முருகையாவும் புத்தக திருவிழாவும் – போட்டி கதை எண் – 22

0
(0)

‘முருகையாவும் புத்தக திருவிழாவும்’ என்ற சிறுகதையை எழுதியவர் ராஜிபா என்கிற ரா. ராஜ மகேந்திரன்

                     முருகையாவும் புத்தக திருவிழாவும்

முருகையாவுக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை, புத்தக திருவிழாவுக்கு ஒருதடவையாவது போய் பார்க்கவேண்டும். தமிழம்மா ஒரு நாள் சொன்னார், புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கில் புத்தகங்கள் இருக்குமாம், நிறைய நூலாசிரியர்களும், எழுத்தாளர்களும் அங்கு வருவார்களாம், சில நேரங்களில் அமைச்சர்கள் கூட வருவது உண்டாம்.

அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவங்க ஊர் பஞ்சாயத்து நூலகம் மாத்திரமே, ஒரு பொட்டைக்காட்டுக்குள் முன்பக்கம் ஒட்டுச்சாப்பு போட்டு, பத்து அடி காரை கட்டிடமும்,  டொடக், டொடக் என்று சப்தமிடும் ஒரு மின்விசிறியும்,  இரண்டு ஓரங்களிலும் கருப்படித்திருந்த ஒரு ட்யூப் லைட்டும், இரண்டு மர அலமாரிகளும்,  அதனுடன் பழுப்பாய் இருந்த பழைய நூல்களும் மட்டுமே.

அவன் முதல் முதலாக ஆறாம் வகுப்பு முழுப்பரிட்சை முடிந்த பின் விடுமுறைக்கு அங்கே வந்தான். அவன் அப்பாதான் சைக்கிளில் கூட்டிக்கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு, ” முருகையா அப்பா  தொழிலுக்கு போறேன், நீ படிச்சுட்டு நடந்து வீட்டுக்கு போயிரு, சரியா?” என்று கிளம்பிவிட்டார்.

முருகையாவின் ஊர் சுற்று வட்டார பகுதிகளில் போதிய மழை பெய்வதில்லை, பொதுவாகவே  கண்மாயும், குளமும் ,  வறண்டு கிட க்கும். அந்த இடங்களில் தற்போது சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. சீமை கருவேல விறகு வரத்து அதிகமாகி விலை குறைந்துவிட்டபடியால் சில வருடங்களாகவே கரி மூட்டம் போட்டு அவற்றை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர் வியாபாரிகள். அவன் அப்பா கூட கரி மூட்டம் போடும் கூலி வேலைதான் பார்க்கின்றார். இந்த வேலைகள் இல்லாத நாட்களில் இருவரும் நூறுநாள் வேலைக்கு போவர்.

அவன் அப்பா, செலாவத்தாக இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் பழைய ஊர் கதைகளை சொல்லுவார், பொழுது சாய, மூன்று பேரும் பஞ்சாயத்து போர்ட் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பழைய கதைகளை பேசுவார்கள், முருகையா ஒவ்வொரு  வாரமும் ஞாயிறு எப்போ வரும் என்று காத்திருப்பான்.

அந்த காலத்தில் அவர்களின் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் இருந்தனவாம், அவர்களில் பெரும்பாலான குடும்பத்தினர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் குடும்பத் தொழிலாக, பல ஆண்டுகளாக செய்து வந்தார்களாம்.

அப்போது புதிதாய் மாற்றலாகி வந்த IPS அதிகாரி ஒருவர் சாராயம் காய்ச்சும் அந்த கிராம மக்களை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்தி, அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருந்தால், அவர்கள் சாராயத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள் என்று முன்னெடுத்தாராம். அந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது திறமைக்கு ஏற்ப, வருமானம் தரக்கூடிய தொழில்களைத் தேர்வு செய்து, வங்கி உதவியுடன் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி, கிராமத்திற்கு மறுவாழ்வு கிடைக்க செய்தாராம். அதனாலயே அவன் அப்பா “ஏலே முருகையா நீயும் நல்லா படிச்சு IPS அதிகாரி ஆகனும்டா”, என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

தொல் காப்பியன் என்கிற TKP சார், முருகையாவின் சமூக அறிவியல் ஆசிரியர் சொல்லுவார், நல்லா புரிஞ்சு படிக்குறடா நீ, உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு, நல்லா படி என்பார்.

நீ சிவில் சர்விஸ் பரீட்சை பாஸ் பண்ண வேண்டுமென்றால், இப்போதிருந்தே பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  உன்னை சுற்றி நடக்கும் சமூக, பொருளாதார, அரசியல், விஞ்ஞான மாற்றங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், அவற்றை பற்றிய உன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை மற்றைய உலகவியலாளர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளவேண்டும். அதற்கு இலகுவான ஆனால் இலவச வழி ஒன்று இருக்கின்றது, அது புத்தக வாசிப்பு, நம்மூர் நூலகத்தில் இருந்து ஆரம்பி, அது உன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். அப்படிதான் அந்த நூலகம் அறிமுகமானது, முருகையாவுக்கு.

அன்றைய தினசரியில் விளம்பரம் போட்டிருந்தார்கள்,

250 அரங்குகள்; 50 லட்சம் புத்தகங்கள்: மதுரை புத்தகத் திருவிழா நாளை தொடக்கம் “மதுரை புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது.  புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

 

முருகையன் துள்ளி குதித்தான். ஒரு லட்சம் தலைப்புகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் கண்காட்சிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது, அடேங்கப்பா !!! எவ்வ்ளோ பெரிய ஏற்பாடு? மாபெரும் வாய்ப்பு, கட்டாயம் அங்கு ஒரு நாள் செல்ல வேண்டும் ; முடிவு செய்து கொண்டான்..

*****************

றுநாள் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில்    தொல் காப்பியன் சாரை ஸ்டாஃப் ரூமில் போய் பார்த்தான்,  “சார், மதுரை புத்தக திருவிழா போட்ருக்காங்க சார், கூட்டிகிட்டு போறிங்களா சார் ?” என்ற அவனது உற்சாகத்துடன் கூடிய கெஞ்சல் அவருக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது, “நானும் பேப்பர்ல பார்த்தேன், இந்த ஞாயிற்று கிழமை கட்டாயம் போகலாம்,  காலைல 8 மணிக்கு நம்ம ஊருல இருந்து மொத பஸ் பிடிச்சாதான் மதுரை தமுக்கத்துக்கு 11 மணிக்கு போய் சேர முடியும்,  ரெடியா இருந்துக்கோ”

கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது மணி 12 ஆகிவிட்டது. சார் லேட்டாயிருச்சா சார்? தமுக்கம் இன்னும் எவ்ளவு தூரம் சார் ? பதறினான் முருகையன். ” இன்னும் பத்து நிமிஷத்துல போயிரலாம், சாயந்திரம் வரை டயம் இருக்கு, ஏன்டா  கவலைபடுற? ” TKP சார் ஆறுதல் படுத்தினார்.

தமுக்கத்தின் நுழைவாயில் பிரமாண்டமாக இருந்தது, ஆனால் அதன் முகம் தெரியவில்லை, கொச கொசவென்று மனிதர்கள், சாலை நெடுக வரிசை வரிசையாக மோட்டார்  சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும், கார்களும் ……….ஹாரன் சத்தம் காதை பிளந்தது.

அவர்களால் சாலையின் இடமிருந்து வலம் செல்ல இயலவில்லை. தேங்கி நின்றிருந்தார்கள். இருபது நிமிட முயற்சிக்கு பிறகு ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வந்து சாலையை கடக்க அனைவருக்கும் உதவினார்.

முட்டி மோதி நுழை வாயில் கடந்து உள்ளே சென்றார்கள். 20 அடி இடைவெளியில் நெடுக பெட்டி பெட்டியாக  கடைகள், அந்த இடைவெளி முழுதும் மனித தலைகள், ஆணும் பெண்ணும் கலந்து …….முருகையன் இது வரை கடலினை பார்த்ததில்லை, பள்ளிக்கூடத்தில் இருந்து அடுத்த வருடம் கன்னியாகுமரிக்கு டூர் செல்லலாம் என்று சொல்லியிருந்தார்கள்.கடல் எப்படி இருக்கும் என்று அன்று அந்த  தமுக்கத்தில் உணர்ந்தான்.” நம்ம ஊர் பங்குனி பொங்கலுக்கு கூட இவ்வளவு கூட்டம் வராதுல்ல சார்?”

“அழகர் ஆற்றில் இறங்கும்போது பயங்கரமான கூட்டம் இருக்கும் என்பார்களே, இதை விடவா இருக்கும்!.

நடப்பதற்குச் சிரமப்பட்டார்கள். மூட்டுவலி, தடுமாறுவது, கீழே விழுவது என பெரும்பாலானவர்கள் கஷ்டப்பட்டார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, அவன் வயதொத்த யாரையும் காணமுடியவில்லை, எல்லாம்  முதியவர்கள், மத்திய  வயதினர், பெரும்பாலும் குடும்பம் குடும்பமாக வந்திருப்பார்கள் போல! இரண்டு மூன்று சிறுமிகளை  காண முடிந்தது.

நகரவும், திரும்பவும், இன்னும் சொல்லப்போனால் மூச்சு விடக்கூட   சிரமமாக இருந்தது. வியர்த்து கொட்டியது.  கூட்டத்தில் தொலைந்து விடுவோம் என்ற பயத்தில் TKP சாரின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டான் முருகையன்.

TKP  சார் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கூட்டம் கம்மியாக தென்பட்ட மத்திய அரசு பதிப்பக கடைக்கு உள்ளே நுழைந்தார்.  புத்தகங்களை அழகாக பார்வைக்கு வைத்திருந்தார்கள். பெரும்பாலும் எல்லா பார்வையாளர்களும் மூக்குக்கு கண்ணாடி போட்டு இருந்தார்கள். சார் எதோ புத்தக பெயர் சொல்லி இருக்கின்றதா? என்று கேட்டார். தெரியாது, நீங்களே பாருங்கள் என்று பதில் சொன்னார் விற்பனையாளர். அழகான அட்டை படங்கள்  கொண்ட புத்தகங்கள் நிறைய இருந்தன, முருகையன் சிரமப்பட்டு ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தான். நல்ல கனமான புத்தகம், எப்படியும் 500 பக்கங்கள் இருக்கும், விலை ரூபாய் 930 என்று இருந்தது. வேகமாக வைத்துவிட்டான். அவனுக்கு அந்த சூழல் மிரட்சியை தந்திருந்தது.

நிறைய பேர் வரிசையாக புத்தக பெயர்களை சொல்லி அவையெல்லாம் இருக்கின்றதா என்று கேட்டார்கள், அவர்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் வெளி மார்க்கெட்டில் கிடைக்கவில்லையா என்ன? அதனால் தான் இவ்வளவு கூட்டத்தையும் தாண்டி இங்கே வந்திருக்கின்றார்களோ? என்று நினைத்துக்கொண்டான்.

முருகையனுக்கு வேடிக்கையாக இருந்தது, இந்த சந்தடியில் செல்போனில் பேசிக்கொண்டே எப்படி புத்தகம் தேடுகிறார்கள்?

சிலர் கேட்லாக், கேட்லாக் என்று சத்தமாக கத்தி கத்தி கேட்டார்கள், விற்பனையாளர் ஒரு துண்டு சீட்டு எடுத்து கொடுத்தார், அதனை பெற்றுகொண்டு போய்விட்டார்கள், புத்தகம் எதையும் தொட்டு கூட பார்க்கவில்லை. முருகையனும் தனக்கு ஒரு கேட்லாக் கேட்டான், கடைக்காரர் தரவில்லை. அவன் விலகி நின்று கொண்டான்.

 

அதற்குள் மணி 2.30 ஆகி இருந்தது, பசி வயிற்றை கிள்ளியது அவனுக்கு. சாரும் கூட புத்தகம் எதுவும் வாங்கவில்லை. பலர் பில் போடும் கவுண்டரில் முண்டி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

 

அடுத்தது சார் வேறு ஒரு கடைக்குள்  கூட்டி சென்றார், “மிக பிரபலமான பதிப்பகம் இது” என்றார். அந்த அரசு கடையை போல இல்லாமல் விற்பனையாளர்கள், பார்வையாளர்கள் கேட்கும் புத்தகங்களை உடன் இருந்து எடுத்து தந்தார்கள், விலை சொன்னார்கள்.  பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற புத்தகத் தொகுப்புகளை முன் வரிசையில் காட்சிக்கு வைத்திருந்தார்கள், சார் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்த்து கொண்டுஇருந்தார், அவனும் பார்த்தான், ஏறக்குறைய எல்லா புத்தகங்களும் ரூ.1,000 க்கு குறையாமல் இருந்தன. விலகி நின்று கொண்டான் முருகையன்.

இவ்வளவு விலை கொடுத்தா, கட்டுக்கட்டாக புத்தகங்களை வாங்கி, தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு  போகின்றார்கள்? இங்கே புத்தகம் வாங்க வந்திருப்பவர்களெல்லாம் பெரிய பணக்காரர்கள் போல, எண்ணி கொண்டான்.

சார் வெளியே வந்தார், சாப்பிட போகலாமாடா? என்றார். எப்போது இந்த கேள்வி கேட்பார் என்று காத்திருந்த முருகையன் வேக வேகமாக தலையை ஆட்டினான். விஜய் பட டிக்கெட் எடுக்க முண்டியடித்து கொண்டு போவது போல் TKP  சார் அவனை கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெகு தூரம் சென்றார்.

 

ஒரு மூலையை நெருங்கியபோது , தெர்மோகோல் மற்றும் பாக்கு தட்டுகள் மீதமான உணவுகளுடன்  சிதறி கிடக்க, முருகையன் காலில் பிசு பிசு என்று ஒட்டிக்கொண்டது ஒரு தட்டு, காலை உதறி அதனை விலக்கலாம் என்றால், தோளை உரசிக்கொண்டு மனிதர்கள். குப்பை கூடைகள் நிறைந்து வழிந்து கிடந்தன, வீசிஎறிந்து போன மிச்சங்கள் மானாவாரியாக பரவி கிடந்தான. முருகையனுக்கு வியப்பாக இருந்தது, பங்குனி பொங்கல் கூழ் ஊத்தும் போது கூட எல்லோரும் வரிசையில் நின்று தானே வாங்கி சாப்பிடுவோம், அன்னதான நாளின் பொது கூட இப்படி ஒரு கச கசப்பை பார்த்ததில்லையே! இவ்வளவு ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் பணக்காரர்கள் கூட ஏன் இப்படி பொது இடத்தில நடந்து கொள்கிறார்கள்? ஆச்சர்யமாகவும் அதே சமயம் வருத்தமாகவும்  இருந்தது அவனுக்கு.

சார், போலாம் சார், ஊருக்கு போய் சாப்டுக்கலாம் சார். TKP சார் அவனை ஊன்றி பார்த்தார், சரி வா போகலாம், என்று மீண்டும் கையை பிடித்து கொண்டு வெளியே அழைத்து சென்றார்.

 

கோரிப்பாளம் அருகே இருந்த ஒரு ஓட்டலில் தோசை தவிர வேறு எல்லாமும் தீர்ந்துவிட்டபடியால் வேறு வழியில்லாமல் தோசை வாங்கி இருவரும் சாப்பிட்டனர், பொருக்கு பொருக்காக புளிப்பு காடியாக தொண்டையில் குத்தியது தோசை.

 

பஸ் ஏறி பயணித்தனர். பாதி வழியில் முருகையன் TKP சாரின் கையை சுரண்டினான், சார் எனக்கு சில கேள்விகள் இருக்கு சார், கேட்கவா? ம் ம் …..கேளு

 

  1. சார், இங்க புத்தகம் வாங்கிட்டு போறவுங்கள் எல்லோருமே நிஜமாகவே அவை அத்தனையும் படிப்பாங்களா?

 

  1. பலரும் புத்தகங்களை அட்டை படம் மாத்திரம் பார்த்து வாங்கிட்டு போறாங்களே, அவங்களுக்கு அவைகளை பற்றி முதல்லயே தெரியுமா?

 

  1. அவங்க ஊர்லயெல்லாம் நூலகம் இருக்காதா?

 

  1. படிக்கிற வயசு பிள்ளைங்க யாருமே வரலே, அப்படியே பார்த்த கொஞ்ச பேரும் இங்கிலிஷ் புத்தகங்களை மாத்திரமே வாங்கினாங்க, ஏன் சார்?

 

  1. புத்தகங்கள் எல்லாமே பயங்கர விலையா இருக்கே சார், என்னை மாதிரி ஏழை பிள்ளைகள் இந்த புத்தகங்களை படிக்க என்ன வழி சார்?

 

TKP  யோசித்தார்…….”ஊரு வந்திருச்சு பாரு, போயிட்டு வா, நாளைக்கு பள்ளிக்கூடத்துல பாக்கலாம்”.

 

விடை தெரியா அந்த கேள்விகளுடன்  வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் முருகையா.

***முற்றும்***

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

2 comments

  1. Rani Balakrishnan - Reply

    மிகவும் நன்றாக இருந்தது . மலிவு விலை எடிஷனிலும் புத்தகங்கள் கிடைக்கும் . அந்த ஸ்டாலைத் தேடி செல்ல வேண்டும் .
    அதிக கூட்டத்தில் இது சற்று சிரமமாக இருக்கும் . என்றாலும் பொதுவாக புத்தகங்களின் விலை அதிகமே . அதனால் நாம் வாங்கும் போது கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டி உள்ளது . நாம் வாங்க வேண்டும் என்று வீட்டில் இருந்து தீர்மானம் செய்து கொண்டு போயிருப்போம் . அவற்றில் சில புத்தகங்களை மட்டுமே வாங்க இயலும் . மீதம் அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் . நாம் வெகுவாக விரும்பிய புத்தகங்களை கட்டாயமாக முழுவதும் படித்து விடுவோம் . சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் . ஆசிரியருக்கு வாழ்த்துகள் .

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!