். தனது மகளை ஒரு விரோதி போலவும் பாவித்து வந்தார். தம்பி உண்மை நிலையை அக்காவிடம் தெரிவித்திருந்தால் ஒரு உயிர் அநியாயமா போயிருக்காது.

நிறைவு பெற்றது.

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 comment

  1. Subbu Lakshmi - Reply

    தம்பிக்காக வளர்த்த மகள் இன்னொருவனோடு சென்று விட்டாள் என்பதைவிட தம்பியின் பத்து வருஷ வாழ்க்கை தன்னால் வீணடிக்க பட்டுவிட்டதே, என்ற மன வேதனைதான் அக்காவின் தற்கொலைக்கு காரணம். அக்காவிடம் தம்பி தான் உன் மகளுக்காக காத்திருக்கவில்லை என்பதை முன்னாலேயே சொல்லியிருந்தால் அவளின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டது அவளுக்கு பெரியதாக தெரிந்திருக்காது. புயலுக்கு பின்தான் அமைதி பிறகும் என்பதை தம்பி உணராமல் பிரச்சனை வரும்போது பார்த்துக்கலாம் என்று நினைப்பது அவரின் அக்கறையின்மையைதான் காட்டுகிறது. யார் மீதும் கண் மூடித்தனமான நம்பிக்கை வைக்காதே என்பதை கதை உணர்த்துகிறது. சிறந்த கதை.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!