‘ துறவு ‘ என்ற சிறுகதையை எழுதியவர் கார்த்திக் சங்கர்.
துறவு
கமலம் மெதுவாக கணவனை நெருங்கி ,”ஏங்க ! நம்ம ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்து இருக்காராம் . இறந்த காலம் , எதிர் காலம் எல்லாம் புட்டு புட்டு வைக்கறாராம் ”
ராமநாதன் மனைவியை எரிச்சலுடன் பார்த்து ,”நானும் கேள்வி பட்டேன். அதுக்கு என்ன இப்போ?” என்றார். கமலம் எதற்காக சொல்கிறாள் என்பது அவருக்கும் புரிந்தே இருந்தது. இருந்தாலும் அவள் வாயால் சொல்லட்டும் என்று காத்திருந்தார்.
“எல்லாம் நம்ம பையன் விஷயம்தான் ..” என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி , அழுகை வெடித்து கிளம்பியது.
“நீ இன்னுமா அதை நினைச்சுட்டு இருக்கே ? ”
“ஏன் நீங்க நினைக்கலையா? ”
ஆம். அவராலும் மறக்க முடிய வில்லை . எப்படி முடியும் ? பத்து வயது வரை பார்த்து, பார்த்து வளர்த்த மகனை திடீரென்று காணாமல் போய் இன்றோடு பதினைந்து வருடங்கள் ஆகிறது.
தேடாத இடம் இல்லை , வேண்டாத தெய்வம் இல்லை , ஆனாலும் இன்று வரை ஒரு தகவலும் இல்லை.
சரி , சென்றுதான் பார்த்து வருவோமே என்று கிளம்பிவிட்டார்.
—————– ****————
ஆசிரமத்தில் சரியான கூட்டம்.
நீண்ட நேரம் காத்திருந்த ராமநாதன் உள்ளே அழைக்கப்பட்டார்.
கமலம் சொன்னது போல , சாமியாருக்கு இருபதில் இருந்து முப்பது வயதுக்குள்தான் இருக்கும்.
நல்ல களையான , அமைதியான முகம்.
“சாமி ! என் மகன்..” என்று அவர் ஆரம்பிக்கும் போதே ,
“எனக்கு எல்லாம் தெரியும் ! காணாமல் போன மகனை தேடி நீங்கள்
வந்து இருக்கிறீர் , சரியா? என்றார் புன்னகையுடன்.
“ஆம் சாமி. அவன் தற்போது எங்கே இருக்கிறான் , எப்படி இருக்கிறான், எங்களுக்கு எப்போது அவன் கிடைப்பான் ? “என்றார் ராமநாதன்.
சற்று நேரம் கண்களை மூடி இருந்த சாமி , சட்டென்று கண்களை திறந்து அவரை பார்த்தார்.
“அவன் கண் காணாத தூரத்தில் நலமாக இருக்கிறான். சமயம் வரும்போது அவனே தங்களை நாடி வருவான். அது வரை பொறுமை யாக இருங்கள்” என்று கூறிவிட்டு ,அவர் கரங்களை ஆதரவாக பற்றினார்.
ராமநாதன் பெருமூச்சு ஒன்றை விட்டு, அவரை வணங்கி , வெளியேறினார்.
அவர் போகும் வரை காத்திருந்த சாமியாரின் சிஷ்யன் , “சாமி ! தாங்கள் எதையோ மறைக்கிறீர்கள் ! என்ன வென்று நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று பணிவுடன் கேட்டார்.
சாமியாரின் கண்கள் கலங்கி இருந்தன. “அவர் தான் என் தந்தை . நாந்தான் அவர் தேடும் மகன்”
“சாமி ! என்ன சொல்கிறீர்கள் ? இதை என் அவரிடம் சொல்லாமல் மறைத்து விட்டீர்கள் ? ”
|”எப்படி சொல்ல முடியம் ? நான் தற்போது இருக்கும் நிலையில் பந்த பாசங்களுக்கு இடம் இல்லை. நான் இந்த மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. மேலும் இந்த நிலையில் தன் மகனை பார்க்க எந்த பெற்றோர்க்கும் சங்கடமாக தான் இருக்கும்”
“அப்படியானால் , சமயம் வரும்போது வருவான் என்று கூறினீர்கள் ?”
“என் தந்தையின் ஈமச்சடங்கு களை நாந்தான் செய்வேன் ! அதைத்தான்
அப்படி மறைமுகமாக கூறினேன்” என்றபடியே தன் கண்களை துடைத்து கொண்டார்.
நிறைவு பெற்றது.