‘புதிய இந்தியா ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு கார்த்திக் சங்கர்.
புதிய இந்தியா
காட்சி-1
————-
செல்வி சரியாக காலை 9 மணிக்கெல்லாம் வியாபாரத்தை தொடங்கி விட்டாள். ஒரு தள்ளு வண்டியில் நீர் மோர் , கம்பு கூழ் , அருகம்புல் சாறு மற்றும் சில பழங்கள் – இவைதான் அவள் மூல தானம். அந்த இடம் நகரின் மையத்தில் அமைந்திருந்ததாலும், அருகிலேயே ஒரு கல்லூரி இருந்ததாலும் ஓரளவுக்கு சுமாரான வருமானம் வந்தது. இருந்தாலும், இரண்டு பெண் குழந்தைகளை, தனி ஒருத்தியாக வளர்க்க இது போதவில்லை.
அப்போது ஒரு இளம் பெண் கடையருகே வந்து தயக்கத்துடன் நின்றாள் . உடைகளையும் , தோற்றத்தையும் பார்க்கும்போது ரொம்பவும் நவ நாகரிக யுவதி போலத்தான் தோன்றியது செல்விக்கு.
“என்னம்மா சாப்பிடறீங்க ? ”
“அருகம் புல் சாறு எவ்வளவு ?”
“ஒரு கிளாஸ் 30 ரூபாய் மா ”
“தட் ஈஸ் டூ மச் !”
அதற்குள் அவள் அருகே ஒரு இளைஞன் வண்டியில் வந்து இறங்கினான்.
“ரீட்டா ! கண்ட இடத்தில எல்லாம் சாப்பிட்டா , infection ஆயிடும் ! கம் லெட் ஆஸ் கோ ” என்றவாறு அவளை அங்கிருந்து நகர்த்தி, வண்டியில் ஏற்றி கொண்டு வேகமாக கிளம்பிவிட்டான் .
செல்வி அவர்கள் போன திசை யை பெருமூச்சுடன் பார்த்து கொண்டு இருந்தாள்.
காட்சி-2
————
அன்று காலையில் வழக்கம் போல வியாபாரத்தை தொடங்கும்போது,
திடீரென்று இரண்டு மூன்று போலீஸ் ஜீப் களும், ஒரு pokline இயந்திரமும்
சர் சர் என்று வந்து நின்றன.
‘போன மாசம் தான வந்து , கடைய மூட சொல்லி மாமூல் வாங்கிட்டு
போனாங்க ‘ என்று எண்ணிய படியே , படபடப்புடன் பார்த்தாள்.
ஒரு போலீஸ் காரர் அவள் அருகில் வந்து,”இங்கெல்லாம் கடை போடக்கூடாது ” என்றவாறே தள்ளு வண்டியில் இருந்து பொருட்களை எடுக்க ஆரம்பித்தார். அவள் தடுப்பதற்க்குள், மேலும் இரண்டு பேர் கையில் உருட்டு கட்டைகளோடு , வண்டியை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.
அந்த ஏரியா வில் இருந்த அனைத்து நடை பாதை கடைகளையும், வண்டிகளையும் , இதே போல் அகற்றினர். செல்வி அவர்கள் காலில் விழுந்து கதறினாள், “ஐயா , இந்த இடத்தில்தான் 10 வருஷமா கடை போட்டு இருக்கேன், திடீர்னு வந்து இப்படி கடைய எடுக்க சொன்னா எப்படி ?”
“இதோ பாரும்மா, இந்த இடத்தில பெரிய சூப்பர் மார்க்கெட் வரப்போகுது, அதனால எல்லா கடைகளையும் எடுக்க சொல்லி அரசாங்கம் உத்தரவு ”
காட்சி – 3
————-
மூன்று மாதங்களுக்கு பின்…
அந்த இடம் விழா கோலம் பூண்டிருந்தது .
“மாஸ் சூப்பர் மார்க்கெட்” என்ற பெரிய எழுத்து களுடன் , மூன்று மாடி
கட்டிடம் ஒன்று முளைத்து இருந்தது . தொடக்க விழாவுக்கு வருகை தரும் மாநில அமைச்சரை வரவேற்று பெரிய பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
“யாரோட கடைப்பா இது ? ” என்ற வாறு ஒரு பெரியவர் கேட்க , அருகில் இருந்த ஒருவர் ” இந்தியாவில் பெரிய பணக்காரர் ராஜ் மல்ஹோத்ரா ஓட கடைங்க . ஏற்கனவே அவங்க செல் போன், டிவி சேனல் எல்லாம் வெச்சு இருக்கறாங்க . இப்ப இந்தியா பூரா சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சு இருக்காங்க ” என்றார்.
காட்சி -4
————–
மாஸ் சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. உள்ளே இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருந்த அந்த இளைஞன் , அருகில் இருந்தவளிடம் , ” ரீட்டா , இந்த இடத்தில அருகம்புல் சாறு சூப்பரா இருக்கும், ஆளுக்கு ஒரு க்ளாஸ் சாப்பிடலாம்” என்றவாறே, கௌண்ட்டரை நெருங்கி .
“இரண்டு அருகம் புல் ஜூஸ் ” .
“சார் ஒரு கிளாஸ் 100 ருபீஸ் ”
“ஆல் ரைட் ” என்ற படியே பர்சில் இருந்து இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினான்.
காட்சி – 5
———-
வணக்கம். தலைப்பு செய்திகள் .
சென்னையில் போன மாதம் தொடங்கப்பட்ட மாஸ் சூப்பர்
மார்க்கெட்க்கு அரசு மிக குறைந்த விலையில் நிலம் வழங்கியதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இதன் மூலம் அரசுக்கு சுமார் 3 கோடி வரை
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இதன் உரிமையாளர் அரசாங்க வங்கியில் இருந்து சுமார் 500 கோடி வரை கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்து உள்ளது.
நிறைவு பெற்றது.